செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

சங்ககால இசைமேதை.சங்ககால மக்கள் இயற்கையோடு இயைந்த இசையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். ஆடு, மாடு மேய்க்கும் இடையன் கூட இசையில் தேர்ந்தவனாக இருந்தான்..


ஒற்றை ஆடையுடன் பசுக்களை மேய்க்கும் இடையன் நுண்புகை கமழும்படி தீக்கோலைக் கையால் கடைந்து தீ உண்டாக்கி அக்கொள்ளியால், மூங்கில் குழலில் துளை செய்து அப்புல்லாங்குழலை ஊதி இனிய ஓசையை எழுப்புகிறான்.அக்குழலில் பாலைப்பண் இசைக்கின்றனான்..
இதனை,

ஒன்றுஅமர் உடுக்கை கூழ் ஆர் இடையன்
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி
அம்நுண் அவரிபுகை கமழ, கைம்முயன்று
ஞெலிகோல் கொண்ட பெருவிறல் நெகிழிச்
செந்தீத்தொட்ட கருந்துளைக் குழலின்
இன்தீம் பாலை முனையின்,
பெரும்பாணாற்றுப்படை-175-180.

என்ற அடிகள் விளக்கும். பின் அவ்விசை அலுத்தபோது, அதைவிடுத்து, குமிழங்கோட்டை வளைத்துக் கட்டி மரல் கயிற்றை நரம்பாகக் கொண்டு யாழை உருவாக்கி, அவ்யாழிலே குறிஞ்சிப்பண்ணை விரலால் தெறித்து எழுப்புகிறான். அவ்விசையைக் கேட்ட வண்டுகள், அவ்விசையைத் தம் இனத்தின் ஒலியாகக் கருதிச் செவி கொடுத்துக் கேட்கும். என்பதை,


”குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின்
வில்யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
பல்காற் பறவை கிளைசெத்து ஓர்க்கும்.“

பெரும்பாணாற்றுப்படை-180-183.
இவ்வடிகள் இயம்புகின்றன.

மேற்கூறி சான்றுகளின் வழி குழல், யாழ் ஆகிய இசைக்கருவிகளின் தோற்றக் கூறுகளை அறிந்துகொள்ள முடிகிறது.

◊ மூங்கிலில் வண்டு செய்த துளையில் காற்று நுழைந்ததால் எழுந்த இசையை நுகர்ந்த சங்ககால மக்கள் செயற்கையாகத் துளையிட்டு இசைக்கருவியாக குழலை உருவாக்கித் தாம் விரும்பிய போதெல்லாம் இசைத்து மகிழ்ந்தனர் என்பதற்குச் சான்றாக இவ்வடிகள் விளங்குகின்றன.

◊ வேட்டையாடலின் போது எய்த வில்லின் ஒலி இசைநயத்துடன் இருந்தமை உணர்ந்த அக்கால மக்கள் மேலும் நரம்புகளைக் கட்டி இசைத்து மகிழ்நதனர். இதுவே நரம்பிசைக் கருவியான வில்யாழின் தோற்றம் என்பதை அறியமுடிகிறது.

10 கருத்துகள்:

 1. வில்யாழ் பற்றிய குறிப்பு பற்றி முதல் முறை அறிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. யாழின் அமைப்பும் குழலின் கதையும் அருமை குணசீலன்..

  பதிலளிநீக்கு
 3. வழக்கம் போல நல்ல பதிவு நண்பர் குணசீலன் அவர்களே,

  பதிலளிநீக்கு
 4. வில்யாழ் பற்றிய குறிப்பு பற்றி முதல் முறை அறிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. குணா...உங்களிடமிருந்து வித்தியாசமான பதிவும் சுவாரஸ்யமான செய்திகளும்.
  நன்றி.

  பதிலளிநீக்கு