புதன், 22 டிசம்பர், 2010

நீங்கஅறிவாளியாவே இருந்திட்டுப்போங்க..!அறிவாளி ஒருவன் தான் அறிவாளி என்று எண்ணிக்கொள்ளும் போது முட்டாளாகிறான்!
முட்டாள் ஒருவன் தான் ஒரு முட்டாள் என்று உணர்ந்துகொள்ளும் போது அறிவாளிகிறான்!
ஒன்றும் தெரியாத முட்டாளும்
எல்லாம் தெரிந்த அறிவாளியும் உலகிலேயே கிடையாது!
ஒரு மனிதனைக் கோபத்திற்குள்ளாக்கும் மிகப்பெரிய கேள்வி...?

உனக்கு அறிவிருக்கிறதா...........?

சரி அறிவைப்பற்றி இங்கு ஏன் இவ்வளவு ஆராய்ச்சி என்கிறீர்களா..?

எல்லா அறிவாளிகளும் அறிவாளிகள் அல்ல!
எல்லா முட்டாள்களும் முட்டாள்களல்ல!


என்னும் உண்மையைப் புலப்படுத்தும் அகப்பாடல் இதோ..

“அருளும் அன்பும் நீங்கி துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக மடந்தை நாமே“

-கோப்பெருஞ்சோழன்
குறுந்தொகை-20.
(செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.) (உரவோர்- அறிவுடையோர்)
தலைவன் பொருளுக்காகப் பிரியப்போகிறான் என்பதை உணர்த்திய தோழியிடம் தலைவி
உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

என்மீது அருளும், அன்பும் நீங்கிய தலைவர் பொருளுக்காகப்
பிரிந்துசெல்கிறார். பிரிந்துசெல்லும் ஆற்றுலுடைய அவர் செயல்
அறிவுடையதாகவும் அவர் அறிவுடையவராகவும் இருந்தால் இருக்கட்டும்.....

அவரைப் பிரிந்து உயிர்வாழும் ஆற்றல் இல்லாத நான் அறிவில்லாதவளாகவே
இருந்துவிட்டுப்போகிறேன்!
என்று தலைவன் மீதுகொண்ட கோபத்தில் தலைவி இவ்வாறு பேசுகிறாள்.

பாடல் வழி..

• தலைவி மீது அருளும் அன்பும் இருந்தும் பொருளின் தேவை கருதித் தலைவன்
பிரிந்தான். காலச்சூழல் இங்கு தலைவனை அறிவுடைய முட்டாளாக்குகிறது
• அழிந்துகொண்டிருக்கும் இளமையைவிட அழியப்போகும் பொருள் மேலானதா..? இது
கூடத் தலைவனுக்குத் தெரியவில்லையே..! பொருள்தான் எல்லாமும் என
எண்ணிச்செல்லும் தலைவனின் செயல் அறிவுடையதா..?
தாம் செய்வதுதான் சரி என எண்ணிச் செல்லும் தலைவன் தன்னைப்
பிரிந்துசெல்லும் ஆற்றலும் கொண்டவனாக இருக்கிறான். அவன் தன்னை
அறிவுடையவனாக எண்ணிக்கொண்டால் எண்ணிக்கொள்ளட்டும். அவரைப்
பிரிந்துசெல்லும் ஆற்றல் இல்லாத நான் முட்டாளாகவே
இருந்துவிட்டுப்போகிறேன் என்கிறாள் தலைவி.

• பொருளுக்காகத் துணையைப் பிரிந்துசெல்லும் அறிவைவிட, அன்பும் அருளும்
உடையவராகத் துணையோடு சேர்ந்து இருப்பதே சிறந்த அறிவு என்பதை உள்ளீடாக
உணர்த்தும் தலைவி இங்கு முட்டாளான அறிவாளியாகக் காட்சியளிக்கிறாள்.

• காலச்சூழல் முட்டாளை அறிவாளியாகவும், அறிவாளியை முட்டாளாகவும்
காட்டவல்லது. இப்பாடலிலும் அப்படித்தான்

8 கருத்துகள்:

  1. உண்மைதான்...சில இடங்களில் எங்களைப் புரிந்துகொண்டபோதும் முட்டாளாக இருப்பதே நல்லது !

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையாய் தலைவியின் உள்ளத்தை, உள்ளபடியே காட்டுகிறதே ! வியப்பாய் இருக்கிறது நம் பழந்தமிழ் இலக்கிய சுவை. தொடர்ந்து, மென் மேலும் வாசிக்க ஆவலுடன் இருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  3. முயற்சி பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு