வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

இந்திய மருத்துவம் – தென்கச்சியார்


இன்று நிறைய பொழுதுபோக்குக்கான ஊடகங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சிக்கு முன் மக்களைப் பெரிதும் ஈர்த்த வானொலிகளை மறக்கமுடியுமா? வானொலி என்றதும் என் நினைவுக்கு வருபவர் தென்கச்சியார்தான். இவரது இன்று ஒரு தகவல் வழியாக பல கதைகளையும்,  வரலாறுகளையும் நான் அறிந்துகொண்டேன். எல்லோருக்கும் புரிம்படியாகப் பேசும் இவரது மொழிநடை, நினைத்து நினைத்து சிரிக்கும் நகைச்சுவையைச் சொன்னாலும் அதைச் சிரிக்காமல் சொல்லும் நுட்பம் ஆகியன இவரிடம் நான் கண்டு வியந்த பண்புகளாகும். இன்று இந்திய மருத்துவம் குறித்த இவரது சிந்தனைகளை உங்களோடு நானும் மீ்ண்டும் படித்து மகிழ்கிறேன்.

நாளந்தா பல்கலைக்கழகம்
அங்கே மருத்துவக் கல்வி படிக்கறதுக்காக ஓர் இளைஞன் வந்தான். ஆசிரியர்கள் அவனுக்கு ஒரு நுழைவுத் தேர்வு வைத்தார்கள். எப்படித்தெரியுமா?
அந்த இளைஞனைக் கூப்பிட்டு,

“இதோ பாரப்பா…. இப்ப நீ ஒரு காரியம் செய்யனும்! நீ உடனே புறப்படு… இங்கே இந்தப் பக்கத்துலே உள்ள கிராமங்களுக்கெல்லாம் போ… மலையடிவாரங்களுக்கெல்லா போ.. எல்லா இடங்களையும் சுற்றி வா.. அப்படி சுற்றிவிட்டுத் திரும்பும்போது, மருத்துவ குணமே இல்லாத ஒரு செடியைத் தேடிக் கண்டுபிடிச்சி அதை இங்கே எடுத்துக்கிட்டு வா!
அதுதான் நீ செய்யவேண்டிய காரியம்!” – அப்படின்னாங்க.

“சரி!”ன்னு சொல்லிப்புட்டு அந்த இளைஞன் புறப்பட்டான். காடுமேடெல்லாம் சுற்றி அலைந்தான். கடைசியிலே வெறுங்கையொடு திரும்பி வந்தான். ஆசிரியர்கள் சொன்னார்கள் – “ நீ மருத்துவப் பயிற்சிக்கு ஏற்றவன்தான் உன்னை அனுமதிக்கிறோம்.. பள்ளியில் சேர்ந்துகொள்!!”

அந்த மாணவன் பெயர்தான் ஜீவகன்.
பிற்காலத்துலே இந்திய மருத்துவக்கலைக்குப் பெருந்தொண்டு ஆற்றியவர். ஜீவகன் நிறைய ஆராய்ச்சி பண்ணினார். அதன் மூலமா பல உண்மைகளைத் தெரிஞ்சிக்கிட்டார். புத்தர் பெருமானின் அறநெறிகளும் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுலே ஈடுபாடு புத்தருக்கே வைத்தியம் பார்த்தார்..

அந்தக் காலத்துலே நிறையபேரு என்ன பண்ணினாங்க தெரியுமா? பொதுமக்கள் பலபேர் புத்த மதத்திலே சேர ஆரம்பிச்சாங்களாம்.
எதுக்காகத் தெரியுமா?
அப்படிச் சேர்ந்துட்டா…. ஜீவகனுடைய சேவை கிடைக்கும்- ங்கறதுக்காக!
அப்படிச் சேர்ந்து தங்கள் நோயைக் குணமாக்கிக் கொண்டவங்க நிறையப் பேர்!

அந்த அளவுக்குப் புகழ்பெற்று விளங்கியவர் ஜீவகன். அவருடைய அறுவை சிகிச்சை முறைகள் குறிப்பாக மூளை அறுவை சிகிச்சை முறை இன்றைய நவீன மருத்துவர்களெல்லாம் ஆச்சரியப்பட வச்சிருக்கு!
இந்த உலகத்துலே உள்ள எல்லாச் செடிகொடிகளுக்கும் ஏதோ ஒரு மருத்துவ குணம் இருக்கத்தான் செய்யுது. அதனுடைய மருத்துவகுணம் என்னன்னு நாம தெரிஞ்சிக்கிறதுக்குள்ளேயே பல செடிகொடிகள் அழிஞ்சிபோயிக்கிட்டிருக்கு.

இயற்கை எதையும் அர்த்தமில்லாம இந்த உலகத்துலே படைக்கவில்லைங்கறதை முதல்லே புரிஞ்சிக்கிக்கணும். நாமதான் அர்த்தமில்லாமே அதையெல்லாம் அழிச்சிட்டிருக்கோம். அதன் பலனையும் அனுபவிச்சிட்டிருக்கோம்.

அந்தக்காலத்துலேயெல்லாம் எல்லாத்துக்கும் இயற்கை வைத்தியம்தான். மூலிகை வைத்தியம்தான். அர்த்தம் புரியாமே வைத்தியத்துலே இறங்கினா அது சமயத்துலே அவஸ்தையிலே கொண்டாந்து விட்டுடும். அதுக்கு வேடிக்கையா ஒரு கதை ஒன்று சொல்றதுண்டு!
ஒரு ராஜாவுக்கு கால்லே அக்கி.
படை –ன்னு சொல்றாங்களே.. அதுமாதிரி!
தோல் சம்பந்தமான வியாதி!
உடனே அரண்மனை வைத்தியர்கிட்டே யோசனை கேட்டிருக்கார். “என்ன செய்யலாம்?-ன்னு!
அவர் உடனே… “இது ஒண்ணும் பெரிய விசயமில்லை… பொடுதலையை வச்சி கட்டினா சரியா போயிடும்!” ன்னார். அப்படி சொல்லிப்புட்டு அடுத்த ஊருக்குப் போயிட்டார்.

ராஜா மந்திரியைக் கூப்பிட்டார். “பொடுதலை கொண்டுகிட்டு வா!” ன்னார். பொடுதலைன்னா என்னான்னு அவருக்குப் புரியலே.. அவர் போய் ஒரு புலவரைக் கேட்டார். புலவர் யோசிச்சார். அகராதியைப் புரட்டினார். “பொடுதலை“ன்னா முடியில்லாத தலை அப்படின்னார். மந்திரி யோசனை பண்ணினார். சேவகனைக் கூப்பிட்டார். “நம்ம நாட்டுலேயே சுத்தமா முடி இல்லாத தலை உள்ளவனா ஒருத்தனைப் பார்த்து பிடிச்சிக் கொண்டுகிட்டுவா..” ன்னார். ஒரு மண்டபத்திலே அப்பாவியா ஒருத்தன் உக்கார்ந்திருந்தான். பிடிச்சி கொண்டுகிட்டு வந்தாங்க.
அரண்மனையிலே நுழைஞ்சதும் அவன் கேட்டான்.
“என்னை எதுக்கு இங்கே கொண்டுக்கிட்டு வந்திருக்கீங்க?ன்னான், அப்பாவித்தனமாக! அவங்க விளக்கம் சொன்னங்க.

“நம்ம ராஜாவுக்கு கால்லே அக்கி.. அரண்மனை வைத்தியர் பொடுதலையை வச்சி கட்டினா சரியா போயிடும் –ன்னார். பொடுதலைன்னா முடியில்லாத தலை. அதுதான் உன்னைக் கூப்பிட்டுகிட்டு வந்திருக்கோம்! ன்னாங்க.
அவன் ஒரு கணம் திகைச்சு போய் நின்னான். அப்புறம்  “அந்த அரண்மனை வைத்தியர் வீடு எங்கே இருக்கு?” ன்னு கேட்டான். “அதோ பார்!”ன்னு அந்த திசையைக் காட்டினாங்க.
இவன் அந்த திசையை நோக்கி… அப்படியே கீழே விழுந்து கும்பிட்டான். இவங்களுக்க ஒண்ணும் புரியலே.

“ஏன் அப்படி பண்றே? ன்னு கேட்டாங்க. இவன் சொன்னான் – இப்போ என்னை வாழவைத்த தெய்வம் அவர்தான்.. இப்ப நான் உயிரோட இருக்கறதுக்கே அவர்தான் காரணம்…. அதுதான் அவர் இருக்கிற திசைக்கு ஒரு கும்பிடு போட்டேன்” ன்னான்.
என்னப்பா சொல்றே… ஒண்ணும் புரியலையே! ன்னாங்க. அவன் சொன்னான்.

“அந்த வைத்தியர் பொடுதலையை வச்சி கட்டுங்க –ன்னு சொன்னதுனாலே நான் பிழைச்சேன். பொடுதலையை நசுக்கி வச்சுக் கட்டுங்க –ன்னு சொல்லியிருந்தா என் கதி என்ன ஆயிருக்கும்..? நினைச்சிப்பாருங்க!” –அப்படின்னான்.


16 கருத்துகள்:

  1. ஜீவகன் பற்றிய தகவலுக்கு நன்றி முனைவரே.
    கதை மிக அருமை..

    பதிலளிநீக்கு
  2. தென்கச்சியாரின் தகவலை தினமும் கேட்பேன். அவர் குரலில் ஒரு வசீகரமும் எளிமையும் இருக்கும்.பகிர்வுக்கு நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  3. நகைச்சுவையோடு பல நல்விதைகளை மனதில் விதைப்பதில் தென்கச்சியார் அவர்கள் நிபுணர்...

    பதிலளிநீக்கு
  4. தென்கச்சியார் அனைவருக்கும் பிடித்தவர். அவரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ரசிக்க வைத்த தகவல்! அந்த நாட்களில் இப்படி பல தகவல்களை வானொலியில் கேட்டு ரசித்திருக்கிறேன்! தென்கச்சியார் இறந்தது நமக்கு பெரும் இழப்புதான்!

    பதிலளிநீக்கு
  6. தென்கச்சியாரின் பேச்சை விரும்பி ஒருமுறை எங்களுடைய நிகழ்ச்சிக்கும் அழைத்திருந்தேன். வந்து சிறப்பித்தார். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் அவருக்கு சரியான போக்குவரத்து வசதியைக்கூட ஏற்பாடு செய்து தரவில்லை. பெருந்தன்மையான மனிதர் அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் அனுபவப் பகிர்தலுக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  7. தென்கச்சியாரின் ஜீவகன் தொடர்பான செய்தியை படிக்கும்போது இறைவன் இயற்கை வடிவில் இவ்வுலகிற்கு எவ்வளவு பெரிய நன்கொடையை வழங்கியுள்ளான் என்பது பற்றி உணரமுடிகிறது.
    மூலிகையான பொடுதலை செய்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. இதைப் படிக்கும் போது ”பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி” என்கின்ற பழமொழி பொடுதலை மூலிகையின் பயன்களை நினைவில் கொண்டு வருகிறது.

    நன்றி
    பழ. தமிழார்வன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தமிழார்வன்.

      நீக்கு
  8. வைத்தியர் சொன்னதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் .... பாவம் அந்த மனிதர்! மருத்துவர் ஜீவகன் பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தன. தென்கச்சியார் அவர்களின் குரலுக்கும், கேலிக்கும், கிண்டலுக்கும் நானும் பெரிய விசிறி!

    பதிலளிநீக்கு
  9. தென்கச்சியார் தரும் இன்று ஒரு தகவல் மிகவும் பிடிக்கும்.

    மருத்துவம் பற்றிய இன்றைய தகவலும் மிக நன்று.

    பதிலளிநீக்கு