மக்களே போல்வர்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல,
ஆளைப் பார்த்து எடை போடாதே.
என்றெல்லாம்
பழமாழிகள் உண்டு.
கடைகளில் காய்கறி வாங்கும்போதோ ஏதாவதொரு பொருள்
வாங்கும்போதோ..
பார்த்துப் பார்த்து வாங்குவோம். அவ்வாறு வாங்கியும் சில
நேரங்களில் நாம் தரமற்ற பொருளை விலைகொடுத்து வாங்கிவிட்டோமே என வருந்துவதுண்டு.
அதுபோல, எல்லா மனிதர்களும் நல்லவர்கள் என்றோ எல்லோரும்
தீயவர்கள் என்றோ முடிவுசெய்துவிடமுடியாது.
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம் என உரைக்கிறது உலகநீதி.
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று
பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் என்றார் வள்ளலார்.
உருவத்தைப் பார்த்து யாரையும்
குறைத்து மதிப்பிடாதே
பெரிய தேருக்கும் சிறிய அச்சாணி தேவை என
உரைத்த திருவள்ளுவர்,
மக்கள் என்று மனிதர்களையும் மாக்கள் என்று மனிதப்
பண்பற்றவர்களையும் சுட்டியுள்ளார்.
மனிதர்களின் அகப்பண்பிற்கும்
புறத்தோற்றத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும்.-298
உண்மையால் அகத்தூய்மையும், நீரால் புறத்தூய்மையும் தோன்றும்
என்ற திருவள்ளுவர்,
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. -993
உறுப்புகள் ஒத்து இருப்பதால் மக்கள் என்ற
கருதமுடியாது. மனிதப் பண்பின் சிறப்பே ஒப்பிடத்தக்கது என்றார்.
செவியிற்
சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். -420
செவியின்
சுவையறியாமல் வாழ்பவர்களை மாக்கள் என உரைத்த திருவள்ளுவர்,
மக்களே
போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். -1071
கயவருக்கென தனிஉருவமில்லை! மனிதரைப் போலவே அவர்களின் தோற்றம் இருக்கும் என்றார்.
பயனில் சொல் பாராட்டு வானை
மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.-196
பயனில்லாத சொற்களைப் பேசுவோர்
மனிதருள் பதர் போன்றவர் என்றவர்,
அரம்போலும் கூர்மைய ரேனும்
மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.-997
அரம்போன்ற கூர்மையான அறிவிருந்தாலும், மக்கட் பண்பில்லாதவர்கள் மரம்போன்றவர் என்றார். மரங்களுள்,
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்
செல்வம்
நயனுடை யான்கண் படின். -216
பயன்தரும் பழமரம் பழுத்தது போன்றது
நல்லவனின் செல்வம்,
மருந்தாகித் தப்பா மரத்தற்றால்
செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.-217
பெருந்தன்மையாளனின் செல்வம், மருந்துமரம்
போன்றது,
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. -1008
கஞ்சனின் செல்வம், ஊர் நடுவே நச்சுமரம் பழுத்தது போன்றது என்றார். மரங்களுள் எல்லா மரங்களும்
மனிதர்களுக்குப் பயன்தராது, தன்மையால் வேறுபடுவன என்பதை உணரவேண்டும்.
மனிதர்களும் தோற்றத்தால்
ஒன்றுபட்டிருந்தாலும், பண்புகளால் வேறுபடுகின்றனர். பலநேரங்களில் முகமூடி
அணிந்துள்ளனர். பண்புகளாலும், தேவைகளாலும் வேறுபடுகின்றனர்.
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ
உவப்பினும்
காயினும் தான்முந் துறும். -707
முகம், இன்ப, துன்பங்களை விரைந்து வெளிப்படுத்தும் என்றாலும், அந்த உணர்வுகளும் மிக விரைவாக
மறைந்துவிடும்.
சில நேரங்களில் தேன்கலந்த
வார்த்தைகளில் விசம் தோய்ந்திருக்கும்,
சில நேரங்களில் அலங்காரமில்லாத
வார்தைகளில் அன்பு தோய்ந்திருக்கும்,
வார்த்தைகளையும், மனிதர்களின்
தோற்றத்தையும் கண்டு நம்பினால் பலநேரங்களில் ஏமாற்றமே மிஞ்சும். அதனால்தான்,
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.-410
கல்லாதவரும்
விலங்குகளும் ஒன்றாகவே கருதப்படுவர் என்ற திருவள்ளுவர்,
வலியில் நிலைமையான் வல்லுருவம்
பெற்றம்
புலியின் தோல் போர்த்துமேய்ந்
தற்று.-273
தீயவர், நல்லவர் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக்
கொண்டு மேய்ந்தது போலாகும் என்றும்,
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு
அன்ன
வினைபடு பாலால் கொளல். 279
தோற்றத்தைவிட, செயலால் ஒருவரை இனம்காண்பதே சிறந்தது என்பதை,
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது;
வளைவுடன் தோன்றினாலும் யாழின்
கொம்பு நன்மையானது என உரைத்துள்ளார். அதனால்,
நம்முடன்
பேசுபவர்கள் மனிதப்பண்புள்ள மனிதர்களா? விலங்கின் பண்புள்ளவர்களா? சுயநலவாதிகளா? நேர்மையானவர்களா?
முகமூடி அணிந்துள்ளனரா? என பலவாறு மதிப்பாய்வு செய்த பின்னரே அவர்களை நம்புவதும்,
பழகுவதும் அறிவுடைமை.
நல்லறிவு
பெற்றவர்கள் தான், மக்கள் என்ற சொல்லுக்கு
உரியவர்களாவர். எளிமை, அன்பு, பண்பு,
பணிவு, இன்னா செய்யாமை, இன்சொல், ஈகை போன்ற நற்பண்புகளைப் பெற்றவர்களே மக்கள்
என்ற தகுதிக்குரியவராவர் என்பது திருவள்ளுவர் கருத்து. அதே நேரம் மக்கட்
பண்பில்லாதவர்களை எவ்வாறு இனம் காண்பது என்றும் பல சிந்தனைகளைத் தந்துள்ளார்.
சொல்வணக்கம்
ஒன்றார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். -827
வில் வளைவது தீங்குசெய்யவே, அதுபோல பணிவோரையும் ஆராய்ந்தறிக,
தொழுதகை
யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. -828
எதிரி
வணக்கத்தையும், கண்ணீரையும் நம்பாதே தீமை மறைந்திருக்கும்,
தேறற்க
யாரையும் தேராதுதேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். -509
ஆராயாமல் ஒருவரை நம்பாதே, நம்பியவரை என்றும் ஆராயாதே என ஏமாற்றுவோரிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றார்.
எல்லோரையும் ஆராய்ந்துகொண்டே இருந்தால் யாரை நம்புவது
என்ற கேள்விக்கு,
இதனை
இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். -517
இதனை இவர்தான் முடிப்பார் என ஆராய்ந்து
வேலையை வழங்கு,
வினைக்
குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். -518
நம்பிய ஒருவனுக்கு வழங்கிய பணியில்
குறுக்கிடாதே என்ற திருவள்ளுவரின் அறிவுரை, இன்றும் தேவையானதாக அமைகிறது.
பருகுவார்
போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின்
குன்றல் இனிது. -811
அன்பானவர்
போல நடிப்போரின் நட்பு, வளர்வதைவிட
நீங்குவதே இனிது
மனத்தது
மாசுஆக மாண்டார்நீர் ஆடி
மறைந்துஒழுகு
மாந்தர் பலர். -278
மனதில்
மாசுடன், புறத்தே
மெய்யான துறவிகளாக நடிப்பார் பலர் என தோற்றத்தையும்,
முகமூடிகளையும் நம்பி ஏமாறாதீர் என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.
ஊன்பொதி
பசுங்குடையார் என்னும் புலவர் சோழனின் நீதிவழங்கும் தன்மையைப் பாடும்போது,
உன்னை வழிபடுவோரை நீ விரைவில் அறிந்துகொள்கிறாய்!
அறிந்து
அவர்களின் குறையையும் போக்குகிறாய்!
உன்னிடம்
வந்து பிறரைப் பற்றிப் பழிகூறுபவர்களின் சொற்களின் தன்மையை நன்கு அறிந்து தெளிவாய்!
தீமைகளை
ஒருவனிடம் கண்ட அளவில் அறநூல்களுக்கு ஒப்ப ஆராய்ந்து அதற்குரிய தண்டனைகளை
வழங்குவாய்!
அவர், உன்னடி வணங்கி முன் நின்றால்,
அவர்
தீமைபுரியும் முன் அவரிடம் கொண்ட அருளினும் மிகுதியான அருளால் அவருடைய தண்டனையைக்
குறைக்கவும் செய்வாய்! என்று
பாடியுள்ளார்.
இந்த சோழ மன்னனைப் போல ஆராய்ந்தறிந்து முடிவெடுப்பவர்களை யாரும்
ஏமாற்றமுடியாது.
வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற்
பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார்
மார்ப!
செய்து இரங்காவினைச், சேண்விளங்
கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே! புறநானூறு -10 -பாடியோர் : ஊன் பொதி பசுங்
குடையார்.
ஒருநாள்
கபிலர், திருமுடிக்காரியைக் காணச்
சென்றார். எல்லாப் புலவர்களையும் ஒரே மாதிரிப் பார்க்கும் வழக்கம் கொண்ட காரியும்
பிற புலவர்களைப் போலவே கபிலரையும் மதித்துப் பொருள் வழங்கினான். அப்போது கபிலர்..
மன்னா!! யாவருக்கும் கொடுத்தல்
எளிது!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகுதியுடையவராவர். அவர்தம்
தகுதியை உணர்ந்து அதற்குத்தகப் பொருள் வழங்குதல் அரிது!
அதனால் புலவர்களைப் பொதுவாகக் காணும் வழக்கத்தை
நிறுத்துவாயாக.! என்றார்.
நாம்
பல நேரங்களில் சில மனிதர்களைப் பொதுவாகவே பார்த்துவிடுகிறோம். ஆழ்ந்து
நோக்கும்போதுதான் ஒவ்வொருவரின் திறனையும், பண்பையும், நோக்கத்தையும்
முழுமையாக உணரமுடியும்.
(ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
பலரும்
வருவர் பரிசின் மாக்கள்
வரிசை
யறிதலோ வரிதே பெரிதும்
ஈத
லெளிதே மாவண் டோன்றல்
5 அதுநற் கறிந்தனை யாயிற்
பொதுநோக்
கொழிமதி புலவர் மாட்டே. புறநானூறு (121) மலையமான் திருமுடிக்
காரியைக் கபிலர் பாடியது.)
மனித வாழ்வு என்பது வெறும் உடல்
வளர்ச்சியால்
மட்டும் அமைவது அல்ல;
அறிவாலும் உணர்வுகளாலும், உயர் பண்புகளாலும் செதுக்கப்பட வேண்டிய ஒன்று. மாக்களிடமிருந்து மக்களை எவ்வாறு பிரித்தறிவது என்ற திருவள்ளுவரின்
வழிகாட்டுதலைப் பின்பற்றி, கபிலரின் அறிவுரையும்,
ஊன்பொதி பசுங்குடையாரின் பாடலும்
உணர்த்துவது போல, ஒருவரைப் பொதுவாகப் பார்ப்பதை
விடுத்து, அவர் தம் தகுதியையும்,
சொல்லையும், செயலையும் சீர்தூக்கிப் பார்த்துப் பழகுவதே
அறிவுடைமையாகும். போலி முகமூடிகளுடன் வாழும் மக்கள் பலர், நிறைந்த இவ்வுலகில்,
நற்பண்புகள் உடையோரை இனம் கண்டு
நட்பு கொள்வதே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். அதே நேரம் பிறர் நம்மை எவ்வாறு காண்பார்கள். நாம்
மனிதப் பண்புடன் வாழ்கிறோமா நம்மை அறியாமல் ஏதும் முகமூடிகளை அணிந்துள்ளோமா
என்பதையும் சிந்திக்கவேண்டும். வள்ளுவர் காட்டிய வழியில் பண்புடையவர்களைப் பற்றிக்கொண்டு, பயனிலா மாக்களிடம் எச்சரிக்கையாக
இருப்போம் மண்ணில்
நல்லவண்ணம் வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக