வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

மலையாளக் காற்று - சிற்பி

 


    சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கவிஞர்
, மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் என பன்முகத் திறன்கொண்டவர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். அக்கினி சாட்சி நாவலுக்காகவும், ஒரு கிராமத்து நதி என்ற கவிதை நூலுக்காகவும் என இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது, கபிலர் விருது, எனப் பல விருதுகள் பெற்றவர்.

பண்டைய சேரநாடே இன்றைய கேரளம். கேரளம், தமிழகத்துக்குப் பலவளங்களைத் தந்துள்ளது. தமிழகத்துக்கும் கேரளத்துக்குமான உறவை நினைவுகொள்வதாகவும், கேரளத்தின் கொடைகளைப் பட்டியலிடுவதாகவும் இக்கவிதை அமைகிறது. காற்றுக்கு ஏது மொழி. இங்கு மலையாளக் காற்று என்பது குறியீடாக அமைகிறது.

‘’காற்றே வா

மலையாளக் காற்றே வா

இளங்காலைப் போதில்

தெருவே மணக்கவரும் பூக்காரிபோல்

வாசனை நடைபோட்டு வா

இளம்காலைப் பொழுதில் தெருவே மணம் வீசும்படி பூக்களைச் சுமந்து வருகிற பூக்காரி போல  நல்ல வாசனையோடு நடைபோட்டு வா’ என்று மலையாள இலக்கியத்தை, நட்பை, வளத்தை வரவேற்கிறார்.

தாய்வீடு வரும் செல்வமகள் உனக்கு

அடையா நெடுங்கதவாய்த்

திறந்தே கிடக்கும்

பாலக்காட்டுக் கணவாய்

மலையாளத்திற்குத் தாய் தமிழ்மொழி என்பதால், ‘தாய்வீடு வரும் மகளே உனக்கு எங்கள்  அடைக்கப்படாத நீண்ட கதவுகள் திறந்தே இருக்கும்’ என்று மலையாளம் என்ற  மகளை அழைக்கிறார். (கணவாய் என்ற சொல்லுக்கு மலைப்பாதை என்று பொருள்.

அரபிக் கடலின் நீலச் சுரங்கத்தில்

புதையல் எடுத்து

திமிரோடு கரையணைக்கும்

அலைச்சுகத்தை அள்ளிவா

சங்கம்புழைக் கவிதைகள் போல்

அடர்ந்து செறிந்த தேக்குமரக் காடுகளின்

தோளில் உராய்ந்து வா

தென்னை மரங்களைக் கதகளி ஆடவிட்டு

மிளகுக் கொடிகளோடு கண்ணாமூச்சி ஆடிவா

அரபிக்கடலின் நீலச்சுரங்கத்தில் வளமாகிய புதையலை எடுத்து கரையில் சேர்க்கும் அலைகளின் சுகத்தை மலையாளக்காற்றே எடுத்துக்கொண்டு வா!

பிரபல மலையாளக்கவிஞர் சங்கம்புழைக் கிருஷ்ணப்பிள்ளையின் கவிதைகள் அடர்த்தியான பொருள் செறிவு உடையவை இதனை அடர்ந்த தேக்குமரக்காடுகளுக்கு உவமையாக்கி காற்றே நீ அந்த காடுகளின் தோளில் உராய்ந்து வா என்கிறார்

கேரளாவில் தென்னைமரங்களும் மிளகும் வளம்பெருக்குகின்றன.மேலும் கதகளி அங்கு சிறந்த நடனம் எனவே

‘’ தென்னை மரங்களைக் கதகளி ஆடவிட்டு மிளகுக்கொடிகளோடு 

கண்ணாமூச்சி ஆடிவா’’என்றும் 

பச்சைக் கிளிகளைப் போல்

பலா இலைகள் பறக்கவும்

மஞ்சள் கிளிகளைப் போல்

தாழம்பூக்கள் சிறகடிக்கவும்

விந்தைகள் செய்யும் மோகினி வா

பச்சைக்கிளிகளைப்போன்ற பலா மர இலைகள் உதிர்ந்து பறக்கவும் மஞ்சள் கிளிகளைப்போன்ற தாழம்பூக்களைச் சிதற அடித்தவாறும் காற்றே நீ விந்தை செய்யும் மோகினியைப்போல வா என்றும் கூறுகிறார். (மோகினி, யட்சி  போன்ற பெண்தெய்வ நம்பிக்கை கேரளத்தில் மிகுதி.)

கோடையில்

குருவாயூர்ச் சந்தனம் ஆவதும்

குளிர் காலத்தில்

காதலியின் பெருந்தனம் ஆவதும்

உன் வாடிக்கை

இங்கே தமிழகத்தில் கோடைக்காலமாக இருக்கும்போது கேரளத்தில் உள்ள குருவாயூர்க்கோயிலில் தரும்   சந்தனம்போல  மலையாளக்காற்று  இங்கு  குளிர்ச்சியாக வீசும்.  அதேபொழுது இங்கே குளிர்காலமாக இருக்கும்போது மலையாளக்காற்று காதலியுடன் சேர்ந்திருப்பதுபோன்ற இன்பம் தரும். எனவே எக்காலத்திலும் சுகம்தரும் காற்றே அது உன் வழக்கமான  வாடிக்கை  என்று கூறுகிறார்.

ஆடி மாதம் (உன் கற்கடக மாதம்)

தமிழ்நாடே வெயிலில் கிறங்கும்

அப்போது உன் தோளிலிருந்து

எம் கணவாய் வாசலில்

முகில் தங்கம் இறங்கும்

அது உன் கால வர்ஷம்...

ஆடிமாதத்தில் (கேரளாவில் கற்கடக மாதம்) தமிழ்நாடே  வெயிலில் மயங்குகின்ற காலத்தில் உன் மலையாகிய தோள்களில் இருந்து மேகங்களாகிய தங்கம் எங்கள் கணவாயில் இறங்கும் அதுதான் நீ  காலத்தில் வழங்கும் மழை! 

பாலக்காட்டு மணியின்

மிருதங்க ஆவர்த்தனமாக

எரிமேலிப் பேட்டைத் துள்ளலாக

பளிங்கு மழைப் பந்து

விளையாடி வருகிறாய்

தாகித்த எங்கள் மண்ணுக்கு

அம்பலபுழைப் பால் பாயசமாகிறாய்

        பாலக்காட்டு மணியுடைய மிருதங்க ஓசைபோல, எரிமேலிப் பேட்டை துள்ளல் போல (இது அங்குள்ள பழங்குடியினரின் அரக்கி மகிசி கொலை குறித்த சடங்கு நடனம், துள்ளல் என்பது மகிழ்ச்சியில் ஆடுவது.) மழையாகிய         பந்தை  காற்றே  நீ  விளையாடி வருகிறாய்! இதனால் தண்ணீர் தாகத்தில் உள்ள எங்கள் மண்ணுக்கு அம்பலப்புழை  கோயிலில்  தரும் பால்பாயசம் போல ஆகிறாய்!

என்னென்ன கொண்டு

வந்தனை காற்றே!

ரோமானியர்களோடு கைகோத்து

அன்றொரு காலம்

வெள்ளியும் தங்கமும்

விதைத்துப் போனாய்

என்னென்ன கொண்டுவந்தாய் காற்றே! ரோமானியர்களின் பாய்மரப்படகுகளோடு கைகோர்த்து ஒருகாலத்தில் வெள்ளியும் தங்கமும் இங்கே விதைத்தாய்!

விம்மியழும் தேவகியைக்

குலசேகரப் பெருமாளோடு

கூட்டிக் கொண்டு வந்தாய்

சேரமான் பெருமாளின்

ஈரச் சொற்களால்

ஆதியுலா நடத்தினாய்

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகர  ஆழ்வார் பெருமாள்திருமொழி பாடியவர். தேவகி புலம்பல் என்ற பாடலில் கண்ணனைப் பெற்ற  தேவகி தான் அவனை வளர்க்க  முடியவில்லையே, யசோதை அப்பேற்றினைப்பெற்றாளே என்று புலம்பி அழுத பாங்கினை பாடியுள்ளார்.இதனையே,

‘’விம்மி அழும் தேவகியைக் குலசேகரப்பெருமானோடு கூட்டிக்கொண்டு வந்தாய்’’ என்று கூறுகிறார்.

மேலும்,சேரமான் பெருமாள் நாயானர் 63 நாயன்மார்களுள் ஒருவர்.சேர அரசமரபினர். இவருடைய திருக்கையிலாய ஞானவுலா என்ற நூலைத்தான் ஆதி உலா என்பார்கள். இதைத்தான் ‘’ஈரச்சொற்கள்(கருணை மிகுந்தவைகொண்டு ஆதி உலா நடத்தினாய்’’ என்கிறார்.

காட்டு யானையின் தந்தம் போல்

தத்துவக் கூர்மைபூத்த

சங்கரனை இடுப்புப் பிள்ளையாய்

எடுத்து வந்தாய்

கேரளத்து யானையின் கூர்மையான தந்தம் போன்ற கூர்த்த தத்துவ அறிவு மிக்க          ஆதிசங்கரர் அவர்களை குழந்தையாய் இருக்கும்போதே தமிழகத்துக்குக் கொண்டு வந்தாய்!

சாதி இருட்டைத் தகர்த்த

கேரளத்து ஞாயிறு

ஸ்ரீ நாராயண குருவின்

தேவாரங்களோடு

திருவாசகங்களோடு

குருவின் ஆத்மதரிசனக் கண்ணாடியாய்

மலையாளக் கவிதையில் பிரதிஷ்டையான

குமாரன் ஆசானின் சிம்மகர்ஜனையையும்

ஏந்தி வந்து தந்தாய்

தமிழகத்தில் தந்தை பெரியாரைப் பகுத்தறிவுப் பகலவன் என்போம், கேரளத்து ஞாயிறு என்று கொண்டாப்பட்டவர் நாராயண குரு இவர்,  அங்கு சாதிய இருட்டைப் போக்கியவர் அவர் தேவாரப் பதிகங்களும் பாடியுள்ளார்.  ஸ்ரீ நாராயணகுருவின் முதன்மைச் சீடரானகுமரன் ஆசானின்  கவிதைகள் குருவின் ஆத்மதரிசன  கண்ணாடி போல் திகழ்ந்தன. அந்த சிங்க கர்சனையையும் தமிழகத்துக்குத் தந்தாய்! என்கிறார்.

நீலக்கடலோரம்

கருத்தம்மா அழுதகுரல்

காயம் சுமந்து வந்தாய்

மனப்புண் தழும்பாகக்

கனராக கந்தருவன்

ஏசுதாஸ் சிந்தும்

இசையமுதில் கரைந்து கரைந்தெம்மைக்

காணாமல் போக வைத்தாய்

மலையாள இலக்கியத்தில் தகழிசிவசங்கரம்பிள்ளை எழுதிய செம்மீன் நாவல் குறிப்பிடத்தக்கது.அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுஅதில் வரும் கருத்தம்மா என்ற     பெண் கடற்கரையோரம் தன்காதலனோடு இறந்துகிடப்பாள் அந்தக்கண்ணீர்க்கதையைக் குறிப்பிட்டே                     நீலக்கடலரம் கருத்தம்மா அழுதகுரல் காயம் சுமந்துவந்தாய்’’ என்கிறார்.

ஏசுதாஸ் என்ற மலையாளப்பாடகர் தமிழ்த் திரைப்படப் பாடல்களைப்      பாடி புகழ்பெற்றவர்.  அவரைத் தமிழகத்துக்குத்தந்து கனராக கந்தருவன்போன்ற அவருடைய இசையமுதில்  கரைந்து கரைந்து எங்களைக்காணாமல் போகவைத்தாய்!

வைகை பெருகிவரப்

பெரியாற்றில் தேங்கி நின்றாய்

கோவை களைப்பாறச்

சிறுவானியால் விசிறினாய்

பரம்பிக்குளத்தால் நெஞ்சில்

பச்சை பிடிக்க வைத்தாய்

எங்கள் வைகை நதி பெருகிவரும்போது பெரியாற்றில்(முல்லைப்பெரியாறு அணையில் ) நீ தேங்கி நின்றாய்கோயம்புத்தூர்  களைப்பாறுவதற்கு சிறுவானிநதியால் விசிறினாய்,பரம்பிக்குளம் என்ற நீர்நிலையால் எங்கள் நெஞ்சில் பச்சை(வளம்,அன்புபிடிக்க வைத்தாய்இத்தனையும் செய்தாய் மலையாளப்பூங்காற்றேஎன்ன கைமாறு செய்தோம்?

இத்தனையும் செய்தாய்

மலையாளப் பூங்காற்றே!

என்ன கைம்மாறு செய்தோம்?

நீ வரும்

கணவாய்ப் பாதையில்

உன்னை வரவேற்கப்

பளிங்குக்கல் பதித்து

அதன் மேல்

பட்டு விரித்தது போல்

ஓர் இளம் நதியை -  ஆழியாற்றை

அன்போடு அனுப்பி வைத்தோம்.

 

அதிசயம் பார்...

நல்லோர்க்குச் செய்த உபகாரம்

பன்மடங்கு பெருகுமென்பார்...

உனக்காக விரித்த நடை பாவாடை

அந்தச் சின்னஞ்சிறு நதி

கேரளத்தின் சரித்திரத்துச் சீதனமாய்க்

கலைநதியாய்க் குலதனமாய்ப்

பாரதப் புழையாயிற்று.

மலையாளக்காற்றே நீ வரும் வழியில் உன்னை வரவேற்க பளிங்குக்கல் பதித்து அதன்மேல் பட்டு விரித்தது போன்ற ஓர் இளம் நதியை  ஆழியாற்றை அனுப்பி வைத்தோம். அதிசயம் பார்நல்லோர்க்குச்செய்த சிறு உதவி  பல மடங்கு பெருகும் என்பார்கள்        உனக்காக விரித்த அந்த நடைபாவாடை (நடந்துசெல்லும் கம்பளவிரிப்பு)யாகிய அந்த    ஆழியாறு கேரளத்தின் சரித்திரச் சீதனமாய்,கலை வளர்த்த நதியாய்காலம் காலமாய் வந்த குலத்தின் செல்வமாய் பாரதப்புழை ஆயிற்று        என்கின்றார்

வள்ளுவன் சொன்னது போல்

தினைத் துணை நன்றியைப்

பனைத் துணை ஆக்கினாய்

வாழ்க நீ

மலையாளக் காற்றே!’’    

‘’தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன் தெரிவார்’’

என்ற குறளை எடுத்தாண்டு,

வாழ்க நீ மலையாளக்காற்றே!’’  என்று கவிதையை நிறைவு செய்கிறார்

 சிந்து நதியின் மிசை நிலவினிலே என்ற  பாடலில், சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்  என்று பாடினார் மகாகவி பாரதி, கவிஞர் சிற்பி அவர்கள் கவிதையால் தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் பாலம் அமைத்துள்ளார்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக