(இந்த ஆய்வுக்கட்டுரை அரிமாநோக்கு இதழில்
Volume-20 / Issue-1 / Jan-Mar 2026
வெளியிடப்பட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)
ஆய்வுச் சுருக்கம்
திருக்குறளுக்கு, பல உரைகள், மொழிபெயர்ப்புகள்,
திறனாய்வுகள் அச்சுவடிவில் உள்ளன. தேடுபொறி நுட்பங்கள், செய்யறிவு நுட்பங்களுக்கேற்ப
ஒருங்குறி வடிவிலும், சொல்லடைவு, தொடரடைவு, பெரிய மொழி மாதிரி என பல வடிவங்களில் இணையத்தில்
திருக்குறளை தரவாக்கம் செய்வது காலத்தின் தேவை என்பதை உணர்த்துவதுடன், திருக்குறளில்
இடம்பெறும் உணர்வுகளை தொல்காப்பியரின் மெய்ப்பாட்டிலை அடிப்படையாகக் கொண்டு பெரிய மொழிமாதிரியாக
உருவாக்கும் வழிமுறைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
திறவுச்சொற்கள்
திருக்குறள், உணர்வுப் பகுப்பாய்வு, மெய்ப்பாடு,
பெரிய மொழி மாதிரி, Sentiment analysis, LLM,
முன்னுரை
மனித வாழ்வின் வழிகாட்டியாகத் திகழும் நூல் திருக்குறள். இந்நூலுக்குப் பல உரைகள் வந்தாலும் நவில்தொறும் நயம்தரும் நூலாகவும், தொட்டனைத் தூறும் மணற்கேணி போலவும் இந்த நூலை வாசிப்போர் அறிவு நிலைகளுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைப் பெறமுடிகிறது. இன்றைய சூழலில் திருக்குறளுக்கான பொருளை சாட் ஜிபிடி, ஜெமினி போன்ற செய்யறிவுக் கருவிகளில் உரை, படம், ஒலி, காணொலி வடிவில் பெறும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் பதிலின் துல்லியத்தன்மை குறைவாகவே உள்ளது. திருக்குறளுக்கென பெரிய மொழி மாதிரியை (Large Language Model (LLM) உருவாக்கி, அதில் ஒவ்வொரு குறளிலும் இடம்பெற்ற உணர்வுகளை வகைப்படுத்தி அகராதியாக உருவாக்கி, இயந்திரக் கற்றலில் மொழி மாதிரிகளுக்கு நுண்பயிற்சி (Fine-tuning) வழங்கினால் துல்லியமான பதில்களைப் பெறமுடியும். பெரிய மொழி மாதிரி உருவாக்கத்தில், திருக்குறளில் உணர்வுப் பகுப்பாய்வின் (Sentiment analysis) தேவையையும் அதற்கான வழிமுறைகளையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
அறிவும் - உணர்வும்
திருக்குறளை நீதி நூல் என்று
பொதுவாகக் கருதினாலும். உழவு முதல் மருத்துவம் வரை திருவள்ளுவர்,
மனித வாழ்வின் பல்வேறு கூறுகளையும் பேசியுள்ளார். வாழ்க்கையில் வெற்றிபெற, மண் பயனுற வாழ, அறிவு மட்டும் போதாது உணர்வுகளைக் கையாளும் திறனும் வேண்டும் என்று,
ஆளுமைத் திறன் மேம்பாடு குறித்து (Personality development) நாம் கற்று வருகிறோம். Emotion, Feelings, Sentiment ஆகிய சொற்கள்
உணர்வுகளைச் சுட்டும் சொற்களாகப் ஆங்கிலத்தில் பயன்படுகின்றன. உணர்வுப்
பகுப்பாய்வு என்பது கருத்துப் பகுப்பாய்வு என
அழைக்கப்படுகிறது. “இயற்கை மொழியைப்(NLP)பயன்படுத்தி, கணினிகளுக்கும்
மனிதர்களுக்கும் இடையிலான தொடர்புகளைக் கையாளும் இயந்திரக் கற்றலின் (ML)ஒரு
கிளையாகும். ஒரு குறிப்பிட்ட உரைக்கு உணர்ச்சி மற்றும் கருத்து உள்ளடக்கம் கொண்ட
எந்த வார்த்தைகள் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளவும் உணர்வுப் பகுப்பாய்வு
பயன்படுத்தப்படலாம்”1 என்பார்
மோட்வாணி.
“கல்லாதவரும் விலங்குகளும் ஒன்றாகவே கருதப்படுவர்“2 என்று சொன்ன வள்ளுவர், ”அரம்போன்ற கூர்மையான
அறிவும்,
பண்பின்றிப் பயனில்லை”3 என்று உரைத்துள்ளார். அறிவுநிலையில் மட்டுமின்றி உணர்வுகளைக் கையாளும் திறனை வளர்த்துக்கொள்ளவும்
இந்நூல் உதவும். அதனால். கணினி வளர்ச்சிக்கேற்ப தேடுபொறி நுட்பங்களுக்கு ஏற்ப, செய்யறிவுக் கருவிகளுக்கேற்ப திருக்குறளை, உணர்வு நிலையில்
பாகுபடுத்தவேண்டும். திருக்குறள் பற்றிய இன்றைய மின் கருவிகளுக்கு
நிறைய தெரியும் என்றாலும், “எவ்வளவு கற்றாலும்
ஒழுக்கமுடையவர்களுடன் சேர்ந்து வாழ்வதே அறிவு”4 என்று திருவள்ளுவர் ஏன் குறிப்பிட்டார் என்பதை நாம் உணரவேண்டும். கணினிக் கருவிகளுக்கு உணர்த்தவேண்டும்.
உணர்வுப் பகுப்பாய்வு (Sentiment analysis)
உணர்வு பகுப்பாய்வு, என்பது “இயற்கையான மொழி செயலாக்கம் (Natural
language processing,),
உரை பகுப்பாய்வு (Text analysis), கணினி மொழியியல்
(Computational linguistics) ஆகியவற்றைப் பயன்படுத்தி உணர்ச்சி
நிலைகளை முறையாக அடையாளம் காணவும், பிரித்தெடுக்கவும், அளவிடவும், ஆய்வு
செய்யவும் பயன்படுகிறது.“5 அரசியல், வணிகம்,
சமூக ஊடகங்கள் மக்களின் மதிப்புரைகளைப் பகுப்பாய்வு செய்து தம் வளர்ச்சிக்காகப்
பயன்படுத்திக்கொள்வது வழக்கமாக உள்ளது. மனிதர்கள் “ஒரு
உரையை வாசிக்கும்போது, நேர்மறையானதா, எதிர்மறையானதா, வியப்பு, அல்லது
வெறுப்பு போன்ற நுட்பமான உணர்ச்சிகள் உள்ளனவா என்பதை அறிய சொற்களின் நோக்கத்தைப்
புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்”6 என்பார் டேவிட் ராபின்சன். இந்த முறை, பொதுவாக நேர்மறை (Positive), எதிர்மறை (Negative) அல்லது நடுநிலை (Neutral)
என வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் திருக்குறள் போன்ற அற நூல்களுக்கு இவை
போன்ற உணர்வுப் பகுப்பாய்வு முறை போதுமானதாக அமையாது.
திருக்குறளில் உணர்வு – மெய்ப்பாடு
அறிவுடைமை அதிகாரத்தில், “யாரிடம்
கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு“7 என்றும், மெய்யுணர்தல்
அதிகாரத்தில்,
“எப்பொருளையும் தோற்றத்தை மட்டும் காணாமல் உண்மைக் காண்பதே
அறிவு“8 என்றும் திருவள்ளுவர் உரைத்துள்ளார்.
இவ்விரு குறள்களையும் ஆழ்ந்து நோக்கினால் செவிகளால் கேட்பது, கண்களால்
காண்பது ஆகிய இரண்டும் உண்மைதானா என ஆராய்ந்து அறியவேண்டும் என்ற கருத்து வெளிப்படுகிறது. அறிவுக்கும் உணர்வுக்குமான நுட்பமான வேறுபாட்டை இக்கருத்து வெளிப்படுத்துகிறது. அதனால் திருக்குறளில் இடம்பெறும் உணர்வுகளை வகைப்படுத்த தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாட்டு மரபுகளையும் பயன்படுத்துவது சிறப்பாக அமையும். உள்ளத்து
உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு. உடலசைவு மொழிகளை (Body language) என்கிறோம். முகத்தில்
தோன்றும் உணர்வுகளை Emoji
என்ற
குறியீட்டு மொழியில் வெளிப்படுத்தி வருகிறோம். “முகமே மனதைக் காட்டும்
கண்ணாடி“ 9 என்ற திருவள்ளுவரின் கருத்து
சிந்திக்கத் தக்கது.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. (திருக்குறள்-304)
சிரிப்பையும், மகிழ்ச்சியையும்
கொல்வதால் சினமே பெரும்பகை என உணர்வுகளை திருவள்ளுவர் நுட்பமாக உரைத்துள்ளார்.
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப“10 தொல்காப்பியர்.
நகை (சிரிப்பு), அழுகை, இளிவரல்
(இழிவு), மருட்கை
(வியப்பு), அச்சம்(பயம்), பெருமிதம்
(வீரம்), உவகை, வெகுளி (கோபம்) என இந்த எட்டு
மெய்ப்பாடுகளும் திருக்குறளில் இடம்பெறுகின்றன. இந்த எட்டு மெய்ப்பாடுகளும் நான்கு நான்காக உட்பிரிவுகளைக் கொண்டு 32 மெய்பாடுகளாக விரிகின்றன.
அவற்றுள் நகை என்ற மெய்ப்பாடு – எள்ளல் - பிறரை ஏளனம் செய்தல்,
இளமை - குழந்தைச் செயல், பேதமை- அறியாமல் செய்யும் பிறரது செயல்,
மடன் - மடத்தனமான செயல்கள் என நான்கு சூழல்களில் தோன்றும்.
”நக-786,927, நகல்-999, நகுக-
621, நகுதல்-784, நகும் -1094, நகுப-1140, நகா-824, நகும்-271,
774, 1040, 1094, 1095, 1098, நகை-182, 304, 694, 817, 871,
953, 995, 1274, எள்ள -191, 491, எள்ளி – 1298, எள்ளாமை
-667, 291, எள்ளாத -470, எள்ளுஞ் சொல் -607, பேதமை – 358, 417, 428, 507, பேதை -372, 603”11
என திருக்குறளில்
நகை தொடர்பான சொற்கள் நேரடியாக இடம்பெறுகின்றன.
“வஞ்சமனம்
கொண்டவனின் பொய்யொழுக்கத்தை அவன் உடலில் உள்ள ஐம்பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்“12,“நிலம் என்னும் நல்லாள் நகும்“13
ஆகிய திருவள்ளுவரின் கருத்துகளை உவமையாகவே
கருதவேண்டும். “போர்க்களத்தில் தன் வேலை யானை மீது எய்தவன், தன்மீது பாய்ந்த வேல்கண்டு
சிரித்தான்“14 என்ற குறளை நோக்கும்போது, அச்சமும் அழுகையும் தோன்ற வேண்டிய நிலையில்
வீரம் காரணமாக தோன்றிய சிரிப்பு இயல்பான சிரிப்பிலிருந்து
நுட்பமான வேறுபாடுடையது. திருவள்ளுவர் குறிப்பிடும் நகை தொடர்பான உணர்வுகளை, இன்பத்தில்
தோன்றிய சிரிப்பு, துன்பத்தில் தோன்றிய சிரிப்பு, வீரத்தில் தோன்றிய சிரிப்பு, உவமையில்
இடம்பெறும் சிரிப்பு என, பலவாறு பாகுபடுத்த முடிகிறது. திருக்குறளில் இடம்பெறும் நகை
என்ற உணர்வு சிரிப்பு என்ற சொல்லால் இன்று அறியப்படுகிறது. எங்கு சிரிக்கவேண்டும்,
எதற்குச் சிரிக்கவேண்டும் என்றெல்லாம் பல சான்றுகள் உண்டு. அவற்றுள், “பெரியவர்கள் முன்பு, காதோடு பேசுதல், சிரித்தலும்
தவிர்ப்பது நலம்“ 15 என்றும் உரைத்துள்ளார்.
திருக்குறளுக்கான
உணர்வு அகராதி
திருக்குறளில் இடம்பெறும் உணர்வுகளை, தொல்காப்பிய
மெய்பாட்டியலின் அடிப்படையில், நகை என்ற மெய்பாட்டுக்கு மேலே சுட்டிக் காட்டியதுபோல,
நேரடியான சொல், இணைச் சொல், உவமையாக இடம்பெறும் சொல் எனப் பகுத்து அச்சொற்களுக்கு இணையான
ஆங்கிலச் சொற்களையும் அகராதியாக உருவாக்கவேண்டும்.
தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்பாடுகளை, திருக்குறளில் முழுமையும் இனம் கண்டு கூகுள் விரிதாள், அல்லது எம்.எஸ். விரிதாளிலில் உருவாக்கி CSV கோப்பு வடிவில் சேமிக்கவேண்டும். பிறகு JSONL
வடிவில் மாற்றி நுண்பயிற்சி (Fine-Tuning) செய்து செய்யறிவுக் கருவிகளின் வழியாக மேலும் துல்லியமான பதில்களைப் பெறமுடியும்.
சொல் பகுப்பு (Tokenization) அணுகுமுறைகள்
திருக்குறளின் மூல பாடத்தில் இடம்பெறும் உணர்வுகளைப் பகுத்து விரிதரவு உருவாக்கும்போது, இலக்கண, மொழியியல்
அடிப்படையிலான சொல் பகுப்பு நுண்பயிற்சிக்கு ஏற்றதாகும்.
பெரிய உரைத் தொகுப்பை, சிறிய, தனித்தனி அலகுகளாகப் பிரித்து வழங்குவதால் பெரிய மொழி மாதிரிகள்
எளிதில் புரிந்துகொள்ளும். ஒவ்வொரு
சொல்லிலும் தனித்தனியாக இடம்பெறும் உணர்வுகளை பாகுபடுத்தினாலும் சுருக்கமாக குறளில்
இடம்பெறும் உணர்வை ஒரு வரியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்குவது சரியான அணுகுமுறையாக
இருக்கும். மேலும் குறள் சார்ந்த உணர்வுகளை அக்குறள்
இடம்பெறும் அதிகாரங்களுடன் ஒப்புநோக்கி உணர்த்துவது துல்லியத்தன்மையை மேம்படுத்தும்.
சான்றாக,
“துன்பம் வரும்போது சிரி, அதுதான் துன்பத்தை வெல்லும் வழி“ என்ற
கருத்தை ஆராயும்போது, துன்பத்தில் யாரும் சிரிக்கமுடியுமா? என்ற கேள்வி எழும். இடுக்கண்
அழியாமை என்ற அதிகாரத்தில் உரைக்கிறார் என்பதை உணரும்போது. அந்த அதிகாரத்தை முழுவதும்
வாசிக்கும்போது, துன்பத்தில் சிரிப்பதே பக்குவத்தின் வெளிப்பாடு என்பது புரியும்.
முடிவுரை
திருக்குறளுக்கான மூல பாடம், உரை, மொழிபெயர்ப்பு, திறனாய்வுகள் பலவும் அச்சுவடிவில்
உள்ளன. கணினி வளர்ச்சிக்கேற்ப ஒருங்குறி வடிவில் பெரிதும் இல்லை. அதனால்
தேடுபொறிகளுக்கும், செய்யறிவுக் கருவிகளுக்கும் திருக்குறள்
தொடர்பான வளங்களை சரியான வடிவத்தில் வழங்கினால் தேடுவோருக்கு துல்லியமான செய்திகள்
கிடைக்கும்.
சாட் ஜிபிடி, ஜெமினி போன்ற செய்யறிவுக் கருவிகள்
குறள் தொடர்பான படங்களை, கதைகளை, காணொலிகளை
உருவாக்கும் திறன்பெற்றுள்ளன. அவை புரிந்துகொள்ளும் வகையில் திருக்குறளுக்கான
தரவுகளை பெரிய மொழிமாதிரியாக வழங்கி நுண்பயிற்சி வழங்கினால் பதில் சரியானதாக
அமையும். அவ்வகையில் திருக்குறளில் இடம்பெறும் உணர்வுகளை தொல்காப்பியரின்
மெய்ப்பாட்டியலை அடிப்படையாகக் கொண்டு தரவாக்கம் செய்தால் எதிர்காலத்தில்
செய்யறிவுக் கருவிகள் வழியாக திருக்குறளின் பெருமையை உலகமெலாம் பரவச் செய்ய
இயலும்.
சான்றெண் விளக்கம்
1. Bharti Motwani,Machine Learning fo
Text and image Data Analysis, Page-115
2. திருக்குறள் – 410
3. திருக்குறள் –997
4. திருக்குறள்- 140
5. https://en.wikipedia.org/wiki/Sentiment_analysis
6. Julia Silge and David Robinson,
Text Mining with R,Page-13
7. திருக்குறள்
- 423
8. 5.திருக்குறள் – 355
9. திருக்குறள்- 706
10. தொல்காப்பியம்- பொருளதிகாரம் – மெய்ப்பாட்டியல்-247
11. பதிப்பாசிரியர்
- கி.வா.ஜகந்நாதன்,
திருக்குறள்
ஆராய்ச்சிப் பதிப்பு,
ப-804
12. திருக்குறள் -271
13. திருக்குறள் -1040
14. திருக்குறள் -774
15. திருக்குறள் -694
16. திருக்குறள் -621
%20copy.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக