வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


சனி, 7 மார்ச், 2026

மதிப்புகள் - சான்றோர் சிந்தனை - வானொலி உரை


 காலம் பொன்போன்றது என்று சொல்வதுண்டு.

காலம் மட்டும்தான் பொன்போன்றதா, என்றால், காலத்தைக் காட்டிலும் மதிப்புமிக்கவை பல உண்டு.

காலத்தின் மதிப்பை உணர்ந்தவர்கள் தங்கத்தை விட மதிப்பு மிக்கது காலம் என்பார்கள். ஆம் யாவருக்கும் 24 மணிநேரம் பொதுவானதாக இருந்தாலும் எல்லோரும் அதை ஒரே மாதிரி பயன்படுத்துவதில்லை.

பெற்றோர்கள், தம் பிள்ளைகளுக்கு கல்வியின் மதிப்பை, வாழ்க்கையின் மதிப்பை, உழைப்பின் மதிப்பை, நேரத்தின் மதிப்பை, பணத்தின் மதிப்பை இப்படி பல்வேறு மதிப்புகளையும் உணர்த்துகிறார்கள். பெற்றோர்களே எல்லா மதிப்புகளையும் உணர்த்த முடியாது என்பதால்தான் கல்வி நிலையங்களில் மேலும் இம்மதிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

பெற்றோரிடமும் கல்வி நிலையங்களிலும் இம்மதிப்பை உணராதவர்கள் வாழ்க்கையில் அனுபவம் வழியாக இம்மதிப்பை உணர்கிறார்கள். ஆனால் அனுபவம் பாடம் நடத்திய பிறகு தேர்வு வைக்காது. தேர்வு வைத்தபின்தான் பாடம் நடத்தும்.

பழைய புத்தகங்கள், பழைய நாணயங்கள், பழைய ஓவியங்கள், பழைய பானை ஓடுகள் என இவை  பயன்படாதவை, மதிப்பில்லாதவை என நாம் ஒதுக்குபவை கூட சில நேரங்களில் பெரு மதிப்புடையவையாக மாறிவிடுவதுண்டு.

ஆம் மதிப்புகள் நிலையானவை அல்ல சில நேரங்களில் மாறக்கூடியவை,

படித்தால் கிடைக்கும் மதிப்பு அதைப் பின்பற்றாவிட்டால் கிடைப்பதில்லை,

பதவியால் கிடைக்கும் மதிப்பு சிலருக்கு அந்தப் பதவியில்லாதபோது கிடைப்பதில்லை.

சிலர் அணியும் சீருடையில் கிடைக்கும் மதிப்பு அவர்கள் இயல்பான ஆடை அணியும்போது கிடைப்பதில்லை.

அதனால்தான் திருவள்ளுவர்,

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள். (751) என்றார்.

மதிப்பில்லாதவர்களும் பொருளால் மதிப்படைவர். அதனால் பொருள் மட்டும்தான் மதிப்புடையது என்று நினைத்துவிடக்கூடாது.

யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு. (397)

கற்றவருக்கு எந்த நாட்டிலும், எந்த ஊரிலும் மதிப்பு என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

சங்க காலத்தில்,

யவனர்கள் பெரிய மரக்கலங்கள் நிறைய தங்கத்தைக் கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டிவிட்டு அதற்கு இணையாக நம் நாட்டில் விளைந்த மிளகை அள்ளிச் சென்றமையை அகநானூறு வழியாக அறியமுடிகிறது.

தங்கத்தைவிட மிளகு மதிப்புமிக்கது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்“ (அகநானூறு – 149 : 9-10)

முல்லை நிலத்து ஆயர்குலப் பெண் தான் விற்கும் நெய்யின் விலையாகக் கட்டித் தங்கத்தைக் கொடுத்தாலும் பெறாமல். அவர்களிடமே சேமித்து வைத்து நல்ல பால் தரும் எருமையையே வாங்கினாள் என்பதை,

நெய்விலை கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

எருமை நல்லான் கரு நாகு பெறும்“

பெரும்பாணாற்றுப்படை (164-165) குறிப்பிடுகிறது.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி.

மதிப்புடன் திகழ்வதையை யாவரும் விரும்புவோம்.

பேச்சின் ஒலி அளவை அதிகரிப்பதைவிட,

பேச்சின் ஆழத்தை அதிகப்படுத்தினால் பேச்சின் மதிப்பு உயரும்.

பயனில்லாத சொல் பேசுவோரை மக்கட் பதடி என உரைத்த வள்ளுவர்,

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.- 645

ஒவ்வாரு சொல்லையும் ஒன்றை ஒன்று வெல்வதாகப் பேசு  என்றார்.

அவ்வாறு பேசும்போது சொல் மதிப்புப் பெறுகிறது என்றார்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர். - 973

மேலானவர்கீழானவர் என்பது பண்பாலேயே மதிப்பிடப்படுகிறது   

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல். - 986

சிறியோரிடமும் தோல்வியை ஒப்புக்கொள்வதே பெரியவர்கள் மீது மதிப்பை உருவாக்குகிறது.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம் -386

எளிமையும், இன்சொல்லும் கொண்ட அரசனால் பதவி மதிப்புப் பெறுகிறது

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.      (671)

ஆராய்வது துணிவடையவே, துணிந்தபின் காலந்தாழ்த்தக்கூடாது அவ்வாறு செயல்படும்போது செயல் மதிப்புப் பெறுகிறது.

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது

உண்ணிலின் ஊங்கினிய தில்.-  1065

 

தெளிந்த நீர்போன்ற கூழானாலும் உழைத்து உண்பதே இனியது. அவ்வாறு உழைத்து உண்ணும்போது உழைப்பு மதிப்புப் பெறுகிறது.

 

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.- 105

உதவியின் அளவு பெற்றவரின் மனநிலை சார்ந்தது, சிறு உதவியையும், பேருதவியாகக் கருதுவோருக்கு உதவும்போது உதவி மதிப்புப் பெறுகிறது.

 

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.-216

நல்லவனிடம் செல்வம் சேர்வது பயன்தரும் பழமரம்  ஊர்நடுவில் பழுத்தது போன்றது  அப்போதுதான் செல்வம் மதிப்புப் பெறுகிறது

நிலத்தியல்பால் நீர்திரி தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு – 452

அறிவானது நீரைப்போல, சேரும் இடத்தைப் பொறுத்தே அதன் மதிப்பு.

நல்ல நட்பால் அறிவின் மதிப்பு உயரும்.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் சொல்.-453

உணர்ச்சி மனதளவிலும், மதிப்பு நல்ல சுற்றதாலும் தோன்றும் என்றும் வாழ்வில் மதிப்புடன் வாழ பல்வேறு சிந்தனைகளைத் திருக்குறள் வழங்கியுள்ளது.

பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய

மா மலை பயந்த காமரு மணியும்,

இடை படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து

அரு விலை நன் கலம் அமைக்கும் காலை

ஒரு வழித் தோன்றியாங்கு, என்றும் சான்றோர் . . . . (218)

சான்றோர் பாலர் ஆப,

சாலார் சாலார் பாலர் ஆகுபவே. -புறநானூறு 218

பொன், பவளம், முத்து, நீலமணி, ஆகியவை ஒன்றுக்கொன்று தொலைவான இடத்தில் தோன்றினாலும், பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களில் தொடுக்கும் பொழுது, ஒரே இடத்தில் சேர்ந்திருக்கின்றன. அதைப் போல், எப்பொழுதும் சான்றோர்கள் சான்றோருடன் சேர்வர். சான்றாண்மை இல்லாதவர்கள், சான்றாண்மை இல்லாதவர்களையே சேர்ந்திருப்பர் என்ற புறநானூற்றுச் சிந்தனையும் நாம் சேருமிடம் சார்ந்தே நாம் மதிப்புப் பெறுகிறோம் என்பதை உணர்த்துகிறது.

மதிப்பு, நாம் ஈட்டும் பொருள், தோற்றம், பதவிகளால் மட்டும் கிடைப்பதில்லை. கல்வி, பண்பு, இனிய சொல், சரியான கால மேலாண்மை, நற்செயல்களாலும் கிடைக்கும்.

 

 

வேடிக்கை மனிதரைப்போல வாழக்கூடாது அது மதிப்பில்லை என்று உணர்ந்த மகாகவி பாரதி, நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? என்று பாடினார். ஒரு வீணை எவ்வளவு அழகாகச் செய்யப்பட்டிருந்தாலும், அது மீட்டினால் தான் மதிப்பு. அது புழுதியில் எறியப்பட்டால் பயன்படாது. அதுபோல ஒரு மனிதன் எவ்வளவு தகுதியுடையவனாக இருந்தாலும் சுயநலமுடன் வாழ்ந்தால் மதிப்பில்லை. மண்பயனுற வாழ்ந்தால் மதிப்பை அவன்தேடவேண்டியதில்லை. மதிப்பு அவனைத் தேடி வரும் என்பதே சான்றோர் வாக்கு.

 

 

 

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர்

9524439008

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக