வாழ்க்கை என்பது நமக்கு நடப்பவற்றில் 10 சதவீதமும், அதற்கு நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பதில் 90 சதவீதமும் அடங்கியுள்ளது.,
வயது, அனுபவம், இடம், காலம், மனநிலை, சுற்றத்தார்
சார்ந்து
சூழ்நிலைகளும் அதை எதிர்கொள்வோர் இயல்புகளும் மாறுகின்றன.
‘வாழ்க்கை மிக எளிமையானது. நாம்தான் அதைச் சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்பார் கன்பூசியஸ்.
சவாலான சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவோர்,
மன உறுதியுடையவர்களாகவும், திட்டமிடும் பண்புள்ளவர்களாகவும்
இருப்பார்கள். எதிர்மறையான சூழலில் பதற்றமடையாமல்,
பொறுமையுடன் செயல்பட்டு,
தகுந்த முடிவுகளை எடுத்து,
இலக்கை அடைவர்.
இன்பமான சூழல்களில் சிலர் நன்றியுணர்வையும்,
பணிவையும் வெளிப்படுத்துவர்.
துன்பமான சூழல்களில் சிலர், பொறுமை, துணிவு,
விடாமுயற்சி, தன்மானம் ஆகிய பண்புகளை வெளிப்படுத்துவர்.
எல்லா சூழல்களும் நம் வாழ்க்கையில் நம்மை
மேம்படுத்துகின்றன.
நம் அறிவைக் கூர்மைப்படுத்துகின்றன. அனுபவத்தை
வழங்குகின்றன.
மழை நீர் விழும் இடத்திற்கேற்ப நிறம் பெறுகிறது
பெயர்பெறுகிறது.
அதுபோல சூழ்நிலைகளை நாம் எவ்வாறு
எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து நாம் சகமனிதர்களிடம் பெயர் பெறுகிறோம்.
மலையைவிட உயர்வானது தன் நிலை மாறாமலிருப்பது.
திருவள்ளுவர், இதனை,
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (– 124) என
உரைத்துள்ளார். மேலும், தன்னறிவுடன்,
நூலறிவும் கொண்டவருக்கு முன் சூழ்ச்சிகள்
நில்லாது என்பதை,
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.(-636)
என்றார்.
இன்பம், துன்பம் இரண்டையும் இரண்டு மடங்காகப்
பார்ப்பது மனித இயல்பு.
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. (-425)
உயர்ந்தோரிடம் பழகி,
இன்ப, துன்பங்களைச் சமமாகக் காண்பதே அறிவு
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.(-629)
இன்பத்தால் மகிழாதவனுக்கு, துன்பத்தில் துயரம் ஏற்படுவதில்லை
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.(-461)
ஆக்கத்தையும், அழிவையும் ஆராய்ந்து செயல்படுவோர், வெற்றியோ,
தோல்வியோ ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் எந்த சூழ்நிலைகளையும் இயல்பாகக்
கடந்துசெல்வார்கள்.
கல்வி என்பது வாழ்க்கையின்
சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனாகும்.
இதனையே,
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.(-622)
வெள்ளம்போல பெருந்துன்பத்தையும் மனவலிமையால்
வெல்லலாம்
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.(-623)
துன்பத்தில் கலங்காதவர், துன்பத்திற்கே
துன்பம் கொடுப்பார்கள் என்றும்
உரைத்துள்ளார் திருவள்ளுவர்.
சூழ்நிலைகளை சிலர்
வசப்படுத்துகிறார்கள், சிலர் சூழ்நிலைகளின் வசப்படுகிறார்கள்.
உருவத்தால் நீண்ட உயர் மரங்களெல்லாம்
பருவத்தாலன்றிப் பழுக்காது என்பார் ஔவையார். இதனையே காலம், இடமறிந்து
செயல்பட்டால் உலகையே வெல்லலாம் என்றார் வள்ளுவர்.
எல்லா
நேரங்களிலும் சூழ்நிலைகளை மாற்றிவிடமுடியாது. அவ்வாறான நிலைகளில், அச்சூழல், நம்மைப் பாதிக்காமல் தடுப்பது மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் சிறந்த வழியாகும். "இந்தச் சூழல்
எனக்குச் சாதகமாக இல்லை" என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான்
அதில் இருந்து வெளியேற வழி பிறக்கும்.
சிலர்
விளையாட்டில் வெற்றிபெற்றால் தலைகால் புரியாமல் துள்ளுவதும், தோல்வியடைந்தால்
சோர்ந்துபோவதும், பிறர் மீது குறைகூறுவதும் இயல்பு.
சிறியவர்களிடமும்
தோல்வியை ஒப்புக்கொள்வதே மேன்மையின் உரைகல் என்றார் திருவள்ளுவர்.
வெளிச்சூழ்நிலை எப்படி
இருந்தாலும், என்
மனநிலை பாதிக்கப்படாது என்ற உறுதி வரும்போது ஒருவர்,
சூழ்நிலைக் கைதி என்ற நிலையில் இருந்து "சூழ்நிலையை ஆள்பவராக" மாறுகிறார்.
வாழ்வின்
எதிர்பாராத ஏற்ற இறக்கங்களை விருப்பு வெறுப்பின்றி ஏற்கும் மனப்பக்குவமே உண்மையான அறிவாகும்.
தனக்குக் கிடைக்க வேண்டிய
அரசுரிமை பறிபோகும் நிலையிலும்,
இராமன் காட்டிய அமைதி மிகச்சிறந்த மனோதிடத்திற்குச் சான்றாகும்.
இன்பத்திலும் துன்பத்திலும்
மாற்றமில்லாத ராமனின் முகம்,
அன்றலர்ந்த செந்தாமரையையும் வெல்லும் பொலிவு கொண்டதாகக் கம்பர் காட்டுவார்.
நாம்
பேசும் வார்த்தைகளும், பேசாத வார்த்தைகளும் நம் வாழ்வில் பல சூழ்நிலைகளை
மாற்றியமைக்கின்றன. பேசக்கூடாத நேரத்தில் பேசுவதும், பேசவேண்டிய நேரத்தில்
அமைதியாக இருப்பதும் ஆபத்தானது.
வார்த்தைகளைச் தனக்கு சாதகமாக்கி,
அடுத்தவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வது ஒரு கலை. அது வழக்கின்
திசையை மட்டுமல்ல, வாழ்க்கையின்
திசையைக் கூட மாற்றவல்லது.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். (-648)
சொல்லுபவர் சொன்னால் இவ்வுலகமே அதனை
விரைந்து கேட்கும் என்று அறிவுடையோர் சூழ்நிலைகளுக்கேற்ப தாம் பேசும் வார்த்தைகளைச்
சொல்லும்விதமாகச் சொல்வார்கள் என்றார் திருவள்ளுவர்.
ஒளைவையார்
அதியமானைப் பாடும்போது,
ஊரில் உள்ள சிறுவர்கள்
நீர்த்துறையில் படிந்த பெரிய களிற்று யானை மீதேறி
விளையாடுவர். அந்த யானைபோன்றவன் அதியமான். எங்களுக்கு எளிமையுடையவனாக
விளங்குகிறான்!
மாறாக,
அந்தக் களிற்றுயானை மதம் கொண்டால் மிகவும் அச்சமூட்டுவதாகவும், தம் அருகே
யாரும் செல்ல இயலாததாகவும் விளங்கும்
அவ்வாறே அவன் தன், பகைவருக்கு இன்னாதவனாக விளங்குகிறான்!
யானையின் எளிமையும்,
வலிமையும் அதியனின் பண்புக்கு உவமையானது.
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை,
பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய்,
பெரும ! நின் ஒன்னா தோர்க்கே.
புறநானூறு 94.
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
யாரிடம் அன்புகாட்டவேண்டும்? யாரிடம் வலிமையைக்
காட்டவேண்டும்?
என்பதை நன்கு அறிந்தவன் என்று அதியனின் புகழை உரைக்கிறார்
ஒளவையார்.
இருவேறு தன்மைகளையும்
ஒன்றாகப்பெற்றவன் அதியன்
மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும்தான். நம் வலிமையை, எளிமையை, அன்பை, அருளை எங்கே,
யாரிடம் வெளிப்படுத்துவது என்று தெரியாமலேயே சூழ்நிலைகளை மாற்றிக்கொள்கிறோம்.
வானில்
பறக்கும் பட்டம் கற்றை எதிர்த்து உயரமாகப் பறப்பதில்லை..
காற்றைப்
பயன்படுத்தியே உயரமாகப் பறக்கிறது.
வறண்ட நிலத்தில் வளரும் தாவரம் மண்ணில் ஈரம் இல்லை என்றவுடன் வாடிவிடாமல், தன்
வேர்களைப் பூமிக்கு அடியில் ஆழமாக அனுப்பி நீரைத் தேடுகிறது. அதுபோலவே, தடைகள்
வரும்போது துவண்டுவிடாமல்,
அந்தத் தடையையே ஏணியாக மாற்றிச் சூழ்நிலையை நம் வசப்படுத்த வேண்டும்.
ஏட்டுக்கல்வி கற்றுத் தராத வாழ்வியல் பாடத்தைச் சூழ்நிலைகள் நமக்கு வழங்குகின்றன.
சூழ்நிலைகளைக் கண்டு அஞ்சாமல் எதிர்கொள்பவர்கள் மட்டுமே அனுபவம் பெறுகிறார்கள்.
எல்லா
சூழ்நிலைகளிலும் நம் உணர்வுகளை உடனே வெளிப்படுத்தவேண்டியதில்லை..
ஆறுவது
சினம் என்பதை உணர்ந்து சில நேரங்களில் அமைதியுடனும், சில நேரங்களில் புன்சிரிப்புடனும்
அந்த மணித்துளிகளைக் கடந்து செல்வது அறிவுடைமை.
வெளியில் நடப்பவை நம் கட்டுப்பாட்டில் இல்லை; ஆனால், நமக்குள்ளே
நடப்பவை நம் கட்டுப்பாட்டிலேயே உள்ளன." சூழ்நிலைகளை
ஆள்பவராக மாறுவதே கல்வியின் மற்றும் அனுபவத்தின் உண்மையான பயன் என்பதை
உணர்வோம் சூழ்நிலைகளை வசப்படுத்துவோம்.
முனைவர் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பி.எஸ்.ஜி கலை அறிவியல்
கல்லூரி
கோயம்புத்தூர்
9524439008

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக