வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

மனநிறைவு

 


 

இன்றைய வேகமான உலகில் நாம் அனைவரும் ஏதோ ஒன்றை நோக்கி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். பணம், புகழ், பதவி எனப் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆனால், இவை அனைத்தையும் அடைந்த பிறகும் நம் மனதில் ஒரு வெற்றிடம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் பொறாமை, பேராசை அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு நிறைந்துவிட்டால் மனநிறைவு பெற இடம் கிடைக்காது.

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்பவர்கள் மனநிறைவடைவார்கள். ஆனால் போதும் என்ற மனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வந்துவிடாது. நாம் வாழத் தேவை குறைவுதான் என்றாலும், அடுத்தவரைப் போல வாழ்வதற்காகவும், அடுத்தவரைவிட சிறப்பாக வாழ்வதற்கும் தான் அதிகமாக செலவிடுகிறோம்.


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
    (247)

என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே? போதும் என்று இருந்திருந்தால் மனிதகுலம் இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்குமா? என்ற கேள்வி தோன்றலாம். அடிப்படைத் தேவைக்கும், ஆடம்பரத் தேவைக்கும் வேறுபாட்டை அறியாதவர்களே மனநிறைவடையாமல் வாழ்கின்றனர். இலக்குகளை அடையும் அவசரத்தில் பசிக்கும் முன்னே உண்பது, உறக்கமின்றி தவிப்பதும் இன்று பலருக்கும் வழக்கமாகிவிட்டது..

பணம் பணம் என்று ஓடி உடல் நலத்தை இழந்து அதை மீட்க மருந்துகளையும் மாத்திரையையும் உணவாக உண்பவர்கள் பலர்.

தம் வாழ்க்கைப் பயணத்தில் செல்வத்தைச் சேர்த்தபிறகு விரும்பியதை உண்ணக்கூடாது என்று மருத்துவர் சொல்லும்போது அந்த உணவுகளை ஏக்கத்துடன் கடந்து செல்வோர் பலர்.

கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது..

செல்வம் சேர்த்தோம் நல்ல உறவுகளை, நட்புகளை சேர்த்தோமா,

நல்ல நினைவுகளைச் சேர்த்தோமா, என எண்ணிப்பார்த்தால் பலருக்கு மனநிறைவைத் தவறவிட்டோம் என்பது புரியும்.

நமது தேடலில் நாம் அன்றாடம் செய்யும் செயல்களில் மனநிறைவு பெறுகிறோமா என சிந்திப்போம். இயற்கைக்கூறுகளை ரசிப்பதற்கும் நேரம் ஒதுக்குவோம்.

வாழும் மனிதர்களே வயிற்று மனிதர்களே
புதையலை வானத்தில் போட்டுவிட்டு
பூமிக்குள் என்னதான் தேடுவீர்கள்?
நீங்கள் நாளைகளை சேமிக்கும் அவசரத்தில்
இன்றையல்லவா அன்றாடம் தொலைக்கிறீர்கள்..

என்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் சிந்தனையைச்  சீர்தூக்கிப்பார்ப்போம்.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி யொழுகப் படும். (154)

இயந்திரத்தனமான வாழ்க்கையில் பொறுமையின் தேவையை உணர்வோம்.

பொறுமையுடன் எதிர்கொள்ளும் மணித்துளிகள் நினைவில் நிற்கும், மனநிறைவு தரும். அதனால்தான் பொறுமையின் உறைவிடமாக இருக்கும் மனிதர்களைத் இவ்வுலகம் நிறைவான மனிதர் எனப் புகழ்கிறது. அவசரம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என மனநிறைவைத் தவறவிட்ட மணித்துளிகளை சிந்திப்போம்..

நமக்கு மேலே உள்ளவர்களை மட்டும் பார்க்காமல் நமக்குக் கீழே உள்ளவர்களையும் பார்க்கும்போது, நம் வாழ்க்கை எவ்வளவு நிறைவானது என்பதும் ஒவ்வொரு மணித்துளிகளும் எவ்வளவு அனுபவங்களைத் தரக்கூடியன என்பதும் புரியும்.

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா' என்ற பாரதியின் மனநிலை யாவர்க்கும் எளிதில் வாய்ப்பதில்லை.

பேரரசர்களுக்கும், விலங்குகளை வேட்டையாடித்திரியும் கல்வியில்லாத ஒருவருக்கும் உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம்                        ஓரொக் கும்மே; செல்வத்துப் பயனே ஈதல் என உரைக்கிறது புறநானூறு. இதே கருத்தை ஔவையார்,

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்

எண்பது கோடிநினைந்து எண்ணுவன என என்பார். எண்பது கோடி நினைவுகளோடு வாழும் மனிதர்கள் எவ்வாறு மனநிறைவடையமுடியும். இம்மனிதர்களை கண்ணைக் கட்டிக்கொண்டு வாழும் மாந்தர்கள் என்பார் ஔவையார்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.    (228)

பெறுவது சிலருக்கு நிறைவு தரும் கொடுப்பது சிலருக்கு நிறைவு தரும்.

கொடுத்தலின் இன்பம் அறியாதவரே சேமித்துவைத்து இழப்பார்கள் என்றார் திருவள்ளுவர்.

ஒவ்வொருவரின் பயணமும் தனித்துவமானது. இன்ப துன்பங்கள் நிலையானவை அல்ல. கடந்த காலத் துன்பங்களையும் எதிர்காலக் கனவுகளையும் சுமக்காமல், நிகழ்காலத்தின் மணித்துளிகளை நேசத்துடன் ஏற்றுக்கொள்ளும் மன இயல்புடையவர்களே மனநிறைவடைகிறார்கள்.

ஒரு பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்ற மூன்று மாணவர்கள் பரிக்கோப்பையுடன் 1,2,3 என்ற அடையாளத்துடன் நிற்கின்றனர். மூன்றாவது பரிசுபெற்ற மாணவனின் மகிழ்ச்சியும் உற்சாகமும் மனநிறைவும் அளவு கடந்ததாக உள்ளது. அதைப் பார்த்த முதல் பரிசு பெற்ற மாணவனுக்கு முதல் பரிசு பெரிதா? மூன்றாவது பரிசு பெரிதா?  என்ற மயக்கம் தோன்றுகிறது.

என்ன கிடைத்து என்பதைவிட, கிடைத்ததை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதே ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.

 

மனிதவாழ்வில் கிடைக்கும் மனநிறைவுகளுள் குழந்தைச் செல்வத்தால் கிடைக்கும் மனநிறைவு குறிப்பிடத்தக்கது. பலசுவைமிக்க உணவுகளைப் படைத்துப் பலரோடும் அமர்ந்து உண்ணும் பெரும்செல்வம் பெற்றவராயினும், தம் பிஞ்சு கரங்களால் சோற்றைப் பிசைந்து, உடலெல்லாம் சிதறி, குறும்பு செய்து இன்பம் தரும் குழந்தைச் செல்வம் தருவதே மனநிறைவு என்பதைப் பாண்டியன் அறிவுடைநம்பியின் பாடல் உணர்த்துகிறது.

          நாமும் பெரிய பெரிய உணவகங்களில் சுவைமிக்க விதவிதமான உணவுகளை உண்டாலும் வயிறு நிறையும் ஆனால், மனம் நிறைவதில்லை. நம் வீட்டில் நம் அன்புடையவர்களுடன் பகிர்ந்துண்ணும் போது வயிறும், மனமும் நிறைவடைகிறது

மன நிறைவு என்பது ஒருவரது மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. மகிழ்ச்சி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வழிகளில் கிடைக்கிறது. என்றாலும் சுயநலமுடையவர்கள் பெறும் மகிழ்ச்சிக்கும், பொது நலமுடையவர்கள் பெறும் மகிழ்ச்சிக்கும் வேறுபாடு உண்டு.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.   (169)

நல்லவனின் உயர்வும், தீயவனின் தாழ்வும் நோக்கத்தக்கது என்றார் திருவள்ளுவர். நல்லவருக்கும் தீயவருக்கும் அடிப்படை வேறுபாடு அவர்கள் வாழ்க்கையை எவ்வாறு வாழ்கிறார்கள் எதற்கு மதிப்பளிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது.

துன்பத்தில் சிரிப்பவர்களும், தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை உணர்ந்தவர்களும் மனப்பக்குவமுடையவர்களாக இருப்பார்கள். மனப்பக்குவமே மனநிறைவின் அடிப்படையாகிறது. இல்லாதவற்றை பட்டியலிடும்வரை நம்மிடம் உள்ளவையும், நம்மைச்சுற்றியுள்ளவையும் மனநிறைவு தந்துவிடாது.

 

இன்பமோ, துன்பமோ நிலையில்லாதது. இன்பத்துக்குள் துன்பமும் உள்ளது.

துன்பத்துக்குள் இன்பமும் உள்ளது.

குறுந்தொகைப்பாடலில் ஒரு தலைவி,

குரங்குகள் இனிய கனியை உண்ணும்போது தம் கூட்டத்தோடு சேர்ந்து இருப்பதுபோல இன்னாத சுவையுடைய மிளகின் தளிர்களை உண்ணும்போதும் தம்கூட்டத்தோடு சேர்ந்தே இருக்கும். அதுபோல, இன்பமோ துன்பமோ தலைவனோடு சேர்ந்திருப்பதே இன்பம் என்கிறாள் தலைவி. அந்த இன்பத்தோடு சொர்க்கத்தைக்கூட ஒப்பிடமுடியாது என்கிறாள் (-குறுந்தொகை -288)

 

மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.

ஆடம்பரம் என்பது என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை என்றார் சாக்ரடீஸ்.

 

வாழ்க்கையின் நோக்கம் செல்வம் தேடுவது மட்டுமல்ல; தேடிய செல்வத்தையும் நேரத்தையும் எதற்காகச் செலவிடுகிறோம் என்பதில்தான் வாழ்வின் அர்த்தம் உள்ளது. இல்லாதவற்றைப் பட்டியலிடுவதை நிறுத்திவிட்டு, நம்மிடம் இருக்கும் நன்மைகளையும் இயற்கையின் அழகையும் ரசிக்கத் தொடங்குவோம். அகத்தின் பக்குவமே மனநிறைவின் கதவைத் திறக்கும் திறவுகோல் என்பதை உணர்வோம்.

 

 

 

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர்

9524439008

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக