வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 8 மார்ச், 2017

இயற்கையும்! பெண்களும்!


பெண்களும் இயற்கையும் ஒன்று!
இரண்டும் புதிரானது! புரியாதது!
நிலம், நீர், தீ, காற்று, வான்
என இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் பெண்களைப் பிரதிபலிக்கின்றன!

நிலம் பொறுமைக்குப் பெயர்பெற்றது
நிலத்தை பூமாதேவி என்றுகூட அழைப்பதுண்டு!
என்ன சிலநேரம் இந்த பூமாதேவிகூட பூகம்பமாய் வெளிப்படுவதுண்டு!

நீர் எங்கும் நிறைந்தது.
பெரும்பாலும் ஆறுகளுக்குப் பெண்களின் பெயர்கள்தான் இட்டுள்ளோம்.
கடலாகவும் அதில்தோன்றும் சிறு அலையாகவும் தோன்றும் நீர்
சில நேரங்களில் பேரலையாக சுனாமியாக மிரட்டிச் செல்வதுண்டு!

வழிபாட்டில் விளக்காக ஒளிவிடும்போது தீ வணங்கப்படுகிறது!
காட்டுத்தீயாகப் பரவும்போது அச்சமூட்டுகிறது!

காற்று தென்றலாக வருடும்போது கொண்டாடப்படுகிறது!
புயலாக வீசும்போது நடுங்கச்செய்கிறது!

வான் மழையாகப் பொழியும்போது வாழ்த்தப்படுகிறது
இடியாக ஒலிக்கும்போது வருந்தச்செய்கிறது.

இப்படி  நிலம், நீர், தீ, காற்று, வான் என இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் உணர்த்தும் நீதி என்ன தெரியுமா?

பலம் தான் பலவீனமாகிறது!
பலவீனம் தான் பலமாகிறது!
                         
சான்றாக ஒரு கதை…
சாவியிடம் சுத்தியல் கேட்டதாம்..
நான் பூட்டைத்திறக்க மிகவும் வருந்துகிறேன்..
நீ மட்டும் எப்படி மிக எளிதாகத் திறந்துவிடுகிறாய்? என்று
அதற்கு சாவி சொன்னதாம்..
நீ பூட்டின் தலையில் பலமாக அடித்து திறந்துவிடு என்று மிரட்டுகிறாய்…
நானோ பூட்டின் இதயத்தைத் தொட்டு திறந்துவிடு என மென்மையாகச் சொல்லுகிறேன் என்று..

இங்கு பூட்டுதான் நாம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள்!
சுத்தியல்தான் ஆண்கள்!
சாவிதான் பெண்கள்!

இங்கு பலம் சாதிக்க முடியாததை பலவீனம் சாதித்துவிடுகிறது!
ஏன் நம் நாட்டுக்கு சுதந்திரத்தைக்கூட பலத்தால் பெற்றுத்தரமுடியவில்லையே! பலவீனம் தானே பெற்றுத்தந்தது!

ஆம் பலம் என்பது உடல் வலிமை மட்டுமல்ல!
மனவலிமை தான் உண்மையான பலம்!

மனிதனின் படைப்பில் எதுவும் நிறைவானதோ, முழுமையானதோ கிடையாது!
இயற்கையின் படைப்பில் எதுவும் குறைவானதே கிடையாது!
பெண் ஏன் ஆண்போல இருக்கவேண்டும்?
இதைப் புரிந்துகொள்ளாதது நம் அறியாமை!

இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் இயற்கையின் கோட்பாட்டை நாம் சரியாகப் புரிந்துகொண்டவராகிறோம்.

செவ்வாய், 7 மார்ச், 2017

திங்கள், 6 மார்ச், 2017

தமிழ்த்தாத்தா வாழ்வின் திருப்புமுனை!


3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும்
சேகரித்தவர்!
90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப் பதிப்பித்தவர்!
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர்! சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு என இவரது பதிப்புகளுள் குறிப்பித்தக்கன!
தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர்!
என பல புகழுக்கும் சொந்தக்காரர் உ.வே.சா அவர்கள்.
உ.வே.சா அவர்களுக்கு முதலில் தமிழ் கற்பித்தவர் இவரின் தந்தைதான். இருந்தாலும் உ.வே.சா. விற்குத் தமிழில் சுவையுண்டாக்கித் தமிழ் விதைவிதைத்த முதற் குரு அரியலூர் சடகோப ஐயங்கார் இவரே உ.வே.சா வாழ்வின் திருப்புமுனை என்றால் இவரை சங்கீத வித்வானாக்கவேண்டும் என ஆசைப்பட்ட உ.வே.சா அவர்களின் தந்தை தம் மகனின் தமிழ்ப்பசியைக் கண்டு ஊர் ஊராகச் சென்று தம் மகன் தமிழில் நுட்பமுடையவராக தன் மகனின் கனவுக்குத் துணை நின்றது இன்னொரு திருப்புமுனை எனலாம்.
வடமொழியும், ஆங்கிலமும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில்
 மது தந்தையின் நண்பராகிய கும்பகோணம் வக்கில் வேங்கிடராவ் உவேசா தமிழ் கற்பதனாலும் இசைப் பயிற்சியினாலும் பெரியபயனில்லை,  ஆங்கிலம் கற்றுக் கொடுங்கள், தாம் உதவி செய்வதாகவும் தமது நண்பர்கள் மூலம் உதவி செய்வதாகவும் சொன்னபோது உ.வே.சா தமக்குக் கோபம் வந்ததாகக் குறிப்பிடுகிறார்.

உ.வே.சா என்னும் தமிழ்த்தாத்தா தமிழுக்குப் பதிலாக வடமொழியையோ, ஆங்கிலத்தையோ படித்து தமிழ் மீது பற்றில்லாதவராக இருந்திருந்தாலோ, சங்கீத வித்வானாகியிருந்தாலே, அவரது தந்தை தன் கனவுக்காக நீ சங்கீதத்துறையில் தான் சாதிக்கவேண்டும் என கட்டாயப்படுத்தியிருந்தாலோ இன்று நாம் கொண்டாடும் பல தமிழ் இலக்கியங்கள் நம் பார்வைக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும்.

ஞாயிறு, 5 மார்ச், 2017

அறிவை இலவசமாக்கியவர்!

அறிவை இலவசமாக்கியவர்!
285 மொழிகளில் 24 மில்லியன் கட்டுரைகள்!
100,000 முனைப்பான பங்களிப்பாளர்கள்!
அலெக்சா தரவரிசையில் ஆறாவது இடம்!
 365 மில்லியன் வாசகர்கள்!
விளம்பரங்களே இல்லாத சேவை!
நமது தேடல்களுக்கு முதல் பரிந்துரையாகக் கிடைப்பது!
என பல பெருமைகளுக்கும் உரிமையுடையது விக்கிப்பீடியா!
இதை உருவாக்கிய ஜிம்மி வேல்ஸ் அவா்கள் பொருளாதாரம் படிக்க கல்லூரிக்குச் சென்றார். பின் ஸ்டாக் எக்ஸேங்கில் வேலைப் பார்த்தார். விரைவில் அதிலிருந்து விலகியவருக்கு நெட்ஸ்கேப் நிறுவனத்திடம் பங்குகள் வாங்கினார். படங்களைத் தேடித்தரும் போமிஸ் எனும் தளத்தை நடத்தினார். அது ஓரளவு லாபம் ஈட்டித்தந்தது. தொடர்ந்து ஜிம்மி வேல்ஸ் நுபீடியா எனும் தளத்தை தொடங்கி அதில் அறிவுபூர்வமான கட்டுரைகளை வெளியிட்டார்,எதிர்பார்த்த அளவுக்கு அந்தத் தளத்துக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில்,
     ஜிம்மிக்கு ஒரு சிந்தனை தோன்றியது இந்தத் தளத்தை நாம் ஏன் பொதுவான திறந்த செயல்பாட்டுக்குக் கொண்டுசெல்லக்கூடாது என்று, இந்த சிந்தனை அவர் வாழ்வில் மட்டுமல்ல இணைய வரலாற்றிலும் திருப்புமுனையாக அமைந்தது.
     யார் வேண்டுமானாலும், எழுதலாம், திருத்தலாம், பார்வையிடலாம் என்ற வசதிகளுடன் அறிமுகமானது விக்கிப்பீடியா. காப்புரிமை என்ற பெயரில் தம் படைப்புகளுக்கு ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கும் காலத்தில் “ஒட்டுமொத்த மனித அறிவும் எல்லா மனிதருக்கும் இலவசமாக போய் சேர வேண்டும்”என்று கனவு கண்ட ஜிம்மி வேல்ஸ் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வியல் முன்மாதிரி!

                                          

வெள்ளி, 3 மார்ச், 2017

புதிதாகப் பிறந்தவர்

மூன்று வருடங்களுக்கு மேல் நீங்கள் உயிர்வாழமுடியாது!
மூளையும் சிந்தனையும் தவிர உடலின் எந்தப் புலன்களும் செயல்படாது!
என அடுத்தடுத்த இடிகள் அவரது தலையில் விழுந்தன. அரிய வகை நரம்புநோய் அவரைத் தாக்கியது. துன்பத்தின் எல்லையில் மருத்துவனையில் இருந்தவருக்கு அவர் சேர்க்கப்பட்ட எதிர் அறையில் ஒரு சிறுவன் உடல்நலக்குறைவால் சேர்க்கப்படுகிறான். சில நாட்களிலேயே அவன் இறந்துவிடுகிறான். இந்த நிகழ்வு அந்த மனிதருக்கு மனதில் பெரிய பெரிய கேள்விகளை எழுப்பியது. அவர் நினைத்தார்..
அவனை விட நான் நல்வாய்ப்புப் பெற்றவன்! என் உடல் என் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், என் மூளையும் சிந்தனையும் முழுமையான ஆற்றலுடன் செயல்படுகிறது என்று…
அவர்தான்  ஸ்டீபன் ஹாக்கிங்!
வரலாற்றுக்கே  திருப்புமுனையான ‘A Brief History of Time’  என்ற நூலை எழுதியவர். காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரது கட்டுரைகள் அறிவியல் உலகின் மாபெரும் படைப்புகள்!
இவரது மந்திரச் சொல்,
எதை இழந்தீர்கள் என்பதல்ல! எது மிச்சம் இருக்கிறது!
அந்த சிறுவனின் மரணம் இவர் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அன்று அந்த சிறுவன் இறந்தான் என்றால் ஹாக்கிங் தனக்குள் புதிதாகப் பிறந்தார்.

இன்றுவரை அறிவியலின் பல புதிர்களுக்குப் பதிலளிக்கும் புதிராக விளங்குகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்!



புதன், 1 மார்ச், 2017

கண் பார்வையற்ற முதல் பட்டதாரிப்பெண்!


கண்கள் இரண்டும் தெரியாது! காதுகள் இரண்டும் கேட்காது!
வாய்பேசமுடியாது! விடாமுயற்சியால் பிறகு பேசவும் கற்றவர்!
பிரெயில் முறையில் ஆங்கிலம்பிரெஞ்சுஜெர்மன்கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்று எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தவர்!
39 நாடுகளுக்குச் சென்றவர்! 12 நூல்களை எழுதியவர்! கண் பார்வையற்ற முதல் பட்டதாரிப்பெண்! என பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரி,
அவர்தான் ஹெலன் கெல்லர்!
ஒருமுறை அவரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது.. அதற்கு அவர்,
இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடுதான் படைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்! அதை என்றாவது ஒருநாள் நான் உணர்வேன்! அப்போது அதுகுறித்து மகிழ்வேன்! என்று கூறினார். ஹெலன் கெல்லர்,
இவர் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை…

சார்லஸ் டிக்கின்சன் எழுதிய அமெரிக்கன் நோட்ஸ் என்ற புத்தகத்தை ஹெலனின் தாயர் 1886 ஆம் ஆண்டு படித்தார். கண்தெரியாத, காதுகேட்காத, பெண் லாரா என்பவர் எப்படிக் கல்விகற்றார் என்பது அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது ஹெலனின் தாயாருக்கு நம்பிக்கையளித்தது. இந்தக் கதையை அவர் படிக்காமல் இருந்திருந்தால் ஹெலனின் வாழ்க்கையில் இப்படி மாற்றம் நடக்காமலேயே இருந்திருக்கும். ஹெலனுக்கு நம்பிக்கை வந்தது ஒரு திருப்புமுனை என்றால் ஹெலனுக்கு ஆசிரியையாக ஆனி சல்லிவன் வந்தது இன்னொரு திருப்புமுனை எனலாம்.

எந்தக் குறையுமின்றித் தோன்றிய ஹெலனின் வாழ்வில் ஏற்பட்ட அடுத்தடுத்த உடல்சார்ந்த குறைபாடுகளால் அவா் மனம் வாடிப்போய்விடவில்லை! 
அவரின் தாய் அவர் மனதில் நம்பிக்கை விதை தூவினார் 
அந்த நம்பிக்கை விதையை  ஆனி சல்லிவன் என்னும் ஆசிரியர் வளர்த்தெடுத்தார்! 
தம் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்ட மணித்துளிகளில் ஹெலனுக்கு அகவிழிப்பு ஏற்பட்டது! 
அந்த அகவிழிப்பு அவரை இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறப்புமிக்கப் பெண்மணியாக  மாற்றியது!