வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 13 ஏப்ரல், 2017

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் திருப்புமுனை!

உயிர்க்கொலை என்பது சில நேரங்களில் நீதியாகவும்,
சிலநேரங்களில் அநீதியாகவும் நம்மால் பார்க்கப்படுகிறது!
ஜாலியன் வாலாபாக் படுகொலை என்றதும் நம் நினைவுக்கு வருபவர் ஆளுநர் மைக்கேல் டையர்! இவர் செய்த கொலையை நாம் அநீதியாகப் பார்க்கிறோம்.
டையரின் செயலைக் கண்டு வருந்தி அவரைக் கொல்வதற்காக 21 ஆண்டுகள் முயன்று அவரைக் கொன்ற ஒருவரின் செயலை நாம் நீதி என்று கொண்டாடுகிறோம்.
அந்த ஒருவரின் செயலை,

காந்திஜி கண்டித்தார்! நேதாஜி வரவேற்றார்!
இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டி இவர் என்றது பெர்லின் பத்திரிக்கை!
ரோம் நகரில் அதிகம் வெளியான பெர்கெரெட் (BERGERET) என்ற பத்திரிக்கை
இவரின் செயலை தீரச்செயல் என்று பாராட்டியது
ஒடுக்கப்பட்ட மக்கள் குண்டுகளால் பேசிவிட்டனர் என்றும் இந்தியர்கள்
யானையைப்போல எதிரிகளை மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் 20 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் பழிதீர்த்துவிட்டார்கள் என்றும் கூறியது
ஜெர்மனி வானொலி!

ஆம் அந்த ஒருவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் புரட்சியாளர்களுள் ஒருவர் உத்தம்சிங்!
1889- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் இவரின் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அதுவரை அவரது பெயர் ஷேர்சிங். அங்குதான் உத்தம் சிங் என்று பெயர் மாற்றப்பட்டது
1919- ஆம் ஆண்டு ஏப்ரல் 13- ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அன்று உத்தம் சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் கூட்டத்திற்கு தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலைந்து செல்லவும் வழியில்லாமல் நடத்தப்பட்ட படுகொலை அவரைக் கடுமையாக பாதித்துவிட்டது. அவர் இச்சம்பவத்திற்குப் பழிவாங்க பொற்கோவிலில் சபதம் பூண்டார்
1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் ஜெனரல் ஸ்டாஃப் டிவிஷன் எனும் ராணுவ மேலதிகார நிலையினருக்குச் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது:
நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.
என்று தான் செய்த செயல் குறித்து சிறிதும் வருத்தம் கொள்ளாத டயரைக் கொல்வதுதான்
தன் வாழ்வின் இலக்கு என்று கொண்டார் உத்தம்சிங்
மூன்றாண்டுகள் மைக்கேல் டையரைக் கொலை செய்யும் திட்டத்துடன் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1933- ல் காஷ்மீர் சென்று ஜெர்மனிக்குத் தப்பிவிட்டார். அவர் இத்தாலி, பிரன்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா வழியாக 1934- ல் லண்டனை அடைந்தார்.
மைக்கேல் டையரைக் கொல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1940- ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 21 ஆண்டுகள் கழித்து அந்த சந்தர்ப்பம் கிடைத்தது.

கேக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் கிழக்கிந்திய சங்கம், மத்திய ஆசிய சங்கம் இவற்றின் கூட்டம் நடந்தது.
மைக்கேல் டையர் ஒரு பேச்சாளர். சிங் ஒரு புத்தகத்தில் ரிவால்வர் மாதிரியே வெட்டி அதனுள் ரிவால்வரை வைத்து எடுத்துச் சென்றார். சுவரின் அருகில் நின்றார். கூட்ட முடிவில் டையர் மேடையை நோக்கிச் செல்லும் போது இருமுறை சுட்டார். டையர் உடனே இறந்துவிட்டார்.

உத்தம் சிங் சிறையில் 42 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் "நான் அவரைப் பழிவாங்க எண்ணியிருந்தேன். அவர் அதற்குப் பொருத்தமானவர்தான்" என்று கூறினார்
1940- ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று அவர் பென்டோன்வில் சிறைச்சாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். அன்று மதியமே அவரது உடல் சிறைச்சாலை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

அடிமைப்பட்டிருந்த இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்க உயிர் தியாகம் செய்தவர்கள் பலர். அவர்களின் ஒருவரான உத்தம்சிங் வாழ்வின் திருப்புமுனையாக ஜாலியன் வாலாபாக் படுகொலை அமைந்தது என்பது நாம் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்சொல்லவேண்டிய வரலாற்று நிகழ்வு.

வியாழன், 6 ஏப்ரல், 2017

ஒரே நாளில் 100 தமிழ்ப் பதிவுகள்!


எனது பிறந்தநாளில் நான் விரும்பும் மிகப் பெரிய பரிசை
எனக்குத் தரவேண்டும் என்று 

எங்கள் கே.எஸ்.ஆா் மகளிர்கல்லூரியின் மாணவிகள் 

எங்கள் கல்லூரி வலைப்பதிவில் ஒரே நாளில் 100 இடுகைகளைத் தமிழில் பதிவிட்டுள்ளனர். 

இந்தப் பரிசை என் வாழ்நாளின் மறக்கமுடியாத பரிசாகக் கருதுகிறேன்.
சமூகத்தளங்களில் என்னோடு உரையாடுபவர்கள் தமிழில் பேசினாலோ, தமிழில் தட்டச்சு செய்தாலோ கூட 
மகிழ்ச்சி கொள்வேன். இன்று எங்கள் மாணவிகளின் முயற்சி என்னை இன்னும் நம்பிக்கையுடன், ஊக்கத்துடன் செயல்படத் துணைநிற்கிறது.

இந்த முயற்சிக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செ.வைசாலி அவர்களுக்கும், அ.கோகிலா, சா.சரண்யா,ஜெ.ஜனனி, சுகன்யா, சாலினி, சாந்தினி,டி. சுதா, மோகனபிரியா, நா.ராஜலட்சுமி, பர்சானா உள்ளிட்ட ஒவ்வொரு மாணவிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய சிந்தனை - எழுத்து

திங்கள், 3 ஏப்ரல், 2017

ஒரு ஆசிரியரியரின் திருப்புமுனை!


133 கௌரவ டாக்டர் பட்டங்களுக்குப் பெருமை சேர்த்தவர்!
ஒரு நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில் இருக்கிறது என்று நம்பியவர்!
அவர் மாணவராக இருந்தபோது, அவரிடம் ஆசிரியர்
 “நீ புத்திசாலியாக விரும்புகிறாயா?
அறிவாளியாக விரும்புகிறாயா?” என்று கேட்டபோது,
அந்த மாணவர், அறிவாளிகள் மத்தியில் புத்திசாலியாகவும்,
புத்திசாலிகள் மத்தியில் அறிவாளியாகவும் விருப்பப்படுகிறேன்
என்று சொன்னார். அவர் யார் என்று தெரியுமா?
இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர்!
இரண்டாவது குடியரசுத் தலைவர்! சிறந்த தத்துவஞானி!
பேராசிரியர்! துணை வேந்தர்! இந்திய அரசின் தூதர்! என, 
ஆசிரியராகப் பணியைத் தொடங்கி பல உயரிய பதவிகளுக்குப் புகழ்சேர்த்தவர். அவர்தான் பாரதரத்னா, சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள். அவரது பிறந்தநாளே ஆசிரியர்தினமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
     சிறுவயதிலிருந்தே விளையாட்டை விட நூல்வாசிப்பை விரும்பியவர். அவரது இளமைக் காலம் வறுமை நிறைந்ததாக இருந்தது. அவரின் சிறிய தந்தையின் மகன் பி.ஏ தத்துவம்  படித்து முடித்திருந்தார். அவரது பழைய புத்தகங்கள் தனக்கு இலவசமாகக் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தால்தான் இராதாகிருஷ்ணன் அவர்கள் பி.ஏ தத்துவப் பிரிவைத் தேர்ந்தெடுத்தவர். இவர் தத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்தது இவர் வாழ்வின் திருப்புமுனை என்றால், விவேகானந்தரின் சிந்தனைகள் இவர் மனதில் ஆழமாக விழுந்தது அதற்கான அடிப்படை எனலாம். விவேகானந்தர் பற்றி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறும்போது,
“என்னுடைய இந்துமதப் பற்றையும், பண்பாட்டையும், மரியாதையையும் என்னோடு பழகிய பல கிறித்தவ மத போதகர்கள் அடிக்கடி சீர்குலைக்கப் பார்த்தார்கள். அவ்வேளைகளிலெல்லாம் நான் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளையும் கருத்துக்களையும் நினைத்துப் பார்ப்பேன்” என உரைக்கிறார்.

ஆசிரியர்கள், தம்முடைய துறையில் நிகழும் அண்மைக்கால வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அறிவுத் தாகம் கொண்ட மாணவர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் விளங்க வேண்டும் என உரைக்கிறார்.


செங்கல்லையும் , சுண்ணாம்பையும் கொண்டோ, சுத்தியலையும் , உளியையும் கொண்டோ தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கமுடியாது. அவை மனிதர்களின் உள்ளத்தில் ஓசைபடாமல் வளரவேண்டும். கல்வி மூலமாகத்தான் இது முடியும் என திடமாக நம்பிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் வாழ்வின் வழி ஆசிரியப் பணியின் பெருமையையும், கடமையையும், அதன் வலிமையையும் நாம் உணரவேண்டும்

சனி, 1 ஏப்ரல், 2017

வானில் பறக்கும் பட்டங்களே!





மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியருக்குமான உறவை எடுத்தியம்பும் பதிவு