வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 14 மார்ச், 2017

நாமும் நடிகர்களே!


விழவில்
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும் இவ் வுலகத்து - புறநானூறு - 20

விழாவில் ஆடும் கூத்தரின் வேறுபட்ட பல்வேறு
கோலம் போல முறையே மக்கள் தோன்றியும்,
இயங்கியும், இறந்தும் போகின்ற உலகம்!

திங்கள், 13 மார்ச், 2017

விடுதலை வேட்கை என்னும் விதை!

ஆறு ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்றவர்!
சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றவர்!
3 முறை தமிழக முதல்வராக இருந்தவர்!
பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார்!
4 முறை எம்.பியாகவும், 12 முறை தமிழக காங்கிரசின் தலைவராகவும்  
5 முறை இந்தியக் காங்கிரசின் தலைவராகவும் இருந்தவர்!
1200 பள்ளிகளைத் திறந்தவர்! 9 அணைகளைக் கட்டியவர்
திருமணம் செய்துகொள்ளாமல் நாட்டுநலனே பெரிதென வாழ்ந்தவர்!
சுதந்திரப் போரில் 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்!
கல்வி, தொழில், விவசாயம் எனப் பல நிலைகளில் தமிழகத்தை ஏற்றம் காணச் செய்தவர்!
மூத்த தலைவர்கள், பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காகக் கட்சிப்பணிகளில் ஈடுபடவேண்டும் எனக்கூறித் தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர்.
தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர், கருப்பு காந்தி என்றெல்லாம் போற்றப்பட்டவர்!
ஆம் அவர்தான் காமராசர்!

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்தவர், அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே.
சுதந்திரத் தீ பற்றி எறிந்த காலம்! டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் சொற்பொழிவுகள் இவர் மனதில் விடுதலை வேட்கை என்னும் விதையாக விழுந்தன என்றால், 15 வயதில் இவர் கேள்விப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை அந்த விதை வளரக் காரணமாக அமைந்தது.  அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று இவர் காங்கிரசுக் கட்சியில் இணைந்தது இவர் வாழ்வில் மட்டுமல்ல தமிழகம் மட்டுமின்றி இந்திய அரசியல் வாழ்வுக்கே திருப்புமுனையாக அமைந்தது.

ஞாயிறு, 12 மார்ச், 2017

இணைய வணிகத்தின் முன்னோடி!


உலக பணக்காரர் வரிசையில் மூன்றாவது இடம்!
அலெக்சா தரவரிசையில் 13 வதுஇடம்!
உலக இணை வணிகத்தின் முன்னோடி!
இயற்பியல் படித்து விண்வெளி வீரராக ஆசைப்பட்டவர்!          
கணினி கற்று மின்னணு அறிவியல்துறையில் பட்டம் பெற்றவர்!
மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றி லட்சக்கணக்கில் ஊதியம் ஈட்டிய காலத்தில் 1994 இல் இணையம் மக்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படத்தும், இனி இணைய வழி வணிகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என்று கணித்தவர்!
முதலில் இணையவழி நூல் விற்பனையைத் தொடங்கி இன்று மக்களுக்குத் தேவையான பல்வேறு பொருள்களையும் விற்கும் இணையழி வணிகத் தளமான அமேசானைத் தோற்றுவித்தவர்,
ஆம் அவர்தான் அமேசானின் (Amazon) நிறுவனர் உரிமையாளர்,  ஜெப் பெசாஸ் (Jeff Bezos)
”பெரியதாகக் கனவுகள் எனக்கு. என் கனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்தேன். இருப்பேன். மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது.” என்பது இவரின் கனவாகும்.
காலங்கள் மாறிக்கொண்டே தான் இருக்கும்.
கால மாற்றங்களைப் புரிந்துகொள்வதுதான் உண்மையான திருப்புமுனை என்பது ஜெப் பெசாஸ் வாழ்க்கை தரும் அரியதொரு பாடமாகும்.

எது மதிப்புமிக்கது?



மிளகுப் பொதிகளை ஏற்றுமதி செய்து! அதற்குப் பதிலாக தங்கத்தை இறக்குமதி செய்தனர்!
மிகுந்த பொருள்களைப் பணிந்து வந்து கொடுத்து மணம் வேண்டிப் பெண் கேட்டாலும் தன் தகுதிக்கு ஒத்தவராக இல்லாவிட்டால் அப்பெண் அவரை மணந்துகொள்ளமாட்டாள்!
தன் மகளுக்குப் பிடிக்கவில்லை என்றால் பெண்கேட்டு வந்தவர் அரசனாகவே இருந்தாலும் எதிர்த்துப் போரிடத் தயங்கமாட்டார் அவளின் தந்தை!
ஆம் இந்த மரபுகள் எல்லாம் சங்ககாலத்தில் இருந்தன.
மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பின் மனை மறுக்குந்து
மனை குவைஇய கறி மூடையால்
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து
கலம் தந்த பொற் பரிசம்
கழித் தோணியான் கரை சேர்க்குந்து
மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து வருநர்க்கு ஈயும்
புனல் அம் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிறி அன்ன
நலம்சால் விழுப்பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்
தந்தையும் கொடாஅன் ஆயின் – வந்தோர்
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று கொல்லோ தானே – பருந்து உயிர்த்து
இடைமதில் சேர்க்கும் புரிசை
படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே
- புறநானூறு 343
மகட்பாற் காஞ்சி, பரணர் பாடியது
     மீனை விற்று, அதனால் பெற்ற நெல்லைக் குவித்து ஏற்றிக்கொண்டு, நீரின்மேல் தோணிகள் ஏற்றிவந்த பொருள்கள் வீடுகள்தோறும் நிறைந்து காணப்படும்.
     வீடுகளில் குவித்து வைக்கப்பட்ட மிளகுப் பொதிகளால், மிக்க முழக்கத்தையுடைய கடற்கரைப் பகுதிகள் ஆரவாரமுடையனவாகத் திகழும்
     பெரிய மரக்கலங்களில் ஏற்றிக்கொண்டு வரப்பட்ட பொன்னாலான பரிசுப் பொருள்கள், உப்பங்கழிகளில் உள்ள தோணிகளின் உதவியால் கரையில் கொண்டு சேர்க்கப்படும்.
     மலையில் கிடைக்கும் பொருள்களும், கடலில் கிடைக்கும் பொருள்களும் கலந்து தன்னை நாடி வந்த இரவலர்க்கு வழங்குவோன் குட்டுவன்.
     அவன் பொன்னாலான மாலையை அணிந்தவன். அவனுடைய முழங்குகின்ற கடலைப்போல முரசு ஒலிக்கின்ற ஊர் முசிறி. இவ்வூர் கடல்நீர்போலக் கள்ளின் மிகுதியை உடையது. அம்முசிறியைப் போன்ற நன்மை நிறைந்த மிகுந்த பொருள்களைப் பணிந்து வந்து மணம் வேண்டி பெண் கேட்டாலும் தன் தகுதிக்கு ஒத்தவராக இல்லாவிட்டால் இவள் மணம் செய்துகொள்ளமாட்டாள்.

     தன் மகளின் மனநிலை அறிந்து தந்தையும் மணம் முடிக்க உடன்படாததால், பருந்துகள் இடைமதில் தங்கி இளைப்பாறுகின்றன. மதிலகத்தே தம்மை எதிர்த்து வந்தோர் அகப்படும்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏணிகளையுடைய படைகள் தம்முள் கலந்து போர்புரியும் அவ்வீரனுடைய நெடிய நல்ல ஊர், வருந்துவது கொல்லோ.

மிளகு மதிப்பானதா?
தங்கம் மதிப்பானதா?

அன்றும் இன்றும் நாம் தங்கமே மதிப்பானது என்று எண்ணிவருகிறோம். அதனால்தான் நாம் ஆங்கிலமருந்துகளுக்கு இன்னும் அடிமையாகவே இருக்கிறோம்..

அன்று மணமகன்கள் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள வரதட்சணை வழங்கினர். இன்று பெண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்கின்றனர்.

அன்று பெண் கேட்டு வந்தது அரசனாகவே இருந்தாலும் தன் மகளுக்கு அவரைப் பிடித்திருக்கிறதா என்று அவளிடம் கருத்துக்கேட்டனர். அவளுக்குப் பிடிக்காவிட்டால் வந்தவரை எதிர்த்துப் போரிடவும் அவர்கள் தயங்கியதில்லை.

சங்கப்பாடல்களை வாசிக்கும்போது நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வை எண்ணி பலநிலைகளில் பெருமிதம் கொள்ளவும் சிலநேரங்களில் அவர்களின் அறியாமையை எண்ணி வருத்தமும் தோன்றுகிறது.

பெருமிதம் அவர்களின் வளமான வாழ்வை எண்ணி!
வருத்தம் அவர்களின் தங்கமோகத்தை எண்ணி!

வெள்ளி, 10 மார்ச், 2017

தமிழ் வாழவேண்டுமா?

“தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ்வா ழாது
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது!
குமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டுங்
கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே!
அமிழ் கின்ற நெஞ் செல்லாம் குருதியெல்லாம்
ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிரு மாறே
இமிழ் கடல்சூழ் உலகமெல்லாம் விழாக்கொண்ட டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே!

பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது
எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி னாலும்
தட்டி, சுவர், தொடர்வண்டி, உந்துவண்டி
தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்“ – என்றெழுதி வைத்தே
முட்டிநின்று, தலையுடைத்து முழங்கி னாலும்
மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை!

செந்தமிழ்சேய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்
செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும்
முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்
முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்
வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி
நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
நோக்கிநடை யிடல்வேண்டும்! தமிழ்தான் வாழும்!

தண்டமிழ் பிறமொழியைக் கலந்து பேசுந்
தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும்!
தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்
தொங்குகின்ற பலகைகளை மாற்றச் சொல்லிக்
கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும்!
கற்கின்ற சுவடிகளில், செய்தித் தாளில்,
விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் தமிழ் வாழும் அன்றே!
-    கனிச்சாறு 1970
-    பாவலரேறு பெருஞ்சித்திரரனார்



வியாழன், 9 மார்ச், 2017

சித்தார்த்தரைப் புத்தராக்கிய காட்சிகள்!

ஆசையே துன்பத்துக்குக் காரணம்!
அறியாமையும்,
சாதிப்பிரிவுகளுமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்!
மனிதவாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது!
அத்துன்பத்துக்குக் காரணம் தன்னலமும் ஆசையும்!
மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கமுடியும்!
மனிதன் தன்னலம்,ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க 
எட்டுவகை பாதை உண்டு
நேர்மையான கருத்து
நேர்மையான எண்ணம்
நேர்மையான  பேச்சு
நேர்மையான செயல்
நேர்மையான வாழ்க்கை
நேர்மையான முயற்சி
நேர்மையான  சித்தம்
நேர்மையான தியானம்
எனப்பாதைகளை வகுத்து,
புத்திக்கு முதலிடம்கொடு
தர்மம் செய்
சங்கம் சேர்க  
என்று அறிவுறுத்திய புத்தர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது, நான்கு காட்சிகள்.
      1. ஒரு வயதான தள்ளாடும் கிழவர்,
2. ஒரு நோயாளி,
3. அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்,
4. நாலாவதாக ஒரு துறவி
இந்த நான்குகாட்சிகளும் சித்தார்த்தரைப் புத்தராக்கியது. இவை போல பல ஆயிரம் காட்சிகளைப் பார்க்கும் நாம் இன்னும் சராசரி மனிதராகவே இருக்கக் காரணம்.

எல்லாத் தவறுகளையும் நாமே செய்யவேண்டும் என நினைக்கிறோம்!
பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்கும் நுட்பத்தை நாம் அறிவதில்லை என்பதே எனது புரிதல்.