வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 22 மார்ச், 2011

உலக தண்ணீர் தினம் (சிறப்புஇடுகை)


மனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா? என்று இங்கு இருந்துகொண்டே சிந்தித்து வருகிறான் மனிதன். புதிய கோள்களில் முதலில் தேடுவது மனிதன் வாழ அடிப்படைத் தகுதியான நீர் உள்ளதா? என்பதைத் தான்.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். என்பதை,

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. என்றும்.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

என்பதை,

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. என்றும் உரைப்பார் வள்ளுவர்.

இக்குறள்களின் வழியே நீரின்றி உலகில்லை என்ற தெளிவான அறிவியல்க் கொள்கை வள்ளுவர் காலத்தே நிலைகொண்டிருந்தது என்பது விளங்கும்.

 வீடு தேடி வந்தவரை தண்ணீருடன் வரவேற்பது தமிழர் பண்பாடு.
 எனக்குத் தெரிந்து வீடுகளின் வெளியே திண்ணையும், ஒரு பானையில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த காலம் என்று ஒன்று உண்டு. தண்ணீர்ப்பந்தல் வைத்து மக்களின் தாகம் தீர்த்த காலமும் உண்டு.
 எங்கள் ஊரில் உள்ள குளங்களில் சிறுவயதில் குளித்து நாங்களே நீச்சல் கற்றது முற்றிலும் உண்மையே!!
இன்றோ குளிக்க குளமில்லை!!
ஆறில்லை!! ஆற்றில் நீரில்லை!!
பெருமழையில் ஆற்று நீர் வந்தாலும் நேரே சென்று கடலில் கலந்துவிடுகிறது!!
நீச்சல் பள்ளிக்கூடங்களில் கற்றுத்தரப்படுகிறது!!!
குடிக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவல நிலையில் நாமுள்ளோம்..
நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது.

பசியை விடவும் கொடுமையானது தண்ணீர் தாகம். வயிற்றில் தீ எரிவது போல இருக்கும்.

“ கோச்செங்கண்ணனால் சிறைப்பட்ட சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை, நீர் வேட்கையால் சிறைக்காவலரை நீர் வேண்டினான். சிறைக் காவலன் காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்து தந்தான். அதனை மானத்துக்கு இழுக்காகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர்விட்டான்.”அந்த சேரன் இன்று இருந்திருந்தால்…………………. விலை கொடுத்து நீர்வாங்கிக் குடித்து வாழ்வதை விட வடக்கிருந்து உயிர்நீத்துக்கொள்வதே மேல் என எண்ணியிருப்பான்.


 நீரின்றி - நிலமில்லை!
நிலமின்றி - உடலில்லை!

நிலம் - உடல் இரண்டுக்குமே அடிப்படைத் தேவை நீர்!

இந்த நீரை நிலத்துடன் சேர்க்கும் போது உணவு கிடைக்கிறது!

உணவே மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் தலையானதாகவுள்ளது.

மன்னனே..
பல புகழையும் கொண்டவன் நீ..
உனது புகழ் நீங்காததாக இருக்க வேண்டுமானால் நிறைய நீர் நிலைகளை உருவாக்கு.
நீ உருவாக்கும் நீர் நிலைகள் வெறும் நீர்நிலைகள் அல்ல!
நிலத்தோடு நீரைச் சேர்ப்பது என்பது உடலோடு உயிரை சேர்ப்பதாகும்.. என்றுரைக்கிறார் ஒரு சங்கப்புலவர்.


இன்றைய (மன்னராட்சியில்)மக்களாட்சியில் அரசியல்வாதிகளுக்கு(மன்னர்களுக்கு)நீர்வளத்தின் தேவையை எடுத்துச்சொல்ல புலவர்கள்(அமைச்சர்கள்) இல்லையே!!!!!!

(மன்னர்களும்!!!) அரசியல் தலைவர்களும்..
(புலவர்களும்!!!) அமைச்சர்களும் சிந்திக்கவேண்டும்!!

நாமும்...

உலகம் முழுக்க அன்றாடம் சுமார் 4,000 குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால்
ஏற்படும் நோய்த் தொற்றால் மட்டுமே இறக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் துன்பப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து...

உலக தண்ணீர் தினமான இந் நாளில்,

தண்ணீரின் தேவையை உணர்வோம்!!
நிலத்தடி நீர்மட்டம் உயர பாடுபடுவோம்!!
நீர்நிலைகளைப் பாதுகாப்போம்!!
தண்ணீர் மாசுபடுதலைத் தவிர்ப்போம்!!
தண்ணீர் வீணாகப் போவதைத் தடுப்போம்!!

என்ற உறுதிமொழியை ஏற்போம்.

26 கருத்துகள்:

  1. பாற்கடலைக் கடைந்து அமுது எடுத்தார்கள் எனக் புராணங்கள் கூறியுள்ளன.. அவை இன்று உப்புக்கடலைக் கடைந்து அமுதாகிய நீரை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.. இதனால் வெளிப்பட இருக்கும் ஆலகால நஞ்சை உண்ண சிவன் வருவாரா ??? நிச்சயம் இல்லை ... ஆகையால் இருப்பதை இருப்பிக்க இருப்பதைக் காத்தால் அவசியம்.. அது நமது இருப்பை உறுதி செய்ய வல்லது ...

    பதிலளிநீக்கு
  2. @ஆரோணன் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஆரோணன்.

    பதிலளிநீக்கு
  3. கவனத்தில் கொள்ள வேண்டிய அருமையான பதிவு. தண்ணீர் உயிரின் ஆதாரம் என்று சிறப்பாக ஆராய்ந்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_18.html?
    தண்ணீர் இல்லா தேசம் கண்ணீர் தேசம் என்று பதிவிட்டிருக்கிறேன். தங்கள் மேலான கருத்துக்களை அறிய ஆவல்.நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நானும் ஆஜர்..

    தற் போதைய சூழலில் தேவையான மற்றும் பயனுள்ள தகவல்..

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. மணமகள் தேவை உதவ முடியுமா..
    விவரம் அறிய கவிதை வீதி வாங்க...

    http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  7. உங்கள் தமிழில் நனைந்ததில்
    நீரில் நனைந்த குளிர்ச்சி இந்த
    கடும் கோடையிலும்
    கிட்டியது.

    பதிலளிநீக்கு
  8. ”நீர் இன்று அமையாது உலகு”

    நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  9. உலக தண்ணீர் தினத்தில் தெளிவான பதிவு.நன்றி குணா !

    பதிலளிநீக்கு
  10. @இராஜராஜேஸ்வரி தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  11. @சென்னை பித்தன் உண்மைதான் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  12. நீரின்றி அமையாது உலகு
    நீர் நீரின் பதிவை நீராடிவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  13. சிந்திக்கச் செய்யும் நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு