Wednesday, August 17, 2011

இயன்றவரை இனிய தமிழில்(400வது இடுகை)முகமூடிகளையே அணிந்து அணிந்து
தன் முகம் மறந்த அப்பாவியாய் – தமிழன்!

வளர்க்கும் வீட்டுக்காரனுக்குப் பயன்படாமல்
பக்கத்துவிட்டில் காய்காய்க்கும் கொடியாய் – தமிழன்!

தன் வீடு தீப்பற்றி எறிய
எதிர்வீட்டில் தண்ணீர் ஊற்றும் பேதையாய் – தமிழன்!

நுனிக் கிளையிலிருந்து கொண்டு
அடிக்கிளையை வெட்டும் அறிவாளியாய் – தமிழன்!

தன் வீடு இருளில் கிடக்க
எதிர் வீட்டுக்கு விளக்கேற்றும் புத்திசாலியாய் – தமிழன்!

பிறமொழி கலவாத் தமிழில் ஒரு நிமிடம் பேச
உன்னால் முடியுமா? என்று கேட்டால்

திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து
திருதிருவென விழிக்கும் குழந்தையாய் – தமிழன்!

சரி! தமிழில் தான் உன்னால் பேசமுடியவில்லை
ஆங்கிலமாவது தமிழ் கலக்காமல் பேசுவாயா? என்றால்

பெருங்கல்லை இவன் தலையில் வைத்ததுபோல
நொந்துபோய் பார்க்கிறான் – இன்றைய தமிழன்!

இப்படியொரு தலைமுறை இப்போது உருவாகியுள்ளது.
பொய்யில்லை.
வகுப்பறையில் ஆங்கிலத்தில் சுற்றறிக்கை வாசித்தால்
ஆசிரியரை வியப்போடு பார்க்கிறார்கள்.
அக்கம்பக்கத்து மாணவர்களிடம்
என்ன ஏது என்று வினவுகிறார்கள்!

சரி இளந்தலைமுறைதான் இப்படியென்றால்
பழைய தலைமுறையைப் பார்த்தால்.

பழம்பெருமை பேசிப்பேசியே
உணர்ச்சிவசப்பட்டுக்கிடக்கிறது.

அறிவியல் மண்ணை அளந்து
விண்ணை அளந்து
அளக்க இடம் கேட்டு நிற்கும்போது
இவர்கள் யாரோ கண்டறிந்த பொருள்களுக்கு
என்ன பெயர் வைக்கலாம் என்று
பட்டிமன்றம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்!தமிழ்பேசுவதே இழிவெனக் கருதும் இளந்தலைமுறை!
தமிழ்மட்டும் தான் மொழி என்று கருதும் பழைய தலைமுறை!

இவ்விரண்டுக்கும் நடுவே இவர்களுக்கு இடைப்பட்ட தலைமுறை பிறமொழி பேசாமல் தமிழ்பேச முயன்று சமூகத்தி்ல் தமிழை இன்று நாம் தொடர்புகொள்ளும் இணையஉலகத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

ஒரு நகைச்சுவை..

செவ்வாய் கிரகத்தில வாழ நாட்டுக்கு 100 பேர் தேர்ந்தெடுக்கச் சொன்னாங்கலாம். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையில் தேர்ந்தெடுத்தாங்கலாம். நம்மாளும் தேர்ந்தெடுத்தானாம். சரி உங்க நாட்டுல 100 பேர எப்படித் தேர்ந்தெடுத்தீங்க? என்று நம்மாளப்பார்த்து கேட்டிருக்காங்க...

நம்மாளு சொன்னானாம்..
ஓசில 10, பிசில 10, எம்பிசில 10 என்றானாம்.
ஏன்டா நீங்களாம் திருந்தவே மாட்டீங்களாடா..?
என்று கேட்டாங்களாம்.

தமிழன் சாதியால்,மதத்தால்,கட்சிகளால், நிறத்தால், ஏற்றத்தாழ்வுகளால் பலநூறு வகைப்பட்டவனாகப் பாகுபட்டுப்போயிருக்கிறான்.

நம்மை ஒருகுடை கீழ் சேர்க்கும் ஒரே அடையாளம் மொழி என்பதை நாம் அறியவேண்டும்!

தாய் மொழியில் பேசும்போது..
நுட்பமான, ஆழமான, முழுமையான, புரிதலும், வெளிப்படுத்தலும் அமையும் என்பது என் அனுபவம்.

வானொலி,தொலைக்காட்சி,பத்திரிக்கை,விளம்பரம் என்னும் பிற ஊடகங்களுடன் ஒப்புநோக்கும்போது “இணையத்தமிழ்“ மதிப்பிற்குரிய ஊடகமாகவே எனக்குத் தோன்றுகிறது. தமிழானது, சமூக ஊடகங்களால் கொலைசெய்யப்பட்டு வரும் நிலையில் இணையத்தமிழ் எதிர்காலத்துக்கு தம்மால் இயன்வரை தமிழில் செய்திகளைப் பதிவு செய்துவருவது வரவேற்கத்தக்கது.

தமிழன் தொலைந்த இடம்


தமிழன் மொழியைத் தொலைத்துத் தன்னைத் தானே தேடிவரும் நிலையில், தமிழன் எங்கு தொலைந்தான்? எப்படித் தொலைந்தான் என்பதை தமிழறிஞர் மு.வரதராசன் அவர்கள் அழகாகக் குறிப்பிட்டுச் செல்கிறார்,

“கணக்கு முதலிய அறிவுத் துறைகள் எண் எனப்படும்.
கவிதை முதலிய இலக்கியத்துறைகள் எழுத்து எனப்படும். இவ்விரண்டும கல்விக் கண்கள் என்பர் வள்ளுவர்.முன்பெல்லாம் இலக்கியத்துறையில்நூல்கள் மிகுந்திருந்தன.இக்காலத்தில் அறிவுத்துறை நூல்கள் பெருகி வருகின்றன.காரணம் என்ன?

முன்பு கணக்கு, வாணிகம், மருத்துவம், தொழில்நுணுக்கங்கள், முதலிய அறிவுத்துறைகள் குடும்பக் கல்வியாக இருந்தன. வழிவழியாகக் குடும்பத்தாரால் கற்பிக்கப்பட்டு வந்தன. முன்னெல்லாம் வாழ்க்கை எளிமையானதாக இருந்தது. ஆகையால் அந்த அறிவுத் துறைகளும் எளிமையானதாக இருந்தது. இந்தக் காலத்தில் வாழ்க்கை அவ்வளவு எளிமையானதாக இல்லை.சிக்கல்கள் பெருகிவிட்டன. துறைகள் பெருகி வளர்ந்துவிட்டன. யந்திரங்களும் அவற்றின் நுட்பங்களும் பெருகிவிட்டன.எதையும் அறிவியல் முறையின்படி ஆய்ந்து தெளிவுபடுத்தி எழுதிவைத்துப் போற்றுதல் தேவையாகிவிட்டது. குடும்பக்கலையாகவே இன்றுவரை இருந்துவரும் சமையல் முதலியன பற்றியும் நூல்கள் எழுதப்பட்டுப் பட்டப்படிப்பு அமைந்துள்ள காலம் இது. ஆகையால் இன்றைய தேவைக்கு ஏற்ப அறிவுத் துறைநூல்கள் பெருகிவிட்டன.இன்னும் பல மடங்கு பெருகுவதும் இன்றியமையாததாகிவிட்டது.

தனிப்பாட்டு, காவியம், நாடகம், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, கட்டுரை ஆகிய இலக்கியத் துறைகளைவிட மேற்குறித்த அறிவுத் துறை நூல்கள் எல்லா மொழிகளிலும் விரைந்து பெருகுகின்றன. தமிழ் மொழியிலும் இவ்வகையில் பின் தங்காமல் வளர்ச்சி பெறவேண்டும். ஆனால் தமிழ் இலக்கியத்துறையை வளர்ப்பதில் மட்டுமே சென்ற ஆண்டுவரை ஆர்வம் இருந்துவந்தது. சில அறிவுத்துறை பற்றிய நூல்கள் தமிழில் பழங்காலத்தில் இருந்தபோதிலும் பின் வந்தோர் அவற்றைக் காத்து வளர்க்கவில்லை. அறிவுத் துறைகளை விடாமல் வளர்த்து வந்தது வடமொழி. ஆகவே அறிவுத்துறைகள் பற்றி நாடும்போதெல்லாம் வடமொழியை நாடுவது வழக்கமாக இருந்தது.

இலக்கியத் துறைக்குத்தமிழும், அறிவுத் துறைக்கு வடமொழியும் என்று வகுத்துக்கொண்டு, வடமொழி நூல்களைச் சார்ந்து வாழ்ந்தனர். அதனால் வடமொழி அறிஞர்களுக்கு பெருமிதமும் செல்வாக்கும் மிகுந்திருந்தன “தமிழில் என்ன உள்ளது“ என்று தமிழர் சிலர் எள்ளி வினவும் வருந்தத்தக்க போக்குக்கு இடம் ஆயிற்று.

அதே நிலை தான் இன்றும் உள்ளது. வேறு வடிவில் உள்ளது. அறிவுத் துறை நூல்களுக்கு ஆங்கிலத்தைச் சார்ந்து பழகிவிட்டமையால், முன்காலத்து வடமொழி அறிஞர்களைப் போல் இக்காலத்து ஆங்கில அறிஞர்களுக்குப் பெருமிதமும் செல்வாக்கும் வளர்ந்துவிட்டன. “தமிழில் என்ன உள்ளது?“ என்ற பழங்காலச் செருக்கான கேள்வியைக் கேட்போர் இன்றும் தமிழரிடையே இருந்து வருகின்றனர்“

தமிழறிஞர் மு.வரதராசன் அவர்கள் – காலந்தோறும் தமிழ் பக்38,39.

நாம் சிந்திக்கவேண்டிய நேரமிது.
நம் துறைசார்ந்த செய்திகளை இயன்றவரை தமிழில் பதிவுசெய்வோம்.
சிந்தனை தாய்மொழியில் இருப்பதும் அதனைத் தாய்மொழியிலேயே பதிவு செய்வதும் காலத்தின் கட்டாயமாகும்

தமிழறிஞர்களே இலக்கிய ஓடம் ஓட்டியது போதும்.
பல்துறை அறிஞர்களே தமிழைக் குறை கூறியது போதும்.

மொழி என்பது தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல!
ஒரு இனத்தின் மொத்த அடையாளமாகவும், அனுபவத்தின் தொட்டிலாகவும், பண்பாட்டின் கருவூலமாகவும் கருதத்தக்கது!

மொழியைப் புறக்கணிப்பது நாம் தற்கொலை செய்துகொள்வதற்கு இணையானது என்பதை நினைவுபடுத்துவதற்காகவே இவ்விடுகை.

என்னால் இயன்றவரை..

என் அறிவுக்கு எட்டியவரை இன்றுவரை இன்றைய கருவி கொண்டு, வலையுலகில் தமிழ்மொழி சார்ந்த இலக்கியம் சார்ந்த செய்திளைப் பகிர்ந்து வருகிறேன்.

இன்று 400வது இடுகை வெளியிடுவது மனதுக்கு நிறைவாக இருந்தாலும், தமிழின் நிலை தமிழன் நிலை வருந்தத்தக்தாகவே இருக்கிறது.

என் வலையுலக வாழ்வில் பெருஞ்செயலாக நான் கருதுவது..

1. இயன்றவரை தமிழில் பிறமொழி கலவாது கருத்துக்களை வெளியிட்டு வருவது.
2. ஒரு சில மணித்துளிகளாவது தமிழர்களை இலக்கியங்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
3. பழந்தமிழ் இலக்கியங்களைச் சொன்னாலும் நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு உரைப்பது.
4. 400வது இடுகை வெளியிடும் நாளில் 400 பேருக்குமேல் பின்தொடரச் செய்வது.
மேற்கண்ட பெருமைகள் யாவும் எனக்குச் சொந்தமானவையல்ல.
ஆம் எனக்குக் கிடைக்கும் எல்லாப் பெருமைகளும் தமிழ்மொழிக்கே உரிமை என்று கூறி என் வலைப்பதிவைப் பார்வையிட்டு, கருத்துரை வழங்கி, பின்தொடர்ந்து என்னைத் தொடர்ந்து எழுதச் செய்யும் அன்பு நெஞ்சங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


-0O0- நன்றி -0O0- நன்றி -0O0- நன்றி -0O0-

61 comments:

 1. தங்களின் நானூறாவது இடுகைக்கு
  என் உளம்கனிந்த வாழ்த்துக்கள்.
  தமிழின் பெருமையை புதிய கோணங்களில்
  அழகுறச் செய்த உங்கள் பதிவுகள்
  என்றென்றும் புகழோங்கி நிற்கும் இப்புவியில்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. 400 க்கு வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..

  ReplyDelete
 3. //மொழியைப் புறக்கணிப்பது நாம் தற்கொலை செய்துகொள்வதற்கு இணையானது என்பதை நினைவுபடுத்துவதற்காகவே இவ்விடுகை//

  நல்ல பதிவு. அடிக்கடி இதை நம்மவர்களுக்கு நினைவு படுத்துங்கள். அப்போதாவது மாற்றம் ஏற்படட்டும்.

  ReplyDelete
 4. முதற்கண் 400க்கு வாழ்த்துகள்

  [[பிறமொழி கலவாத் தமிழில் ஒரு நிமிடம் பேச
  உன்னால் முடியுமா? என்று கேட்டால்

  திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து
  திருதிருவென விழிக்கும் குழந்தையாய் – தமிழன்! ]]

  நிதர்சணம் ...


  தாய் மொழியில் சிந்திக்கும் பொழுது தான் தெளிவு பிறக்கின்றது என்பதே உண்மை.

  ReplyDelete
 5. உங்களை போல சிலரால் தான் தமிழ் வாழ்கிறது

  ReplyDelete
 6. அன்பின் குணசீலன்,
  உங்கள் ஆர்வமும்,காலத்துக்கேற்ப-அதன் மாற்றங்களுக்கேற்ப நடுநிலையோடு தமிழ் மொழியையும்,அதன் இலக்கியங்களையும் அணுகும் பார்வையும் 4லட்சம் இடுகைகளாகச் செழித்து,4கோடிப் பார்வையாளர்களை ஈர்த்து வர வேண்டுமென உங்கள் தமிழ்த் துறைப் பங்காளியாக இருந்து அன்போடு வாழ்த்துகிறேன்.சாதனைகள் வெல்க,வளர்க.

  ReplyDelete
 7. அருமையான பதிவு.பெருஞ்செயல்கள் தொடர வாழ்த்துகள்!

  ReplyDelete
 8. 400 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் நண்பரே!. மென்மேலும் உங்கள் பதிவுலக சேவை வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. நல்ல முயற்சி நண்பரே.தட்டிக்கொண்டே இருப்போம் திறாக்கும் வரை அல்லது உடையும் வரை.

  ReplyDelete
 10. குணா அசத்திட்டேல் போங்கோ..ஆனால் இயன்றவரை தமிழில் சொல்றது ஏனோ? தமிழே இங்கு தவழ்ந்து விளையாடி வளர்ந்து வரும் இடம்ல்லவா!!!! 400 இடுகைகள் உங்கள் உழைப்பு இதற்காக செலவிட்ட நேரங்கள் எல்லாம் அதிகம்..வாழ்த்தொன்று போதாது இருப்பினும் வாழ்த்துகிறேன் நண்பா..

  ReplyDelete
 11. ஆறாம் திணையை வளர்க்கும் அன்பரே ! நல்ல முயற்சி - நல்ல செயல் - செயற்பாடு - தமிழைக் கற்றால் தமிழ் மணம் புரியும். நடை முறையில் செயல் படுத்த தயங்குகின்ற மாந்தரே இங்கும் அங்கும் நடை போடுகின்றனர். தமிழ்ச் சிந்தனை தனம்பிக்கையினை வளர்த்து தலை நிமிரச் செய்யும் என்பது தங்கள் இடுகைகளீல் பரவலாகக் காணப்படுகிறது. உண்மையில் இணையத் தமிழ் தான் இன்றைக்கு தமிழை வளர்க்கத் துணை புரிகிறது. இம்முயற்சியைத் தங்கள் பயிற்சியால் செயல் படுத்தி வருகிறீர்கள்.

  தொடரட்டும் தமிழ்ப் பணி - தொண்டுள்ளங்கள் மகிழட்டும்.

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 12. அன்பின் குணா

  நானூறாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள் - ந்ல்ல தொரு பணி தமிழ்ப் பணி - அதனை அழகாக - அருமையாக ஆற்றிவருவதற்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். தொடர்க பணீயினை - இணையத்தில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழற்ஞர்கள் சந்திப்பு ஒன்று நடத்துங்களேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 13. 400 க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. அன்புத் தம்பியே!
  நீங்கள் தான் முதலில் என்னைப் பின் தொடர்பவராக வந்தீர்
  கள் அது, என்றும் மறவாத ஒன்று!
  இன்று, இங்கே பதிவு செய்துள்ள

  தங்களின் நானூறாவது இடுகைக்கு
  என் உளம்கனிந்த வாழ்த்துக்கள்.
  தமிழின் பெருமையை புதிய கோணங்களில், பல வகைகளில்
  அழகுறச் செய்தீர்! உங்கள் பதிவுகள்
  என்றென்றும் புகழோங்கி நிற்கும்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்...

  எத்தனையோ மொழிகள் கற்றும்...எங்கெங்கோ இடம்பெயர்ந்தும்...
  காதலை...அன்பை...உணர்வை வெளிப்படுத்த தமிழைத்தவிர வேறு எந்த மொழியிலும் என்னால் இதுவரை முடிந்ததில்லை...

  அதுவே நம் மொழியின் சிறப்பு...

  உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் முனைவரே...

  ReplyDelete
 18. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் விவாத்திதுக் கொண்டிருந்தார்கள். தமிழோடு பிறமொழிகளைக் கலந்து பேசினால் என்ன தவறு என்று ஒருவர் கேட்டார். நொந்து போய்ச் சேனலை மாற்றி விட்டேன்.இந்தப் பிறவிகளைத் திருத்த முடியாதுங்க.தாழ்வு மனப்பான்மையில் செத்துக் கொண்டிருக்கும் அற்பப் பதர்கள் எனத் தோன்றுகிறது. கடினமான சொற்களைப் பயன்படுத்த வருத்தமாகத்தான் உள்ளது. ஆனாலும் ஆற்றாமையில் எழுதுகிறேன்.

  ReplyDelete
 19. மொழி ஒரு இனத்தின் மொத்த அடையாளமாகவும், அனுபவத்தின் தொட்டிலாகவும், பண்பாட்டின் கருவூலமாகவும் கருதத்தக்கது!
  உண்மையே அதில் 400வது ...என்ன நாலாயிரமாகட்டும். வாழ்த்துகள்...முனைவரே!...
  தொடருங்கள் மகிழ்ச்சி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 20. நல்ல பகிர்வு...
  தமிழ் ... நம் மொழி...
  மொழியை மதிப்போம்...

  400க்கு வாழ்த்துக்கள்.

  தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு.
  வாழ்த்துக்கள் முனைவரே.

  ReplyDelete
 21. நல்ல பகிர்வு...
  தமிழ் ... நம் மொழி...
  மொழியை மதிப்போம்...

  400க்கு வாழ்த்துக்கள்.

  தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு.
  வாழ்த்துக்கள் முனைவரே.

  ReplyDelete
 22. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முத்துலெட்சுமி

  ReplyDelete
 23. மிக்க நன்றி சுசீலா அம்மா.

  ReplyDelete
 24. மகிழ்ச்சி சென்னைப்பித்தன் ஐயா.

  ReplyDelete
 25. தங்கள் முதல்வருகைக்கும் கருத்துஐரக்கும் நன்றி செல்விஷங்கர்

  ReplyDelete
 26. உண்மைதான் பிரதாப்.
  எனது ஆற்றாமையை நான் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளேன்
  அவ்வளவுதான்.

  இந்த உலகில் நாம் யாரையும் மாற்றமுடியாது நண்பா..

  நாம் நம்மை மாற்றிக்கொள்வதைத் தவிர.

  சிலநேரங்களில் நம் மாற்றமே அடுத்தவர் மாற்றத்துக்கு அடிப்படையாக அமையும் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 27. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கோவைக்கவி.

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் சகோ!!

  ReplyDelete
 29. எங்களை போல ஹிட்ச்காக கண்டதை எழுதாமல் ஏன் தமிழ் மொழிக்கு நான் ஆற்றவேண்டிய கடமை இது எண்ணி தமிழின் சிறப்புகளை எங்களுக்கு பதிவின் மூலமாக வெளிகாட்டும் உங்கள் பனி மகத்தானது நண்பரே. உங்களின் மொழி பற்றுக்கு என் வந்தனங்கள்.

  தொடரட்டும் உங்களின் மகத்தான சேவை நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. வாழ்த்துகள் brother.

  ReplyDelete
 31. more than your tamil, mr.GUNA.. you are handsome. i m seeing actor surya,s similarity in yr face. too naive and clarity. just try for cinefield too. hope u could come out with colorful flyings from there too..
  keep it up gunaa..

  ReplyDelete
 32. தங்கள் வருகைக்கும கருத்துரைக்கும் நன்றிகள் கண்ணன் ஐயா.

  ReplyDelete
 33. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுந்தரவடிவேலு.

  ReplyDelete
 34. ஆத்மார்த்தமாய் எழுதப்பட்ட அருமையான கருத்து! நானூறாவது இடுகையாக தங்கள் தமிழ் ஆர்வம் விழுதுகள் விட்டு வளர்வது கண்டு மகிழ்ச்சி!...வாழ்த்துக்கள்...!
  அன்புடன்
  இரா.சுதமதி

  ReplyDelete
 35. வாழ்த்துகள் நண்பா

  ReplyDelete
 36. வாழ்த்துகள் தல

  ReplyDelete
 37. thiru munaivar. era, gunseelan avargale vanakkam,
  thangaludaiya padhivu kanden arppudhdhamana padhivu
  thodara vazhththukkal nandri
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete
 38. @விழித்துக்கொள் தங்கள் வாசித்தலுக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete