செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

மிரட்டும் ஆந்தை!


சங்ககாலத் தமிழர்கள் இயற்கையுடன் இயைபுகொண்ட வாழ்வு வாழ்ந்தனர்.
அஃறிணை உயிர்களுடன் உறவாடி மகிழ்ந்தனர்.

இதோ ஒரு அகப்பாடல்..
இதில் தோழி,
பேராந்தை என அழைக்கப்படும் கூகையிடம் பேசுகிறாள்,
என்ன பேசுகிறாள் என்று கொஞ்சம் கேளுங்களேன்....

தலைவன் திருமணம் செய்துகொள்ளமலே காலம் தாழ்த்தி வருகிறான். ஒரு நாள் இரவு நேரத்தில் தலைவியைச் சந்திக்க வந்த தலைவன் அருகாமையில் மறைந்து நிற்க. அதனை அறிந்த தோழி தலைவனுக்கு அறிவுபுகட்ட நல்லதொரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்கிறாள்.
தலைவனுக்குக் கேட்குமாறு தோழி சொல்கிறாள்...
எம் ஊரின் வாயிலில் பலரும் நீருண்ணும் துறையிலே பெருங்கடவுள் தங்கியுறையும் பழைய மரம் உள்ளது. அம்மரத்தின் மீதிருந்து தேயாத வளைந்த வாயுடன் தெளிந்த கண்ணுடன் கூரிய நகத்துடன் விளங்கி எங்களுடன் ஒருசேரப் பழகித் தங்கும் வலிமை மிகுந்த கூகையே!!

நீ வாயாகிய பறை ஒலிக்க பிறரை வருத்துகின்றாய்!
நாங்கள்..
ஆட்டு இறைச்சியுடன்,
நெய் கலந்தும்,
வெண்மையான சோற்றில்,
வெள்ளெலியின் சூட்டிரைச்சியையும் சேர்த்தும் நிறையுமாறு உனக்குத் தருவோம்..
எங்களிடம் அன்பு நிறைந்த காதலர் எம்மைக் காணவருவார் என்று எதிர்பார்த்து உளத்தடுமாற்றத்துடன் நாங்கள் இருப்போம்..


அப்போது உறங்குவார் யாவரும் அஞ்சி விழித்துவிடுமாறு நீ உன் கடுமையான குரலால் குழறி எங்களை வருத்தாதே..
என்கிறாள். இதனை கேட்டிருக்கும் தலைவன். சரி நாம் இனியும் தலைவியை வருத்தக்கூடாது. விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவுக்குவருவான்.

பாடல் இதோ..

எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முதுமரத்து உடன் உறை பழகிய
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர்
வாய்ப்பறை அசாஅம் வலி முந்து கூகை
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்
எலி வான் சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே.
பெருந்தேவனார்.
நற்றிணை -83
கூற்று – இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

இரவு நேரத்தில் தலைவியைக் காண வந்த தலைவன் அருகாமையில் மறைந்திருக்க, அதனை அறிந்த தோழி அவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுவதாக இப்பாடல் அமைகிறது.

பாடல் வழியே.

1. நீருண்ணும் துறைகளுக்கு அருகாமையில் இருந்த மரங்களில் கடவுள் குடியிருப்பதாக எண்ணிய சங்ககால மக்களின் கடவுள் நம்பிக்கை புலனாகிறது.
2. ஊருக்கும், பெற்றோருக்கும் அஞ்சினாலும் தலைமக்கள் ஒருவரை ஒருவர் இரவில் சந்தித்து உறவாடி மகிழ்ந்தமை சுட்டப்படுகிறது. கூகை என்றழைக்கபடும் ஆந்தை கூட காதலர்களுக்கு எதிரியாக இருந்தமை பாடல் வழி அறியமுடிகிறது.
3. கூகை அலறி ஒலிஎழுப்பாமல் இருந்தால் இறைச்சி கலந்த உணவு தருவோம் என்ற தோழியின் கூற்று, ஒருபுறம் நகைப்பை ஏற்படுத்துவதாகவும், மறுபுறம் அச்சத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது.
4. தலைவனிடம் நேரில் பேசாமலேயே பிற வாயில்களின் வழி, தலைவனுக்கு மனதில் பதியுமாறு அழகாக உணர்த்தும் தோழியின் திறன் நல்லதொரு உளவியல் அணுகுமுறைக்குச் சான்றாகவுள்ளது.

24 கருத்துகள்:

 1. அருமையான பாடல்த் தெரிவும் அதற்க்கு அழகான விளக்கமும்
  தந்துநிற்கும் தங்களது ஆக்கம் பாராட்டத்தாக்க பயனுள்ள படைப்பு .
  வாழ்த்துக்கள் மென்மேலும் சிறந்த ஆக்கங்களை வெளியிட.
  மிக்க நன்றி பகிர்வுக்கு.....

  பதிலளிநீக்கு
 2. மனம் பேதலித்து இருக்கும்போது
  அஃறிணை உயிர்களுடன் மனதை திறந்து
  பேசுவதே ஒரு சுகம் தான்.
  சங்ககாலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை
  அழகுபட எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.
  அருமை அருமை.

  பதிலளிநீக்கு
 3. இலக்கிய பதிவு...
  அழகாக இருக்கிறது...
  பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 4. சங்க கால பாடலின் கருத்தை மட்டும் சொல்லாமல், பாடல் வழியே என்ற தலைப்பின் கீழ் அக்கால மக்களின் நம்பிக்கை, வாழ்க்கை நெறி, அவர்களின் அச்சம் மற்றும் அணுகுமுறையை விளக்கியிருப்பது புதுமை.
  தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி.

  பதிலளிநீக்கு
 5. அகப்பாடல் வரிகளும் உங்கள் விளக்கமும் அருமை... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. சங்கப் பாடல்களைச் சுவைத்துப் படிப்பதே இன்பம். அதை வகுப்பறையில் மாணவர்களுக்கு ரசனையுடன் சொல்லித் தருவது அதை விட இன்பம். அழகான சங்கப் பாடலை சுவையோடு, ரசனையோடு கொடுத்துள்ளீர்கள்.அருமை!
  -அன்புடன்
  இரா.சுதமதி

  பதிலளிநீக்கு
 7. உண்மைதான் அம்மா சங்கப்பாடல்களைப் படித்து என்னைத் தொலைத்து என்னை நானே தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு