வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

பறவைகள் சொல்லும் பாடம்!!
அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்..
என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருப்பதுண்டு...

“சுதந்திரம்“ என்ற சொல்லின் பொருளை பறவைகளைக் கண்டே தெளிந்தேன்!
“தேடல்“ என்னும் சொல்லின் ஆழத்தை பறவைகளைக் கண்டே உணர்ந்தேன்!
“அழகு“ என்னும் இனிமையைப் பறவைகளைக் கண்டே அறிந்தேன்!
“கூடு“ கட்டி வாழவேண்டும் என்பதும் பறவைகள் தான் எனக்குக் கற்றுத்தந்தன!

சைவக் கொக்கு, வைணவ காக்கை, கிறுத்தவப் புறா, இசுலாமியக் கிளி, சமண வாத்து, புத்த ஆந்தை ஆகியவற்றை இன்றுவரை நான் கண்டதில்லை..


பறவைகள் எனக்குச் சொல்லித்தந்தன சமயங்களைக் கடந்து வாழ்! என்று.

எந்தப் பறவையும் வங்கியில் சென்று சேமிப்புக் கணக்குத் தொடங்கியதில்லை. தங்கம் வாங்கி அணிகலன் செய்து மாட்டிக்கொண்டதில்லை.

“தேவைக்கு மேல் சேமிக்காதே“ என்று என்னைப் பறவைகள் தான் அறிவுறுத்தின!

எந்தப் பறவையும் எந்தப் பள்ளியிலும் சென்று பாடம் கேட்டதில்லை..
பறவைகள் என்னிடம் சொல்கின்றன....

“அனுபவத்தில் கிடைக்காததா நீ படிக்கும் ஏட்டில் கிடைக்கப்போகிறது“ என்று..

இவையெல்லாவற்றுக்கும் மேலே...
காகா என்று கத்திய குயில்!
கூகூ என்று கூவிய காக்கை!
கீகீ என்று கத்திய புறா!
குர்குர் என்று கத்திய கிளி!
அகவிய ஆந்தை!
அலறிய மயில்!
கூவிய கொக்கு!
கத்திய சேவல்!
என எந்தப் பறவையையும் நான் கண்டதில்லை!

பறவைகள் எனக்கு உணர்த்தின “தாய்மொழியை விட உயர்ந்தது எது? என்று.

பறவைகளிடம் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் இன்னும் இன்னும்...
உங்களுக்கெல்லாம் பறவைகளைப் பார்த்தால் என்ன தோன்றும்..?

சங்ககாலத் தலைவி ஒருத்திக்கு என்ன தோன்றுகிறது என்று பாருங்கள்..
மாலைப் பொழுது வந்தமை கண்டு தலைவனின் பிரிவால் வாடும் தலைவி, பறவைகள் தம் குஞ்சுகைளுக்கு உணவெடுத்துச் செல்வது கண்டு மேலும் வருந்தி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.


குறுந்தொகை 92. நெய்தல் - தலைவி கூற்று
காமமிக்க கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது.
- தாமோதரனார்.

கதிரவன் மறைந்த, அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில் வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், தாம் தங்கும்படி உயர்ந்த, வழியில் வளர்ந்த கடம்ப மரத்தில் கூட்டிலிருக்கும், குஞ்சுகளின், வாயினுள்ளே செருகும் பொருட்டு, இரையைத் தம் அலகில் எடுத்துக் கொண்டமையால், விரைந்து செல்லும் அவை இரங்கத்தக்கன. அவற்றுக்கு இருக்கும் அன்பு என் தலைவனுக்கு இல்லையே...!!

பாடல் வழியே..
1. தலைவின் மீதுகொண்ட அன்பின் மிகுதியால் தலைவி ஆற்றாமல் புலம்புவது “காமம் மிக்க கழிபடர்கிளவி“ என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
2. மாலை நேரத்தில் பறவைகளின் அன்பைக் கண்டு இதுபோலத் தலைவன் தன் மீது அன்பற்றவனாக இருக்கிறானே என்ற தலைவியின் ஏக்கத்தை பாடல் அழகாகப் புலப்படுத்துகிறது.
3. இதுபோன்ற பறவைகளின் காதலைத் தலைவன் தன் நிலப்பகுதியில் காணமாட்டானா? தன்நினைவு அவனுக்கு வராதா? என்ற ஏக்கத்தையும் தலைவியின் புலம்பலில் காணமுடிகிறது.
4.சங்ககாலத் தலைவியின் புலம்பல் வழி சில மணித்துளிகள் நாமும் பறவைகளுடன் பறக்க முடிகிறது.

62 கருத்துகள்:

 1. சங்கக் கால பாடல்களின் தரமே தனி..
  பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 2. அப்பப்பா பறவைகளை வைத்தே பல விசயங்களை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள் .

  நறுக் என்று மனதை தைக்கும் உண்மைகள் ,ஆனால் யதார்த்தமான வார்த்தைகள் ,அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 3. மனிதர்கள், சக மனிதர்களிடம் கற்று கொள்ளுதலை விட - ஏனைய உயிரினங்களிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

  பதிலளிநீக்கு
 4. பறவைகள் எனக்கு உணர்த்தின “தாய்மொழியை விட உயர்ந்தது எது? என்று. //

  அருமை..காண்பவற்றிலிருந்தெல்லாம் கற்றுக்கொள்ளவேண்டுபவற்றை கண்டுணர்வது சிறப்பு..

  பதிலளிநீக்கு
 5. //பறவைகள் எனக்குச் சொல்லித்தந்தன சமயங்களைக் கடந்து வாழ்! என்று.//

  அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. சங்க கால பாடல்களை புரியும்படி விளக்கியதோடு, பறவைகளிடமிருந்து தாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தையும், விளக்கியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. இவையெல்லாவற்றுக்கும் மேலே...
  காகா என்று கத்திய குயில்!
  கூகூ என்று கூவிய காக்கை!
  கீகீ என்று கத்திய புறா!
  குர்குர் என்று கத்திய கிளி!
  அகவிய ஆந்தை!
  அலறிய மயில்!
  கூவிய கொக்கு!
  கத்திய சேவல்!
  என எந்தப் பறவையையும் நான் கண்டதில்லை!

  பறவைகள் எனக்கு உணர்த்தின “தாய்மொழியை விட உயர்ந்தது எது?

  அருமை!!

  பதிலளிநீக்கு
 8. பறவைகளால் நீங்கள் உணர்ந்தவையாகச் சொல்லும் ஓவ்வொன்றும் அருமை, குணா.

  என்னவொன்று,

  குறுந்தொகைப் பாடல் தான் என் துணைவியார் என்னை திட்டுவதுபோல் சுட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 9. பறவைகள் சொல்லும் பாடம் பல கண்டோம்.

  பதிலளிநீக்கு
 10. பகிர்வுக்கு நன்றிங்க. தமிழ் பாடல்களின் வழியாக உள்ள தகவல்களை தொகுத்து தருவதற்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. சங்க இலக்கிய விளக்கவுரையில் எளிமையான மொழி நடையை இலாவகமாகக் கையாள்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. மிக மிக அருமை
  மிகச் சரியாகச் சிந்தித்தால்
  மிருகங்களைவிட பறவைகளைவிட
  நாம் எவ்விதத்திலும் சிறந்தவர்கள் இல்லை
  அவைகள்போல் முறையாக வாழவில்லை
  என்பது மிகத் தெளிவாகப் புரிந்துவிடும்
  என நினைக்கிறேன்
  மன்ம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 10

  பதிலளிநீக்கு
 13. இலக்கியத்தினை மறுபடியும் சுவைக்க வைக்கிறீர்கள்! நன்றி!
  அழகாக...ஆழமாக...எளிமையாக... நன்றி மீண்டும்!!!

  பதிலளிநீக்கு
 14. பறவைகளை வைத்துப் பல நல்ல செய்திகளைச் சொல்லிக் கடைசியில் சங்கப் பாடலில் முடித்த விதம் அருமை!

  பதிலளிநீக்கு
 15. அருமை....ஒவ்வொரு பதிவும் சிறப்பு...

  பதிலளிநீக்கு
 16. பறவைகள் நாளையைப் பற்றி கவலைப்படாமல் இன்றைய பொழுதை அனுபவித்துக்கழிக்கும் சுதந்திர தேவர்கள். எல்லாவற்றுக்கும் மேல் இயற்கையை மாசுபடுத்தாமல் அழிக்காமல், எதிர்க்காமல் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழும் அற்புத உயிரினம்.

  தங்களின் சங்கப்பாடலுடன் இயைந்த பறவை செய்தி அற்புதம்

  பதிலளிநீக்கு
 17. பறவைகளிடம் கற்றுக்கொண்டவைகளை பட்டியலிட்டு
  தந்துள்ளீர்கள்
  அதில் கூடு எனக்கு பிடித்த செய்தி. ......
  இன்னும் வருங்கால சந்ததிகள் தெரிந்துகொள்ள வேண்டிய
  செய்தி.
  கால்காசு சம்பாரிச்சாலும் கூடுகட்டி வாழவேண்டும் என
  உச்சரித்து காட்டுகின்றன பறவைகள்.
  அருமையான பதிவு முனைவரே.

  பதிலளிநீக்கு
 18. அதோ அந்த பறவைகள் போல வாழ வேண்டும்... அருமை நண்பா

  பதிலளிநீக்கு
 19. அருமை நண்பரே!தங்களை போன்றோர் இருக்கும் வரை தமிழ் வாழும்!வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. உண்மைதான் தமிழ் உதயம்.
  கருத்துரைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 22. தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராம்வி.

  பதிலளிநீக்கு
 23. தங்கள் உணர்தல் குறித்து மகிழ்ச்சி அடைந்தேன் சத்ரியன்.

  இதுதான் சங்கப்பாடல்களின் சிறப்பு..

  சுட்டி ஒருவரைப் பெயர்சொல்லாமல் தலைவன் தலைவி என்று குறித்தால் படிப்போர் ஒவ்வொருவரும் தம் வாழ்வியலோடு ஒப்பிட்டு நோக்க முடிகிறது.

  நன்றி சத்ரியன்.

  பதிலளிநீக்கு
 24. //“தேவைக்கு மேல் சேமிக்காதே“ என்று என்னைப் பறவைகள் தான் அறிவுறுத்தின!//

  ஆஹா அருமை.. பறவைகள் பலவிதம் பதிவின் சுவையும் பலவிதம்

  பதிலளிநீக்கு
 25. இவையெல்லாவற்றுக்கும் மேலே...
  காகா என்று கத்திய குயில்!
  கூகூ என்று கூவிய காக்கை!
  கீகீ என்று கத்திய புறா!
  குர்குர் என்று கத்திய கிளி!
  அகவிய ஆந்தை!
  அலறிய மயில்!
  கூவிய கொக்கு!
  கத்திய சேவல்!
  என எந்தப் பறவையையும் நான் கண்டதில்லை!
  ........................................!

  பதிலளிநீக்கு
 26. அருமையான படைப்பு வாழ்த்துக்கள் .தமிழ்மணம் 15

  பதிலளிநீக்கு
 27. //கீகீ என்று கத்திய புறா!
  குர்குர் என்று கத்திய கிளி! //

  இடம் மாறி பறவைகளின் பெயர்கள், அச்சு தவறே பொறுப்பு, கருத்து தவறு அல்ல...

  பதிலளிநீக்கு
 28. நிலவு வராதா- எங்கும்
  உலவி வராதா?
  நிலவு கண்டால் என்முகம் அவன்
  நினைப்பில் வராதா?- அவன்
  மறதி கெடாதா?

  கன்னல் ஓங்காதா ?- அங்கு
  காட்சி தராதா?
  கன்னல் கண்டால் என் உதட்டுக்
  கதை மறப்பானா? - இங்கு
  வர மறுப்பானா?

  எனப்போகும் பாரதிதாசனின் பாடலொன்று நினைவுக்கு வருகிறது. தொடரட்டும் தங்கள் இலக்கியப் பணி.

  பதிலளிநீக்கு
 29. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சின்னத்தூரல்.

  பதிலளிநீக்கு
 30. பறவைகள்
  என்றும்
  தம் தாய்மொழிதான் பேசுகின்றன..!!

  என்றும் அவை பிற பறவைகள் போல
  ஒலியெழுப்ப எண்ணியதில்லை..

  ஆனால் மனிதன் தன் தாய் மொழியை மறந்தான் என்பதை அறிவுறுத்தவே பறவைகளின் ஒலியை மாற்றிக் குறிப்பிட்டேன்..

  தங்கள் புரிதலுக்கு நன்றி சூரியஜீவா.

  பதிலளிநீக்கு
 31. /சைவக் கொக்கு, வைணவ காக்கை, கிறுத்தவப் புறா, இசுலாமியக் கிளி, சமண வாத்து, புத்த ஆந்தை ஆகியவற்றை இன்றுவரை நான் கண்டதில்லை.. /
  அருமை சகோ.தமிழை நேசிக்கும்,இரசிக்கும் அளவிற்கு ஆழ்ந்த புலமை இல்லையே என்று வருத்தமாக் இருக்கிறது.பல சம்யம் [ர,ற].[ல.ள,ழ] சிக்கல்கள்.இது பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன் நீங்கள் உடபட பல தமிழ் பதிவர்களின் த்மிழாற்றல் பாராட்டுக்கு உரியது.
  நன்றி

  பதிலளிநீக்கு
 32. பறவைகள் நமக்குச் சொல்லிய விஷயங்கள் தான் எத்தனை எத்தனை... மிக நல்ல பாடல்களோடு வரும் உங்கள் இடுகைகள் அருமை முனைவரே...

  பதிலளிநீக்கு
 33. இலக்கிய நயத்துடன் அதேவேளை மிகசிறந்த மேற்கோளுடன் ஒரு சிறந்த படைப்பு பாராட்டுகள் தொடர்க.

  பதிலளிநீக்கு
 34. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்வாகன்.

  தாங்கள் சொல்வது போல வரும் காலத்தில் கட்டுரை எழுதுகிறேன்.

  அறிவுறுத்தலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு