வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

சிரிக்க வைத்த வாளைமீன்!


சங்கஇலக்கியங்கள் சங்ககால மக்களின் வாழ்வியலை மட்டுமின்றி அஃறிணை உயிர்களின் வாழ்வியலையும் அழகாகப் பதிவுசெய்துள்ளன.

பண் இசைப்பதில் வல்ல பாணர்கள் மீன் பிடிப்பதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். ஒரு பாணர் மூங்கிலால் செய்யப்பட்ட தூண்டிலில் இறைச்சித் துண்டை வைத்து மீன் பிடிக்க முயன்றார். வாளை மீன் ஒன்று அத்தூண்டிலை நாடி வந்தது. அறியாமல் இறைச்சியைக் கவ்வியது. பின் உணர்ந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று உயிரை வாயில் பிடித்துக்கொண்டு சிறு காயத்தோடு இறைச்சித்துண்டையும் பெற்றுத் திரும்பியது. விழிப்போடு இல்லாத்தால் பாணன் ஏமாந்துபோனான்.

பாணன் ஒருமுறை தான் ஏமாந்தான். ஆனால் உயிர்பிழைத்த வாளை மீனோ பல முறை ஏமாந்தது.
ஆம்..

நீரில் வளரும் பிரம்பின் நிழல் சூரியன் வெளிச்சத்தில் நீரில் நிழலாக வீழும் போதெல்லாம் தன்னைக் கொல்லவந்த தூண்டில்தானோ!!
என்று அஞ்சி விரைந்து நீந்தும் தன்மையதாக மாறிப்போன வாளை மீனை நினைக்கும் போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது.


பாடல் அடிகள் இதோ...

‘பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்,
கோள் வல், பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ,
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப,
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்’

பெரும்பாண் ஆற்றுப்படை 283-288
தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பாடல் வழியே..

1. பிரம்பின் நிழலை தூண்டில் என்று அறியாமல் அஞ்சிய மீனின் செயல் சிரிப்பை வரவழைப்பதாக இருக்கிறது.
2. நமக்கெல்லாம் மீன்களைப் பார்த்தால் அவை நீந்துவது மட்டும் தான் தெரியும் ஆனால் இந்தப் புலவருக்கோ வாளை மீனின் மனநிலையே தெரிந்திருக்கிறது. இது உண்மையா மீன் உண்மையிலேயே அஞ்சியதா? அது எப்படிப் புலவர்களுக்குத் தெரிந்தது என்று ஆராய்வதைவிட புலவரின் கற்பனை நயம், எண்ணி வியப்பதாகவே விளங்குகிறது.

17 கருத்துகள்:

 1. சுவையான இலக்கியத்தை பகிர்ந்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. மீன் அஞ்சியதாக ஏற்றிக் கூறியவிதம்
  புலவரின் கற்பனை நயம் அருமை.

  பதிலளிநீக்கு
 3. அழகான பாடல் அருமையான விளக்கம்.பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 4. நயமான கற்பனை! பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு