வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 30 ஜூன், 2010

குறுந்தொகை-சீனக் கவிதை ஒப்பீடு.


தொன்மையான நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் திராவிடர்கள். திராவிட மொழியின் கூறுகளை உலகமொழிகள் பலவற்றிலும் காணமுடிகிறது.திராவிட மொழிக்குடும்பத்தின் தாய்மைத் தன்மையுள்ள மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது.

மெசபடோமிய நாகரீகம், சீன நாகரீகம், எகிப்திய நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்னும் தொன்மையான நாகரீகங்களுள் நமது நாகரீகமும் உள்ளடக்கம் என்பது பெருமிதம் கொள்ளத்தக்கது.

அரப்பா,மொகஞ்சதாரோ நாகரீகங்களை ஏற்படுத்தி சிந்து-பஞ்சாப் பள்ளத்தாக்குகளில் நாகரீகத்துடன் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் ஆவர். ஆரியர்களின் வருகையால் திராவிடர்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்பதை வரலாறு சுட்டிச்செல்கின்றது.

கால்டுவெல் வந்து சொல்லும் வரை இந்தியாவின் தனிப்பெரும் தொன்மையான மொழியாக வடமொழியே கருதப்பட்டது.

வழக்கொழிந்த தொன்மையான மொழிகளைப் புறந்தள்ளி இன்னும் தன்னிலை மாறாது நிற்கும் தமிழின் கூறுகளைப் பிற மொழிகளில் காணும் போது மகிழ்ச்சியாகவுள்ளது. சான்றாக,

சீனக்கவிதையொன்று,


“கியாட்டோ பட்டு வியாபாரிக்கு இருமகள்கள்
முத்தவள் இருபது, இளையவள் பதினெட்டு
வீரன் கத்தியால் கொல்லுவான்
ஆனால் இப்பெண்கள் கண்களால்“


முதல் வரி அறிமுக வரியாகவும்,
இரண்டாம் வரி அதன் தொடர்ச்சியாகவும்,
மூன்றாம் வரி முதலிரு வரிகளுக்கும் தொடர்பில்லாத வரியாகவும்,
நான்காம் வரி முதலிரு வரிகளையும் இயைபுபடுத்திச் சொல்லும் தன்மையிலும் அமையும்.இது சீனக் கவிதையின் இலக்கண அமைதியாகும்.

சங்க இலக்கியத்தில்,


காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.

குறுந்தொகை -44. பாலை
வெள்ளிவீதியார்.

செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனபின்பு அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.)

என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன;
இணைந்து எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன;
நிச்சயமாக, இந்த உலகத்தில்,
நம்மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர்,
அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலராவர்.

என்பது பாடலின் பொருளாகும்.

குறுந்தொகை மற்றும் சீனக் கவிதை ஆகியன ஒப்புநோக்கி ஒற்றுமை கண்டு இன்புறத்தக்கனவாகவே உள்ளன..

ஒற்றுமைக் கூறுகள்.

○ இரு பாடல்களும் நான்கு அடிகளைக் கொண்டுள்ளன.
○ இரு பாடல்களிலும் முதல் அடி அறிமுக அடியாகவும்,
○ இரண்டாவது அடி முதலடியின் தொடர்ச்சியாகவும்,
○ மூன்றாவது அடி முதலிரு அடிகளுடன் தொடர்பற்ற அடியாகவும்,
○ நான்காவது அடி முதலிரு அடிகளை இயைபுபடுத்துவதாகவும் உள்ளது.


தொன்மையான இருவேறு நாகரீகங்களில் இருவேறு மொழிக்குடும்பங்களில் தோன்றிய இருமொழிகளின் பாடல் வடிவம், இந்த அளவுக்கு ஒப்புமைத் தன்மையுடனிருப்பது வியப்புக்குரியதாகவுள்ளது.

18 கருத்துகள்:

  1. //தொன்மையான நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் திராவிடர்கள். திராவிட மொழியின் கூறுகளை உலகமொழிகள் பலவற்றிலும் காணமுடிகிறது.திராவிட மொழிக்குடும்பத்தின் தாய்மைத் தன்மையுள்ள மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது.//

    இவ்வளவு பெருமை பெற்ற நம் மொழியை பேசினால் கூட கேவலமாக பார்க்கும் கூட்டம் நம் ஊரிலே இருக்கிறது நண்பரே, என்ன செய்வது இது போன்ற கூட்டத்தை

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு நண்பரே.

    இது இரு வேறு வேறு மொழிகளின் சிறப்பின் ஒற்றுமை.

    பதிலளிநீக்கு
  3. சீனத்துடனான ஒற்றுமை ஆச்சரியமளிக்கிறது...

    :-)

    பதிலளிநீக்கு
  4. அருமைங்க..... இந்த மாதிரி செம்மொழி மாநாட்டுல, பேசச் சொல்லி பெருமை பாராட்டாமல்....... ம்ம்ம்ம்ம்ம்..... என்ன சொல்ல.

    பதிலளிநீக்கு
  5. தமிழில் இருந்து நிறைய பாடல்கள், தகவல்கள் எடுக்கப்பட்டு பிறமொழிகளில் இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு இதுவும் சான்று என மிக அருமையாக எடுத்து சொல்லி விளக்கியிருக்கீங்க.. பேராசிரியரே..!

    பதிலளிநீக்கு
  6. @சசிகுமார் விலங்குக் கூட்டங்களுக்கு தாய்மொழியின் அருமை தெரிந்திருக்கவேண்டும் என எண்ணுவது பேராசை சசி..

    பதிலளிநீக்கு
  7. @பிரவின்குமார் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரவின்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான தகவல்கள் தருகின்றீர்கள் சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    பதிலளிநீக்கு
  9. அருமையானக் கட்டுரை..அழகான ஆய்வு..தொடரட்டும் உமது பணி...

    பதிலளிநீக்கு
  10. தமிழ் கவிதை சரி, சீன கவிதையை எப்படி புடிச்சீங்க (மன்னிக்கவும், எப்படி படித்தீர்கள்).

    பதிலளிநீக்கு
  11. நல்ல பகிர்வு. நல்ல ஒப்பீடு.வாழ்த்துகள்.
    Vetha. Elangathilakam
    Denmark.

    பதிலளிநீக்கு