சனி, 8 டிசம்பர், 2012

பணம் சம்பாதிக்க சிறந்த வழி.


பணம் ஈட்டுவது மட்டும்தான் வாழ்க்கையா?

ஆம் என்று பலரும், 
இல்லை அதற்கும்மேலே கிடைக்கும் அனுபவத்தில் அடங்கியிருக்கிறது வாழ்க்கை என்று சிலரும் சொல்வதுண்டு.

இணையத்தில் சென்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று கேட்டால் பல்லாயிரம் வழிமுறைகளை இணையம் பரிந்துரை செய்கிறது.

எல்லா வழிமுறைகளையும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

ஒன்று நேர்வழி, இரண்டாவது குறுக்குவழி.

பலருக்கும் பிடிப்பது என்னவோ குறுக்குவழிதான்.

ஒவ்வொருநாளும் நாளிதழிகளிலும், தொலைக்காட்சிகளிலும் புதிய புதிய மோசடிசெய்திகளைப் பார்க்கமுடிகிறது.

ஆசை ஆசை எல்லோருக்கும் ஆசை..

உழைக்காமலேயே உயரத்துக்கு வரவேண்டும் என்று. இதைப் பயன்படுத்திக்கொண்டு பலர் அவர்களை ஏமாற்றி உயரத்துக்கு வந்துவிடுகிறார்கள்.

கால காலமாகவே நடந்துவரும் நிதிநிறுவன மோசடி, நிலமோசடிகளின் வரிசையில் சமீபத்தில் நடந்த ஈமு கோழிமோசடி, நாட்டுக்கோழிமோசடி, தேங்காய் மோசடி என நாளுக்கு நாள் புதிது புதிதாக சிந்தித்து மோசடிகள் நடந்துவருகின்றன. அதனால் பணத்தை சம்பாதிப்பது ஒன்றும் சாதனையல்ல. நேர்வழியில் சம்பாதிப்பதே வாழ்நாள் சாதனையாகும்.

யாரை ஏமாற்றுகிறோமோ, ஏறி மிதிக்கிறோமோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. எப்படியோ நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும்.
நாம் உயரத்துக்கு வந்துவிட்டபிறகு நாம் வந்துவிட்டதைப்பற்றித்தான் பேசுவார்கள், எப்படிவந்தோம் என்பதைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்றே பலரும் நினைத்துவருகிறாரகள்.

இவ்வாறு பலரும் நினைத்ததால் தான் நம் முன்னோர் நமக்குச் சொல்லிச்சென்றார்கள்..

நமக்குமேலே ஒருவன் இருக்கிறான் அவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று.

ஆனால் இன்று கடவுளின் பெயராலேயே நடக்கும் மோசடிகளைக் (போலிசாமியார்கள்) காணும்போது மக்களுக்கு கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு இருக்கிறது? என்று சிந்திக்கவேண்டியதாக உள்ளது.

அடுத்தவரை ஏமாற்றி குறுக்குவழியில் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதைவிட
நேர்வழியில் நாம் ஈட்டும் ஐநூறு ரூபாய் மதிப்புமிக்கது.


இதைத்தான் வள்ளுவர்,பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் 
கழிநல் குரவே தலை. 
குறள் 657:


பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

என்று சொல்கிறார்.

பணத்தை எப்படியும் சம்பாதிக்கலாம்..
இழிதொழில் செய்துகூட ஈட்டிவிடலாம்..
அதனால் விரைவில் நிறைய பணம் சம்பாதித்துவிடமுடியும்..

ஆனால்... இந்த செல்வநிலையைவிட..

நேர்வழியில் வாழ்ந்து வறுமையோடு வாழ்வதே சிறந்தது.

என்பது வள்ளுவர் வாக்கு.

இந்தக்குறளை வாழ்க்கையில் கடைபிடிக்க எல்லோராலும் முடியாது.

ஆனால் நினைத்தால் உங்களாலும் முடியும். 
தொடர்புடைய இடுகை

23 கருத்துகள்:

 1. இந்தக் காலத்தில்
  உரக்கச் சொல்லவேண்டிய கருத்து
  உணரச் சொல்லியமைக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 2. அடுத்தவரை ஏமாற்றி குறுக்குவழியில் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதைவிடநேர்வழியில் நாம் ஈட்டும் ஐநூறு ரூபாய் மதிப்புமிக்கது.


  அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய வரிகள்

  பதிலளிநீக்கு
 3. மோசடிகள் நடப்பதற்கு மனிதனின் பேராசையே காரணம்.விளக்கிய பதிவு நன்று.
  த.ம.4

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையான கருத்துகளை கொண்ட பகிர்வு..த.ம.5

  பதிலளிநீக்கு
 5. தினம் தினம் நிறைய மோசடி சம்பவங்கள் நடக்கிறது, செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் காண முடிகிறது. அருமையான கருத்துகளை சொல்லிருங்க வாழ்த்துகள்.

  வருகிற வருமானத்தினால் குடும்பத்தை சமாளிக்க முடியாமல்தான் பலரும், இப்படி மோசடி செய்யும் ஆட்களிடம் சிக்கிவிடுகிறார்கள். விலைவாசி குறைந்தால்தான் இப்படி மக்கள் மோசடி ஆசாமிகளிடம் சிக்காமல் இருப்பார்கள். என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. அருமையான பகிர்வு முனைவரே. சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடவேண்டும் என்பதே பலரின் குறிக்கோளாய் இருக்கிறது இப்போது....

  பதிலளிநீக்கு
 7. பணம் பணமென்று பாசங்களைக் கொன்று பகையாக்கிப் பணம் தேடிக்கொண்டிருக்கிறார்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகாகச் சொன்னீர்கள் ஹேமா.
   தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

   நீக்கு
 8. உழைத்து சம்பாதித்ததை எல்லாம் பன்மடங்காகப் பெருக்க வேண்டும் என்ற பேராசையில், நிதி நிறுவனங்களிடம் கொடுத்து மோசம் போனவர்கள் எத்தனை பேர்கள்!
  நல்லதொரு படிப்பினையான பதிவு!

  பதிலளிநீக்கு
 9. தலைப்பை படித்தவுடன் ஐடியாக்கள் நிறைய கிடைக்கும் என்று படிக்க ஆரம்பித்தேன் .இப்படித்தான் மக்களின் இன்றைய மன நிலை எப்படியாவது பணம் பண்ணினால் போதும் அந்த பலவீனத்தை பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர். முன்பெல்லாம் கடவுளிடம் ஒரு பயம் என்ற ரீதியிலாவது தவறுகள் குறைவாக இருந்தது. இப்பொழுது கடவுள் நம்பிக்கை கூட அடுத்தவரை ஏமாற்ற ஒரு போர்வையாகத்தான் உள்ளது... நல்லதொரு பகிர்வு.

  பதிலளிநீக்கு
 10. அன்பு குணா, பணத்தை நேர்வழியில் சம்பாதிப்பது கூட சாதனை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் நமக்கு பிடித்த பணியை செய்துகொண்டு நேர்வழியில் பணம் சம்பாதிப்பது என்பது சாதனைதான்.

  மாநாட்டில் தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 11. உண்மைதானே.. பணத்தை சம்பாதிப்பது பெரிய விடயமல்ல.. அதை காப்பது மிகப்பெரிய விடயம்...!!

  பதிலளிநீக்கு