ஞாயிறு, 22 ஜனவரி, 2012

இது அது மாதிரிதானே இருக்கு..
தலைகால் புரியலை..
கையும் ஓடல, காலும் ஓடல..
கண்ணு மண்ணு தெரியல..
நடப்பது கனவா! நினைவா!

என பல நேரங்களில் நாம் எதிர்பாராத சூழல்களால் திகைத்துப் போவதுண்டு. இச்சூழல்களில் நாம் என்ன செய்கிறோம்? எதற்குச் செய்கிறோம் என்றே தெரியாமல் ஏதாவது செய்துவிடுவோம்.
அப்படியொரு காட்சி...

புலவர் ஒருவர் அரசனைப் பாடிப் பரிசில் பெற்று வருகிறார்.
அவரது வறுமை நிறைந்த சுற்றம் அதை எப்படி எதிர்கொள்கிறது என்பதைப் புலவர் நகைச்சுவையோடு அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.


தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு.
இலம்பொடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித் தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின் விரற்செறிக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொழிந்தாந்தாஅங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.


புறநானூறின் 378ம் பாடல்

ஊன்பொதி பசுங்குடையார்
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாடி எழுதிய இந்த அரிய பாடலின் சாரம் வருமாறு:

தென்நாட்டுப் பரதவரின் வலிமை அடங்க,
வடநாட்டு வடுகரின் வாளால் ஏற்பட்ட கேடுகள் நீங்க,
அவர்களை ஒடுக்கி மேம்பட்டவன் இவன்!
இச் சோழனின் நெடு நகரிலே,
வெண்சுதை மாடத்தின் முற்றத்திலே நின்று..
என் கிணையை இயக்கி, எஞ்சா மரபினை உடைய சோழனின் சிறப்பைப் போற்றிப் பாடினேன்.
எமக்கென இயற்றப்படாத அரசர்க்கே உரித்தான நல்ல அணிகலன்கள் பலவற்றையும் அவன் எமக்கு நிறைய சுமக்கமுடியாத அளவுக்குத் தந்தான்.
அதனைக் கொண்டு என் சுற்றத்தாரிடம் சென்று கொடுத்தேன்.
அவர்கள் கண்டு திகைத்தனர்!

விரலில் அணியவேண்டிய மோதிரத்தைக் காதிலும்,
காதில் அணியவேண்டிய குழையை விரலிலும்,
இடையில் அணியவேண்டியவற்றைக்  கழுத்திலும்,
கழுத்திற்கு உரியன இடையிலுமாக மாறி மாறி அவர்கள் அணிந்தனர்!

இது..
அன்று..

இராமன் சீதையுடன் காட்டிற்குச் சென்றபோது வலிமையுடைய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். விண் வழியே கொண்டு செல்லும்போது அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன.

இதைப்போல்,
இளஞ்சேட் சென்னி என்ற வள்ளலிடம் இசைக் கலைஞன் பரிசாகப் பெற்ற விலை மதிக்க முடியாத பொன் நகைகளை, அவனது வறுமை மிக்க உறவினரும் சுற்றத்தாரும் அணிந்து கொள்ளும் முறை தெரியாமல் உடம்பில் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டனர். இது வறுமைத் துன்பத்தையே கண்டு வந்த கலைஞனுக்கு நினைக்க நினைக்கச் சிரிப்பைத் தந்தது என்று அவன் கூறுவதாக ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் பாடியுள்ளார்.

என்ன நண்பர்களே..

இது (புறநானூறு)
அது (இராமயணம்) மாதிரித் தானே இருக்கு..

பாடல் வழியே..
 • சீதையின் அணிகலன்களை குரங்கினங்கள் அணிந்ததுபோல என்ற உவமை வாயிலாக இராமயணம் குறித்த தொன்மக் கருத்துக்கள் சங்ககாலத்திலேயே இருந்தன என்பதை அறியமுடிகிறது.
 • காணாததைக் கண்ட சுற்றத்தாரின் செயல்களை நினைத்து நினைத்து சிரிக்கும்விதமாகப் புலவர் காட்சிப்படுத்திய பாங்கு விரும்பத்தக்கதாகவுள்ளது.
 • தமிழ்நாட்டுக்குப் பகையாக இருந்த பரதவர், வடுகர்களைச் சோழன் வெற்றிகொண்டான் என்னும் வரலாற்றுக்குறிப்பையும் இப்பாடல் பதிவு செய்துள்ளது.
 • புதுப்பிறை யன்ன சுதை செய் மாடம் என்னும் தொடர் புதிய நிலவுபோன்ற வெண்மையான சாந்தால் கட்டப்பட்ட அக்காலக் கட்டிடக் கலை மரபையும் புலப்படுத்தவதாகவுள்ளது.

19 கருத்துகள்:

 1. எளிய விளக்கத்துடன் புறநானூற்றுப்பாடல் அருமை.

  பதிலளிநீக்கு
 2. இது (புறநானூறு)
  அது (இராமயணம்) மாதிரித் தானே இருக்கு.
  ஆமாம் தோழரே
  இது அது மாதிரிதான் இருக்கு.
  தாங்கள் முனைவர்தான் என்று தங்களின் பதிவுகளே பறை சாற்றுகிறது..இலக்கியப் பகிர்வுக்கு நன்றி..
  உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-3)

  பதிலளிநீக்கு
 3. புறநானுறுப் பாடல்களுக்கு எளிமையான விளக்கத்தினை அருமையாகத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.பகிர்வுக்கு நன்றி சகோதரா.

  பதிலளிநீக்கு
 4. இண்டெர்னெட் உலகத்தில் ஒரு எளிய நடையில் இலக்கியப் பாட்டின் விளக்கம்..சேவைக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 5. எளிய தமிழில் புறநானூர்ரு பாடல்களின் விளக்கம் அருமை. பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 6. மனம் இனிக்க இனிக்க எப்போதும் தமிழ் பருகலாம் இங்கு வந்தால்.நன்றி குணா !

  பதிலளிநீக்கு
 7. அந்த போட்டோவில் அனிமேஷன் வருமே..... இதுல வரல...

  பதிலளிநீக்கு