செவ்வாய், 24 ஜனவரி, 2012

வள்ளுவர் இவ்வளவு உயரமானவரா??


பள்ளிக் காலங்களில் தேர்வைநோக்கி ஓடியதால் வள்ளுவரை சரியாகப் பார்க்கவில்லை.

இப்போது எந்தக் குறளைப் படித்தாலும் வள்ளுவரை எண்ணி வியப்பு தான் ஏற்படுகிறது.
இவ்வளவு..
யரமானவரா வள்ளுவர்!!

சிவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்றார்!
திருமால் விண்ணையும், மண்ணையும் அளந்தார்! என்பதையெல்லாம் இவை ஒரு மக்கள் கூட்டத்தின் நம்பிக்கை என்று மட்டுமே நம்பிய நான்.

திருக்குறளை இப்போது படிக்கும்போது வள்ளுவர் விண்ணுக்கும், மண்ணுக்குமாக எழுந்து நிற்கிறார் என்பதை உங்களுக்கு எப்படிப் புரியவைப்பேன்..!!

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.(குறள் 595)

என்றவரல்லவா வள்ளுவர்.
உயர்வு வேறு உயரம் வேறு என்றாலும் இங்கு இவரது எண்ணங்களின் உயர்வே எனக்கு இவரது உயராமாகத் தெரிகிறது..

இன்றைய தலைமுறையினரிடைய இந்த உயர்ந்த மனிதர் படும்பாடு கொஞ்சமல்ல..


இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். (குறள் 314)


நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கவேண்டுமா?
அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்து விடுங்கள்!

என்கிறாரே வள்ளுவர் இவர் ஏன் இப்படிச் சொல்கிறார்.

இவர் சொல்வதை இன்றைய நடைமுறை வாழ்வில் பின்பற்றவும் முடியவில்லையே.!!

ஒரு தமிழ்த் திரைப்படத்தில்..
நடிகர் தெருவழியே சென்றுகொண்டிருப்பார்.
அங்கு மரத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்க ஒரு சிறுவன் கல் எறிந்துகொண்டிருப்பான்.
அந்தக் கல் எதிர்பாராமல் இந்த நடிகர் மீது விழுந்துவிடும்.

அப்போது அந்த நடிகருக்கு நம்ம வள்ளுவர் நினைவுக்கு வந்துவிடுவார்.

அவனை வள்ளுவர் சொன்னமாதிரி திருத்தலாம் என்று.
அவனை அருகே இருந்த கடைக்கு அழைத்துச் சென்று இனிப்பு வாங்கித்தந்து..

தம்பி இந்தமாதிரி தெருவில் கல் வீசக்கூடாது. என அறிவுரை சொல்லிச் செல்வார்.
அப்பாடா இன்று ஒருவனைத் திருத்திவிட்டேன் என்ற மனநிறைவோடு.
அடுத்த தெருவுக்குத்தான் சென்றிருப்பார்...

அங்கே பத்து சிறுவர்கள் கூட்டமாகக் கல்லோடு நிற்பார்கள்.

என்னடா இப்படி நிற்கிறீங்க என்று கேட்பார்.
அதற்கு அவர்களுள் கல்எறிந்து இனிப்புவாங்கிய சிறுவன் முதலாவதாக நிற்பான்.
அவன் சொல்வான்..

டேய்.. இந்த மாமா தான்டா கல்லைவிட்டு எறிஞ்சா மிட்டாய் வாங்கித்தந்தார் எறிங்கடா எல்லோரும் என்பான்..

காலம் மாறிப்போச்சு பாருங்க..

சமூகத் தளத்தில் உலவிய போது இப்படியொரு “தெருக்குரல்“ கண்ணில் பட்டது..


இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண அவரை ஓட்டி விடல். தெருவள்ளுவர்

இப்படித்தாங்க இன்றைய தலைமுறையினர் பார்வையில் திருக்குறளின் பொருள் நிறைய மாறிப்போச்சு.

எனக்கு வந்த குறுந்தகவல்..

'ஒருவன் உன் மீது கல்லை எறிந்தால் 
நீ அவன் மீது பூவை எறி
அவன் மீண்டும் உன் மீது கல்லை எறிந்தால் 
நீ பூந்தொட்டியைக் கொண்டு எறி சாகட்டும்...'

இது நகைச்சுவை மட்டுமல்ல 
நிகழ்கால உண்மையும் கூட அதுதான்..
எனக்கு ஒரு கண்போனால் என் எதிரிக்கு இரண்டுகண்களும் போக வேண்டும் என்றே எண்ணுகிறோம்.

கவிஞர் வைரமுத்து..

வேர்களை அறுத்தோடும்
நதியின் மீதும் கலகலவென்று பூச்சொரியும் 
கரையோரத்துக் கிளைகள்...
அறுத்ததற்குக் கோபமில்லையாம்
நனைத்ததற்கு நன்றியாம்
மரம் சொன்னது :
''
இன்னா செய்தார்க்கும்
இனியவை செய்''

என்பார்.

இந்தக் குறளை மீண்டும் மீண்டும் படித்ததில் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களைப் பதிவு செய்யவே இவ்விடுகை..

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். (குறள் 314)

என்னும் குறளில் பலரும் ஏற்றுக்கொண்ட உரையில்,
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தல். அவரே நாணும்படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும், நன்மையையும் மறந்துவிடுதல்.

என்ற உரையை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.
இக்குறளில் இரண்டாவது அடியில் விடல் என்னும் சொல்லுக்கு மட்டும் சில கருத்துக்களைப் பதிவுசெய்கிறேன்.

1.      நீ எனக்கு இன்னா செய்தாய்
நான் உனக்கு இனியவை செய்தேன்
நீ ஏன் என்னைப் புரிந்துகொள்ளவில்லை
என்று வருந்தி நிற்காதே!
அப்படிச் செய்யவேண்டியது உன் கடமை!
செய்தாயா?
அதோடு அதை மறந்துவிடு!


2.      நீ எனக்கு இன்னா செய்தாலும்
நான் உனக்கு இனியவையே செய்திருக்கிறேன்
என்ற எண்ணத்தைக்கூடத் தூக்கிச் சுமக்காதே
அதை அப்போதே துறந்துவிடு!

என்ன நண்பர்களே..

இப்போது வள்ளுவர் உங்களுக்கும் யரமாகத் தெரிகிறாரா?

28 கருத்துகள்:

 1. அவர் உயரம் தான்..நீங்களும்...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் மனதின் உயரத்தைத்தான் என் எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன அன்பரே.

   நீக்கு
 2. நீ எனக்கு இன்னா செய்தாய்
  நான் உனக்கு இனியவை செய்தேன்
  நீ ஏன் என்னைப் புரிந்துகொள்ளவில்லை
  என்று வருந்தி நிற்காதே!
  அப்படிச் செய்யவேண்டியது உன் கடமை!
  செய்தாயா?
  அதோடு அதை மறந்துவிடு!  ....... நிச்சயமாக மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் தான்.

  பதிலளிநீக்கு
 3. சீன மொழியிலும் திருக்குறள் சொல்றாங்களா.... பெரிய விஷயம் பாராட்டுக்கள் அந்த மாணவிக்கு....அறிய படுத்திய தங்களுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 4. ஒன்றே முக்கால் அடியில்
  இவ்வுலகை அளந்தவர் அல்லவா....

  வாமணனை விட கால் படி உயர்ந்தவரே வள்ளுவர்....

  பதிலளிநீக்கு
 5. wav..super...thiruvalluvar always g8 thaan ....
  superaa solli irukkinga

  பதிலளிநீக்கு
 6. செய்ற உதவிய செஞ்சுட்டு போயிடனும் அது தான் நமக்கு மரியாதை அதுக்கு பலன எதிர்பார்த்துட்டு நின்னா அசிங்கப்பட வேண்டியிருக்கும்... அருமைங்ணா...

  பதிலளிநீக்கு
 7. நீங்கள் சென்று கொண்டு இருக்கும் எழுத்துப்பாதையெல்லாம் எனக்கு மலர் வனமாக தெரிகின்றது. கூடவே நம்பிக்கைகளும்.

  பதிலளிநீக்கு
 8. வள்ளுவர் உயரமானவர் மிக மிக உயரமானவர் தான். சிறப்புடைய உங்கள் கருத்துகள்போல. பாராட்டுகள்.(அந்திமாலையில் தொத்தி வந்தேன் நன்றி).
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு