வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 8 ஜூலை, 2020

மணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்



 

சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை

மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை


மணிபல்லவத்  தீவில் மணிமேகலை


புகார் நகரில் சுதமதி மாதவியிடம் மணிமேகலை நிலைமையைச் சொல்லி வருந்திக்கொண்டிருந்தபோது, மணிபல்லவத் தீவில் மணிமேகலை உறக்கம் தெளிந்து எழுந்திருந்தாள்.

ஈங்குஇவள் இன்னண மாக இருங்கடல்

வாங்குதிரை உடுத்த மணிபல் லவத்திடைத்

தத்துநீர் அடைகரைச் சங்குஉழு தொடுப்பின்

முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு

விரைமரம் உருட்டும் திரைஉலாப் பரப்பின்   5

ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்

ஆம்பலும் குவளையும் தாம்புணர்ந்து மயங்கி

வண்டுஉண மலர்ந்த குண்டுநீர் இலஞ்சி

முடக்கால் புன்னையும் மடல்பூந் தாழையும்

வெயில்வரவு ஒழித்த பயில்பூம் பந்தர்   10

அறல்விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளித்

துஞ்சு துயில் எழூஉம் அம்சில் ஓதி

 

தத்தும் கடலோரத்தில் அலையில் வரும் சங்குகள் நிலத்தை உழுதுகொண்டிருந்தன. அந்த வயலில் முத்துக்கள் விளைந்தன. செம்பவளக் கற்களுடன் சந்தனம், அகில்போன்ற மரங்களையும் அலைகள் உருட்டித் தள்ளுவதால் அந்த இடம் மணம்மிக்கதாக விளங்கியது. ஞாழல் மரம் ஓங்கி உயர்ந்திருந்தது. தாழ்ந்த நீர்நிலைகளில் ஆம்பலும் குவளையும் கலந்து பூத்துக் குலுங்கின. வண்டுகள் தேன் உண்ண அந்தப்  பூக்கள் மலர்ந்துகொண்டிருந்தன. முடங்கிய காலை உடைய புன்னை மரமும், மடல் விரியும் தாழை மரமும் வெயிலுக்குப் போட்ட பந்தல் போலக் காணப்பட்டன. மணல் பரப்பு நிலா வெளிச்சம் போலக் காணப்பட்டது. தான் படுத்திருந்த இடம் முழுவதும் மலர்கள் நிறைந்த ஒரு மலர்ப்படுக்கையைப்போல மலர்கள் சொரிந்து கிடப்பதைக் கண்டாள் மணிமேகலை.

 

மணிபல்லவத்  தீவில் மணிமேகலை அலறல்


காதல் சுற்றம் மறந்து கடைகொள

வேறுஇடத்துப் பிறந்த உயிரே போன்று

பண்டுஅறி கிளையொடு பதியும் காணாள்   15

கண்டுஅறி யாதன கண்ணிற் காணா

நீல மாக்கடல் நெட்டிடை அன்றியும்

காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப

உவவன மருங்கினில் ஓர்இடம் கொல்இது

சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை   20

நனவோ கனவோ என்பதை அறியேன்

மனநடுக் குறூஉம் மாற்றம் தாராய்

வல்இருள் கழிந்தது மாதவி மயங்கும்

எல்வளை வாராய் விட்டுஅகன் றனையோ

விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்   25

வஞ்சம் செய்தனள் கொல்லோ அறியேன்

ஒருதனி அஞ்சுவென் திருவே வாவெனத்

 

அன்பு கொண்ட சுற்றத்தாரை மறந்து வேறோர் இடத்தில் தனியே தவிக்கும் ஓர் உயிரினம் போல மணிமேகலை தவித்தாள். முன்பு தெரிந்த உறவினர் யாரும் இல்லை. அறிந்த ஊரும் இல்லை. முன் பின் கண்டறியாத பொருள்கள் கண்ணில் தென்படுகின்றன. நீண்ட தூரம் தெரியும் நீல நிறப் பெருங்கடல் அதில் ஞாயிறு தோன்றும் காட்சி. இது உவவனத்தில் ஒரு பகுதியாக இருக்குமோ?

சுதமதி! எங்கே ஒளிந்துகொண்டாய். துன்பத்தை உண்டாக்கி விட்டாய். இது கனவோ நனவோ என்று தெரியவில்லை.

நெஞ்சம்  பதறுகிறது. என்னோடு பேசு. இருள் போய்விட்டது. என்னைக் காணவில்லையே என்று என் தாய் மாதவி மயங்குவாள். வளையல் அணிந்தவளே வந்துவிடு.

என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாயோ வியப்பாக என்னுடன் வந்தவள் வஞ்சம் செய்துவிட்டாளோ என்னவோ தெரியவில்லை.

தனியே தவிக்கிறேன். திருமகளே வா - இவ்வாறெல்லாம் சொல்லிப் புலம்பிக்கொண்டு தவித்தாள்.

 

மணிபல்லவத் தீவில் மணிமேகலை அங்குமிங்கும் திரிந்தாள்.


திரைதவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்

எழுந்துவீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும்

அன்னச் சேவல் அரச னாகப்  30

பன்னிறப் புள்இனம் பரந்துஒருங்கு ஈண்டிப்

பாசறை மன்னர் பாடி போல

வீசுநீர்ப் பரப்பின் எதிர்எதிர் இருக்கும்

துறையும் துறைசூழ் நெடுமணல் குன்றமும்

யாங்கணும் திரிவோள் பாங்கினம் காணாள்   35

கடலலையில் சில பறவைகள் தவழ்ந்தன. சில பறவைகள் சிறகை விரித்துக்கொண்டு பறந்தன. ஒரு பக்கம் கடலலை சுருண்டு விழுந்தது.  அன்னப் பறவை அரசன் போல வீற்றிருக்க வேறு பறவைகள் அதனைச் சூழ்ந்திருப்பது போர்க்களப் பாடி வீட்டில் அரசன்  படை வீரர்களோடு இருப்பது போலத் தோன்றிற்று. அலை வீசும் நீர்ப் பரப்புக்கு எதிரே தோன்றும் மணல்-குன்றங்கள் பலவற்றில் ஏறிச் சுதமதியைத் தேடிக்கொண்டு திரிந்தாள்.

 

மணிமேகலை தந்தையை நினைத்துக் கதறல்


குரல்தலைக் கூந்தல் குலைந்துபின் வீழ

அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி,

வீழ்துயர் எய்திய விழுமக் கிளவியில்

தாழ்துயர் உறுவோள் தந்தையை உள்ளி

எம்இதில் படுத்தும் வெவ்வினை உருப்பக்   40

கோல்தொடி மாதரொடு வேற்றுநாடு அடைந்து

வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து

ஐயா வோஎன்று அழுவோள் முன்னர்

 

மணிமேகலையின் பின்னிய கூந்தல் கலைந்து விரிந்து கிடந்தது. வாய் விட்டுக் கதறினாள். கூவினாள். அழுதாள். துன்பச் சொற்களைச் சொல்லிக்கொண்டு புலம்பினாள். தந்தை கோவலனை நினைத்துக்கொண்டாள். என்னை இந்த நிலைமைக்கு உள்ளாக்கிவிட்டு நீ போய்விட்டாயே விதியின் தாக்கத்தால் கண்ணகியோடு வேறொரு நாட்டுக்குச் சென்று வாளால் வெட்டிக் கொல்லப்பட்ட ஐயாவோ (என்னைத் தூக்கிய) மணிப்பூண் மார்பினை உடைய ஐயாவோ என்ன செய்வேன் - என்று கதறினாள். அவள் முன் புத்த பீடிகை தோன்றியது.

 

தேவர்களின் அரசன் இந்திரன் புத்தனுக்காக இட்ட மணிப்பீடிகை மணிமேகலை முன்னர் தோன்றியது.


விரிந்துஇலங்கு அவிர்ஒளி சிறந்துகதிர் பரப்பி

உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்   45

திசைதொறும் ஒன்பான் முழுநிலம் அகன்று

விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று

பதும சதுரம் மீமிசை விளங்கி

அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே

நறுமலர் அல்லது பிறமரம் சொரியாது  50

பறவையும் முதிர்சிறை பாங்குசென்று அதிராது

தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை

பிறப்புவிளங்கு அவிர்ஒளி அறத்தகை ஆசனம்

 

விரிந்து தோன்றும் மணி வெளிச்சமாக அது தென்பட்டது. நிலப் பரப்பிலிருந்து மூன்று முழம் உயரம் கொண்டதாக இருந்தது. ஒன்பது முழம் அகலம், நீளம் கொண்டதாக இருந்தது. நடுவில் கண்ணாடி போல் இருக்கும் வட்டம். அந்த வட்டம் தாமரை போல் அமைக்கப்பட்டிருந்தது. அது அறவோன் புத்தனுக்கென்றே அமைக்கப்பட்டது ஆகையால், நன்மணம் வீசும் மலர்களைத் தவிர வேறு மலர்கள் அதன்மீது விழுவதில்லை. பறவைகள் அதில் அமர்ந்து சிறகை உலர்த்துவதில்லை. அது பழம்பிறப்பை உணரச் செய்யும் இருக்கை. அறநெறி இருக்கை.

 

தரும பீடிகை

 

கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும்

இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி  55

எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார்

தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார்

செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்

தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்

இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே   60

பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும்

பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும்

தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்.

நாக நாட்டை ஆளும் இரு வேறு மன்னர்கள் "இது என்னுடையது" என்று சொல்லிக்கொண்டு அந்தப் பீடிகைக்கு உரிமை கொண்டாடினர். அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. தம் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து உரிமைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தனர். அப்போது ருந் தவமுனிவன் தோன்றி இது என்னுடையது என்று சொல்லி அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு " போரைக் கைவிடுக" என்று அறநெறி உரைத்தான், மேன்மக்கள் போற்றும் அந்தப்  பீடிகை மணிமேகலை முன்னர் தோன்றியது.


2 கருத்துகள்: