வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 17 ஜூலை, 2020

பெருங்கதை - இலாவாண காண்டம் - அவலம் தீர்ந்தது


பெருங்கதை ஐந்து காண்டங்களை உடையது. ஒவ்வொரு காண்டமும் காதை என்னும் பல உட்பிரிவுகளைக் கொண்டது. காதைகளில் பெருங்கதையின் கதை நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன.

உதயணன் கதை

ஒவ்வொரு காதையிலும், உதயணன் பிறப்பு, திருமணம், துறவு ஆகியவை பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

உதயணன் பிறப்பு

கௌசாம்பி நகர வேந்தன் சதானிகன். இவன் மனைவி மிருகபதி. இவள் நிறைமாதக் கருப்பம் உடையவளாய் இருந்தாள். ஒரு நாள் செவ்வாடை உடுத்தி மாடியில் உறங்கிக் கொண்டிருந்தாள். சிவந்த ஆடையினால் அவளை ஓர் ஊன்தடி (மாமிசத்துண்டு) என்று கருதிய சிம்புள் பறவை அவளைக் கட்டிலோடு நெடுந்தொலைவு தூக்கிச் சென்றது. அவள் ஊன் இல்லை என்பதை அறிந்த பறவை விபுலம் என்னும் மலையில் விட்டுச் சென்றது. அப்பொழுதில் அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு உதயணன் என்று பெயரும் இடப்பட்டது.

வளர்ப்பும் நண்பனும்

மலையில் மிருகபதியின் தந்தை தவம் செய்து வந்தார். அவர் தன் மகளையும் பேரனையும் கண்டு மகிழ்ந்தார். பின்னர் அவரே அவர்களை வளர்த்து வந்தார். அதே மலையில் இருந்த பிரமசுந்தர முனிவரின் மகன் யூகி, உதயணனின் நண்பன் ஆனான். இருவரும் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று வளர்ந்து வந்தனர்.

யானையுடன் நட்பு

உதயணன் யாழிசையில் வல்லவன். அவனது யாழின் இசைக்கு மயங்கி ஒரு தெய்வீக யானை அவனிடம் வந்தது. தொடர்ந்து அவனிடமே தங்கியிருப்பதற்கு யானை மூன்று நிபந்தனைகளை விதித்தது; உதயணனின் ஒப்புதலையும் வேண்டிப் பெற்றது. அதன்படி, யானை உண்ணும் முன்பு உதயணன் உண்ணக் கூடாது; யானை மீது உதயணன் தவிர வேறு யாரும் ஏறக் கூடாது; முகபடாம் முதலிய அணிகளை அணிவிக்கக் கூடாது. இவ்வாறே உதயணனும் அதற்கு உடன்பட்டு, ஒழுகி வந்தான். பின்னர் உதயணன் தன் மாமனது அரசையும் தந்தையின் அரசையும் பகைவரிடம் இருந்து கைப்பற்றி ஆண்டு வந்தான்.

யானையை அடக்கல்

உதயணன் ஒரு நாள் சோர்வு மிகுதியால் யானைக்கு உணவு தரும் முன்பாக, தான் உண்டு விட்டான். இதனால் யானையும் அவனைப் பிரிந்து சென்று விட்டது. வருத்தம் அடைந்த உதயணன், யாழை இசைத்துக் கொண்டே காடு மலைகளில் எல்லாம் யானையைத் தேடி அலைந்தான். இந்நிலையில் உச்சயினியை ஆண்ட மன்னன், ஓர் இயந்திர யானையைப் பயன்படுத்தி உதயணனைச் சிறைப்படுத்தினான். இதனை அறிந்த யூகி உதயணனை மீட்கத் திட்டம் இட்டான். இதன்படி உச்சயினியின் பட்டத்து யானையை மதம் கொள்ள வைத்துத் தெரு வீதிகளில் திரிய விட்டான். யானையை எவராலும் அடக்க இயலவில்லை. இறுதியில் மன்னன் உதயணனைச் சிறையில் இருந்து விடுவித்தான். யானையை அடக்க வேண்டினான். யானையை அடக்கிய உதயணன் அரசனின் நன்மதிப்பைப் பெற்றான்.

காதலும் திருமணமும்

பின்பு உச்சயினி மன்னன் மகள் வாசவதத்தைக்கு யாழ் கற்றுத்தரும் வேளையில், இருவருக்கும் காதல் மலர்ந்தது. உதயணன் வாசவதத்தையைச் சயந்தி நகரத்திற்கு அழைத்துச் சென்று, மணம் புரிந்து வாழ்ந்து வந்தான்.

காதல் மயக்கமும் யூகியின் சூழ்ச்சியும்

உதயணன் வாசவதத்தையுடன் கூடிக் காதல் வாழ்க்கை வாழ்ந்து வந்தான். காதல் மயக்கத்தில், அரசன் என்ற முறையில் ஆற்றவேண்டிய கடமையை மறந்தான். இதனால் இருவரையும் பிரித்தலே நாட்டுக்கு நன்மை என்பதை யூகி உணர்ந்தான். இருவரையும் பிரித்து வைக்கத் திட்டமும் தீட்டினான். அதற்கு முன்பாக, தான் (யூகி) இறந்துவிட்டதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பினான். அடுத்ததாக, வாசவதத்தையை யாரும் அறியாமல் வேறோர் இடத்திற்கு மாற்றி, அவள் தீயினால் மாண்டு விட்டதாகவும் செய்தி பரப்பினான். இருவரின் பிரிவையும் தாங்காத உதயணன் பெரிதும் மனம் கலங்கினான். அக்கவலையை மாற்ற இராசகிரியத்தில் இருந்த ஒரு முனிவரை அடைந்தான்.

அவலம்

விலாவணை யொழியான் வீணைக் கைவினை
நிலாமணிக் கொடும்பூ ணெடுந்தகை நினைந்து
வைக றோறும் வான்மதி மெலிவிற்
பையுள் கொண்ட படிமை நோக்கி
அரும்பெற லமைச்சரொ டொருங்குடன் குழீஇக் 5
காவல னதிர்ந்த காலை மண்மிசைத்
தாவில் பல்லுயிர் தளர்ச்சி யெய்தலின்
எத்திறத் தாயினு மத்திற மகற்றுதல்
மந்திர மாந்தர் தந்திர மாதலின்
வத்தவர் கோமாற் கொத்த வுறுதொழில் 10
உத்தம மந்திரி யூகியிற் பின்னர்
அருமை சான்ற வாய்பொருட் கேள்வி
உருமண் ணுவாவிற் குறுகட னிதுவெனத்
தாழாத் தோழர் தன்மேல் வைத்தபின்

வீழாக் காதலொடும் விரும்புவன னாகிச் 15
செய்பொரு ளிதுவென வையந் தீர
மன்னுயிர் ஞாலக் கின்னுயி ரொக்கும்
இறைபடு துன்பங் குறைபட வெறியும்
மருந்தின் பிண்டந் தெரிந்தனிர் கேண்மின்

 

உதயணன் தன் நண்பன் யூகியை நினைத்து மிகவும் வருந்தினான். நாள்தோறும் துன்பத்தால் வானிலுள்ள நிலவு தேய்வதுபோல மெலிந்தான். அவனது துன்பத்தைக் கண்ட உருமண்ணுவா பிற அமைச்சர்களுடன் கூடி ஆராய்ந்தான் அப்போது,  மன்னவன் தளர்ச்சியடையும்போது மன்னுயிர் அனைத்தும் தளர்ச்சியடைவது இயல்பு. அப்போது எப்படியும் முயன்று அம்மன்னனின் துன்பத்தைப் போக்குவது அமைச்சருக்குரிய கடமையாகும். ஆதலால் யூகிக்குப் பின்பு உதயணனின் துன்பத்தைப் போக்குவது உருமண்ணுவாவின் கடமை என்று தோழர்கள் உரைத்தனர். அக்கடமையை ஏற்றுக்கொள்வதில் குறையாத அன்புடையவனாகிய உருமண்ணுவா, தன் நண்பனைப் பார்த்து, உணர்வுள்ளவர்களே, நமது மன்னரின் துன்பத்தை நீக்கும் மருந்தை நான் சொல்கிறேன். கேளுங்கள் என்றான்.

உதயணனது கவலையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள்

தணப்பில் வேட்கை தலைத்தலை சிறப்ப 20
உணர்ப்புள் ளுருத்த வூட லமிர்தத்துப்
புணர்ப்புள் ளுறுத்த புரைபதம் பேணும்
காமக் காரிகைக் காதன் மகளிர்
தாம்பஃ புணர்முலைத் தலைப்பிணி யுறீஇ
யாமக் கோட்டத் தருஞ்சிறைக் கோடல் 25
வணங்கா மன்னரை வாழ்வுகெட முருக்கி
அணங்கரும் பெருந்திறை கொணர்ந்துமுன் னிடுதல்
பூமலர் பொதுளிய புனல்வரைச் சோலை
மாமலைச் சாரலொடு கானங் காட்டுதல்

நீர் நிலை வகைகள்

யானையுச் சுரியுளை யரிமா னேறும் 30
மானிற் பெடையும் வாள்வரி யுழுவையும்
புள்ளு மாக்களு முள்ளுறுத் தியன்ற
நொய்ம்மர நெடும்புணை கைம்முதற் ற.ழீஇக்
கூறா டாயமொடு குழூஉக்கொண் டீணடி
ஆறா டாயமொ டணிவிழ வமர்தல் 35
இன்ன தொன்றினு ளென்னதொன் றாயினும்
காமுறு கருமங் கால்வலை யாக
ஏமுற வொழியா வேயர் மன்னனை
உடுத்துவழி வந்த வுழுவ லன்பின்
வடுத்தீர் கைவினை வாசவ தத்தையொ 40
டொருப்படுத் தொழியா தோங்குமலை மருங்கிற்
கடிகமழ் கானங் காணக் காட்டிப்
படிவப் பள்ளியுட் பாவப் பெருமரம்
விரத மழுவின் வேரறத் துணிக்கும்
குறிக்கோ ளுறுதவ னுண்மை கூறி 45

அழகு, காதல், காமம் கொண்ட மகளிருடன் உதயணனைச் சேர்த்தல், பகை மன்னர்களை வென்று அவர்களிடமிருந்து அரிய திறைப் பொருள்களைக் கொண்டு வந்து உதயணன் முன் குவித்தல், மலைவளம், காட்டுவளம் காட்டி அவனை மகிழ்வித்தல்,  யானை, சிங்கம், பெண்மான், புலி, பறவை,  மற்றும் விலங்குகளின் முகங்களைகன் கொண்ட நீண்ட தெப்பங்களில் கைகளைத் தழுவிக்கொண்டு சுற்றத்துடன் குழுவாக ஆடும் நீராடுவிழாவைக் கொண்டாடுவோம். அதனால் உதயணன் மகிழ்வான் என்றான். மயக்கம் நீங்காத உதணனை அன்புடைய வாசவத்தையுடன் கூடிவருமாறு அழைத்துச் சென்று உயர்ந்த மலைச் சாரலிடத்தே உள்ள மனம் வீசும் பூஞ்சோலைகளை விரும்பிக் காணுமாறு செய்தான். பின்னர் அக்காட்டில் ஞானமுடைய முனிவர் ஒருவர் இருத்தலையும் உணர்த்தினான்.

உதயணனுடைய பிறப்பு வரலாறு

இன்றே யன்றியுந் தொன்றுவழி வந்த
குன்றாக் கற்பினெங் கோப்பெருங் கிழவோள்
நித்திலம் பொதிந்த விப்பி போலத்
திருவயிற் றகவயி னுருவொளி யறாஅ
நின்னைத் தாங்கிய நன்னா ளமயத்துக் 50
கண்ணிழன் ஞாறிய காமர் பள்ளியுள்
வெண்ணிலா முற்றத்து விரும்பி யசைதலின்
ஒள்ளொளி யரத்த மூனென நசைஇப்
பல்வலிப் பறவை பற்றுபு பரிந்து
விபுல மென்னும் வியன்பெருங் குன்றத் 55
தருவரை யருக ராய்நலங் கவினிய
ஆலங் கானத் தணியொடு பொலிந்த
ஞாலங் காவ னஞ்சென நீக்கிப்
பாய்பரி யிவுளி யேயர் பெருமகன்
தன்கட் கொற்ற மெல்லாந் தன்மகன் 60
வென்றித் தானை விக்கிரற் கருளி
மறுவி னெஞ்சமொடு மாதவந் தாங்கி

உறுபெருங் காட்சி யோங்கிய படிவத் 

தறம்புரி தந்தை பள்ளிய தருகர்ப்   

பறந்துசெல் சிம்புள் பையென வைத்தலும் 65 

கயலேர் கண்ணி துயிலேற் றெழவே
உயிர்போ யுறாமையி னுறுபுட் போக
அச்ச வகையினு மந்தரச் செலவினும்
பொற்றொடி மாதர் பொறைநோய் கூர
எல்லாக் கோளு நல்வழி நோக்கத் 70
திருமணி விளக்கத் திசைநின் றழலப்   
 பெருமணிப் பாவையிற் பிறந்தனை கிடந்தோய்
                                                                        

       வேந்தனே! இன்று மட்டும் அன்றிப் முன்பும் கோப்பெருந்தேவியார் முத்தினைக் கருக்கொண்ட சிப்பிபோல உன்னைத் தம் கருவில் தாங்கியிருந்தபோதே அழகிய மேனிலைமாடத்து நிலாமுற்றத்தமைருந்த  படுக்கையின்கண் விரும்பித் தூங்கிக் கொண்டிருந்தார், அப்பொழுது அங்கு வந்த சிம்புள் பறவை அவர் சிவந்த ஆடை போர்த்தியிருந்தமையால் அவரை ஊன்திரள் என்று கருதி அவ்வூனை உண்ண விரும்பிப் பற்றிக்கொண்டு  சென்று விபுலம் என்னும் பெரிய மலையின் சாரலிலே தவஞ்செய்து கொண்டிருந்தவரும், அக்கோப்பெருந்தேவியாருடைய தந்தையும் ஆகிய துறவியினது தவப்பள்ளியினது பக்கத்தே பறந்து சென்று அப்பறவை மெத்தென தேவியை நிலத்தில் வைத்தது. அங்ஙனம் வைத்தவுடனே அக்கோப்பெருந்தேவியார் தூக்கம் கலைந்து எழுந்ததால் அச்சிம்புள் கோப்பெருந்தேவிக்கு உயிர் நீங்காமையை அறிந்து பறந்து சென்றது, அச்சத்தாலும், வான்வழியே வந்தமையானும் தேவியார்க்குக் கருஉயிர்த்த துன்பம் மிகுந்தது. அப்பொழுது கோள்கள் அனைத்தும் நன்றாகிய நெறியிலே இயங்கின, அழகிய மணிவிளக்கம் திசைகளிடத்தே பரவிநின்று ஒளிவீசியது அப்போது மாணிக்கப் பாவை  போன்று பெருமானே !  நீ பிறந்தாய்.

திருமெய் தழீஇ யருமைத் தாக
நிகழ்ந்ததை யறியாள் கவன்றன ளிரங்க
ஆத்திரை போந்த வருந்தவன் கண்டுதன் 75
ஆத்த காதன்மக ளாவ தறிந்துசென்
றஞ்ச லோம்பென நெஞ்சகம் புகலப்
பள்ளிக் கொண்டுபுக் குள்ளழி வோம்பி
அதிரா ஞாலத் தரசுவீற் றிருந்த
கதையுரைக் கெல்லாங் காரண னாதலிற் 80
புதையிரு ளகற்றும் பொங்கொளி மண்டிலம் 

உதய மிவர்தர வுதித்தோன் மற்றிவன்    
    உதயண னாகெனப் பெயர்முதற் கொளீஇப் 

பரம விருடிகள் பல்லோர்க்குத் தலைவன்
தருமந் தாங்கிய தவாஅக் கொள்கைப் 85
பிரமசுந் தரனெனும் பெரும்பெயர் முனிவற்குப்
பழிப்பில் கற்பிற் பரமசுந் தரியெனும்
விழுத்தகு பத்தினி விரும்பிப் பெற்ற
புத்திரன் றன்னொடு வத்தவர் தோன்றலும்
இருவிரு மவ்வழி மருவிவிளை யாடிச் 90
செல்லா நின்ற சில்லென் காலை

அவ்வாறு  பிறந்த ன்னைக் கண்ட தேவியார் னது அழகிய உடலை அன்பாலே தழுவிக்கொண்டு அரிதாக நிகழ்ந்த அந்நிகழ்ச்சியை அறியாதவராய் மனங்கவன்று அழுதார். அப்பொழுது அவ்வழியே யாத்திரை வந்த  சேடகமுனிவர் அத்தேவியாரைக்கண்டு அவர் தம் மகள் என்பதை உணர்ந்து அவரிடம் சென்று அஞ்சவேண்டாம்! என்று தேற்றி  அவரை உள்ளன்புடன் அழைத்துக்கொண்டு தம் தவப்பள்ளியிலே புகுந்து அவரது துயரத்தைப் போக்கி நீ பின்னர் நிகழும் நிகழச்சிக்கெல்லாம் காரணமானவனாக இருத்தலைத்தம்  ஞானத்தால் உணர்ந்து கொண்டவராய் ஞாயிறு தோன்றியபொழுது தோன்றினமையாலே இவன் உதயண குமரன் என்று பெயர் பெறுவானாக என்று கருதி னக்கு அப்பெயரைச் சூட்டினார். அன்று முதல் பிரமசுந்தரன் என்னும் முனிவர்க்கும் பரமசுந்தரி என்னும் அவர் பத்தினிக்கும் பிறந்த யூகி என்பவனோடு  நீ அருவி முதலியவற்றில் இளம்பருவத்திலே நீ விளையாடி வந்தாய்.

வெஞ்சின வேழ வெகுளி நீக்கும்
மந்திர நாமம் வந்துநீர் கன்மெனத்
தேவவிந் திரனிற் றிருந்தப் பெற்ற
ஆய்பெரு நல்லியா ழமைவர வெழீஇக் 95
கான யானையுங் கரந்துறை புள்ளும்
ஏனைய பிறவு மானா வுவகையொடு
கேட்டவை யெல்லாம் வேட்டவை விரும்பி
வேண்டிய செய்தலி னீண்டிய மாதவன்
வரத்தின் வல்லே வல்லை யாகென 100
உரைத்தம் முனிவ னுவந்தனன் கொடுத்துப்
பெறலரும் பேரியாழ் பெற்ற வாறும்
ஆர்வ நெஞ்சின னாகிய கல்வி
நேர்தனக் கில்லா நெஞ்சு ணமைதி
யூகி நினக்கிங் கடைக்கல மென்பதும் 105
போகிய புகழோன் பணிப்பக் கொண்டு
தோழ னாகித் தோமில் கேள்வி
யாழும் பாட்டு மவைதுறை போகிக்
கல்லா நின்ற சில்லென் காலத்து

       அப்பிரமசுந்தான் என்னும் முனிவர் உன்னை விரும்பியவராய் நீ எம்மிடம் நாள்தோறும்  வந்து யாம் ஓதுவிக்கும் மந்திரங்களைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிக் கற்பித்து மேலும் உனக்கு ஓர் யாழினைக் காட்டி அதனை இசையெழுப்பியும் காட்டி இது இந்திரன்பால் யாம் பெற்றதொரு தெய்வயாழாகும். இதனை வாசித்தால் காட்டு யானை முதலியன உவகையோடு வந்து கூடியாம் விரும்பியவற்றைச் செய்யும்; ஆதலின் இதனை யாம் உனக்கு வரமாகத்தருகின்றேம். இதனையும் பெற்று இதில் நீ வல்லவனாக ஆகுக என்று கூறி வழங்கினான், இதனால் அத் தெய்வயாழினை அவ்வுதயணன் பெற்றதனையும் எடுத்துக்கூறினான். பின்னர் அம்முனிவர், உன்மீது அன்புடையவராக கல்வியில் தன்னை ஒப்பாவாரில்லாதவனும், பிறர் உள்ளத்தைக் கவர்ந்துகொள்ளும் இயல்புடையவனும்ஆகிய இந்த யூகி உனக்கு அடைக்கலம் என்று தன் மகனாகிய யூகியையும் உன்னிடம் சேர்த்தார். அதனால் யூகிக்குச் சிறந்த நண்பனாகி, மேலும் குற்றமற்ற நூற்கேள்விகளையும் யாழ்ப்பயிற்சியும். மிடற்றுப்பாடலும் ஆகிய கலைகளையும் அம்முனிவர்பாற் பயின்றுவந்த அவ்விளம் பருவத்திலே,

மைவரை மருங்கின் மடப்பிடி சூழத் 110
தெய்வ யானை நின்றது நோக்கிக்
கண்டே நின்று காத லூர்தர
மந்திர வாய்ப்பும் வல்ல யாழின்
கந்திர வகையுங் காண்பல் யானென
எழீஇயவ ணியக்கப் பொழிமத யானை 115
வேண்டிய செய்தலி னீண்டிய மாதவன்
பள்ளிக் குய்ப்ப நள்ளிருட் கூறும்
பாக ரேறினுந் தோற்கயி றிடினும்
நீமுன் னுண்ணினு நீங்குவல் யானென
ஆகு பொருள்கேட் டறிவுற் றெழுந்து 120 

ஒருநாள் கரியமலைப் பக்கத்திலே பிடி யானைகள் தன்னைச் சூழ்ந்திருக்க ஒரு தெய்வயானை வந்து நின்றது; அதனைக் கண்ட அளவிலே அதன்மீது உனக்கு விருப்பமிக்கதாக; நான் முனிவன்பாற் பெற்ற மந்திரவகையையும், அத்தெய்வயாழின் இசையின் வகையையும், இப்பொழுதியற்றி அவற்றின் தன்மையை அறிவேன் என்று துணிந்து, அம்மந்திரத்தோடே அந்த யாழில் இசையை எழுப்பி இயக்க, மதம்பொழியும் அத்தெய்வயானை உன்வசப்பட்டு வந்து நீ விரும்பியவற்றைச் செய்தலானே, அதனைப் பிரம சுந்தர முனிவர் பள்ளிக்கு அழைத்து வந்தாய்; அந்த யானை அன்று நள்ளிரவிலே உனது கனவில் தோண்றி

'மன்னவன் மகனே! என் மேல் உன்னையன்றிப் பாகர் ஏறினும்,

என்னைத் தோற்கயிற்றாலே கட்டினும்,

யான் உண்பதற்கு முன்னர் நீ உண்டாலும் யான் உன்னைவிட்டு நீங்குவேன்,' என்று அறிவுறுத்தியது. அந்த யானை சொன்ன சொல்லின்  பொருளை உணர்ந்து உறக்கம்  கலைந்து நீ எழுந்தாய்.      

                        போதுங் காலை மாதவ னொருமகன்

  வீயாச் செங்கோல் விக்கிர னொருநாள்

எச்ச மின்மையி னெவ்வங் கூராத்
துப்புர வெல்லாந் துறப்பென் யானெனத்
தற்பயந் தெடுத்தவன் றாணிழல் வந்தோன் 125
மதலை யாகுமிப் புதல்வன் யாரெனச்
செருமிரு சீற்றத்துக் குருகுலத் தரசன்
சாயீச் செங்கோற் சதானிகன் றேவி
அருமைசால் கற்பின் மிருகா பதியெனும்
நுங்கை தன்னகர்க் கங்குற் கிடந்தோட் 130
கின்னது நிகழ விவ்வயிற் றந்த
பொன்னணி பைம்பூட் புதல்வன் றானிவன்
ஐயாண்டு நிறைந்தன னாதலி னிவனைத்
தெய்வ ஞானந் திறப்படக் காட்டித்
தன்னகர்க் குய்ப்பெ னென்றலு மடிகள் 135
என்னுழைத் தம்மி னிறையென வியற்றித்
தாய மெல்லாந் தனக்குரித் தாக
ஏயர் கொற்ற மிவன்வயிற் கொடுத்துப்
பெறலரும் பெருந்தவத் துறுபயன் கொள்வலென்
றாய்புகழ் முனிவனொடு தேவியை யிரந்து 140
செருமிகு குருசிறன் மருமகற் றழீஇ
நீல யானை நின்றது பண்ணிக்
கோல வெருத்தங் குலவ வேற்றி
வளநகர் புக்குத்தன் னுளமனைக் கெல்லாம்
உதயண னிறையென வறிவரச் சாற்றி 145
வேத்தவை நடுவண் வீற்றினி திருத்தி
ஏயர் குலமுதற் கிறைவ னாகி
அவ்வழி மற்றுநீ வளர விவ்வழிப்

      மாதவன் மகனாகிய விக்கிரன் என்னும் வேந்தன் தனக்கு மகப் பேறின்மையானே பெரிதும் வருந்தி இனி எனக்கமைந்த நுகர்ச்சி யெல்லாம் துறந்து தவஞ்செய்வேன் எனத் துணிந்து ஒருநாள் தன்னாட்டைவிட்டுத் தன்  தந்தையாகிய சேடக முனிவன் திருவடி நீழலிலே புகல் புகுவான் அங்கு வந்தான்; அப்பொழுது அப்பள்ளியிலே அவ்விக்கிரன் உன்னைக் கண்டு தன் தந்தையை நோக்கி இச் சிறுவன் யார்? என்று கேட்டான், அச் சேடக முனிவனும் சதானிகன்  என்னும் குருகுலத்தரசன் தேவியாகிய உன் தங்கை கருவுற்றிருந்த பொழுது அவனை ஒரு சிம்புள் பறவை தூக்கி வந்து இவ்விடத்தே வைத்துச் சென்ற சென்றதாக அவள் இச் சிறுவனை இப்பள்ளியிலே ஈன்றாள். இப்பொழுது இவன் ஐந்தாண்டு வயதுடையவன் ஆதலின், இவனைக் கற்பித்து அவன் நகரத்திற்குப் அனுப்பக் கருதியுள்ளேன் என்று கூறினார்.

     அது கேட்ட விக்கிரன் 'அடிகேள்! இச்சிறுவனை எனக்கு அருள்க! அங்ஙனம் அருள்வீராயின் இவனை அரசனாக்கி வைத்துப் பொருள் அனைத்தையும் இவனுக்கு உரிமையாக்கி ஏயர் குலத்து அரசுரிமையையும் இவன்பாற் கொடுத்துப் பின்னர் அடியேன் தவமேற் கொண்டு அதன் பயனை எய்திச் சிறப்புறுவேன்' என்று கூறி அச்சேடக முனிவனையும் மிருகாபதியையும் இரந்து பெற்று அவ் விக்கிரன் தன் மருகனாகிய நின்னைத் தழுவிக்கொண்டு அங்கு நின்றதனது நீலயானையைப் பண்ணுறுத்தி அதன்மிசை நின்னை ஏற்றிக்கொண்டு தனது வளநகரமாகிய வைசாலிக்குச் சென்று தன் குடிமக்கட்கெல்லாம் இந்த உதயணனே இன்றுமுதல் அரசன் ஆவான் என அறிவித்து அரசவை நடுவில் இனிது இருக்கச் செய்யதான். இவ்வாறு நீ அவ்வேயர் குலத்து அரசனாகி ஆட்சி செய்தாய்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக