வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 1 மார்ச், 2022

எண்ணி விளையாடுதல்


சங்க இலக்கியத்தில் 36 வகையான விளையாட்டுகள் குறித்த குறிப்புகள் உள்ளன. அவற்றுள் எண்ணி விளையாடுதல் என்பதும் ஒரு வகை விளையாட்டு ஆகும்.  மரத்தையோ,நாவாயையே,விலங்குகளையோ பறவையையோ இருபாலர் ஒன்று,இரண்டு என்று எண்ணிப் பொழுது போக்காக ஆடுதல். இவ்விளையாட்டின் இயல்பாகும். இந்த விளையாட்டு பற்றிய குறிப்புள்ள ஒரு நற்றிணைப் பாடலைக் காண்போம்..

தோழி தலைவனிடம், யாம் பகலில் இங்கிருந்து மாலையில் பாக்கம் சென்றால் தலைவி அங்கு வருந்துவாள்.

அவளை அங்கு வருக என அழைக்கும் வலிமையும் எமக்கில்லை. எனவே எம் பாக்கத்தினர் 

மகிழ்ந்து கொண்டாடுமாறு நீ உன் தேரில் வருக என திருமணத்திற்குத் தூண்டினாள்.

நீல மணியை நெரித்து வைத்தது போன்று அலை மோதும் கடல் துறை. 

அங்கே நிலா வெளிச்சத்தைக் குவித்து வைத்தது போன்ற மணல் குவியல். 

துறைக் கரையில் அமர்ந்துகொண்டு அங்குப் பறக்கும் குருகுப் 

பறவைகளை ஒன்று இரண்டு என்று எண்ணிப் பார்த்துக்கொண்டு பகல் 

பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தோம். வீட்டு முற்றத்தில் புன்னை 

மரம். காற்றில் உதிர்ந்த புன்னைப் பூக்கள் முற்றத்தில் கொட்டிக் 

கிடக்கும்.. வீட்டுக்குச் சென்றால் மீன் உணவு. 

உண்ணச் செல்லலாம் என்றால் வேண்டாம் என்கிறாள் தலைவி,

அதனால் துறையிலேயே இருக்கிறோம். 

அலை மோதும்  ஒலியைக் கேட்டுக்கொண்டே உறங்கும். 

நீ தேரில் வந்துள்ளாய். உன் தேர் எங்கள் ஊரில் (சிறுகுடிப் பாக்கம்) 

தங்கட்டுமே..


தலைவனிடம் தோழி, நீ ஏன் இவ்வாறு ஊருக்குப் புறத்தே இவளைச் சந்திக்கிறாய் அவளை திருமணம் செய்து ஊரறிய தங்கலாமே என்று கேட்கிறாள்.


மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்

உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை,

நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை,

கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி,

எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல 5

வளி சீத்து வரித்த புன்னை முன்றில்,

கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய,

'எழு' எனின், அவளும் ஒல்லாள்; யாமும்,

'ஒழி' என அல்லம் ஆயினம்; யாமத்து,

உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற் 10

சில் குடிப் பாக்கம் கல்லென

அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!  


நற்றிணை - 159 - நெய்தல்

தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது. 

- கண்ணம்புல்லனார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக