வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 10 மார்ச், 2022

நீ நல்கிய வளனே

 

தனக்கு இருக்கும் பகை இன்னது இன்னது என்று 

அடுக்கிக் காட்டிப் புலவர் தன் வறுமை நிலையை விளக்குகிறார்.

யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப

இழை வலந்த பல் துன்னத்து

இடைப் புரை பற்றி, பிணி விடாஅ

ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த

பேஎன் பகை என ஒன்று என்கோ?          

உண்ணாமையின் ஊன் வாடி,

தெண் நீரின் கண் மல்கி,

கசிவுற்ற என் பல் கிளையொடு

பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ?

அன்ன தன்மையும் அறிந்து ஈயார்,      

'நின்னது தா' என, நிலை தளர,

மரம் பிறங்கிய நளிச் சிலம்பில்,

குரங்கு அன்ன புன் குறுங் கூளியர்

பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ?

'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்'                                

எனக் கருதி, பெயர் ஏத்தி,

வாய் ஆர நின் இசை நம்பி,

சுடர் சுட்ட சுரத்து ஏறி,

இவண் வந்த பெரு நசையேம்;

'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்;          

பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என,

அனைத்து உரைத்தனன் யான் ஆக,

நினக்கு ஒத்தது நீ நாடி,

நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும்,

தண் புனல் வாயில் துறையூர் முன்துறை

நுண் பல மணலினும் ஏத்தி,

உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே.

புறநானூறு 136

திணை பாடாண் திணை; 

துறை பரிசில் துறை.

ஆயைத் துறையூர் ஓடைகிழார் பாடியது

யாழ் என்னும் தன் இசைக்கருவியின் புறத்தே இழைக் கோட்டில் காணப்படும் புள்ளிகள் போலத் தன் தலைமுடியில் மேயும் பேன் பகை ஒன்று மட்டுமா? 

உணவின்றி உண்ணாமல் உடம்பு வாடி, கண்ணீர் கசியும் தன் சுற்றத்தாரின் பசிப் பகை ஒன்று மட்டுமா? 

மலைக்காட்டு வழியில் உன்னை நாடி வரும்போது, இத்தகைய என் வறுமைத் தன்மையைக் கண்டும் எனக்கு ஏதும் தராமல் “உன்னிடம் உள்ளதைக் தா” என்று வழிப்பறி செய்யும் குரங்குக்கூட்டம் போன்ற கூளியர் இனக்கூட்டம் துன்புறுத்தும் பகை ஒன்று மட்டுமா?

 இவற்றையெல்லாம் அறிந்து ஆய் ஈவான் என நம்பி, சுட்டெரிக்கும் வெயிலில் இங்கு வந்துள்ளேன். 

எனக்கு வேண்டியதை வழங்குபவர் பிறருக்கும் வேண்டியதை வழங்குவர். பிறருக்கு வேண்டியதை ஈவோர் தனக்கும் வேண்டியதை (மகிழ்ச்சியை) வழங்கிக்கொள்வர் – என்று நான் சொல்வதுண்டு. உனக்கு ஒத்ததை நீ வழங்கவேண்டும். அதனைப் பெற்ற நான் என் ஊர் துறையூர் ஓடையில் உள்ள மணலைக் காட்டிலும் அதிகமாக உன்னை வாழ்த்திக்கொண்டே இருப்பேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக