மின்னணுவியல் அல்லது எண்முறைப் பதிப்பே மின்னூல் ஆகும். மின்னணுவியல், எண்முறை ஊடகங்கள் மூலம் மின்னூல்களை உலகளாவிய மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியும். இலவசமாகக் கூட மின்னூல்களை உருவாக்கி அதன் வழி வருமானம் பெறவும் இயலும். தமிழ் மின்னூலகங்கள் குறித்த அறிமுகத்துடன் தமிழ் மின்னூல்களை உருவாக்கும் வழிமுறைகளையும் இக்கட்டுரை வழியாகக் காண்போம்.
அ. தமிழ் மின்னூலகங்கள்
1. தமிழ் இணையக்கல்விக்கழக நூலகம் https://www.tamilvu.org/ta/நூலகம்
தமிழ் இணையக் கல்விக் கழகம், தமிழக
அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. இதில் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ்நூல்களும்,
அரிய பழந்தமிழ் நூல்களும் பதிவேற்றப்பட்டுள்ளன. சங்கஇலக்கியம் முதல் இக்கால இலக்கியங்கள்
வரை, பல நூல்களும் இத்தளத்தில் கிடைக்கும். இவற்றை இலவசமாகப் பதிவிறக்கிக்கொள்ள இயலும்.
மேலும் நூலைக் கையில் வைத்து வாசிப்பது போன்ற உணர்வைத் தரும் மின் வாசிப்பு வசதியும்
இத்தளத்தில் உள்ளது.
சொல்லடைவு, தமிழ் எண்
சுவடி, இலக்கணம், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறி நூல்கள், சித்தர் இலக்கியம், இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதைகள்),
இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (உரைநடைகள்), நாட்டுப்புற
இலக்கியங்கள் சிறுவர் இலக்கியங்கள், அகராதிகள், நிகண்டுகள், பிற மொழியில் தமிழ் நூல்கள், கலைக்களஞ்சியங்கள் கலைச்சொல் தொகுப்புகள் சுவடிக்காட்சியகம் பண்பாட்டுக்
காட்சியகம், நாட்டுடைமை நூல்கள்,
நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் (உருப்பட வடிவில்), நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் (தட்டச்சு வடிவில்), உருப்பட நூல்கள், தமிழக வரலாறு, கலைப் பண்பாடு,
இலக்கியம் தொடர்பான நூல்கள் இத்தளத்தில் உள்ளன.
2. தமிழ் இணைய மின்னூலகம் https://www.tamildigitallibrary.in/
அறிவைப் பொதுமையாக்கும் நோக்குடன், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் ஒரு பிரிவாக இந்த மின்னூலகம் கட்டமைக்கப் பட்டுள்ளது. பாறைகளிலும் பனையோலைகளிலும் காகிதங்களிலும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்த தமிழை மின்னூடகத்திற்கு மாற்றியுள்ளனர். இந்தத் தமிழ், வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது கடற்கோளால் கொள்ள முடியாது. அச்சுநூற்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என தமிழியல் ஆய்வாதாரங்கள் அத்தனையும் இங்கே உள்ளன. இதுவரை மறைக்கப்பட்டு வந்த அறிவை உலகமாந்தர் அனைவருக்கும் பொதுமையாக்கும் முயற்சி இது. இத்தளத்தில், 16356 அச்சுநூல்கள் 8334 பருவ வெளியீடுகள் 22 சுவடிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
3. ஓபன் ரீடிங் ரூம் https://archive.org/details/openreadingroom
இந்தத் தளம் வழியாக மின்னூல் வடிவில் பல அரிய தமிழ் நூல்களை வாசிக்கமுடியும்.
உலகு பரவிவாழும் தமிழர்கள் பயன்பெறவேண்டும் என்ற நோக்குடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
தமிழ்நூல்களுடன் இத்தளம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
3. மதுரை தமிழ் இலக்கிய
மின்பதிப்புத் திட்டம் https://www.projectmadurai.org/
இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ்
இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள
தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம். தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது.
மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (Voluntary)
முயற்சியாகும். உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு
மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி
வருகின்றனர். மே 2007 இல் சுமார் 708 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் தலைவராக சுவிட்சர்லாந்தில் இருக்கும்
முனைவர் கு.கல்யாணசுந்தரம் என்பவரும், துணைத்
தலைவராக அமெரிக்காவிலுள்ள முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் என்பவரும் உள்ளனர்.
4.
இலவச தமிழ் மின்னூல்கள் https://freetamilebooks.com/
கணியம் அறக்கட்டளையின்
முயற்சியில் தமிழ் மின்னூல்களுக்கான சிறப்பான தளமாக இந்த இணையதளம் இயங்கிவருகிறது.
70 இலட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து இத்தளம் திகழ்கிறது. இத்தளத்தில் யாவரும்
மின்னூல் வெளியிடலாம்.
5. நூலகம் திட்டம் http://www.noolaham.org/
நூலகம்
திட்டம் என்பது ஈழத்து தமிழ்
நூல்களையும் எழுத்து ஆவணங்களையும்
மின்வடிவில் இணையத்தில் பேணி
வைப்பதற்கான இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வக் கூட்டுழைப்பாகும். இந்த நூலகம் ஆரம்பத்தில் ஈழநூல் என்பதாகத் தான் இருந்தது. மதுரைத்
திட்டத்தால் கவரப்பட்டு ஈழத்து நூல்களுக்கான தனியான செயற்திட்டம் தேவை என்ற எண்ணத்துடன் ஈழநூல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது ஈழநூலாக
திருக்கோணமலையின் வரலாறு 28. சூலை 2004 இல் சூரியன் வலைத்தளத்தில்
வெளியிடப்பட்டது. 2004 டிசம்பரில் noolaham.org என்ற
பெயர் பதிவுசெய்யப்பட்டது
2005 ஆம் ஆண்டு, நூலகம்
திட்டம் தி. கோபிநாத், மு. மயூரன் ஆகியோரால் வலையேற்றப்பட்டது. 2005 நடுப்பகுதியில்
வழங்கி செயலிழந்தமையால் தற்காலிகமாக திட்டம் இடைநிறுத்தப்பட்டது. 2006 தைப்பொங்கலன்று
நூலகம் திட்டம் நூறு மின்னூல்களுடன் இணையத்தில் வெளிப்படையாக
அறிவிக்கப்பட்டது.
தகவல் மூலங்கள் : நூல்கள்
9,917 இதழ்கள் 11,900 பத்திரிகைகள் 46,594 பிரசுரங்கள் 895 நினைவு மலர்கள் 1,190 சிறப்பு மலர்கள் 4,406 பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் 4,095 பதிப்பாளர்கள் 3,335 வெளியீட்டு ஆண்டு 146 உசாத்துணை வளங்கள்: நிறுவனங்கள் 1,705 வாழ்க்கை வரலாறுகள் 2,885 தகவல் அணுக்க நுழைவாயில்கள்: நூலகத்
திட்டம் 74,902 குறிச்சொற்கள் 89 வலைவாசல்கள் 25 சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம்
ஆவணகம் 222 மலையக ஆவணகம் 135 பெண்கள் ஆவணகம் 5 சுவடியகம் 24 இதர செயற்திட்டங்கள்: பல்லூடக ஆவணகம் - Multimedia Archive என பயனுள்ள மின்தமிழ் நூலகமாகத்
திகழ்கிறது.
6. சென்னை நூலகம் http://www.chennailibrary.com/
சென்னை நூலகம்.காம் (chennailibrary.com) என்பது தமிழ் நூல்களை
வழங்கும் தமிழ் இணையத்தளம் ஆகும். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த
இணையத்தளம், தமிழ் இலக்கியங்கள்
பலவற்றை ஒருங்குறியில் வாசிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலான பழந்தமிழ் நூல்கள் முதல்
புதுமைப்பித்தன், கல்கி, ந. பிச்சமூர்த்தி, அறிஞர் அண்ணா போன்ற அண்மைக்கால எழுத்தாளர்களின் நூல்கள்
வரையாகப் பரந்த அளவிலான நூல்கள் இவ்விணையத்தளத்தில்
வெளியிடப்படுகின்றன. இத்தளத்தில் பழந்தமிழ் இலக்கியங்களும், நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் படைப்பாளிகளின்
நூல்களும் உள்ளன.
இத்தளம் செப்டம்பர், 15, 2006ல் தொடங்கப்பட்டது.
இதனைத் தொடங்கி நடத்தி வருபவர் கோ. சந்திரசேகரன். இத்தளம் அரசு ஆதரவு பெற்றதல்ல. திரு சந்திரசேகரன்
அவர்களின் தனிபட்ட முயற்சியால் உருவானது. இத்தளம் கெளதம் இணைய சேவைகள் (Gowtham Web Services) நிறுவனத்தின் கீழ் உள்ள இணையதளங்களில் ஒன்றாகும்.
இத்தளம் இந்நிறுவனத்தின் இரண்டாவது தளமாகும். முதல் தளமான சென்னைநெட்வொர்க்.காம் 2001ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
சென்னைநூலகம்.காம் இணையதளம் ஆரம்பிக்கும் முன்னர் வரை தமிழ் நூல்கள்
சென்னைநெட்வொர்க்.காம் இணையதளத்தில் தான் வெளியிடப்பட்டு வந்தன.
7.ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் http://rmrl.in/
(ரோசா முத்தையா ஆராய்ச்சி
நூலகம்) என்பது சென்னை, தரமணியில் அமைந்துள்ள ஒரு
தமிழ் நூலகம் ஆகும். இந்நூலகம் 1994 இல் நிறுவப்பட்டது, மற்றும் 1996 இல் ஆராய்ச்சியாளர்களுக்கு திறக்கப்பட்டது; இங்கு 120,000 மேற்பட்ட நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் உள்ளன. இந்த நூலகம் சிக்காகோ
பல்கலைக்கழக உதவியுடன் பேணப்பட்டது.
தமிழ்நாட்டில் கோட்டையூரில் இருந்த
ரோஜா முத்தையா என்பவர் 1950களில்
நூல்களை சேர்க்கத் தொடங்கி தம் வாழ்க்கையை இந்நூல் தொகுப்பதற்கும், சேர்த்ததை வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்பணித்து 1992ல் மறைந்தார். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் பெருமுயற்சி
எடுத்து, இன்று உலகில் உள்ள தமிழ் ஆய்வாளர்கள் அனைவருக்கும்
பயன் தருமாறு, இந்நூலகத்தை நிறுவப் பெரிதும் துணைபுரிந்தது.
மேற்கு உலகுக்கு தமிழை ஆழமாக அறிமுகம் செய்த ஏ.கே. இராமானுஜத்தின் புத்தகத்தொகுப்பும் இப்பொழுது இந்நூலகத்துடன்
சேர்ந்துள்ளது.
முத்தையா ஓவியக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்,
விரைவில் பழங்கால புத்தகங்களால் ஈர்க்கப்பட்டார். மற்றும் 1950
இல் பழங்கால தமிழ் இலக்கியங்களை சேகரிக்கத் தொடங்கினார். 1992
இல் அவர் இறக்கும் போது, இந்தத் தொகுப்பில்
தமிழில் கிட்டத்தட்ட 1,00,000 நூல்கள் இருந்தன, அதில் புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் பல
இலக்கியங்கள் இருந்தன. நூலகத்தின் முக்கியத்துவத்தையும் அதன் மதிப்புமிக்க
உள்ளடக்கங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்துகொண்டு சிகாகோ
பல்கலைக்கழகம் 1994 இல் முழு தொகுப்பையும் வாங்கியது.
இருப்பினும், நூலகம் தென்னிந்திய கலாச்சாரம் மற்றும்
பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில், ஒரு
ஆராய்ச்சி நூலகத்தின் கருவை உருவாக்குவதற்கு இந்த தொகுப்பு தமிழகத்தில் இருக்கும்
என்று முடிவு செய்யப்பட்டது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறங்காவலர் குழு
இப்போது சிகாகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் முத்திரைகளின் இந்த அரிய
தொகுப்பை பராமரிக்கிறது.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (ஆர்.எம்.ஆர்.எல்) தென்னிந்திய
ஆய்வுகளுக்கான ஒரு வள மற்றும் ஆராய்ச்சி மையமாகும், இது
மனிதநேயம், சமூக அறிவியல் முதல் பிரபலமான கலாச்சாரம் வரை
பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இந்நூலகம் ஒரு தனித்துவமான தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஒரு, மாதிரி நூலகமாக பரவலாக
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரோஜா முத்தையாவின் ஒரு சிறிய தொகுப்பாக, நூலகம் இப்போது 3,00,000 நூல்களைக் கொண்டுள்ளது,
மேலும் வரலாற்று காப்பகத்தை தொடர்ந்து பாதுகாத்து விரிவாக்குவதை
நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆ. தமிழ் மின்னூல்களை வெளியிட உதவும் தளங்கள்
தமிழ் மின்னூல்கள் (Tamil E-Books) http://www.pustaka.co.in/
புக்பேபி https://www.bookbaby.com/
நோசன் பிரஸ் https://notionpress.com/
செல்ப் ப்ளிசிங் ஸ்கூல் https://self-publishingschool.com
கோபோ https://www.kobo.com/
ஆகிய தளங்கள் வழியாகவும் மின்னூல்களை வெளியிட இயலும்.
அமேசான் கிண்டில்Amazon Kindle
மேற்கண்ட பல தளங்களும் தமிழ்
மின்னூல்களை வெளியிட உதவுகின்றன. இந்த மின்னூல்களைக் கணினி, மடிகணினி, பலகைக்
கணினி, திறன்பேசிகள், மின்வாசிப்புக் கருவிகளில் வாசிக்க இயலும்.
இ. தமிழ் மின்னூல்கள் வெளியிடும் முறைகள் (Tamil E-Books)
அமேசான் கிண்டில் என்பது
அமேசான் நிறுவனம் உருவாக்கி அறிமுகப்படுத்திய மின்னூல்களை இலகுவாக வாசிக்க
உதவும் ஒரு மின்படிப்பான் ஆகும். இதனை பயன்படுத்துவோர் கம்பியற்ற இணைப்புக்களின்
உதவியுடன் மின்னூல்கள், செய்தித்தாள்கள், இதழ்கள், வலைப்பதிவுகள் போன்ற அனைத்து எண்முறை ஊடகங்களையும் இணைய
உலாவிகள் மூலம் தேடிப் பெற்றுக் கொள்ளவும், வாங்கவும், தரவிறக்கம் செய்து
கொள்ளவும், எளிதாக மின்னூல்களை
வாசிக்கவும் இந்தக் கருவி பயன்படுகின்றது
அமேசான் இணைய விற்பனை அங்காடி
அமேசான்.காம், சியாட்டல்,
வாசிங்டன் நகரில் அமைந்துள்ள ஓர் அமெரிக்கப் பன்னாட்டு இணைய வணிக
நிறுவனம். ஜெப் பெசோஸ் (Jeff Bezos) என்பவரால் 1994 ஆம் ஆண்டு ஜூலை 5 நாள் தொடங்கப்பட்டு, 1995 ஆம் ஆண்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்ட அமேசான்.காம் இன்று மிகப்பெரிய
இணைய விற்பனை அங்காடியாக வளர்ந்து உலகம் முழுதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மின்னூல் வாசிப்பில் பல புதுமைகளைப் புகுத்திவருகிறது. கிண்டில் 4 மில்லியன்
புத்தகங்களையுடைய ஒரு நூலகத்தைக் கொண்டுள்ளது. 2016 ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து, அமேசான் நிறுவனம்,
தமிழ், தெலுங்கு, மலையாளம்,
இந்தி, மராத்தி, குஜராத்தி,
பெங்காலி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில்
மின்னூல்களின் விற்பனையைத் துவக்கியுள்ளது. இந்திய மொழிகளில் மொத்தம் உள்ள 3,896 மின்னூல்களில் தமிழில் மட்டும் 1374 மின்னூல்கள்
உள்ளன. அமேசான் வழங்கும் மின்னூல்களை வாசிக்க அந்நிறுவனம் கிண்டில் என ஒரு
மின் வாசிப்புக் கருவியை வழங்குகிறது. அதை வாங்க இயலாதவர்கள் தங்கள் திறன்பேசி
ஆண்ட்ராய்டாக இருந்தாலும் அதிலும் மின்னூல்களை வாசிக்க கூகுள் பிளே சுடோரில்
கிண்டில் செயலி கிடைக்கிறது. அதைப் பதிவிறக்கி மின்னூல்களை வாசிக்கலாம். அமேசானில்
மின்னூல்களை வெளியிடுவதன் வழியாக உலகமுழுவதும் நமது சிந்தனைகள் சென்று சேர்வதுடன்.
அதை பதிவிறக்குதல், வாசித்தல் என இருநிலைகளில் வருமானமும் பெற இயலும்.
அமேசான் கிண்டில் பதிப்பாக நூல் வெளியிடும் வழிகள்
அமேசானில் மின்னூல் வெளியிடுவது
மிக எளிது. அதற்கான 3 படிநிலைகள் உள்ளன. அவற்றைக் காண்போம், முதலில் https://kdp.amazon.com/ என்ற முகவரிக்குச் சென்று தங்கள் மின்னஞ்சல் முகவரியை
வழங்கி ஒரு கணக்கை உருவாக்கிக்கொள்க. பிறகு கீழ்க்கண்டவாறு இடைமுகம் தோன்றும். அதில்
Your Account என்ற பகுதியில் தங்கள் முகவரி, வங்கிவிவரம், வரிசெலுத்துதல் விவரம் ஆகியவற்றை
நிறைவுசெய்துகொள்க. பிறகு, கிரியேட் நியு டைட்டில் என்ற பகுதியில், கிண்டில் ஈபுக்கினைச்
சுட்டுக, அதைத் தொடர்ந்து கீழ்வரும் 3 படிநிலைகளை நிறைவுசெய்க, படிவத்தை நிறைவுசெய்யும்போது (Optional) என்ற பகுதிகளில் விருப்பமிருந்தால்
நிறைவுசெய்யவும், விருப்மில்லையென்றால் விட்டுவிடலாம்.
படிநிலை 1 Kindle eBook Details
1.மொழி (Language) என்ற
பகுதியில் மொழியைத் தேர்வு செய்க. ஆங்கிலம் இயல்பாகத் தெரிவாகியிருக்கும் அந்தப்
பகுதியில் சுட்டி தமிழ் மொழியைத் தேர்வு செய்யலாம்.
2. நூல்
விவரம் (Book Title) என்ற பகுதியில் நூலின் பெயரைத்
தமிழில் வழங்கலாம் துணைத் தலைப்பு என்ற பகுதியை நாம் விரும்பினால் பயன்படுத்தலாம்.
அதைப் பயன்படுத்தவேண்டும் என்று கட்டாயம் இல்லை.
3. நூல்
வரிசை (Series) என்ற பகுதியை தேவையென்றால் பயன்படுத்தலாம். இதில் நூல் தொகுதி,
வரிசை போன்ற விவரங்கள் இருந்தால் நிறைவுசெய்யலாம்.
4.பதிப்பு எண் (Edition Number) என்ற
பிரிவில் நூலின் பதிப்பு
விவரங்களை
வழங்க விரும்பினால் வழங்கலாம்.
5. நூலாசிரியர் (Author) என்ற பிரிவில் நூலாசிரியர் விவரங்களை வழங்கலாம்.
இரண்டு கட்டங்கள்
இருக்கும். இரண்டு ஆசிரியர்கள் இருந்தால் இரு
கட்டங்களிலும்
பயன்படுத்தலாம். ஒரே ஆசிரியராக இருந்தால் ஒரு கட்டத்தில்
தமிழிலும் இன்னொரு கட்டத்தில் ஆங்கிலத்திலும் பெயர்களை
வழங்கலாம்.
6. பங்களிப்பாளர்கள் (Contributors) என்ற
பிரிவில் பங்களிப்பாளர்கள்
பெயர்கள்
சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம்.
7. விளக்கம் (Discription) இது
நூலின் விளக்கவுரைப் பகுதியாகும்.
இப்பகுதியில் நூல் பற்றிய அறிமுகத்தைச் சுருக்கமாக
வழங்கலாம்.
8. வெளியீட்டு உரிமம் (Publishing Rights) என்ற
பிரிவில் இரண்டு
வாய்ப்புகள் இருக்கும். முதலாவது தனியுரிமை வெளியீட்டு
உரிமம்.
இரண்டாவது படைப்பாக்கப் பொதும உரிமம் ஆகும். அதில்
தாங்கள்
விரும்பும் உரிமத்தைத் தேர்வுசெய்யலாம்.
9. குறிச்சொற்கள் (Keywords) என்ற பிரிவானது நூல் குறித்த
குறிப்பை
வெளிப்படுத்துவதாக
வழங்கலாம். இணையதளத் தேடுதலில் நம் நூல்களைப்
பார்வையாளர்கள்
எவ்வாறு தேடிப் பெறுவது என்பது இங்கு வழங்கும்
குறிச்சொற்களாலேயே
முடிவுசெய்யப்படுகிறது. அதனால் தமிழிலும்
ஆங்கிலத்திலும்
இங்கு குறிச்சொற்களை வழங்கலாம்.
10. வயது
வரம்பு (Age and Grade Range) என்ற பிரிவில்
தாங்கள் வழங்கும் நூலை எந்த வயதுடையவர்கள் வாசிக்கலாம் என்று குறிப்பிடலாம்.
மேற்கண்ட
விவரங்களை முழுமையாகத் தாங்கள் வழங்கிய பிறகு சேமித்து அடுத்த பக்கத்துக்குச் செல்ல
இயலும்.
படிநிலை 2 Kindle eBook Content
இரண்டாவது படிநிலையில் தாங்கள் மின்னூலாக்க விரும்பும் நூலை
மைக்ரோசாப்ட் வேர்டு அல்லது ஓப்பன் ஆபீசு வேர்டு அல்லது கூகுள்
ஆவணக்கோப்பாகவோ உருவாக்கி அதை Docx என்ற கோப்பு வடிவமாக சேமிக்க
வேண்டும் பிறகு கிண்டில் ஈ புக் கன்டென்ட் என்ற பக்கத்தில்
பதிவேற்றவேண்டும்.