பொன் முட்டையிடும் வாத்து என்று ஒரு பழையகதை கேள்விப்பட்டிருப்பீர்கள்...
தினம் ஒரு பொன்முட்டையிடும் வாத்து ஒன்று ஒருவனுக்குக் கிடைத்ததாம். பேராசை கொண்டு, அவன் அதன் வயிற்றுக்குள் இன்னும் நிறைய பொன்முட்டைகள் இருக்கும் என்று எண்ணி அதன் வயிற்றை அறுத்தானாம். அது இறந்து போனதாம் அவன் ஏமாந்து போனானாம்.. என்று..
ஒரு நாடும் அதனை ஆளும் அரசனும் அறிந்துகொள்வேண்டிய கதையிது.
ஒரு நாடு தன்னிறைவு அடைந்த நாடாகத் திகழ “வரி” அடிப்படையான ஒன்றாகும்.
மக்களின் நிலை உணர்ந்து ஒரு அரசு வரி விதித்தல் வேண்டும். அவ்வாறு விதித்தால் மக்கள் ஏமாற்றவேண்டும் என்று எண்ணமாட்டார்கள்.
பெறும் வரியையும் தன் குடும்ப வளர்ச்சிக்காக மட்டுமே அரசன் பயன்படுத்தாது, நாட்டு வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்தால் பொன்முட்டையிடும் மக்கள் என்னும் வாத்துக்கூட்டங்கள் நிறைய பொன்முட்டை (வரி) இடுவார்கள். பேராசை கொண்டு வாத்தின் (மக்களின்) வயிற்றைக் கிழித்து பொன் முட்டைகளை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம் என்று அரசன் நினைத்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
என்பார் வள்ளுவர்.
அன்றைய அரசனுக்குப்
பின்னும், இன்றைய அரசியல்வாதிகளுக்குப் பின்னும் புகழ்பாடும்
கூட்டங்கள் தானே
நிறைந்திருக்கின்றன..
கா கா கா கா என்ற பறவையின் ஒலியல்லவா எங்கும் கேட்கிறது.
இவர்களுக்கெல்லாம் வாய் என்று ஒன்று வெற்றி பெறும் வரைதான் இருக்கிறது. வெற்றி
பெற்ற பின்னால் அவர்களுக்கு வயிறு மட்டுமே, அதுவும் அவர்களுக்கு
மட்டுமே இருப்பது போலத்தானே எண்ணிக்கொள்கிறார்கள்
நம்ம ஊரு அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டு அரசியல்வாதியோட வீட்டுக்குப்
போனாராம். அவரோட வீட்டைப் பார்த்து நம்மாளு வியந்துபோனாராம்..
எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டினீங்கன்னு கேட்டாராம்.
அதுக்கு அவரு சொன்னாராம்...
இங்க ஒரு பாலம் கட்டித்தரும் திட்டத்தில கொஞ்சம் கைவெச்சேன்..
அதான் இவ்வளவு பெரிய வீடு என்று..
சில நாட்களில் அந்த வெளிநாட்டு அரசியல்வாதி நம்மஊரு அரசியல்வாதி வீட்டுக்கு வந்து நம்மாளவிட அதிகமாக வியந்து போனாராம்.
அவர் நம்மாளப் பார்த்துக் கேட்டாராம்..
என்னைவிடப் பெரிய வீடாக் கட்டியிருக்கீங்களே எப்படி என்று...
அதற்கு நம்மாளு சொன்னாராம்..
அதோ பாருங்க ஒரு பாலம் தெரியுது... என்று..
அவரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைப் பார்த்துவிட்டு..
எங்கப்பா காணோம் என்றாராம்...
நம்மாளு சொன்னாராம்..
கட்டாத அந்தப் பாலத்தைக் கட்டினதாத்தான் கணக்குக் காட்டி இந்த வீட்டைக்
கட்டினேன் என்று...
வெளிநாட்டு அரசியல்வாதி மனதில் நினைத்துக்கொண்டாராம்..
இந்தியாவ யாராலயும் காப்பாத்த முடியாதுடா!!!!!
என்று..
இன்றைய அரசில் பற்றி நாம
பேசக்கூடாது.. அப்படிப் பேசுனா இது ஒரு நகைச்சுவை இடுகையா மாறிப்போகும்.. வாங்க
நம் மன்னராட்சி காலத்துக்கே போவோம்.. 
பிசிராந்தையார் என்றவுடன் கோப்பெருஞ்சோழன் தான் பலருக்கும் நினைவுக்கு
வருவான். இவர்களுக்குள் இருந்த நட்பு தமிழுலுலகம் நன்கறிந்த ஒன்றாகும்.
பிசிராந்தையார் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர். தம் மன்னன் மக்களிடம் அதிகமான வரி
சுமத்தி வந்தான். அப்போது அவனை அறிவுறுத்தவேண்டிய அமைச்சர்களும், சுற்றத்தாரும் எதுவும் சொல்லவில்லை. தம் நாடு அழிந்துபோகுமே என்று வருந்திய
பிசிராந்தையார் பாண்டியனிடம்...
மன்னா..
யானையின் பசிக்கு நெற்கதிர்களை உணவாக்கிச் சிறிது சிறிதாகக்
கொடுக்கவேண்டும்.
நாட்டு மக்களிடம் வரியைச் சிறிது சிறிதாகப் பெறவேண்டும்.
அப்படிச் செய்யாமல், யானையை நிலத்தில்
மேயவிட்டால் என்ன ஆகும்??
நூறு வயல்களாயினும் யானை தனித்துச் சென்று உண்டால் யானை உண்ணும் நெல்லைவிட
அதன் காலடியில் பட்டு அழிந்துபோகும் நெற்கதிர்கள் அதிகமாக இருக்கும் அல்லவா?
என்று அறிவுறுத்தி பாண்டியனுக்குப் புரியவைத்தார். இதனைக் கீழ்காணும் பாடல் விளக்கும்.
பாண்டியன் அறிவுடை நம்பியை பிசிராந்தையார் பாடியது.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை,
அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ. அரசன்
செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால்..
ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு
உணவாகும்.
ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து
உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட
யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி
திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.
அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத, புகழ்பாடும் கூட்டத்தோடு ஆரவாரமாக மக்கள்
அன்பு கெடுமாறு,
நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் அந்நாடும் கெடும்.
தமிழ்ச்சொல் அறிவாம்.
1. காய் நெல் = விளைந்த நெல்.
2. மா = ஒருநில அளவு (ஒருஏக்கரில் மூன்றில் ஒருபங்கு).
3. செறு = வயல்
4 தமித்து = தனித்து
5. புக்கு = புகுந்து.
6. யாத்து = சேர்த்து
7. நந்தும் = தழைக்கும்.
8. வரிசை = முறைமை
9.கல் - ஒலிக்குறிப்பு.
9. பரிவு = அன்பு
10.தப = கெட
11. பிண்டம் = வரி, பொருள்
12. நச்சின் = விரும்பினால்.
13.புலம்
14.கவளம்- உணவு.
பாடல் வழியே..
1.பாடாண் என்னும் புறத்திணை விளக்கப்படுகிறது.
2.செவியறிவுறூஉ என்னும் புறத்துறை
உரைக்கப்படுகிறது.
3. சங்ககால வரி விதிப்பு முறையை
அறிந்துகொள்ளமுடிகிறது.
4. மன்னனாகவே இருந்தாலும் தவறு செய்தபோது தட்டிக் கேட்கும் தெளிந்த வீரம்
புலர்களிடம் இருந்தது என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.
5. யானைபுக்க புலம் என்னும் உவமை மனம் கொள்ளத்தக்கதாக உள்ளது.
தொடர்புடைய இடுகைகள்


