வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 22 ஜூலை, 2009

காமம் மிக்க கழிபடர் கிளவி



தூது தமிழ்ச்சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். தொல்காப்பியர் பிரிவு பற்றிக் கூறும் போது ஓதற் பகையே தூது இவைப் பிரிவே என்றுரைப்பர். தூது இலக்கியத்தின் தோற்றக்கூறுகளுள் முதன்மையானதாகவும் அடிப்படையானதாகவும் காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் அகத்துறை அமைகிறது.

தூது அகத்தூது, புறத்தூது என இரு வகைப்படும். அகத்தூது, தலைவி தன் அன்பின் மிகுதியை அஃறிணைப் பொருள்களிடம் கூறித் தன்னிலையைத் தலைவனிடம் கூறுமாறு வேண்டுவதாக அமையும். இவ்வடிப்படையில் தமிழ்ச்சிற்றிலக்கிய வரலாற்றில் பல தூது இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன. தூது வகையுள் தமிழ்விடு தூது சிறப்பானதாக மதிக்கப்படுகிறது. ஆசிரியர் தன்னைத் தலைவியாகவும், சிவபெருமானைத் தலைவனாகவும் கொண்டு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக இவ்விலக்கியம் அமைகிறது. இத்தமிழ்விடு தூது வாயிலாகத் தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள் எடுத்துரைக்கப்படுகின்றன.

இன்றைய தூது இலக்கியங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக காமம் மிக்க கழிபடர் கிளவி அமைகிறது. இதன் பொருள் அன்பின் மிகுதி என்பதாகும்.

காமம் என்ற சொல்லைத் தரம் தாழ்ந்த சொல்லாகக் கருதும் நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். சங்க காலத்தில் காமம் என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருளாக இருந்தது. கமம் என்ற சொல்லிருந்து தான் காமம் என்ற சொல் உருவானது. கமம் என்றால் நிறைவு என்பது பொருளாகும். அன்பின் நிறைவையே காமம் என்று பழந்தமிழர்கள் அழைத்தனர்.

காமம்மிக்க கழிபடர்கிளவி என்னும் அகத்துறையை நற்றிணைப் பாடல் அழகாக விளக்குகிறது.

பகலும், இரவும் வந்து தலைவியைச் சந்தித்து மகிழ்ந்த தலைவன், ஏதோ சில காரணங்களால் அவளைச் சந்திக்க வரவில்லை. பிரிவோ தலைவியை வாட்டுகிறது. திருமண வேட்கை கொண்ட தலைவி நாரையை நோக்கித் தன்னிலை கூறி அதனைத் தலைவனிடம் கூறுமாறு வேண்டுகிறாள்....

( நாரை இவள் கூறுவதைக் கேட்காது. அவ்வாறு கேட்டாலும் அதைத் தலைவனிடம் சென்று கூறாது. இது தலைவிக்கும் தெரியும். ஆயினும் தன் குறையை எப்படியாவது ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தித் தானே தீர வேண்டும்.

உளவியல் அடிப்படையில் மன அழுத்தம் நீக்கும் முறையாக இதனைக் கொள்ளமுடிகிறது)

தலைவனைப் பிரிந்து துன்பத்தில் வாடும் தலைவி நாரையை நோக்கி...................


சிறிய வெண்மையான குருகே .......
நீர்த்துறைகளில் துவைத்து வெளுத்த ஆடை போன்ற நல்ல நிலம் பொருந்திய சிறிய வெண்மையான குருகே.....


நீ தலைவன் வாழும் நிலத்திலிருந்து தினமும் எம் நிலத்துக்கு வருகிறாய்,
இங்குள்ள நீர்நிலைகளிலே மீன் உண்கிறாய்,
பின் அவர் ஊருக்குப் பெயர்ந்து சென்று விடுகிறாய்,
தினமும் தான் என்னிலையை நீ பார்க்கிறாயே.........

நான் அணிந்த அணிகலன்கள் அவன் பிரிவால் என் உடலைவிட்டு நெகிழ்ந்து கீழே விழுகின்றன. எனது துன்பத்தை நீ அவனிடம் கூறமாட்டாயா.....?

எம் ஊர் வந்து மீன் உண்ட நீ ... இந்த நன்றியை மறக்கலாமா.....?

ஒருவேளை என்மீது அன்பிருந்தும் ,
என் நிலையைத் தலைவனிடம் சொல்ல வேண்டும் என எண்ணியும் உன் மறதி காரணமாகச் சொல்லாது விட்டுவிடுகிறாயா...?

என்று புலம்புகிறாள் தலைவி.
பாடல் இது தான்....

சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே


( மருதம்)
நற்றிணை - 70(காமம் மிக்க கழிபடர்கிளவி )
வெள்ளி வீதியார்

இப்பாடலின் மெய்பாடு அழுகை....
அதன் பயன் அயாவுயிர்த்தல் ..........( பெருமூச்சு விடுதல், தன்னைத் தானே நொந்து கொள்ளுதல்,)

இப்பாடல் வழி தலைவன் மீது கொண்ட அன்பின் மிகுதியால் தலைவி குருகிடம் புலம்பியமையும், இதுவே பிற்காலத் தூது இலக்கியங்களுக்கு அடிப்படையாக அமைந்தது என்பதும் புலனாகிறது.

20 கருத்துகள்:

  1. கொக்கு விடும் தூது ...

    காமம் பற்றிய விளக்கம் விளங்கியது.

    பதிலளிநீக்கு
  2. அறியாத பல விடயங்களை அறியக்க்கூடியதாக இருந்தது நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  3. /கொக்கு விடும் தூது ...

    காமம் பற்றிய விளக்கம் விளங்கியது./

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜமால்...

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..../

    வருகைக்கு நன்றி அபு...

    பதிலளிநீக்கு
  5. அறியாத பல விடயங்களை அறியக்க்கூடியதாக இருந்தது நன்றிகள்.../

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் முனைவர் ஐயா.

    தமிழ் இலக்கியச் சுவையை மிக அழகுற வடித்திருக்கிறீர்கள்.

    நமது இலக்கியத்தில் காதல் - காமம் பற்றி இத்துணை அழகுற; பண்பாட்டியல் நெறியுடன் சொல்லியிருக்கும் வேளையில், நவின இலக்கியம் என்ற பெயரில் இதே விடயங்களை மிகப் பச்சையாகவும் கொச்சையாகவும் எழுதிவருகின்றனர்.

    இதன் தொடர்பில், என் திருத்தமிழ் வலைப்பதிவில் எழுதிவருகிறேன். அன்புகூர்ந்து பார்க்கவும்.

    தங்களின் கருத்தறிய விழைகிறேன்.

    நன்றி.

    சுப.நற்குணன் - மலேசியா.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் முனைவர் ஐயா.

    தமிழ் இலக்கியச் சுவையை மிக அழகுற வடித்திருக்கிறீர்கள்.

    நமது இலக்கியத்தில் காதல் - காமம் பற்றி இத்துணை அழகுற; பண்பாட்டியல் நெறியுடன் சொல்லியிருக்கும் வேளையில், நவின இலக்கியம் என்ற பெயரில் இதே விடயங்களை மிகப் பச்சையாகவும் கொச்சையாகவும் எழுதிவருகின்றனர்.

    இதன் தொடர்பில், என் திருத்தமிழ் வலைப்பதிவில் எழுதிவருகிறேன். அன்புகூர்ந்து பார்க்கவும்.

    தங்களின் கருத்தறிய விழைகிறேன்.



    /தங்கள் வருகை மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது. தாங்கள் சுட்டிய பக்கத்துக்கு வந்து எனது கருத்துரையை அளிக்கிறேன்.. வருகைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  8. சீரிய முயற்சி ...
    வாழ்த்துகள்
    அன்புடன் ராஜன்

    பதிலளிநீக்கு
  9. திகட்டவேயில்லை இலக்கியமும் அதை நீங்கள் சொல்லும் விதமும்...அக்கால காதலின் நிலையே தனிப்பெருமை வாய்ந்தது போலும்....

    பதிலளிநீக்கு
  10. /சீரிய முயற்சி ...
    வாழ்த்துகள்
    அன்புடன் ராஜன்/

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜன்..

    பதிலளிநீக்கு
  11. திகட்டவேயில்லை இலக்கியமும் அதை நீங்கள் சொல்லும் விதமும்...அக்கால காதலின் நிலையே தனிப்பெருமை வாய்ந்தது போலும்.../

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழ்..

    பதிலளிநீக்கு
  12. காமம் பற்றிய விளக்கம் நன்று. தொடர்க... உம் பணி...

    பதிலளிநீக்கு
  13. சங்க இலக்கியங்களில் எவ்வளவோ ஆசையிருந்தும் வாசிக்கவோ விளங்கவவோ சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தங்கள் விளக்கங்கள் மிகவும் இலகுவாக விளங்குகின்றன. நன்றி. சகோதர பாசம் பற்றி ஏதாவது இலக்கியத்தில் இருந்தால் எனக்காக பதிவீர்களா?

    பதிலளிநீக்கு
  14. காமம் பற்றிய விளக்கம் நன்று. தொடர்க... உம் பணி...

    கருத்துரைக்கு நன்றி.. அன்பு...!

    பதிலளிநீக்கு
  15. /தங்கள் விளக்கங்கள் மிகவும் இலகுவாக விளங்குகின்றன. நன்றி. சகோதர பாசம் பற்றி ஏதாவது இலக்கியத்தில் இருந்தால் எனக்காக பதிவீர்களா?/

    தங்கள் கருத்ரைக்கு நன்றி நண்பரே....

    சகோதர பாசம் பற்றி செய்திகள் உள்ளன...
    அப்படி ஒரு இடுகை தங்களுக்காக எழுதுகிநேன் நண்பரே........

    பதிலளிநீக்கு
  16. தூது இலக்கியத்தின் தோற்றத்தைப் பற்றியும் அந்த வகை இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்த சங்க பாடலையும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள் முனைவரே. நன்றி.

    பதிலளிநீக்கு