வியாழன், 9 ஜூலை, 2009

பெண்களும் மலரணிதலும் (சங்க காலம்)
இன்றைய சூழலில் எல்லாப் பெண்களும் மலரணிகிறார்கள். அவர்களிடம்

ஏன் மலரணிகிறீர்கள்?
என்று கேட்டால்.......
அவர்கள் சொல்வார்கள்.....

அழகுக்காக அணிகிறோம்.....
மணத்துக்காக அணிகிறோம்.....
என்று இன்னும் பல காரணங்களைக் கூறுவார்கள்.....

எப்போதிருந்து மலர் அணிகிறீர்கள் என்று கேட்டால்.....

நீண்ட காலமாகவே அணிகிறோம் என்பார்கள்.............

அவர்களில் பலருக்குச் சங்க கால மகளிர் மலரணியும் மரபு புதுமையாகவும், வியப்பாகவும் இருக்கும்.

ஆம்....

சங்க காலத்தில் எல்லாப் பெண்களும் மலரணியவில்லை. திருமணமான பெண்கள் மட்டும் தான் மலரணிந்தனர். திருமணமாகாத பெண்கள் மலரணிவது இல்லை.

அவ்வாறு திருமணம் ஆகாத பெண் ஒருத்தி மலரணிந்திருந்தால் அவள் யாரையோ காதலிக்கிறாள்.... அவன் சூட்டிய மலர் தான் இது என்று ஊரார் பேசிக்கொள்வார்கள்.......


இம்மரபினை பல்வேறு சங்கப்பாடல்களும் சுட்டுகின்றன... அம்மரபினைச் சுட்டும் கலித்தொகைப் பாடல் ஒன்று இங்கே விளக்கம் பெறுகிறது.....

( எல்லோருக்கும் புரியவேண்டும் என்பதால் உரையாடல் வடிவில் இப்பாடலை விளக்கியுள்ளேன்)

களவு வெளிப்பட்டது என்று அஞ்சி, தோழிக்குச் சொல்ல நமர் நின்னை அவர்க்கே கொடுக்கச் சூழ்ந்தார் என்று சொல்லி அச்சம் நீக்கியது.

இதன் பொருள் – தலைவியின் காதல் அவள்தம் பெற்றோருக்குத் தெரிந்துவிட்டது. அதனால் கலங்கிய தலைவி தம் கலக்கத்தைத் தோழியிடம் கூறினாள். தோழியோ தலைவியை, நீ கலங்காதே உன் பெற்றோர் நீ விரும்பியவாறே உன் தலைவனுக்கே மணம் முடித்துவைப்பர் என்று சொல்லி அச்சம் நீக்கினாள்.....
இதுவே தலைவியும் தோழியும் பேசிக் கொண்டது. இப்பாடலில் தலைவியின் காதல் வெளிப்பட்ட விதம் தமிழர்தம் மரபினை வெளிப்படுத்துவதாக உள்ளது........

தலைவி : நேற்று எங்க வீட்டில் என்ன நடந்ததுன்னு தெரியுமா?
தோழி : என்னடி நடந்தது?

தலைவி : புதிசா கள்ளருந்தியவன் எப்படி உண்மையெல்லாம் உளறிக் கொட்டிவிடுவானோ... அதுபோல ஆகிப்போச்சுடி என் நிலை.

தோழி : என்னடி சொல்ற....?

தலைவி : நேற்றிரவு என் தலைவனைச் சந்தித்தேன் அவன் தலையில் முல்லை மலர் சூடியிருந்தான்... எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அம்மலரை நானும் எடுத்து என் கூந்தலில் சூடிக்கொண்டேன். அவனை விட்டுப் பிரியும் போதும், என் வீட்டுக்குச் செல்லும் போதும் அம்மலரை எடுத்து எறிய எனக்கு மனம் வரவில்லை அதனால் கூந்தலுக்குள் வைத்த மலருடனேயே வீட்டுக்குப் போய்விட்டேன்..

தோழி : உனக்கு என்ன துணிவு.... சரி.....
பின் என்ன நடந்தது?

தலைவி : வீட்டுக்குச் சென்ற பின்னர் கூந்தலுக்குள்ளே வைத்த மலரை மறந்துவிட்டேன்...

தோழி : ம்

தலைவி : வீட்டில் நற்றாயும் பெற்றோரும் இருக்கும் போது செவிலித்தாய் வந்து என் கூந்தலில் எண்ணை தேய்த்து முடிந்துவிடுகிறேன் என்றாள்....
( நற்றாய் – தலைவியைப் பெற்ற தாய்.
செவிலி – தலைவியை வளர்த்த தாய்)
நானும் மலரைக் கூந்தலில் வைத்த நினைவில்லாமல் அவள் முன் நின்றேன்...

தோழி : சரி....

தலைவி : என் தலைமுடியை அவிழ்த்தாள் செவிலி....
அதன் உள்ளே வைத்திருந்த முல்லை மலர் கீழே விழுந்தது.....

தோழி : அடடா....
அப்புறம் என்ன ஆச்சு....? வீட்டில என்ன சொன்னாங்க? உன் கூந்தலில் முல்லை மலர் எப்படி வந்தது..? யார் தந்தது? என்றெல்லாம் கேட்டு உன்னை துன்புறுத்தியிருப்பார்களே....?


தலைவி : நீ நினைக்கிறது மாதிரி அங்கு அப்படி எதுவும் நடக்கல...

தோழி : என்னடி சொல்ற............! யாரும் உன்னை ஒன்றும் கேட்கவில்லையா...........! நம்பமுடியலயே.........!

தலைவி : என்னாலும் தான் நம்பமுடியல..என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை.
என் கூந்தலில் இருந்து முல்லை மலர் விழுந்ததைப் பார்த்ததும் செவிலித்தாய் ஏதோ நெருப்பைத் தொட்டவர் போலப் பதறி அவ்விடத்தை விட்டு நீங்கிச் சென்றாள்... நற்றாயும், தந்தையும் கூட எதுவும் சொல்லவில்லை. அவர்கள் அவ்விடத்தை விட்டு நீங்கிப் வீட்டின் பின்பக்கம் சென்று விட்டனர்.


தோழி : ம் ........ அப்புறம் நீ என்ன செய்தாய்.......?


தலைவி : எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல.... கூந்தலை முடித்து விட்டு வீட்டின் அருகே உள்ள கானத்துக்குச் சென்றுவிட்டேன்....

தோழி : சரி ..... அது தான் உன் பெற்றோர் எதுவும் சொல்லவில்லையே. பிறகு எதற்கு பயப்படுகிறாய்........?

தலைவி : அது தானடி எனக்குப் பயமாக இருக்கிறது.....
இனி அவர்கள் என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை.

தோழி : அவங்க அடுத்து என்ன செய்யப்போறாங்கன்னு நீ நினைக்கிற....?

தலைவி : என்னை வீட்டை விட்டு வெளியே விடாமல்.... இற்செறிக்கலாம்..
வேறு ஒருவருக்குக் கூட திருமணம் செய்த வைக்கலாம்......

தோழி : ஓ அது தான் உனது பயத்துக்குக் காரணமா?
நீ நினைக்கிறது மாதிரி எதுவும் நடக்காது...
பயப்படாத......
உன் பெற்றோர் உன்னை அப்பொழுதே.....
கோபப்பட்டுப் பேசியிருந்தால் நீ சொல்வது போல என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்...
ஆனால் ....
அவங்க கோபப்பபடாம இருக்கிறதப் பார்த்தா.........
எனக்கென்னமோ.... அவங்க உன் விருப்பப்படி நீ விரும்பியவனுக்கே உன்னை மணம் முடிப்பார்கள் என்று தான் தோன்றுகிறது...

தலைவி : என்னடி சொல்ற........
நீ சொல்ற மாதிரியெல்லாம் நடக்குமா?

தோழி : பயப்படாத........
நான் சொல்றது மாதிரி தான் நடக்கும்...
உன் விருப்பத்துக்கு மாறாக அவர்கள் நடக்கமாட்டார்கள்...
உன் மகிழ்ச்சி தானே அவர்களுக்கு தேவை....
அதனால் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக இரு

தலைவி : அப்படி நடந்தால் மகிழ்ச்சி தான்..

தோழி : அப்படியே நடக்கும் கலங்காதே.......

சங்கத்தமிழர் மரபுகளில் மலரணிதல் குறிப்பிடத்தக்கதாகும்..
ஆடவரும், பெண்டிரும் மலரணிந்தனர்....
ஒவ்வொரு நிலையிலும் மலரணிதலுக்கெனப் பல காரணங்கள் இருந்தன. மகளிர் மலரணிதல் பற்றி பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன..... அவற்றுள்,

தலைவி கூற்றும் தோழி கூற்றும்
'தோழி! நாம்இ காணாமை உண்ட கடுங் கள்ளைஇ மெய் கூரஇ
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குஇ
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும்இ மெல்லியால்!
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடேஇ
அன்னையும் அத்தனும் இல்லராஇ யாய் நாணஇ
அன்னை முன் வீழ்ந்தன்றுஇ அப் பூ
அதனை வினவலும் செய்யாள்இ சினவலும் செய்யாள்இ
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டுஇ
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும்இ என்
சாந்து உளர் கூழை முடியாஇ நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇஇ தளர்பு ஒல்கிஇ
பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்குஇ எல்லா!
ஈங்கு எவன் அஞ்சுவது?
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின்இ நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார்இ நின்னை; அகன் கண்
வரைப்பில் மணல் தாழப் பெய்துஇ திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம்இ
அல்கலும் சூழ்ந்த வினை.'

கலித்தொகை-115


இப்பாடல் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இப்பாடல் வழி சங்க காலத்தில் திருமணமான பெண்கள் மட்டுமே மலரணிந்தனர் என்பதும், திருமணமாகாத பெண்கள் மலரணிவது இல்லை என்பதும் புலனாகிறது. அவ்வாறு திருமணம் ஆகாத பெண்கள் மலர் அணிந்தால் அப்பெண் யாரையோ காதலிக்கிறாள் என்று பொருள்கொள்ளப்பட்டது...

16 கருத்துகள்:

 1. சுவாரஸியமாக இருந்தது உங்கள் உரையாடல் விளக்கம்.

  மலரணிதல் பெண்களுக்கு மட்டுமன்று,புறத்திணை பாடல்களில் ஆண்களுக்கும் சொல்லப்பட்டிருக்கும்.

  "வெட்சி நிரை கவர்தல்
  மீட்டல் கரந்தையாம்
  வட்கார் மேல் செல்வது வஞ்சியாம்
  உட்காதெதிரூன்றல் காஞ்சி
  எயில் காத்தல் நொச்சி
  அது வளைத்தலாகும் உழிஞை
  அதிரப் பொருவது தும்பை"

  இதைப்பற்றி விளக்கம் கூறினால் நலம் பயக்கும்.

  பதிலளிநீக்கு
 2. மலரணிவது தொடர்பாக பல இலக்கிய பாடல்களோடு நல்ல கருத்துக்களையும், அறியாத பல விடயங்களையும் தந்தமைக்கு நன்றி....
  தொடரட்டும் உங்கள் பணி....

  பதிலளிநீக்கு
 3. எனக்கு இந்த தகவல் புதுசாக இருக்கிறது. இதை படித்தாலும் இனி யாரும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. /மலரணிதல் பெண்களுக்கு மட்டுமன்று,புறத்திணை பாடல்களில் ஆண்களுக்கும் சொல்லப்பட்டிருக்கும்.

  "வெட்சி நிரை கவர்தல்
  மீட்டல் கரந்தையாம்
  வட்கார் மேல் செல்வது வஞ்சியாம்
  உட்காதெதிரூன்றல் காஞ்சி
  எயில் காத்தல் நொச்சி
  அது வளைத்தலாகும் உழிஞை
  அதிரப் பொருவது தும்பை"

  இதைப்பற்றி விளக்கம் கூறினால் நலம் பயக்கும்./

  ஆம் நண்பரே.......
  அதைப்பற்றி தனியொரு இடுகை எழுதுகிறேன்..

  பதிலளிநீக்கு
 5. /அறியாத பல விடயங்களையும் தந்தமைக்கு நன்றி....
  தொடரட்டும் உங்கள் பணி/

  கருத்துரைக்கு நன்றி சந்ரு.....

  பதிலளிநீக்கு
 6. /இதை படித்தாலும் இனி யாரும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்./

  இதைப் படித்து யாரும் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பது இவ்விடுகையின் நோக்கமல்ல நண்பரே.....

  இது நம் தமிழர் மரபு என்பதை மட்டும் தெரிந்து கொண்டாலே போதும்...

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே........

  பதிலளிநீக்கு
 7. சங்க காலத்தில் எல்லாப் பெண்களும் மலரணியவில்லை. திருமணமான பெண்கள் மட்டும் தான் மலரணிந்தனர். திருமணமாகாத பெண்கள் மலரணிவது இல்லை. ///

  புது செய்தியாக உள்ளதே!!

  பதிலளிநீக்கு
 8. முதலில் தாமத வருகைக்கு மன்னிக்கவும் வலைச்சர பணி மிகுதியால் இயலவில்லை...

  தங்கள் பதிவில் இது ஒரு வித்தியாசமான பாணி குணா எளிய நடையில் தொகுத்து படிக்க சுவையாய் இருந்தது பூவுக்குள் பூகம்பம் போய் பூச்சூடினால் பூகம்பம்...

  பதிலளிநீக்கு
 9. தங்கள் பணிச்சுமையை நான் நன்கு அறிவேன். பணிச்சுமைகளுக்கு இடையே வருகை தந்து கருத்துரையளித்தமை மகிழ்வளிப்பதாகவுள்ளது.

  பதிலளிநீக்கு
 10. விளக்கம் நன்றாக இருக்கிறது.
  வியப்பளிக்கிறது சங்க கால செய்தி.
  தொடருங்கள்...
  எங்கள் தமிழாசிரியை மெர்சியை நினைவுப்படுத்துகிறது உங்கள் நடை...

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சாரதி...

  பதிலளிநீக்கு
 12. எளிய உரையாடல் வடிவாக விளக்கத்தைத் தந்ததற்கு நன்றி நண்பரே. முதன்மைச் செய்திகளை தடித்த எழுத்தில் இட்டதும் நன்று.

  வழக்கம் போல் சில ஐயங்கள்: :-)

  1. இப்பாடலில் 'நம் புல்லினத்து ஆயர் மகன்' என்ற சொற்றொடர் வருகிறது. இதற்கு உரையாசிரியர்கள் கூறும் விளக்கம் என்ன? நம் என்றதால் தலைவனும் தலைவியும் ஆயர் குலம் என்பது தெரிகிறது. ஆனால் தன் குலத்தையே புல்லினம் என்று தலைவி கூறுவது புரியவில்லை; ஆயர் குலம் தாழ்ந்த குலம், புல்லினம் என்றொரு மரபு சங்க காலத்திலும் இருந்திருக்கிறதா? அதனை ஆயர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்களா? அதனால் தான் 'நம் புல்லினத்து ஆயர் மகன்' என்றாளா தலைவி? உரையாசிரியர்கள் சொல்வது என்ன?

  2. இப்பாடலில் தலைவன் அணிந்த முல்லையங்கண்ணியைத் தலைவி சூடிய செய்தி மட்டுமே எனக்குத் தென்படுகிறது. மணமாகாத பெண்கள் மலர் அணிவது இல்லை என்ற செய்தி வருவித்துக் கொண்ட செய்தியைப் போல் தான் தோன்றுகிறது. நேரடியாக இந்தப் பாடலில் அந்த செய்தி இல்லை. இந்த செய்தியை நேரடியாக - அதாவது மணமாகாத பெண்கள் மலர் அணிவதில்லை என்ற செய்தியை நேரடியாக - கூறும் ஏதேனும் பாடல் உண்டா? மாற்றாக மணமாகாத பெண்கள் மலர் அணிந்திருந்ததைக் காட்டும் பாடல்கள் உண்டா?

  எனக்கென்னவோ மணமாகாத பெண்கள் மலர் அணிந்திருந்ததைக் காட்டும் பாடல்கள் பலவும் சங்க இலக்கியத்தில் உண்டென்றே தோன்றுகிறது; அகத்துறையில் கொஞ்சம் தேடினால் நிறைய கிடைக்கும் என்று நினைக்கிறேன். நானும் தேடிப் பார்க்கிறேன்.

  3. அப்படியே 'மணமாகாத பெண்கள் மலர் சூடுவதில்லை' என்னும் மரபு இருந்திருந்தாலும் அம்மரபு ஐவகை நிலத்தவரிடையேயும் அங்கே வாழ்ந்த எல்லா குடியினரிடையேயும் இருந்த மரபு தானா? அன்றி ஆய்க்குலத்துப் பெண்களுக்கு மட்டுமே ஆன மரபா? அப்படி ஆய்க்குலத்தவர்க்கு மட்டுமே ஆன மரபென்றால் அதனைச் சங்ககால மகளிர் அனைவருக்கும் பொதுமைப்படுத்துவது சரியாகுமா?

  இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். விட்டால் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே செல்வேன். கேள்விகளைக் கேட்பதென்னவோ எளிது தானே?! :-)

  எனக்குத் தென்படும் இன்னொரு செய்தி - தலைவனும் தலைவியும் ஆய்க்குலத்தவர் என்பதால் அதனை எப்படியோ உய்த்துணர்ந்த (சூடியது முல்லை மலர் என்பதால் தலைவனும் ஆய்க்குலம் என்று அறிந்தனர் போலும் யாயும் அன்னையும் அத்தனும்) பெற்றோர்கள் ஒத்த குலத்தவரான இருவரையும் சேர்த்து வைக்க மனம் கொண்டனர் போலும். இதுவே வேறு குலத்தவராயின் இற்செறித்தல், வெறியாட்டு, உடன்போக்கு போன்றவை நிகழ்ந்திருக்கும் போலும்.

  பதிலளிநீக்கு
 13. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே..!
  தங்கள் ஐயங்களுக்கான விரிவான விளக்கத்தை இடுகையாகவே இட்டுள்ளேன்
  இடுகையின் முகவரி...

  http://gunathamizh.blogspot.com/2009/08/2.html

  பதிலளிநீக்கு