சனி, 25 ஜூலை, 2009

நொதுமல் வரைவு
மாறிவரும் உலகில் மாறாத ஒன்று காதல். காலந்தோறும் காதல் பற்றிய மதிப்பீடு மாறலாம், ஆனால் காதல் மாறுவதில்லை. சங்க இலக்கியங்கள் வழி தமிழர் தம் காதல் மரபுகளை அறியமுடிகிறது.

இற்றைக் காலத்தில், ஒரு பெண் தன் பெற்றோருக்குத் தெரியாமல் காதலிக்கிறாள். தன் மகள் காதலிக்கிறாள் என்பதை அறியாது அவள்தம் பெற்றோர் தன் பெண்ணுக்கு மணம் பேசுகின்றனர். அந்நிலையில் அப்பெண் தன் காதலைப் பெற்றோருக்குத் தெரிவித்து நடைபெறவிருக்கும் திருமணத்தைத் தடுக்கிறாள்..

இது போன்ற நிகழ்வுகள் இன்று மட்டுமல்ல. இனி வரும் காலங்களிலும் நிகழும். இதே நிகழ்வு சங்க காலத்தும் நிகழ்ந்தது. அதற்குச் சங்கத் தமிழர் இட்ட பெயர் நொதுமல் வரைவு.

நொதுமல் வரைவு என்பது………

தலைவியை மணம் பேசி அயலவர் வருவார்கள். அவ்வாறு வரும் மணமகன் வீட்டாரை பெண்வீட்டார் முகமலர வரவேற்பர். சில நேரங்களில் அவ்வாறு மணம் பேச வருவோர் தலைவி காதலிக்கும் தலைவனின் வீட்டாராக அமைதலும் உண்டு. அவ்வாறு அமைந்தால் தலைவியும், தோழியம் பேருவகை அடைவர்.
தலைவனின் பெற்றோர் மணம் பேச வரும் போது தலைவியின் பெற்றோர் அதற்கு உடன்படுவதும் உண்டு, மறுத்து மொழிதலும் உண்டு.

பெற்றோர் உடன்பட்டால் மகிழும் தலைவி, மாறுபட்டால் எதிர்த்துப் போராடுவாள். தலைவிக்குத் துணையாகத் தோழியும் உடனிருப்பாள்.

தலைவியின் கற்பைக் காக்கத் தோழி, தலைவியின் காதலைச் செவிலிடம் கூறி அறத்தொடு நிற்பாள்.

இவ்வாறு நொதுமல் வரைவு பற்றி இயம்பும் பாடல்கள் சங்கஇலக்கியத்தில் பல உள்ளன. சான்றாக நற்றிணையிலிருந்து ஒரு பாடலைக் காண்போம்….


207 நெய்தல் - (நற்றிணை)

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி
வந்தனர் பெயர்வர்கொல் தாமே அல்கல்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்
வலையும் தூண்டிலும் பற்றி பெருங் கால்
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே(நொதுமல் வரைவுழித் தோழி, செவிலிக்கு அறத்தொடு நின்றது.)

தலைவியை மணமுடிக்க விரும்பி அயலார் பெண்கேட்டு வந்தமையைத் தோழி அறிந்தாள். அதனால் தோழி, செவிலியிடம் சென்று தலைவி ஒருவனைக் காதலிக்கிறாள். அவனை அவள் மணத்தலே சிறப்பு என்று தலைவியின் காதலை வெளிப்படுத்தி அறத்தொடு நிற்கிறாள்.


இனி பாடலை உரையாடல் வடிவில் காண்போம்…..

தோழி : அன்னையே………!

செவிலி : என்னடி……..?
இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்……?
தலைவியைப் பெண்பார்க்க வந்திருக்கிறார்கள்…
உனக்குத் தெரியாதா….
நீ இங்கு இருக்கிறாய் ….
நீ போய் தலைவியுடன் இருப்பது தானே முறை….

தோழி : உன்னிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும். அதற்குத் தான் உன்னைத் தேடி வந்தேன்…

செவிலி : என்ன செய்தி….?

தோழி : கடல் சூழ்ந்த நம் பரதவர்கள் குடில்கள் உள்ள நம் பாக்கத்துக்குத், தினமும் தேரில் ஒருவன் வந்து செல்கிறான் என்பதைத் தாங்கள் அறிவீர்களா………?

செவிலி : அப்படியா ….?
யாரது……….?
எனக்குத் தெரியாதே……..?

தோழி : தலைவியைக் காதலிக்கும் தலைவன்…

செவிலி : என்னடி சொல்ற…..?
மணம் பேச வந்திருக்கும் இந்த நிலையில என்ன பேசற..
உண்மைதானா……..?

தோழி : உண்மை தான்….
அவன் தலைவி மீது மிகுந்த காதல் கொண்டிருக்கிறான். அவளும் அவனை உயிராகக் காதலிக்கிறாள்….
அதனால் அவர்களைச் சேர்த்து வைப்பதே முறை….

செவிலி : சரி அதை இப்ப வந்து சொல்ற…
இதை நான் எப்படி அவள் பெற்றோருக்கு உரைப்பது..
இந்நிலையில் அவர்கள் மனம் என்ன பாடுபடும…..?

தோழி : தலைவியின் நலம் கருதி இதை தாங்கள் அவள் பெற்றோருக்கு எடுத்துரைக்கத் தான் வேண்டும்.

இளையோரும், முதியோரும் தம் சுற்றத்துடன் குழுமியவராய், கொல்லும் தன்மையுடைய
சுறா கிழித்ததால் உண்டான அகன்ற துளைகளைச் சுருங்கிய, மெல்லிய கொடியால் முடிச்சிடுவர்.

இவ்வாறு தொழில்புரியும் பரதவர் குலத்துத்தோன்றிய நம் தலைவி,

அவள் விரும்பும் தலைவனுடன் வாழ்ந்தாள் மனம் மகிழ்வுடனிருப்பாள். அவனும் அவளை நன்கு பார்த்துக்கொள்வான்…
இப்போது மணம் பேசி வந்திருப்பவர்களோடு ஒப்பிடும் போது, தலைவன் செல்வ நிலையிலும் மிகவும் உயர்ந்தவன்…

நான் இவ்வளவு தூரம் சொல்லியும்…
இந்த செய்தியை அவள் பெற்றோர் அறியாது அவளுக்குத் திருமணம் செய்து வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

செவிலி : என்ன நடக்கும்..?

தோழி : முதலில் அவள் விரும்பும் தலைவனுடன் அவள் வாழ இயலாவிட்டாள் உயிர் துறந்துவிடுவாள்…………
அன்றி வாழும் நிலை வந்தாலும்,

பெருங்காற்று வீசும் கடலுக்குச் செல்லும் கொல்லும் தொழில் வெய்ய பரதவராகிய சிறுமையாளரிடம் அகப்பட்டு அழிந்து போவாள்…………

செவிலி : சரி….
நடப்பது நடக்கட்டும்………
தலைவியின் காதலை அவள் பெற்றோருக்குத் தெரிவிக்கிறேன்…….
போதுமா………?

தோழி : மிக்க மகிழ்ச்சி……….!

செவிலி : தலைவியின் நலம் தானே நாம் விரும்புவது…

இவ்வாறு தலைவியை அயலவர் பெண் கேட்டு வருதல் நொதுமல் வரைவு எனப்படும்.

தலைவியின் காதலைத் தோழி செவிலிக்கு எடுத்துரைத்தல் அறத்தொடு நிற்றல் எனப்படும்..

செவிலி தலைவியின் காதலை அவள்தம் தாயான நற்றாக்கு எடுத்துரைப்பதும், நற்றாய் தம் கணவருக்கு உரைப்பதும் அறத்தொடு நிற்றல் என்றே அழைக்கப்பட்டது.

இவ்வாறு சங்க காலத் தலைவியர் தம் காதலுக்காகவும், கற்புக்காகவும் போராடினர் என்பதை பாடல்கள் சுவை பட இயம்புகின்றன..

13 கருத்துகள்:

 1. மாறிவரும் உலகில் மாறாத ஒன்று காதல். காலந்தோறும் காதல் பற்றிய மதிப்பீடு மாறலாம், ஆனால் காதல் மாறுவதில்லை ...]]


  உண்மை தான்.

  பாடல்கள் - தங்கள் உரையாடல் வழி எளிமையாக விளங்குது.

  பதிலளிநீக்கு
 2. இலக்கியப் பாடல்களை சிறந்த முறையிலே எல்லோரும் இலகுவாக விளங்கக்கூடிய விதத்திலே இடுகை இட்டு வருகின்றீர்கள் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 3. இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன். சுவாராசியமாகவும், எளிமையாகவும் சங்க இலக்கியத்தின் வளமையை தந்திருக்கிறீர்கள். அருமை. இனி அடிக்கடி வருவேன்.

  பதிலளிநீக்கு
 4. இலக்கியப் பாடல்களை சிறந்த முறையிலே எல்லோரும் இலகுவாக விளங்கக்கூடிய விதத்திலே இடுகை இட்டு வருகின்றீர்கள் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்/

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு.........

  பதிலளிநீக்கு
 5. /சுவாராசியமாகவும், எளிமையாகவும் சங்க இலக்கியத்தின் வளமையை தந்திருக்கிறீர்கள். அருமை. இனி அடிக்கடி வருவேன்/

  தங்கள் வலைப்பதிவுக்கு நான் பல முறை வந்திருக்கிறேன்....
  எனது வலைப்பதிவுக்குத் தங்கள் வலைப்பதிவில் இணைப்புக் கொடுத்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.
  இன்று எனது வலைப்பக்கத்துக்கு வந்து கருத்துரை அளித்திருப்பது மேலும் மகிழ்வளிப்பதாக உள்ளது...
  மிக்க மகிழ்ச்சி....

  பதிலளிநீக்கு
 6. மாறிவரும் உலகில் மாறாத ஒன்று காதல். காலந்தோறும் காதல் பற்றிய மதிப்பீடு மாறலாம், ஆனால் காதல் மாறுவதில்லை.

  உண்மைதான். காதலால் மாறிய உலகம் உண்டு, காதலே உலகமாய் மாறியவரும் உண்டு, ஆனால் மாறாதது காதல்தான்.

  இலக்கியத்தை இயல்பு தமிழில் தரும் உங்களின் பணி பாராட்டப் படவேண்டியது.

  பதிலளிநீக்கு
 7. எங்க தமிழ் ஆசிரியர் கூட இப்படி சொன்னது இல்லை .
  ரொம்ப நல்ல இருந்தது

  பதிலளிநீக்கு
 8. S.A. நவாஸுதீன் said...
  மாறிவரும் உலகில் மாறாத ஒன்று காதல். காலந்தோறும் காதல் பற்றிய மதிப்பீடு மாறலாம், ஆனால் காதல் மாறுவதில்லை.

  உண்மைதான். காதலால் மாறிய உலகம் உண்டு, காதலே உலகமாய் மாறியவரும் உண்டு, ஆனால் மாறாதது காதல்தான்.

  இலக்கியத்தை இயல்பு தமிழில் தரும் உங்களின் பணி பாராட்டப் படவேண்டியது.//

  கருத்துரைக்கு நன்றி நவாஸ்..

  பதிலளிநீக்கு
 9. எங்க தமிழ் ஆசிரியர் கூட இப்படி சொன்னது இல்லை .
  ரொம்ப நல்ல இருந்தது..

  நன்றி மந்திரன்.....

  பதிலளிநீக்கு