வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 30 ஜூலை, 2009

தமிழர் மரபியல் ( பாலியல் நோக்கு)கால வெள்ளத்தில் தமிழர் மரபுகள் பல தவறான புரிதல்களுக்குட்பட்டு வருவது வருத்தமளிப்பதாகவே உள்ளது.
• பழந்தமிழர் மரபுகளின் உயர்வுகளை எண்ணிப் பெருமிதம் கொள்ளுதல்.
• பழந்தமிழர் மரபுகளில் சில காலத்துக்கு ஏற்பில்லாத நிலை கண்டு வருந்துதல்.
என்னும் இரு கருத்தாக்கங்கள் நம்மிடையே உள்ளன.
சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய நூல்களை முழுமையாகவும், ஆழமாகவும் கற்ற யாரும் தமிழர் மரபுகளைக் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.

சங்க கால மக்களின் வாழ்வியல் பதிவுகளாகவே சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இவ்விலக்கியங்கள் வாயிலாகத் தமிழர்தம் மரபுகளைக் காண விழைவோர், சரியான கண்ணோட்டத்தில் காண்பது வேண்டும். தவறான புரிதல்களால்தான் தமிழர் மரபுகள் பிழைபட உணர்தலும், குறைத்து மதிப்பிடும் நிலையும் ஏற்படுகிறது.

இன்றைய சூழலில் வலைப்பதிவுகள், தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாயில்களுள் முதன்மையானவையாக விளங்குகின்றன.
வலைப்பதிவுகள் வழியே,
தமிழர் மரபு குறித்த தேடல்,
தமிழர் மரபு குறித்த புரிதல்,
தமிழர் மரபு குறித்த மதிப்பீடுகள்
ஆகியவற்றைக் காணும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது.
சில தவறான புரிதல்களைக் காணும்போது மனம் சிறிது வருத்தம் கொள்கிறது.

தமிழர் மரபில் பாலியல் நோக்கு.

தமிழர் மரபில் பாலியல் செய்திகள் குறித்த சிந்தனைகள் காலந்தோறும் விவாதிக்கப்பட்டுதான் வந்திருக்கின்றன.

“ பாதாதி கேச வருணணை
கேசாதி பாத வருணனை“
(பாதம் முதல் தலை வரை வருணணை
தலைமுதல் பாதம் வரை வருணனை)

என்பது இலக்கியத்தில் இயல்பாக வருவது. ஒரு பெண்ணை உச்சி முதல் உள்ளங்கால் வரை வருணித்தல் என்பது அக்காலத்தில் தவறாகப்படவில்லை. மாறாக ஒரு பெண்ணே தன் உறுப்புகளை வருணிப்பது போன்ற பாடல்களும் தமிழில் அதிகம் உள்ளன.

பக்தி இலக்கியங்கள், இறைவியரைக் கூட விட்டுவைக்கவில்லை.

இறைவியர் என்றால் பாதாதி கேச வருணனையும்,
மானிடகுலப் பெண்கள் என்றால் கேசாதி பாத வருணனையும் இடம் பெறுவது அக்கால மரபாகவே இருந்திருக்கிறது.

இன்று வந்த நாம் பழந்தமிழ் இலக்கியங்கள்......
இப்படி வருணனையைக் கொண்டு விளங்குகின்றனவே....
இது சரியா...?
இது தவறா...?

என்றெல்லாம் கேட்பதில் எவ்விதமான பயனுமில்லை.

இவ்வருணனைகள் இன்று நமக்குத் தவறாகப்படலாம்..
இன்று நமக்குத் தவறாகப்படுவது நாளை வரும் தலைமுறையினருக்கு மிகவும் சரியாகப் படலாம்.
அதனால் இம்மரபுகளைச் சரியாகப் புரிந்து கொள்ள அக்கால மக்களின் வாழ்வியல் குறித்த சரியான கண்ணோட்டம் நம் தேவையாகிறது.


ஒரு சின்ன நகைச்சுவை.
இந்த நகைச்சுவையில் அந்த சிறுவன் தன் தந்தையின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தவறாக மதிப்பிட்டுக் கொள்கிறான்.

பழந்தமிழர் என்பவர் நம் தாத்தாக்களுக்கெல்லாம் தாத்தா...! அவர்களின் தோளில் ஏறித்தான் நாம் அவர்களின் உலகைப் பார்க்கிறோம். அப்படியிருக்கும் நாம் ....

தாத்தா நான் உன்னைவிட உயராமாக இருக்கிறேன்...

நீ என்னைவிட குள்ளமாக இருக்கிறாய் என்றால் அது அறிவுடைமையாகுமா...?

அது போலத் தான் நம் முன்னோர் மரபுகளைக் குறைத்து மதிப்பிடுவதும் அமையும்.
தமிழர்தம் மரபுகளை முழுமையாக அறிந்து கொள்ள நமக்கு இன்னும் முதிர்ச்சி வேண்டும்.

தமிழர் மரபுகளை ஆழமாகவும், விரிவாகவும், நுட்பமாகவும் எடுத்தியம்பியவர். மூதறிஞர்.வ.சு.ப.மாணிக்கனார் ஆவார்.

இவர் தம் தமிழ்க்காதல் நூலில், ஒவ்வொருவருக்கும் தமிழர்தம் அகத்திணை மரபுகள் குறித்த பாலியல் அறிவு தேவை என்கிறார்.
இதனை,


பாலியற் கல்வி

அகத்திணை ஓர் பாலிலக்கியம், பெயரில்லாதார் வாழ்க்கையிலிருந்து காமநுணுக்கங்களைக் கற்றுக்கொள்கின்றோம். காமம் பற்றிய ஆணுடல்
பெண்ணுடலின் கூறுகளையும், இயற்கை செயற்கை திரிபு ஆகிய மனக்கூறுகளையும் கரவின்றிப் பட்டாங்குச் சொல்வது பாலிலக்கண நூல். அந்நூல் வாழ்வைத் தொடாது, அறிவைத் தொடாது. அதனைக் கற்பவர்,
அறிவு நிலைபெறுவரன்றிக் காதலுக்கு இன்றியமையாத உணர்ச்சி நிலையைப் பெறார்; சமுதாயத்தோடு இசைந்த புணர்ச்சி நிலையை எண்ணார். அகத்திணை
வாழ்க்கையிலக்கியம் ஆதலால், உலக நடைமுறைக்கு ஒப்பதாயும் பெயரில்லாதாரின் காதலியல்களைப் புலப்படுத்துவதால், கற்பவர்க்குத் தமது
என்ற உணர்ச்சியை ஊட்டுவதாயும் அமைந்துள்ளது. உடல் நலத்திற்கென உடற்பயிற்சி இருவர் செய்கின்றனர் என வைத்துக்கொள்வோம். ஒருவன்
பயிற்சிப் படங்களைப் பார்த்துப் பயில்கின்றான். மற்றொருவன் தன்முன் நின்று பயிற்சிசெய்யும் பயில்வானைப் பார்த்துப் பயில்கின்றான்.

இவ்விரு நிலைக்கும் பெரு வேறுபாடு இல்லையா? பின்னது சிறந்தது, முறையானது, கெடுதலற்றது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
பாலிலக்கண நூல் கற்றுக் காதலுலகிற் புகுவான் இன்ப மரபு அறியாதவனாய்,
சமையல் நூல் கற்றுச் சமைக்கப் புகுந்தாளைப் போல இடர்ப்பட்டுக் காமம் இழப்பான், பசி நீங்கான். அகத்திணை போன்ற பாலிலக்கியம் நூல் கற்பவர்
கற்கும்போதே காதற் பயிற்சி கைவரப் பெறுவர்; அன்னை அருகிருந்து மகள் அடுப்புத் தொழில் பழகிக்கொள்வது போல, அன்புக்கேடும் ஆரவாரமும்
இன்றிக் காதலுலகில் இனிது இயங்குபவர். ஆதலின், பருவம் உற்ற ஆண் பெண் அனைவர்க்கும் அகத்திணைக் கல்வி இன்றியமையாதது. அக்கல்வி.
காமப் பருவத் தொடக்கத்தே கற்கத் தொடங்கவேண்டியது.
அகக்கல்வி கற்கும் நல்லிளைஞர் இளைஞியர் இன்றியமையாத உள்ளப் பண்பாவது கற்பு என்றும், இன்றியமையாத உடல் விளையாவது காமம்
என்றும் தெளிவாக விளங்கிக் கொள்வர், ஒருவர் காமத்தை ஏனையர் மதித்து ஒழுகுவர், காமநிறைவு மனநிறைவாம் என்று இன்பச் செய்கையில்
மீக்கொள்வர், ஞாலத்தைக் காதலுக்குப் பயன்கொண்டு தம் காதலால் ஞாலத்தை வாழ்விப்பர்.

அகம் கற்ற இளைஞன் தன் இன்பமே பெரிதென எண்ணமாட்டான். தன் கயமலர்க் கண்ணியை இன்புறுத்திப் பெறும் இன்பத்தையே காமம் என்று
எண்ணி, அதற்கேற்றபடி காதற்பள்ளியில் நடந்துகொள்வான். மனைவியின் ஊடலையும் ஊடற் காரணங்களையும், ஊடல் நீட்சிகளையும், ஊடல்
சொற்களையும் இன்ப இகலாகக் கருதாது, இன்ப வாயிலாகக் கருதுவான், தன்
புகழ்ப் பெருமையையும், அறிவுப் பெருமையையும், செல்வப் பெருமையையும், பதவிப் பெருமையையும், பரிசுப் பெருமையையும் எண்ணிச் செம்மாக்காது,
மெல்லியலாளின் காமப்பெருமையையும் ஏற்றுக் கொண்டு இரங்கி மொழிவான்.

அகம் கற்ற இளையாள் காமப்பெருக்கம் கருதி ஊடுவாளேயன்றி, குற்றம் உடைய தலைவனாயினும், அவனை இடித்துரைப்பதற்கு, அதுதான் காலம்
என்று பள்ளிக்கலவியில் ஊடற் புரையோடாள். இன்பக்கொடை அவளது நோக்கம் ஆவதன்றிச் சிறுமைசுட்டி அக்கொடை செய்தல் அவள் கற்புக்குச்
சிறப்பளிக்காது. பெருந்தோள் ஆடவனது பணிவையும் வேண்டுதலையும் கிடப்பையும் கண்டு காமுகன் என்றோ, சிறியவன் என்றோ கருதித் தருக்காது,
கற்பின் வணக்கம் என்று பொருள்புரிந்து இன்ப அருள் செய்வான்.

அகம் கற்ற குடும்பத்தார் தம் ஆண் பெண்மக்களின்
பருவவோட்டங்களை எளிதிற் புரிந்துகொள்வர். பருவக்கோளாறு என்று கருதி மயங்கி, அறிவற்ற அன்பினால் காதற்கோளாறும் கற்புக்கோளாறும் செய்யார்.

அகக்கல்வி பரவிய இனத்தார் காதல் வாழ்வுக்கு மாறான சமுதாயப் போக்குகளை வேரூன்றவிடார். கற்பிற்கு முரணான பரத்தமையை ஆடவர்க்காக வளரவிடார். வளர்ந்த பரத்தமையைக் குலவொழுக்கமென வாழவிடார், பெண்டிரெல்லாம் கற்புப் பெண்டிராகவே வாழ வழிவகுப்பர்.

துறவிக்கும் அகத்திணைக் கல்வி வேண்டற்பாலது. துறவாத இல்லற மக்களுக்குத் தொண்டு செய்யுங்கால், அம்மக்களின் காதற் காமநிலை பற்றிய
அறிவு வேண்டாங் கொல்?
அகத்திணைக்கல்வி தொல்காப்பியத்தாலும் சங்கவிலக்கியத்தாலும் திருக்குறளாலும் அன்றி வேறு எவ்வகையானும் பெறுதற்கில்லை. தமிழ்ப்பிறவி
எடுத்த நாம் இம்முத்திற நூல்களையும் கற்கவேண்டும். கற்பதோடன்றி நம்போல் ஞாலமும் உய்யும்படி கற்பிக்கவேண்டும். இவை செய்யாவிடின்
இப்பிறவியை ஏன் சுமந்தோம்? அகப்பொருள் யாத்த தொல்காப்பியர் ஒல்காப்புலமை வாய்ந்தவர், பல்புகழ் கொண்ட பண்பினர் என்று அறிவோம்.
சங்கச் செய்யுட்கள் பாடியோர் எத்தகையர்? வாய்மை விளங்கும் கபிலரும்,
உலகறம் மொழிந்த கணியன் பூங்குன்றனாரும், அச்சமில்லாத நக்கீரரும்,
அருநெல்லி பெற்ற ஒளவையாரும், நெடுஞ்செழியன் புகழ்ந்த மருதனாரும்,
கரிகாலன் மதித்த கண்ணனாரும், கரிகாலன் மகள் ஆதிமந்தியாரும்,
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியரும், பிசிராந்தையாரின் நண்பர்
கோப்பெருஞ்சோழரும் முதலான எண்ணிலாச் சான்றோர் என்பது அறிவோம்.
காமத்துப்பால் அருளியவரோ தமிழ்த்தாய் உலக நலத்திற்கெனப் பெற்ற வள்ளுவப் பெருமகன். இத்தமிழ்ச் சான்றோர் எல்லாம் அகத்திணைப்
பாடல்கள் யாத்தார்கள் எனின், அகக்கல்வி ஞாலமானிடர்க்கு இன்றியமையாத தலைசால் தூய கல்வி என்பதுவே முடிவு.

சங்கவிலக்கியம் 1862 அகப்பாடல் உடைய காதலிலக்கியம். ஒவ்வொரு பாடலிலும் ஆண் பெண் உள்ளங்கள் உள்ளன. இப்பாடல்களைக் கற்பவர்
3727 காதல் உள்ளங்களைப் பற்றிய அறிவு பெறுவர், மேலும்
காதற்றலைமையுடைய இவ்விருவரைப் பற்றிப் பாங்கன் நினைத்தனவும், ஊரார் கண்டார் நினைத்தனவும் ஆகிய பல்வேறு உள்ளங்களின் அறிவினையும் பெறுவர். திருக்குறட் காமத்துப்பாலின் 250 குறள்களைக் கற்குநர் 500 காம நெஞ்சங்களைக் குறித்த கல்வி பெறுவர். பொருட்பாலால் புறவாழ்க்கையிலும்
காமத்துப்பாலால் அகவாழ்க்கையிலும் செம்மை எய்துவர். அகத்திணைக் கல்வித் தலைவராகிய தொல்காப்பியரது தமிழ் முதல்நூலைக் கற்கும்
அன்புடைத் தமிழ் நங்கையாரும் நம்பியாரும் இருபாலாரின் நுண்ணியல்களை யெல்லாம் பண்போடும் பாங்கோடும் தெளிந்து வாழ்ந்து நன்றியர்களாகப் பொலிவார்காண்.

என்னும் இக்கருத்துக்கள் வழி பழந்தமிழர்தம் மரபியலின் உயர்வு புலப்படுகிறது..

13 கருத்துகள்:

 1. சாலையைக் கடக்கும் போது கூட அவரு என் கையைப் பிடிச்சுகிட்டே தான்டா வர்ராரு....

  இந்த நகைச்சுவையில் அந்த சிறுவன் தன் தந்தையின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தவறாக மதிப்பிட்டுக் கொள்கிறான்.
  ]]  ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.......

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் தமிழ் நலம் சூழ்க

  சங்க இலக்கியத்தில் பாலியல் தொடர்பான தகவல்களுக்கு நன்றியன். ஆனால் இன்றைய புத்திலக்கியவாணர்கள் பாலியலையே முகாமை கருவியாக தங்கள் இலக்கியங்களில் படைக்கின்றனர். நமது பண்பாட்டுக் கருவூலமான மரபைச் சிதைக்கின்றனர்.

  பதிலளிநீக்கு
 4. நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 5. முனைவர் ஐயா வணக்கம்.

  என் திருத்தமிழ் வலைப்பதிவில் தங்களின் மறுமொழியைக் கண்டு இங்கு வந்தேன்.

  தங்களின் கனிவான மறுமொழிக்கு மிக்க நன்றி ஐயா. மேலும், சங்கப் பாடல்களில் பாலியல் தொடர்பான செய்திகளை மிக நேர்த்தியாக அளித்துள்ளமைக்கும் மிக்க நன்றி.

  தங்களின் இந்த இடுகையை என் வலைப்பதிவில் மறுபதிவு செய்துள்ளேன். மலேசியத் தமிழர்களுக்கும் தங்கள் கட்டுரை சென்று சேரவேண்டும் என விரும்புகிறேன்.

  தொடர்ந்து வருக ஐயா. தங்களின் வழிகாட்டுதலைப் பணிந்து விழைகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. இன்றைய சூழலுக்குத் தேவையான பதிவு........../

  (முனைவர்.கல்பனா. ) வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் தமிழ் நலம் சூழ்க

  சங்க இலக்கியத்தில் பாலியல் தொடர்பான தகவல்களுக்கு நன்றியன். ஆனால் இன்றைய புத்திலக்கியவாணர்கள் பாலியலையே முகாமை கருவியாக தங்கள் இலக்கியங்களில் படைக்கின்றனர். நமது பண்பாட்டுக் கருவூலமான மரபைச் சிதைக்கின்றனர்./
  வருக நண்பரே...
  தங்கள் கருத்துரைக்கு நன்றி... தமிழர்தம் மரபைக் காக்க வேண்டியது நம் கடமை நண்பரே..
  நம்மால் இயன்ற வரை இவர்களிடமிருந்து தமிழர் தம் மரபுகளைக் காப்போம்...

  பதிலளிநீக்கு
 8. முனைவர் ஐயா வணக்கம்.

  என் திருத்தமிழ் வலைப்பதிவில் தங்களின் மறுமொழியைக் கண்டு இங்கு வந்தேன்.

  தங்களின் கனிவான மறுமொழிக்கு மிக்க நன்றி ஐயா. மேலும், சங்கப் பாடல்களில் பாலியல் தொடர்பான செய்திகளை மிக நேர்த்தியாக அளித்துள்ளமைக்கும் மிக்க நன்றி.

  தங்களின் இந்த இடுகையை என் வலைப்பதிவில் மறுபதிவு செய்துள்ளேன். மலேசியத் தமிழர்களுக்கும் தங்கள் கட்டுரை சென்று சேரவேண்டும் என விரும்புகிறேன்.

  தொடர்ந்து வருக ஐயா. தங்களின் வழிகாட்டுதலைப் பணிந்து விழைகிறேன்/

  மிகவும் மகிழ்ச்சி நண்பரே... தங்கள் தமிழ்ப்பணி போற்றுதற்குரியது...

  பதிலளிநீக்கு
 9. திரு குணா ,வணக்கம். என் பெருமதிப்பிற்குரிய பேராசான் வ.சு.பவின் நடை இன்பத்தில் மீண்டும் சிறிது நேரம் மிதக்க விட்டமைக்கு நன்றி.
  எம்.ஏ.சுசீலா

  பதிலளிநீக்கு
 10. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முனைவரே....

  பதிலளிநீக்கு
 11. இக்கட்டுரை இளமை விகடனிலும்,
  உலகத்தமிழ் எழுத்தாளர்கள் இணையதளத்திலும்
  http://www.tamilauthors.com/01/45.html
  வெளிவந்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...........

  பதிலளிநீக்கு