செவ்வாய், 7 ஜூலை, 2009

நெடுவெண்நிலவினார்இவ்விடுகை என்னும் கால எந்திரம் உங்களை சங்க காலத்துக்கு அழைத்துச் செல்கிறது........

சங்கப் புலவர் ஒருவருக்கு “நெடுவெண்நிலவினார்“ என்று பெயர் உள்ளது. இது இவரின் இயற்பெயர் இல்லை. இவர் பாடலில் கையாண்ட தொடரால் பெற்ற பெயராகும். இப்பெயருக்கான காரணத்தை ஆய்வதாக இவ்விடுகை அமைகிறது.

47. குறிஞ்சி - தோழி கூற்று

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.


-நெடுவெண்ணிலவினார்.இப்பாடலில் தோழி நிலவைப் பார்த்துப் பேசுகிறாள்..அதனால் இப்புலவர் நெடுவெண்நிலவார் என்று பெயர் பெற்றார்.

(நிலவு பேசாது.....
பேசினால் என்ன பேசும் என்பது இப்பாடலின் புரிதலுக்காக் கையாண்ட கற்பனை....)


சூழலில் உள்ள மாந்தர்கள்( மக்கள் )

தலைவன், தலைவி, தோழி, நிலவு.தலைவனைப் பார்த்துத் தோழி நீ காதலித்தது போதும் திருமணம் செய்து கொள் என்கிறாள் ....
இதனை நேரிடையாகத் தலைவனிடம் கூறாமல் நிலவிடம் கூறுகிறாள் அதனால் இப்புலவருக்கு நெடுவெண்நிலவினார் என்னும் பெயர் வந்தது
இனி பாடலுக்குச் செல்வோம்.....


(இரா வந்து ஒழுகுங்காலை முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது)

களவுக் காலத்தில் தலைவன் இரவுக்குறியில் வந்து தலைவியைச் சந்தித்து மகிழ்கிறான். வரைந்து ( திருமணம் ) கொள்ள முயலவில்லை. இந்நிலையில் தலைவன் கேட்ப நிலவைப் பார்த்துத் தோழி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது. தலைவன் அருகில் இருந்தாலும் அவனிடம் நேரிடையாக உரைக்காமல் நிலவிடம் உரைக்கிறாள் தோழி.

தோழி : நெடும் பொழுது ஒளி வழங்கும் வெண்ணிலாவே, நீ தலைவனின் களவு வாழ்வுக்கு நன்மை செய்யவில்லை. தீமைதான் செய்கிறாய்..

நிலவு : என்ன நான் தீமை செய்கிறேனா? நான் யாவருக்கும் பொதுவாகத் தானே ஒளி வழங்குகிறேன்.....

தோழி : நீ பொதுவாகத் தான் ஒளி வழங்குகிறாய் ஆனால் உன் ஒளி காதலிப்பவர்களுக்குத் துன்பமும், திருமணம் செய்து வாழ்வோருக்கு இன்பமும் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா?

நிலவு : அப்படியா......? எனக்கு புரியவில்லையே .....
இன்னும் விளக்கமாகச் சொல்வாயா?

தோழி :சரி இன்னும் விளக்கமாகவே சொல்கிறேன்.
கரிய அடிப்பகுதியைக் கொண்ட வேங்கை மரத்தின் மலர்கள் பாறையில் உதிர்ந்து கிடக்கும். அதனை இரவில் நிலவொளியில் காணும் போது புலியின் குட்டிபோல இருக்கும். இத்தகைய கொடிய காட்டிலும் தலைவன், தலைவியிடம் இன்பம் நுகர்தலே நோக்கமாகக் கொண்டமையால் அச்சமின்றி வருகிறான். உன் ஒளி தலைவனுக்கு, ஒருவகையில் அச்சத்தையும்,ஒருவகையில் அச்சமின்மையையும் வழங்குகிறது..

நிலவு : அப்படியா?

தோழி :ஆம்,
சாதாரணமான வேங்கை மலர்கள் புலிபோலக் காட்சியளிப்பதால் தலைவனுக்கு அச்சம் ஏற்படுவதுண்டு.
உன் ஒளியின் துணையால் பாதை தெளிவாகத் தெரிவதால் வேறு பயமின்றி வந்து செல்கிறான்..
உன்னை நினைத்தால் எனக்குக் கோபமாக வருகிறது.

நிலவு :ஏன்? நான் என்ன தவறு செய்தேன்...

தோழி : காதலர்கள் ஊருக்குத் தெரியாது இரவுக் குறியில் சந்திக்கிறார்கள். நீயோ உனது ஒளியில் அவரிகளின் சந்திப்பை காட்டிக் கொடுத்து விடுகிறாயே....

நிலவு : என்ன சொல்கிறாய்...?

தோழி :ஆமாம் ஊரில் எல்லோரும் தூங்கிவிட்டார்கள். தலைவியின் அருகிலேயே இருக்கும் தாயும் தூங்கிவிட்டாள். ஓயாது குரைத்துக்கொண்டிருக்கும் நாயும் தூங்கிவிட்டது. ஆனால் நீ மட்டும் தூங்காது விழித்துக் கொண்டிருந்தாய். அதனால் அவர்களின் காதல் ஊருக்கு வெளிப்பட நீயும் ஒரு காரணமானாய்.
மேலும் உன் ஒளியின் துணையால் தலைவன் தடையின்றி தலைவியைச் சந்தித்து காதலித்து மகிழ்கிறான். காதலுக்கு இடையூறு இல்லாமையால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லாமல் இருக்கிறான். இவை எல்லாவற்றுக்கும் காரணம் நீ தான்..

நிலவு : அப்படியா? எனது வருகை யாருக்கும் நன்மையே செய்யவில்லையா?

தோழி : ஏன் ? கற்பு நெறியில் திருமணம் செய்து வாழ்வோருக்கு உன் ஒளி மிகவும் மகிழ்வளிப்பதாகவே உள்ளது.

நிலவு : அப்படியா மகிழ்ச்சி...
சரி எனது வருகையும், எனது ஒளியும் ஒருவருக்கு நன்மையும், ஒருவருக்குத் தீமையும் செய்வதாக நீ கூறுகிறாய்...
நான் என்ன தான் செய்யட்டும்....
வரவா? வேண்டாமா?

தோழி : நீ வராமல் இருந்தால் என்னாவது...
நீ என்ன செய்வாய் பாவம்...
ஏதோ நான் தலைவியின் துயரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் என் மனக்குறையை எல்லாம் உன்னிடம் கொட்டித் தீர்த்துவிட்டேன்.....
திருந்த வேண்டியவன் தலைவன் தான்...
அவனுக்குத் தான் தெரியவேண்டும்..
களவு வாழ்வை விட கற்பு வாழ்வே சிறந்தது என்று....
ஊருக்குத் தெரியாது மறைந்து நிலவின் உதவியுடன் இரவுக்குறியில் தலைவியைச் சந்தித்து காதலித்து வாழ்வதை விட, ஊரறிய மணம் புரிந்து நிலவின் பயன் கொண்டு வாழ்வதே மேலென்று..... உணரவேண்டியவன் தலைவன் தான்.....

இப்பாடலில் நிலவிடம் இப்படியொரு உரையாடல் நடத்தியமையால் இப்புலவருக்கு நெடுவெண்நிலவினார் என்றே பெயர் வந்தது.

21 கருத்துகள்:

 1. தோழி : நெடும் பொழுது ஒளி வழங்கும் வெண்ணிலாவே, நீ தலைவனின் களவு வாழ்வுக்கு நன்மை செய்யவில்லை. தீமைதான் செய்கிறாய்..

  நிலவு : என்ன நான் தீமை செய்கிறேனா? நான் யாவருக்கும் பொதுவாகத் தானே ஒளி வழங்குகிறேன்.....

  தோழி : நீ பொதுவாகத் தான் ஒளி வழங்குகிறாய் ஆனால் உன் ஒளி காதலிப்பவர்களுக்குத் துன்பமும், திருமணம் செய்து வாழ்வோருக்கு இன்பமும் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா?

  நிலவு : அப்படியா......? எனக்கு புரியவில்லையே .....
  இன்னும் விளக்கமாகச் சொல்வாயா?//

  நல்ல உரையாடல் நண்பரே!!

  பதிலளிநீக்கு
 2. //நீ பொதுவாகத் தான் ஒளி வழங்குகிறாய் ஆனால் உன் ஒளி காதலிப்பவர்களுக்குத் துன்பமும், திருமணம் செய்து வாழ்வோருக்கு இன்பமும் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா?//

  திருமணமானவரைக்கூட அவரவர் காதலித்த காலத்துக்கு கொண்டு செல்லும் கருத்து மிக்க சத்தியமான வார்த்தை.

  “நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா, இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா” என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. என் திருமணத்துக்கு முதல் நாள், இப்பாடலை நான் பாடியதும் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 3. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ
  நண்பரே...........

  பதிலளிநீக்கு
 4. முனைவருக்கே உரித்தான அழகிய எழுத்து நடை

  பதிலளிநீக்கு
 5. பாடலும் அதற்கான விளக்கமும் மிகவும் நன்று. கட்டணமில்லாமல், இருந்த இடத்திலிருந்து கொண்டே தமிழை இனிமையாக கற்பிக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி தோழரே...

  பதிலளிநீக்கு
 6. “நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா, இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”

  இந்த பாடலும் அங்கேர்ந்துதான் உருவியிருக்கலாம்... உருமாறியிருக்கலாம்...

  பதிலளிநீக்கு
 7. கருத்துரைக்கு நன்றி அன்புமணி.....
  \“நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலாஇ இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”இந்த பாடலும் அங்கேர்ந்துதான் உருவியிருக்கலாம்... உருமாறியிருக்கலாம்.../

  தங்களது ஆர்வம் குறித்து மகிழ்ச்சி........
  இப்பாடலில் அருகேயே தலைவன் இருக்கிறான்....
  ஆகையால் இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”

  என்று பாடியிருக்கமுடியாது....
  இருந்தாலும் இன்று வழங்கும் பல திரைப்படப் பாடல்களுக்கும் சங்கப் பாடல்கள் தான் மூலம் என்பது இனிவரும் பகுதிகளில் விளக்குகிறேன்...
  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.......

  பதிலளிநீக்கு
 8. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் தமிழ் இலக்கியப்பணியினை பாராட்டுகிறேன். உங்கள் பதிவுகளை ஓரிரு நாட்களாக வாசித்து முடித்த சந்தோசத்தோடு இருக்கிறேன்.

  அதுமட்டுமல்ல ஏனைய நண்பர்களோடும் இதனை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். உங்கள் வலைப்பதிவினைப்பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன். எனது வலைப்பதிவினை ஒரு தடவை வந்து பாருங்கள்...

  உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. தங்கள் பதிவினைப் பார்வையிட்டு மகிழ்ந்தேன்...
  http://shanthru.blogspot.com/2009/07/blog-post_07.html

  எனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு நனி நன்றி.......

  பதிலளிநீக்கு
 10. முனைவர். இரா.குணசீலன் அவர்களே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் வந்து தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 11. உங்களின் தமிழ்நடை அருமை. இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழை வளர்க்க முனைந்த முனைவர் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

  எல்லாப்பாடல்களும் பள்ளி, மற்றும் கல்லூரி நாட்களோடு கரைந்துவிட்டன. மீண்டும் உங்கள் முலம் தெரிந்துகொள்ள ஒரு வழிபிறக்கிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 12. முனைவர். இரா.குணசீலன் அவர்களே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் வந்து தொடருங்கள்.../

  மிக்க மகிழ்ச்சி வருகிறேன்...

  பதிலளிநீக்கு
 13. /உங்களின் தமிழ்நடை அருமை. இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழை வளர்க்க முனைந்த முனைவர் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

  எல்லாப்பாடல்களும் பள்ளி, மற்றும் கல்லூரி நாட்களோடு கரைந்துவிட்டன. மீண்டும் உங்கள் முலம் தெரிந்துகொள்ள ஒரு வழிபிறக்கிறது. நன்றி./
  கருத்துரைக்கு நன்றி பாலாஜி

  பதிலளிநீக்கு
 14. //களவு வாழ்வை விட கற்பு வாழ்வே சிறந்தது என்று....
  ஊருக்குத் தெரியாது மறைந்து நிலவின் உதவியுடன் இரவுக்குறியில் தலைவியைச் சந்தித்து காதலித்து வாழ்வதை விட, ஊரறிய மணம் புரிந்து நிலவின் பயன் கொண்டு வாழ்வதே மேலென்று..... உணரவேண்டியவன் தலைவன் தான்.....//


  - அற்புதம். அற்புதம். எங்கே அய்யா இவ்வளவு அழகிய பாடல்களைக் கண்டுபிடிக்கிறீர். முதலில் உமக்கு சுற்றிப்போடவேண்டுமய்யா முனைவரே!.

  நெடுவெண்நிலவினார் என் நெஞ்சை விட்டு ஒருநாளும் நீங்கார். நீரும்தான் அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் தமிழ் மீது கொண்ட பற்றாலும் இலக்கியம் மீது கொண்ட காதலாலும் எனது சாதரணமான இடுகைகள் கூட பெருமதிப்புடையனவாக மாறிப்போகின்றன நண்பரே..

   நன்றிகள் பல.

   நீக்கு
 15. நிலவுடன் உரையாடி நெடுவெண் நிலவினார் என்ற பெயர் பெற்ற புலவர் பற்றி இன்று அறிந்து கொண்டேன். நிலாவுடனான அவர் உரையாடல் அற்புதம்! நன்றி முனைவரையா!

  பதிலளிநீக்கு
 16. முனைவர் உங்களிடம் பிடித்த ஒரு விஷயம்
  நீங்கள் எழுதும் சங்க இலக்கிய பாடல்களும் அதன் அர்த்தங்களும் தான்

  சங்கப் பாடலும் அதன் அர்த்தமும்
  அழகிய நிலா உரையாடலும் அருமை அருமை

  தொடர்ந்து தருக

  பதிலளிநீக்கு