Sunday, September 4, 2011

சிரிக்காதீங்க.!!


புராணச் செய்தி.

இமைய மலையை வில்லாக வளைத்தவனும், கங்கையைத் தலைமேல் கொண்டவனுமான சிவன் உமையம்மையுடன் உயர்ந்த இமைய மலையிலே இருந்தான்...
அப்போது, பத்து தலைகளைக் கொண்டவனான இராவணன் இமைய மலையை எடுப்பதற்காகக் கையை மலையின் கீழே செருகி தொடியழகு பெற்ற தம் கைகளால் தூக்க முயன்றான். சிவன் தம் பெருவிரலால் அழுத்த, இராவணனும் அம்மலையைத் தூக்க இயலாது வருந்தினான்.தம் விரல்கள் மலையில் சிக்கிக் கொள்ள எடுக்கஇயலாது பெருந்துன்பம் கொண்டான்.

நகைச்சுவை.

இராவணன் வருந்தியமைபோல, புலியைப் போல வடிவம் கொண்ட வேங்கைமலர் மிகுதியாக மலர்ந்துள்ளமை கண்ட மதம் கொண்ட யானை, வேங்கை மரத்தின் அடிப்பகுதியைக் குத்தியது. அப்போது அந்த யானையின் தந்தங்கள் வேங்கை மரத்தில் மாட்டிக்கொண்டன. தம் தந்தங்களை எடுக்க இயலாது வருந்திய யானை எழுப்பிய ஒலி நீண்டு உயர்ந்த மலைப்பகுதிகளில் எல்லாம் எதிரொலிக்கும்.

தோழி தலைவனிடம் சொல்கிறாள்..

இத்தகைய மலைநாடனே!

1.உன்னைக் காணாதபோது தலைவி நீரில்லாத நிலம்போலப் பொலிவழிந்து காட்சியளித்தாள்!
அரிய இடம் என்றும் கருதாது நீயும் கொடிய பாம்புகளுக்கும் அஞ்சாதவனாய் அவளைக் காண வந்தாய், அப்போது,
விடியற்காலத்து மழை பெய்ய அந்நிலத்துப் பயிர் போல அழகுபெறத் திகழ்ந்தனள்!

இத்தகைய அழகு இவளை இனி நீங்காதவாறு நிலைபெற்று நிற்கும்படி எதுவும் காக்கும் வழி இருந்தால் நீயே கூறுவாயாக!

2.உன்னைக் காணாதபோது கைப் பொருள் இல்லாதவன் இளமைபோலப் பொலிவழிந்தவளாகக் காட்சியளித்தாள்!

நீயும் இரவுக்கும் வழித்துன்பங்களுக்கும் அஞ்சாது அவளைக் காண வந்தாய்.. அவளும்..
விடியற்காலத்தில் அருள் பெற்றவன் ஆக்கத்தைப் போல அழகு பெற்றுத் திகழ்ந்தாள்!

இவ்வாறு பெற்ற அழகை புறம்கூறும் மாக்களிடமிருந்து காப்பதற்கு உரிய ஒரு பொருள் உண்டெனில் அதை எங்களுக்குத் தெரிவிப்பாயாக..?

3.உன்னைக் காணாதபோது, அறநெறியைப் பின்பற்றாமல் மூப்பினை எய்தியவன் மறுமைச் செல்வத்துக்கு வருந்தி, ஏங்கி நின்றமைபோல இருந்தாள் தலைவி!
நீயோ கொடிய கானவர்களுக்கும் அஞ்சாது அவளைக் வந்து பார்த்தாய்! அதனால் அவளும் செல்வம் நிறைந்தவளாக அழகுபெறத் தோன்றினாள். இவள் இப்பொலிவோடு எப்போதும் தோன்ற அயலார் உரைக்கும் அலருக்கு முடிவுகட்டும் வழியெதுவும் இருந்தால் நீயே சொல்..?

உடன்பாடு

இவ்வாறு தலைவிபடும் துன்பங்களையும், துன்பம் நிறைந்த வழியில் தினம் தலைவன் வருவதையும், அதனால் தலைவி கொள்ளும் துன்பத்தையும் தலைவனுக்கு எடுத்துரைத்தாள் தலைவி. அதனால் மனம் மாறிய தலைவனும் இனியும் காலம் தாழ்த்தாது வேங்கை மலரும் காலத்தில் தலைவியை மணப்பதாக மனம் உடன்பட்டான். இதனை தலைவியிடம் தோழியும் மகிழ்வுடன் தெரிவித்தாள்.
பாடல் இதோ..


இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம்மலை
எடுக்கல்செல்லாது உழப்பவன் போல 5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும்
நாட! கேள்:
ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால், 10
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,
கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்
; அக் கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்;
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, 15
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்;
அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்;
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்;
அத் திருப் 20
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண்;
என ஆங்கு,
நின் உறு விழுமம் கூறக் கேட்டு,
வருமே, தோழி! நல் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி, 25
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே.

கலித்தொகை -38

(இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்பட்டு, தோழி தலைவியது நிலைமை கூறி,அவனை வரைவு கடாவ, அவன் வரை வருகின்றமை அறிந்த தோழி தலைவிக்கு வரைவு மலிந்து கூறியது)

தலைவியைச் சந்திப்பதற்காகத் தலைவன் இரவில் வந்து செல்கிறான். அப்போது தோழி, தலைவனை எதிரே கண்டு, தலைவியது நிலை பற்றி அவனிடம் கூறி விரைவில் அவளைத் திருமணம் செய்துகொள் என்று அறிவுறுத்தினாள். அவனும் திருமணம் செய்து கொள்ள உடன்பட்டான். அதனைத் தோழி தலைவியிடம் தெரிவிக்கிறாள்.

பாடல் வழியே..


1.தலைவன் திருமணத்துக்கு உடன்படுதல் (வரைவு மலிதல்) என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.

2.சிவன் - இராவணன் குறித்த புராணச் செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது.

3.நீரற்ற நிலம்போல
மழை பெற்ற புலம் போல

கைப் பொருள் இல்லாதவன் இளமைபோல
செல்வச் செழிப்புமிக்கவன் அழகுபோல

அறநெறியைப் பின்பற்றாதவன் மூப்பினைப்போல
செல்வப் பொலிவு கொண்டவன் போல

போன்ற தலைவியின் நிலைய உரைக்கும் உவமைகள் அழகுடையவனாகவும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் இன்பம் பயப்பனவாகவும உள்ளன.

4.புலியெனக் கருதிய யானை வேங்கை மரத்தைத் தாக்கித் தன் தந்தங்கள் சிக்கிக்கொள்ள வருந்தும் காட்சி படிப்போர் மனதில் பேதமை காரணமாக சிரிப்பை வரவழைக்கிறது.

5.குறிஞ்சி நில மக்கள் வேங்கை மலரும் காலத்தை திருமணம் செய்யும் காலமாகக் கொண்டிருந்தனர் என்னும் சங்ககால வழக்கத்தையும் இப்பாடல் வழியே அறியமுடிகிறது.


யானையின் செயலும்
தலைவியின் நிலையும் சிரிப்பை வரவழைப்பதாகவே இருந்தாலும்.

இரு உயிர்களும் படும் துன்பம் மனதை வருத்தம் கொள்ளச் செய்வதாகவே உள்ளது.

37 comments:

 1. தங்கள் ஒவ்வொரு பதிவும் இலக்கியச்சுவையுடன் மிளிர்கிறது முனைவரே..

  இலக்கியம் கற்கும் மாணவர்களுக்கு சிறந்த பாடங்கள்..

  நல்ல பதிவு

  ReplyDelete
 2. பின்னோட்டங்கள், ஓட்டு, ஹிட்ஸ் என்ற கிளுகிளுப்பு சமாச்சாரக்ஙள் போன்றவைகள் வர வில்லை என்று எப்போதும் உங்கள் சிந்தனையில் வரக்கூடாது. காரணம் மற்ற அணைவரும் அவரவர் திருப்திக்காக எழுதுகின்றோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வலைதளத்தில் உங்களின் பங்களிப்பு என்பது இன்னும் ஐந்து வருடங்கள் இதே தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தால் கூகுள் தேடு பொறியில் தேடிக் கொண்டு வரப்போகும் பலருக்கும் நீங்கள் ஒரு என்கைச்ளோபீடியா போல் இருப்பீங்க. அது வரைக்கும் உங்கள் கடமை இதே போன்று பணி செய்து கிடப்பதே. சரியா?

  ReplyDelete
 3. நல்ல விளக்கம் முனைவரே.

  நல்ல பாடல்களை எங்களுக்குப் பகிரும் உங்களுக்கு நன்றி...

  ReplyDelete
 4. பத்தாவது வகுப்பில் உக்காந்து ஆசிரியர் இல்லாமல் பாட புத்தகத்தை வைத்து படித்தது போல் இருந்தது... நீங்கள் பாடம் நடத்தி நேரடியாக உக்காந்து அதை ரசித்து உள்வாங்க முடியவில்லை என்ற வருத்தமும் வருகிறது..

  ReplyDelete
 5. அழகான இலக்கிய நயமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. நல்ல விளக்கங்களுடன் பதிவு நண்பரே

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. //புலியெனக் கருதிய யானை வேங்கை மரத்தைத் தாக்கித் தன் தந்தங்கள் சிக்கிக்கொள்ள வருந்தும் காட்சி //

  அழகிய காட்சி முனைவரே,
  புலவர்கள் தங்கள் கருத்தை ஏற்றிக் கூறுவார்கள்
  என்பதை படித்திருக்கேன்
  ஆனால் இவ்வளவு ஏற்றுவார்கள் என்பது
  நகைச்சுவையை ஊட்டியது
  ஆயினும் அதைச் சொன்ன விதம் அழகு.
  சங்கப் பாடல்களை நீங்கள் தொகுத்தளிக்கும் விதம்
  மனதை மகிழ்ச்சியுறச் செய்கிறது.
  நன்றி முனைவரே.

  ReplyDelete
 8. திரு ஜோதிஜி அவர்களின் கருத்துக்களையே நானும் பதிவு செய்கிறேன்.
  வாழ்த்துக்கள் ஐயா.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

  ReplyDelete
 9. அழகிய பாடல் சிறப்பான விளக்கம்.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 10. பல அருமையான பாடல்களை இலக்கிய நயம்பட விளக்கும் உங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 11. இலக்கிய பதிவு என்றும் சுவைதரும் இன்பமான பதிவு பாடல் விளக்கம் எல்லாம் அருமை வாழ்த்துக்கள்..>!

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு..தொடரட்டும் தங்கள் பணி

  ReplyDelete
 13. ~*~யானையின் செயலும்
  தலைவியின் நிலையும் சிரிப்பை வரவழைப்பதாகவே இருந்தாலும்.
  இரு உயிர்களும் படும் துன்பம் மனதை வருத்தம் கொள்ளச் செய்வதாகவே உள்ளது.~*~

  பட்ணத்தாரின் பாடல்களைப் போல மேலோட்டத்தில் சிரித்தாலும்., உள்ளூர கவலை(அர்த்தம்) சுமந்த வரிகள்..,

  பாடலும், அதற்கான விளக்கமும் மிக அருமை முனைவரே...

  திரு ஜோதிஜி அவர்களின் கருத்துக்களையே நானும் பதிவு செய்கிறேன்.
  வாழ்த்துகள் நண்பரே...

  ReplyDelete
 14. நன்றி ஜோதிஜி.
  தங்களைப் போன்றவர்களின் கருத்துரைகள் என்னை மேலும் கடமையுணர்வுடன் செய்ல்படச் செய்வனவாக அமைகின்றன.

  ReplyDelete
 15. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சூர்ய ஜீவா.

  இன்னொரு முறை படித்தால் உங்களுக்கே புரியும்.

  சங்க இலக்கியத்தில் சொல்லப்படாத காதலையோ, நீதியையோ இன்றைய திரைப்படப்பாடல்கள் சொல்லிவிடவில்லை நண்பரே..

  சற்று உற்று நோக்கினால் சங்க இலக்கியத்தில் நீங்களும் மனதைத் தொலைத்துவிடுவீர்கள்

  ReplyDelete
 16. கருத்துரைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 17. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி எம்ஆர்.

  ReplyDelete
 18. மகிழ்ச்சி இரத்தினவேல் ஐயா.
  இதேபோல தடம் மாறாமல் செல்கிறேன்

  நன்றி.

  ReplyDelete
 19. கருத்துரைக்கு நன்றி சென்னைப் பித்தன்.

  ReplyDelete
 20. கருத்துரைக்கு நன்றி நண்டு

  ReplyDelete
 21. கருத்துரைக்கு நன்றி தென்றல் சரவணன்.

  ReplyDelete
 22. தங்கள் தொடர் வருகைக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும்,
  தெளிவான கருத்துரைக்கும் நன்றி இராஜா எம்விஎஸ்

  ReplyDelete
 23. நீங்கள் தலைப்பில் சொன்னது போல் சிரிக்கவில்லை மாறாக சிந்திக்கவே தூண்டியது... நன்றி நண்பா வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
 24. "யானையின் செயலும்
  தலைவியின் நிலையும் சிரிப்பை வரவழைப்பதாகவே இருந்தாலும்.

  இரு உயிர்களும் படும் துன்பம் மனதை வருத்தம் கொள்ளச் செய்வதாகவே உள்ளது."
  உண்மைதான்

  ReplyDelete
 25. சங்கப் பாடல்களை சாமான்யரும் அறியும் வண்ணம் தெளிவாகவும், சுவைபடவும் விளக்கும் தங்கள் பணி மிகவும் போற்றுதற்குரியது. தொடரட்டும் தங்கள் வலையுலகச் சேவை.

  ReplyDelete
 26. மகிழ்ச்சி மாயஉலகம்
  நன்றி சின்னத்தூரல்
  நன்றி கீதா

  ReplyDelete