வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

அடிப்படைத் தேவை?
மனிதர்களுக்கு அடிப்படைத்தேவை உணவு, உடை, உறைவிடம்!

இவை நிறைவு செய்யப்பட்ட பின்தானே மற்றவை?

அடுத்தவேளை உணவில்லாதவனும்
மாற்று உடையில்லாதவனும்
இருக்க இடம் இல்லாதவனும்...

இந்த தொலைக்காட்சியையும், மின்விசிறியையும், மடிகணினியையும் வைத்துக்கொண்டு என்ன செய்வான்....?
அதற்காக..

அன்னதானம், இலவசம் என்ற பெயர்களில் மக்களை சோம்பேறிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் ஆக்கிவிடலாமா?

ஒரு அரசு இலவசப் பொருள்களைக் கொடுப்பது சிறப்பா??
அந்த இலவசப் பொருள்களை மக்கள் உழைத்துப் பெற வழிவகை செய்வது சிறப்பா?

சரி..

நமக்கு எதற்கு அரசியல்?

சங்ககாலம் ஏன் பொற்காலம் என்று வழங்கப்படுகிறது என்பதை நாம் பார்ப்போம்!
அதியன் மகன் பொகுட்டெழினி தன்னை நாடிக் கிழிந்த ஆடையுடன் வந்த பொருநனுக்கு முதலில் நல்ல ஆடை தந்தானாம்!
இதனால் தான் சங்க காலத்தைப் பொற்காலம் என்கிறார்களோ..!

பாடலுக்குச் செல்வோம்..

பொகுட்டெழினி
அதியமான் மகன் பொகுட்டெழினி ஆவான். இவன் அதியமான் உயிரோடிருக்கும்போதே தந்தைக்குத் துணையாய் நின்று அரசியலில் ஈடுபட்டிருந்தான்.அதியமானால் பெரிதும் ஆதரிக்கப் பெற்ற ஒளவையார் மீது எழினிக்கும் பேரன்புண்டு. அவனைப் பன்முறையும் பாடிப் பரிசில் பெற்றவர் ஒளவையார். ஒருநாள் அவர் பொகுட்டெழினியின் தகடூர்க்குச் சென்றிருந்தபோது...

பொகுட்டெழினி செய்த சிறப்பைப் பொருநன் ஒருவன் எழினியின்
பெருமனையின் முற்றத்தில் விடியற் காலையில் நின்று தன் ஒருகண் மாக்கிணை யென்னும் பறையைக் கொட்டி..
“பணிந்து திறைசெலுத்தாத பகைமன்னர்
அரண்களைக் கடந்து சென்று அவரை வென்று கழுதையேர் பூட்டி, வீழ்ந்த
வீரர் உடற்குருதி தோய்ந்து ஈரம்புலராத போர்க்களத்தை உழுது வெள்வரகும்
கொள்ளும் வித்தும் மறம்மிக்க வேந்தே, நீ வாழ்வாயாக” என்று பாடி
நின்றான்,
அப்பொழுதே பாசிபோற்பீறிக்கிடந்த அவனது உடையைக் களைந்து
நுண்ணூல் ஆடையொன்று தந்து , களிப்பு மிக்க தேள் கடித்ததுபோன்ற மயக்கம் தரும் தேறலைப் பொற்கலத்திற் பெய்து அவனும் அவனொடு போந்த அவன்
சுற்றத்தாரும் உண்டு மகிழும்படி விருந்து செய்தான். இவன் அமுத்தைப் போன்ற சுவையுடைய கரும்பைக் கடல்கடந்து கொண்டுவந்தோன் வழிப்பிறந்தவனல்லவா!!

என்று பாடுகிறார்.

மதியேர் வெண்குடை யதியர்கோமான்
கொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான்
பசலை நிலவின் பனிபடு விடியற்
பொருகளிற் றடிவழி யன்ன வென்கை
5 ஒருகண் மாக்கிணை யொற்றுபு கொடாஅ
உருகெழு மன்ன ராரெயில் கடந்து
நிணம்படு குருதி பெரும்பாட்டீரத்
தணங்குடை மரபி னிருங்களந் தோறும்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி
10 வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்
வைக லுழவ வாழிய பெரிதெனச்
சென்றியா னின்றனெனாக வன்றே
ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீ்க்கி நேர்கரை
15 நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத்
தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்
கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ
ஊண்முறை யீத்த லன்றியுங் கோண்முறை
விருந்திறை நல்கி யோனே யந்தரத்
20 தரும் பெற லமிழ்த மன்ன
கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே

புறநானூறு -392. அதியமான் மகன் பொகுட் டெழினியை
ஒளவையார் பாடியது.

பாடல் வழியே..

1. முழுமதி போன்ற வெண்கொற்றக் குடையை யுடைய அதியர் வேந்தன் என்னும் உவமை வெண்கொற்றக் குடைக்கு நிலவை உவமை சொல்வதாக உள்ளது.

2. பொருநன் என்னும் கலைஞன் கையில் உள்ள பறை (கிணை) போர்யானையின் அடிச்சுவடுபோல் வட்டமானது என்னும் உவமையும் அழகுடையதாக விளங்குகிறது.

3. பொருள் வேண்டி வந்தவர்களுக்கு முதலில் நல்ல உடைதருதல் என்ற அக்கால வழக்கத்தைப் பாடல் பதிவு செய்துள்ளது.

4. தன்னை நாடி வந்தவர்களுக்கு தேள்கடித்ததுபோன்ற மயக்கத்தைத்தரும் கள்ளை வழங்குதல்
அக்கால வழக்கம் என்பதையும் பாடல் வழி உணரமுடிகிறது.

5. கரும்பு என்னும் தாவரம் சங்ககாலத்திலேயே கடல்கடந்து கொண்டுவரப்பட்டது என்பதை உணர்த்தவும் தக்க சான்றாக இப்பாடல் விளங்குகிறது.

6. பணிந்து திறைசெலுத்தாத பகைமன்னர் அரண்களைக் கடந்து சென்று அவரை வென்று கழுதையேர் பூட்டி, வீழ்ந்த வீரர் உடற்குருதி தோய்ந்து ஈரம்புலராத போர்க்களத்தை உழுது வெள்வரகும் , கொள்ளும் வித்தும் மறம்மிக்க வேந்தே, நீ வாழ்வாயாக” என்று பாராட்டுவதன் வாயிலாக.. அக்காலத்தில் தோற்ற நாட்டின் நிலை என்ன என்பதை நன்கு உணர்ந்துகொள்ளமுடிகிறது.

7. சங்ககாலத்தில் வள்ளல்கள் கொடை கொடுத்தாலும் இலவசமாகக் கொடுத்து கலைஞர்களைப் பிச்சைக்காரர்களாக்காமல் அவர்களின் திறனுக்கேற்ப கலையை நுகர்ந்து அதற்கு இணையாகவே பரிசில் தந்தனர் என்பதையும் உணரமுடிகிறது.

32 கருத்துகள்:

 1. முனைவரே, இந்த குட்டு போதும்... பயங்கரமா வலிக்கும் ஆட்சியாளர்களுக்கு

  பதிலளிநீக்கு
 2. அந்த காலத்தில் மன்னர்களில் பெரும்பாலோர்,சுயநலம் இல்லாது இருந்தனர். இப்பொழுது அப்படியா?
  நல்ல் பாட்டு அருமையான விளக்கம்.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. இன்றைய அரசியலைக்கூட சங்க இலக்கியங்கள் எடுத்துரைப்பது தமிழின் இலக்கியங்களுக்கு கிடைத்த வெற்றி...  கருத்து மற்றும் பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 4. தன் ஆட்சியின் கீழ் இருக்கும் மக்களை சுயமாக பிழைக்க விடாமல் இலவசங்களை எதிர்பார்க்க வைக்கும் அரசுகள் இருக்கும் வரை தம் மக்கள் அடிமை தனத்தில் இருந்தும் ஏழ்மையில் இருந்தும் மீள்வது கடினம்தான்...

  பதிலளிநீக்கு
 5. தமிழையும், பழந்தமிழர் பண்பினையும் கரைத்து குடித்த கலைஞர் தான் - இலவசமென்னும் போதைக்கு அடிமையாக்கினார். என்று தணியும் இந்த போதை.

  பதிலளிநீக்கு
 6. மிகவும் சிறப்பான இலக்கிய பக்கங்கள் எனக்கு இலக்கியம் படிப்பது எனின் சோறு வேண்டாம் உறக்கம் வேண்டாம் தரமான இப்படிப்பட்ட இலக்கிய குறிப்புகள் மட்டும் கிடைத்தால் ... இலவசம் ஏன்? மகாபாரதத்தில் தருமன் சோறு போட்டன் துரியோதனன் எல்லோருக்கும் முறையான வேலை/ வாழ்வு அளித்தான் . கம்பர் குற்றமிலா அரசுடையவன் இரவனன்னு பாடுகிறார் ஆக அரச குற்றங்கள் மிகையாக மிகையாக இலவசங்கள் தொடரும்....

  பதிலளிநீக்கு
 7. கழக கண்மணிகளுக்கு சரியா டோஸ் குடுத்துருக்கீங்க ஹா ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
 8. நல்லரசின் தன்மை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டி விட்டீர்கள்.

  குடுக்கிறவன் குற்றவாளியே!

  குண்டுமணியளவு சொரணையின்றி
  வாங்கிக்கொள்ள அலைபவர்களை என்ன செய்ய?

  நன்மக்கள் எத்தகையவராக இருத்தல் வேண்டும் என்பதற்குரிய சங்கப்பாடலை நாளைய பதிவில் எதிர்ப்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. கேடு கெட்ட அரசியல்வாதிகள் எப்போ திருந்துவார்களோ அப்போ நாடு முன்னேறிடும்.

  பதிலளிநீக்கு
 10. அருமையான பகிர்வு மிக்க நன்றி பகிர்வுக்கு .....
  தமிழ்மணம் 8

  பதிலளிநீக்கு
 11. அந்தக் காலத்தில் புலவர்களின் திறனுக்கேற்ற பொருள் தந்து பெருமைபடுத்தினர். கவிஞர்களின் பா நுகர்ந்து பெற்ற பொருட்கள் இலவசங்களல்ல என்றும் தற்போதைய அரசின் அள்ளிவிடும் இலவசங்கள் மக்களை எத்தகைய பிச்சைக்கரார்களாக்கி வைத்திருக்கிறது என்பதையும் அருமையாக சொல்லில் வடித்தீர்கள் முனைவரே மிகவும் நேர்த்தியான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 12. நாளும் தருவது நல்லபதிவே
  நற்றமிழ் வளர்க்கும் நற்பணியிதுவே
  ஆளுமரசுக்கும் ஆணட‍ அரசுக்கும்
  அளித்தீர்இலவச ஆலோசனைப் பதிவே
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 13. படித்துப் பார்த்துப் பெருமூச்சு விட வேண்டியதுதான்.
  நன்று,நன்றி.

  பதிலளிநீக்கு
 14. நிறம் மாறும் எழுத்துக்கள் அரசியல்வாதிகளுக்கு ஏற்றவாறு உள்ளது!
  ஆனால் எத்துணை திறம் இருக்கிறதோ அதற்க்கேற்றவாரு சங்க காலத்தில் பரிசில்கள் கொடுக்கப்பட்டுள்ளது அழகானது!
  சங்க இலக்கியங்கள் படித்தாலும்(!) படிக்காவிட்டாலும் இன்றைய அரசியல் வாதிகளுக்குப் புரியாது!

  பதிலளிநீக்கு
 15. நல்லா சொன்னீங்க.பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 16. அக்கால அரசியலை, இக்கால அரசியலுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துகள். ஆனால், அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி புலவர்கள் மன்னரின் போர் வலிமையை மிகைப்படுத்திப் புகழ்ந்து பாடியதனால்த் தானோ என்னவோ இன்றும் வீரம் பொதிந்த தமிழர் என்று இரத்தம் படிந்த வாளுக்கு மதிப்பைக் கொடுக்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு
 17. பொகுட்டெழினி பற்றி படிக்கும் காலத்தில் ஆசிரியர் சொல்லக் கேட்டிருக்கிறேன்..முனைவரே..

  இவ்வளவு விரிவாக உங்கள் பதிவின் மூலம் அழகாக புரிய வைத்திருக்கிறீர்கள்...

  ஆள்பவர்களுக்கான இலக்கணம் இது...

  அடிப்படை தேவையறிந்து
  அதை அமைத்துக்கொடுப்பதே
  சிறந்த ஆளுமைக் குணம்...
  தெளிந்து நடைபோடுங்கள் ஆள்வோரே...

  பதிலளிநீக்கு
 18. உணர்ந்தால் மகிழ்ச்சி ஜீவா

  மகிழ்ச்சி நண்டு

  நன்றி இராம்வி

  எக்காலத்துக்கும் பொருந்தும் தன்மையுடன் இருப்பதுதான் சங்க இலக்கியத்தின் சிறப்பு சௌந்தர். புரிதலுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 19. அரசியல்வாதிகளைப் பொருத்தவரை தமிழ் ஓட்டுக் கேட்கும் கருவி அவ்வளவுதான் தமிழ் உதயம்.

  வருகைக்கு நன்றி கருன்.

  மகிழ்ச்சி மாலதி

  கருத்துரைக்கு நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 20. தங்கள் எதிர்பார்த்தலுக்காக..

  நீங்கள் வாழ்வது நாடா என்ற இடுகையைக் காண அன்புடன் தங்களை அழைக்கிறேன் சத்ரியன்.

  http://gunathamizh.blogspot.com/2009/09/blog-post_10.html

  பதிலளிநீக்கு
 21. இதெல்லாம் நடக்குமா காந்தி?

  நன்றி இராஜா

  நன்றி அம்பாளடியாள்

  புரிதலுக்கு நன்றி கடம்பவனக் குயில்

  கருத்துரைக்கு நன்றி புலவரே..

  பதிலளிநீக்கு
 22. உண்மைதான் சென்னைப்பித்தன் ஐயா..

  நன்றி மாய உலகம்

  உண்மைதான் தென்றல்

  நன்றி சதீஷ்

  பதிலளிநீக்கு
 23. உண்மைதான் சந்திர கௌரி.

  புரிதலுக்கு நன்றி மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 24. சங்ககாலத்தில் வள்ளல்கள் கொடை கொடுத்தாலும் இலவசமாகக் கொடுத்து கலைஞர்களைப் பிச்சைக்காரர்களாக்காமல் அவர்களின் திறனுக்கேற்ப கலையை நுகர்ந்து அதற்கு இணையாகவே பரிசில் தந்தனர்....
  - அழகா சொல்லிருகிங்க..
  நன்றி சகோ...

  பதிலளிநீக்கு
 25. தங்கள் புரிதலுக்கு நன்றி சி்ன்னத்தூரல்

  பதிலளிநீக்கு