Friday, September 9, 2011

மனிதன் இறந்தபின்னா வாழ்கிறான்..?


வாடிய மானிட மலருக்காக
எத்தனை மலர்கள் வாடிப்போகின்றன
அம்மலர் சென்ற பாதையில்..!

மானிட மலரால் முகம் மலர்ந்த
எத்தனை உள்ளங்கள் நொந்துபோகின்றன
அவ்விதழ் அசையா நிலையில்..!

கண்டும் காணாமல் சென்றவரெல்லாம்
கடைசி முறை என்று
கண்சிமிட்டாமல் கணை தொடுத்தனர்..!

இனி நிசத்தைக் காணமுடியாதே
நிழலும் கானல் நீரென்று
கண் கலங்கி நின்றனர்!

மனிதனாகப் பிறப்பெடுத்தவன்
தெய்வத்தோடு கலந்துவிட்டான்
அதனாலே தீப வழிபாடோ..!

கந்தல் ஆடை உடுத்தி தினம்
காலம் கழித்த இவனுக்கோ
தெருக்கோடி சென்றபின் துணி.. கோடி..!

அவன் இருக்கும் போது..
உறவுக்கு
உபசரிக்க நேரமில்லை
உதிரிந்தபின் ஏனோ அன்பு...!

அவன் வயிறு நிறைய
உண்டதில்லை ஒருநாளும் – இன்று
அவன் புகைப்படம் முன்பு ஏனோ – அறுசுவை உணவு...!

மூன்றடி ஆழத்தில் புதைத்துவிட்டு
சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்பான் என்றார்கள்..

மறைந்தபின் கிடைத்ததெல்லாம்
வாழும்போதே கிடைத்திருந்தால்
வாழ்ந்த வாழ்வே சொர்க்கம் அன்றோ..??????


(ச.கேசவன்
இயற்பியல் - இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு)

34 comments:

 1. //கந்தல் ஆடை உடுத்தி தினம்
  காலம் கழித்த இவனுக்கோ
  தெருக்கோடி சென்றபின் துணி.. கோடி..!

  அவன் இருக்கும் போது..
  உறவுக்கு
  உபசரிக்க நேரமில்லை
  உதிரிந்தபின் ஏனோ அன்பு...!//

  அன்பு மாணவர் கேசவன்
  கரம்கூப்பி வணங்குகிறேன்.
  என்ன ஒரு சமுதாய சாடல்!!!
  இருக்கையிலே ஏன் இருக்கிறார் என்பது போல
  செயல்புரிந்து மண்புதைந்து போனதும்
  அவர் பரக்கிராம புராணம் பாடுவோர் ஆயிரம்.

  உயிர் இருக்கையிலே
  உண்டி கொடுங்கள்
  செத்த பின் கோடி கொடுக்காதீர்!!

  அன்புநிறை முனைவரே,
  இதுபோன்று மாணவர்களின் திறமையை
  வெளிக்கொணர நீங்கள் செய்யும் செயல்கள்
  என் கல்லூரி பேராசிரியர்களை நினைவுக்கு
  கொண்டுவருகிறது....

  வளர்க நின் பணி
  வாழிய நீவீர் பல்லாண்டு

  மாணவ கேசவரே
  நின் புகழ் செழித்தோங்க
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. //மூன்றடி ஆழத்தில் புதைத்துவிட்டு
  சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்பான் என்றார்கள்....//

  அதானே!

  மனித்தத்தை உசுப்பும் ஓர் உயரிய கவிதை.

  (கவிஞருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.)

  ReplyDelete
 3. உங்கள் மாணவரா..?! நல்ல கவிதை..!! :)

  ReplyDelete
 4. நல்ல கவிதை... இருக்கும்போது செய்ய மறக்கும் பல விஷயங்கள் இறந்த பின் செய்கிறார்கள்....

  ReplyDelete
 5. //அவன் இருக்கும் போது..
  உறவுக்கு
  உபசரிக்க நேரமில்லை
  உதிரிந்தபின் ஏனோ அன்பு...!//

  இருக்கும்போது அன்பு காட்டாமல் இறந்த பின்பு பொய் வேஷம் போடும் மக்களை தோலுரித்த வரிகள். அருமை. வாழ்த்துக்கள் கேசவன்.

  ReplyDelete
 6. //மறைந்தபின் கிடைத்ததெல்லாம்
  வாழும்போதே கிடைத்திருந்தால்
  வாழ்ந்த வாழ்வே சொர்க்கம் அன்றோ..??????//

  கண்டிப்பாக, இருக்கும் போது செய்யாமல் இறந்த பின்பு அவர்களுக்கு பிடித்ததையெல்லாம் படையல் வைத்து கும்பிடுவது முட்டாள்த்தனம் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். வாழ்த்துக்கள் கேசவன்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி முனைவரே.

  ReplyDelete
 7. "வாழ்வதற்காக சாகும் நீ
  செத்த பிறகும் வாழ பார்.."
  என்ற கவிதை வரிகள் என் மனதில் சென்று போனதை மறுப்பதற்கில்லை..

  ReplyDelete
 8. மனம் கனக்கும் உண்மைகள்

  ReplyDelete
 9. மறைந்தபின் கிடைத்ததெல்லாம்
  வாழும்போதே கிடைத்திருந்தால்
  வாழ்ந்த வாழ்வே சொர்க்கம் அன்றோ..??????//
  உண்மையான வரிகள்..
  பாராட்டுகள் அந்த மாணவருக்கும்+ உங்களுக்கும்

  ReplyDelete
 10. //
  கண்டும் காணாமல் சென்றவரெல்லாம்
  கடைசி முறை என்று
  கண்சிமிட்டாமல் கணை தொடுத்தனர்..!

  //

  அருமையான வரிகள்

  ReplyDelete
 11. சொர்கம் நரகம் என்பதெல்லம் நாம் இவ்வுலகத்தில் அனுபவிக்கும் சுகதுக்கம் தான். இருக்கும் போது கவனிக்காமல் இறந்த பின் எதற்கு இத்தனை ஆற்பாட்டம்.
  மிக அருமை.
  தங்கள் மாணவருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. மனம் கவர்ந்த கவிதை வரிகள் குணசீலன்...

  உண்மையேப்பா....

  அன்பின் மகத்துவத்தை உயிருடன் இருந்தபோதே பகிர்ந்திருந்தால் அந்த அன்பை அவன் அனுபவித்து அகமகிழ்ந்து சொர்க்கத்தை அறிந்திருப்பானே என்ற ஏக்க உணர்வோடு முடித்த கவிதை வரிகள் அசத்தல்பா...

  உயிரோடு இருந்தபோது அன்புடன் அரவணைத்து உணவு தந்து கரிசனத்துடன் இருந்திருப்பதை மக்கள் மறந்து அல்லது மறுத்து மரித்தப்பின் வைக்கும் படையல்கள் அவர்களையே சென்றடைகிறது என்பது எத்தனை தூரம்நிஜம்? அருமை அருமைப்பா வரிகள்....

  அன்பு வாழ்த்துகள் குணசீலா.....

  ReplyDelete
 13. நீங்க ரசித்த பகிர்வை எங்களுக்கு பகிர கொடுத்தமைக்கு அன்பு நன்றிகள் குணசீலா...

  கவிதை வரைந்த கேசவனுக்கு என் அன்பு வாழ்த்துகள்...

  ReplyDelete
 14. மறைந்தபின் கிடைத்ததெல்லாம்
  வாழும்போதே கிடைத்திருந்தால்
  வாழ்ந்த வாழ்வே சொர்க்கம் அன்றோ../

  இருக்கும்போது எட்டிப்பார்ப்பவர் யாருமில்லை!
  இறந்தபின்னர் எட்டிப்பார்க்காதவர் யாருமில்லை!!

  ReplyDelete
 15. உயிரோடு இருக்கும்போது ஊத்தம்மாட்டான் பால.... கால நீட்டி படுத்துக்கிட்டா எவ்வளவு பெரிய மால ... நம் ஆட்கள் காலம் கடந்து தான் செய்வார்கள் நண்பரே... அருமையாக சொல்லியுளீர்கள்

  ReplyDelete
 16. அவன் இருக்கும் போது..
  உறவுக்கு
  உபசரிக்க நேரமில்லை
  உதிரிந்தபின் ஏனோ அன்பு...!//  இதை நான் நேரில் பல மனிதர்களை பார்கிறேன் இப்படி...!!!

  ReplyDelete
 17. தமிழ்மணம் எட்டு குத்தியாச்சி...

  ReplyDelete
 18. மாணவ பருவத்திலேயே நல்ல சமூக சிந்தனை மற்றும் மனிதநேயம் பாராட்டத்தக்கது. மானுடம் இன்னும் சாகவில்லை.....இளைய தலைமுறையில் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை பார்க்கயில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  ReplyDelete
 19. தலைப்புக்கேற்ற அருமையான கவிதை
  சொல்லிச் செல்லும் விதம் அருமை
  தங்கள் நிழல் தொடரும் கேசவனுக்கு மனமார்ந்த வாழ்த்து
  தொடர வாழ்த்துக்கள் த.ம 8

  ReplyDelete
 20. அவன் வயிறு நிறைய
  உண்டதில்லை ஒருநாளும் – இன்று
  அவன் புகைப்படம் முன்பு ஏனோ – அறுசுவை உணவு...!

  நிஜம் தான்.

  ReplyDelete
 21. //மனிதனாகப் பிறப்பெடுத்தவன்
  தெய்வத்தோடு கலந்துவிட்டான்
  அதனாலே தீப வழிபாடோ..!

  கந்தல் ஆடை உடுத்தி தினம்
  காலம் கழித்த இவனுக்கோ
  தெருக்கோடி சென்றபின் துணி.. கோடி..!//

  மனிதர்கள் இருக்கும் வரை யாரும் மதிப்பதில்லை.
  இறந்தபின் மதித்து என்ன பயன் ?

  ஆழமான சிந்தனைப்ப்திவு
  நன்றி நண்பரே..

  நட்புடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 22. //அவன் வயிறு நிறைய
  உண்டதில்லை ஒருநாளும் – இன்று
  அவன் புகைப்படம் முன்பு ஏனோ – அறுசுவை உணவு...!//

  அருமையான வரிகள்... எதார்த்தத்தை சுமந்த கவிதை வரிக்கு வரி அருமை.
  கவிதை எழுதிய திரு.கேசவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுக்காது, இறந்தபிறகு திவசத்திற்கு படையல் இடும் பாதகர்களுக்கு உறைக்கும்படி எழுதிய மாணவர் கேசவனுக்கு என் வாழ்த்துக்கள். மாணவர்திறமையை ஊக்குவிக்கும் ஆசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 24. மூன்றடி ஆழத்தில் புதைத்துவிட்டு
  சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்பான் என்றார்கள்..

  மறைந்தபின் கிடைத்ததெல்லாம்
  வாழும்போதே கிடைத்திருந்தால்
  வாழ்ந்த வாழ்வே சொர்க்கம் அன்றோ..??????

  இருக்கும்போது எதனுடைய அருமையும்
  தெரிவதில்லை .இறந்தபின் படைக்கும்
  இந்த உணவுக்கு அர்த்தமும் புரிவதில்லை .
  ஒருவேளை இதைச் செய்யாதுபோனால்
  செத்தவன் ஆவியாய் வருவான் என்று பயமாகவும்
  இருக்கலாம்.ஓர் நகைச்சுவைக்காகச் சொன்னேன் .
  மிக்க நன்றி மனிதன் செய்யும் மிகப்பெரிய தவறு
  ஒன்றினை இந்தக் கவிதைவரிகள் உணர்த்தி நிற்பது அருமை!..உங்கள் வரவுக்காக என் கவிதை காத்திருக்கின்றது .பகிர்வுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றி ...........

  ReplyDelete
 25. எனது மூன்று ஓட்டுக்களும் போட்டுவிட்டேன் ......

  ReplyDelete
 26. மாணவர்களை உர்ச்சாகப்படுத்தும் உங்கள் சேவை மென் மேலும் தொடரட்டும்.

  ReplyDelete
 27. மாணவர்களின் படைப்புகளுக்கு
  மதிப்பு தரும் நல்லாசிரியர் நீங்கள்!

  ReplyDelete
 28. அன்பின் உறவுகளே
  என் அழைப்பினை ஏற்று இளங்கவிஞர் கேசவன் அவர்களின் கவிதையைப் படித்து அதன் நிறைகளைப் பாராட்டி மகிழ்ந்த தங்களுக்கு மாணவர் சார்பாக

  என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறென்.

  நன்றி நன்றி நன்றி!!

  ReplyDelete
 29. கருத்துரைக்கு நன்றிகள்.

  ReplyDelete