Wednesday, September 28, 2011

எரித்தால் என்ன? புதைத்தால் என்ன?நாம் விரும்பித்தான் இங்கு பிறப்பெடுத்து வந்தோமா?
நாம் நினைத்தாலும் இறந்துபோக முடியுமா?
தற்கொலை செய்துகொள்வோர் எத்தனைபேர் காப்பாற்றப்படுகிறார்கள்..
இது எதைக் காட்டுகிறது...?
நாம் விரும்பினாலும் இறந்துபோக முடியாது என்பதைத்தானே!
அதனால் தான் முதியவர்களும், நோய்வாய்பட்டவர்களும் இறைவனிடம்..
“இறைவா என்னை உன்னோடு எப்போது அழைத்துச் செல்வாய்..?“
என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்..

“பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல         
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே
நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியல..

       
என்னும் திரைப்படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
நீண்ட காலம் வாழ்வதே பலருக்கும் ஆசை!
ஒரு சிலர் மட்டுமே பிறவியைப் பிணி! என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்..


சுயநலத்தோடு நீண்ட காலம் வாழ்வது பெரிதா?
பொது நலத்தோடு சிலகாலம் வாழ்வது பெரிதா?
பொருள் தேடி வாழ்க்கையைத் தொலைப்பது நலமா?
அருள் தேடி வாழ்க்கையை உணர்வது நலமா?
கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ்வதா வாழ்க்கை?
நிகழ்காலத்தில் வாழ்வதல்லவா வாழ்க்கை?
இதோ ஒரு சங்கப்பாடல்..

 நம்பி யென்னும் பாண்டிநாட்டுக் குறுநிலத் தலைவன் 
அரியவினையைச் செய்து முடிவேந்தனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் 
பெயரைத் தனக்குப் பட்டமாகப் பெற்றான். இவன் மக்கள் போற்ற வாழ்ந்த அரசன். போர்க்களத்தின் முன்னின்று பகைப் படைகளைப்  புறங்கண்டு
ஓடச் செய்தவன். இரவலர்கட்குப் பெருங்கொடை நல்கியவன். வாழ்க்கையில் துய்க்கத் தகுவனவற்றைத் துய்த்து  அறநெறி பிறழாது    வாழ்ந்தவன். புகழ்பெற வாழ்ந்த  இப்பெருந்தகை இறந்துபட்ட போது பேரெயின் முறுவலார்  அவன் புகழ் போற்றும் வகையில் இப்பாட்டைப் பாடினர்.

நம்பி நெடுஞ்செழியன் இறந்த பிறகு அவனைப்
புதைப்பதா?  எரிப்பதா? என்ற கேள்வி எழுந்தது.
அந்நிலையில் பேரெயின் முறுவலார் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

 • o           இளம் பெண்களின் வளையணிந்த தோள்களை நம்பி
  நெடுஞ்செழியன் தழுவினான்.
 • o    காவல் மிக்க சோலைகளின்  பூக்களைச் சூடினான்.
 • o     குளிர்ந்த மணம் வீசும் சந்தனத்தைப் பூசினான்.
 • o     பகைவரை அவர்தம் சுற்றத்தாரோடு அழித்தான். 
 • o       நண்பர்களை உயர்த்திக்  கூறினான். 
 • o       இவர்கள் வலியவர்கள்  எனவே இவரைப் பணிவோம் என்று  யாரையும்     வணங்கி வழிபாடு சொல்லி இவன் வாழ்ந்ததில்லை.
 • o        இவர்கள் நம்மை விட எளியவர்கள் என்று கருதி அவர்களை       விடத் தன்னை மேம்படுத்திச் பண்பும் இவனிடம் இருந்ததில்லை
 • o       பிறரிடம் சென்று பொருள் வேண்டுமென்று  இவன் என்றும் நின்றதில்லை
 • o       ஆனால் தன்னை வந்து சூழ்ந்து  நின்று இரந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லும் பண்பும் இவனிடம் இருந்ததில்லை
 • o       அரசர்களின் அவைக் களங்களில் தன் சிறந்த புகழை
  வெளிப்படுத்தினான்.
 • o       தன் மேல் வரும் படையைத் தன்  நாட்டு எல்லையுள் புகாமல் எதிர்நின்று தடுத்தான்.
 • o       புறங்காட்டி  ஓடுகின்ற படையை அதன் பின் சென்று தாக்காது நின்றான். 
 • o       வேகமாகச் செல்லும் தன் குதிரையைத் தன் மனத்தைக்
  காட்டிலும் விரைவாகச் செலுத்தினான்.
 • o       நீண்ட தெருக்களில்  தன் தேர் சூழ்ந்து வருமாறு செலுத்தினான். 
 • o       உயர்ந்த  யானைகளில் அவன் ஊர்ந்து வந்தனன்.
 • o       இனிமை செறிந்த மதுவின் குடங்களைப் பலர்க்கும் வழங்கித்          தீர்ந்து போகச் செய்தான்.
 • o       பாணர்கள் மகிழுமாறு அவர்களின் பசியைத்  நீக்கினான்.
 • o       மயக்கம் தரும் சொற்களை மொழியாது நடுவு  நிலை அமைந்த சொற்களை  மொழிந்தான். இவ்வாறு அவ்வரசன்  செய்யத் தகுவனவெல்லாம் செய்தான்.
 • o       ஆகவே புகழ் விரும்பி  வாழ்ந்த அவன் தலையை வாளால் அறுத்துப் புதைத்தாலும்
  புதைக்க; அவ்வாறு செய்யாது சுட்டாலும் சுடுக. நீங்கள்
  விரும்பியவாறு செய்க.
    தலையைப் புதைப்பதாலும், சுடுவதாலும் அவனுக்கு ஒன்றும்
பெருமையில்லை. அவன் புகழ்பட வாழ்ந்து முடிந்தனன். அவன்
புகழ் நிலைபெறும் என்று கூறினார்.

பாடல் இதோ..

தொடியுடைய தோண்மணந்தனன்
கடிகாவிற் பூச்சூடினன்
தண்மகமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
நட்டோரை உயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
இரந்தோர்க்கு மறுப்பறியலன்
வேந்துடை யவையத் தோங்குபுகழ் தோற்றினன்
வருபடை  எதிர் தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுங்தெருவிற்  ர்வழங்கினன்
ஓங்கியல களிறூர்ந்தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்.
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன் ஆங்குச்
செய்ய  எல்லாம்  செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!
படு வழிப் படுக இப்புகழ் வெய்யோன் தலையே!

நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின்
முறுவலார் பாடியதாகும்

    
பாடல் வழியே..
       1. நம்பி நெடுஞ்செழியன் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று துறைகளிலும் ஒருவன் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் செய்து முடித்து விட்டான். எனவே அவன் பெரும் புகழ் பெற்று அவன் புகழுடம்பு நிலைபெற்று விட்டது. இனி அவனது பருவுடலை எது செய்தால் என்ன? என்று கேட்கிறார் புலவர்.
        2. வாழ்க்கை நிலையில்லாதது என்பதை உணர்த்தும் இவ்வழகிய பாடல் வாழும் போதே மண்பயனுற
வாழவேண்டும் என்பதை அறிவுறுத்திச் செல்கிறது.

        3. நிலையாமை குறித்து எழுதப்பட்ட திரைப்படப்பாடல்களுக்கும்  முன்னோடியாகச் சங்கப்பாடல்கள் திகழ்ந்தமையைப் பாடல் வழியே அறிந்துகொள்ளமுடிகிறது,


தொடர்புடைய இடுகை

21 comments:

 1. புகழுடம்பு அடைந்தபின் இந்த
  ஊண் உடம்பு பற்றிய அக்கறை எதற்கு
  அருமையான கருத்தைச் சொல்லிப் போகும் பாடல்
  இப்படியெல்லாம் முன்பே நம் கவிஞர்கள்
  பாடிப் போயிருக்கிறார்கள் என்பதெல்லாம் கூட
  தங்கள் பதிவின் புண்ணியத்தால்தான்
  அறிந்து கொள்ள முடிகிறது
  அருமையான பாடலை பதிவாகக் கொடுத்தமைக்கு
  மனமார்ந்த நன்றி த.ம 2

  ReplyDelete
 2. எளிய பாடல் அருமையான எளிய விளக்கம்

  நல்லா இருக்கு சகோ ..

  ReplyDelete
 3. //வாழ்க்கை நிலையில்லாதது என்பதை உணர்த்தும் இவ்வழகிய பாடல் வாழும் போதே மண்பயனுற
  வாழவேண்டும் என்பதை அறிவுறுத்திச் செல்கிறது.//

  நாம் இறந்த பிறகு புதைத்தால் என்ன? எரித்தால் என்ன? நாம் இவ்வுலகில் எவ்வளவு நாள் இருப்போம் என்று தெரியாது, அதனால் மற்றவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும், முடிந்த அளவு பிறருக்கு கெடுதல் விளைவிக்காமல் இருப்பது நல்லது.

  ReplyDelete
 4. அருமை...
  வாழும் போது புகழோடு வாழ்ந்து மறைந்தவனை எரித்தாலென்ன புதைத்தாலென்ன... அவனறியப் போவதில்லை. புலவரின் பாடல் வரிகளும் அதற்கான் உங்கள் விளக்கமும் அருமை முனைவரே.

  ReplyDelete
 5. வழக்கம் போல தங்களின் பதிவுகள் அருமை....

  ReplyDelete
 6. மரணம் குறித்த அனைத்து பதிவுகளுக்கும் நான் இடும் பின்னூட்டம்,
  'வாழ்வதற்காக சாகும் நீ
  செத்த பிறகும் வாழ பார்'

  ReplyDelete
 7. ராஜா சொன்னதை தான் சொல்லவேண்டும் போல் தோன்றுகிறது குணா..தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் நீங்களும் ஒருவர்..

  ReplyDelete
 8. இந்த இடுக்கைக்கான படம் சமீபத்தில் என் தந்தை மரணமடைந்த பின் வீட்டிற்கு தெரியாமல் சென்று அவரை புதைத்த இடத்தில் வெகு நேரம் நின்று அழுதது நினைவுக்கு வருகிறது..

  ReplyDelete
 9. வாழ்க்கை என்பது மரணத்திற்க்காகவா.?!
  மரணம் என்பது வாழ்க்கைக்காகவா.?!
  என்ற தேடலே மனித வாழ்க்கை...

  பகிர்வுக்கு மிக்க நன்றி... நண்பரே...

  ReplyDelete
 10. எரித்தாலும் புதைத்தாலும் புகழ் மறையாது!
  அருமையான பகிர்வு.

  ReplyDelete
 11. பிறப்பு இறப்பு இதற்கிடைப்பட்ட வாழ்க்கைப் பயணம் ஒரு அர்த்தமுள்ளதாக அமைதல் சிறப்பு!
  உங்கள் இலக்கிய விளக்கம் அழகு!இறப்புக்குப்பின் என்னவாகும் என்பது தெரிந்தால் மனிதன் என்ன செய்வான்?!!!
  உங்களால் நல்ல தமிழ் இலக்கியங்கள் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது பெரும் பேறு!
  நன்றி வாழ்த்துக்களுடன்!

  ReplyDelete
 12. வாழ்க்கையின் பொருளைச் சொன்ன பாடல் அருமை. வாழும்போது அவன் செய்யத்தகுந்த செயல்கள் அத்தனையையும் செய்துமுடித்துவிட்டான். இறந்தபின் அவனைப் புதைப்பதிலோ எரிப்பதிலோ என்ன பெருமை வந்துவிடப்போகிறது. பாடலின் பொருள் அறிந்து நெகிழ்ந்துபோனேன். தங்களால் பழம்பாடல்களையும், பண்டையத் தமிழர் வாழ்வைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. மிகவும் நன்றி முனைவரே.

  ReplyDelete
 13. தங்கள் தொடர் வருகைக்கும்
  ஆழ்ந்த வாசித்தலுக்கும்
  கருத்துரைக்கும் நன்றிகள் இரமணி ஐயா.

  ReplyDelete
 14. என்னைக் காட்டிலும் மிகப்பெரிய மேதைகள் எல்லாம் தமிழுலகில் இருக்கிறார்கள் இராஜா..
  இணையப்பரப்புக்கு அவர்களும் வரவேண்டும் என்பதே..

  என் ஆவல்.

  ReplyDelete
 15. நன்றி இரமேஷ்
  புரிதலுக்கு நன்றி காந்தி
  நன்றி குமார்
  நன்றி சசி

  சுருக்கமாகவும் தெளிவாகவும் ஆழமாகவும் சொல்லீட்டீங்க சூர்யஜீவா.

  ReplyDelete
 16. தமிழைத் தாய்மொழியாகப் பெற நான் தான் தவம் செய்திருக்கவேண்டும் தமிழரசி..

  தங்கள் தந்தையின் மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் தமிழ்..

  ReplyDelete
 17. அழகாகச் சொன்னீர்கள் இராஜா

  புரிதலுக்கு நன்றி சென்னைப் பித்தன் ஐயா

  மகிழ்ச்சி தென்றல்

  வாசித்தலுக்கு மிக்க நன்றிகள் கீதா..

  ReplyDelete
 18. திரு. ரமணி. அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்.

  நிலையாமை அறிந்த மனிதன்
  தான் நிலைபெற்றவன் என்று
  நினைப்பது தான் வாடிக்கை!

  http://ungalnanbansarath.blogspot.com/2011/09/iranthu-vida-vendum.html

  ReplyDelete
 19. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே..

  ReplyDelete
 20. உங்கள் தமிழ் பனி கண்டு மெய் சிலிர்க்கிறேன் வாழ்த்துக்கள் மேலும் நம் முன்னோர்களின் கருத்துகளை இன்றைய காலத்திற்கு ஏற்ப தெளிவாக சொல்லும் கடமை மிக்க பொறுப்பில் இருக்கும் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete