Sunday, January 8, 2012

குறிஇறையார்


உன் நண்பனின் மீது அளவாக அன்பு வை
நாளையே அவன் உன் எதிரியாகலாம்!

உன் எதிரையை அளவாகவே வெறுத்துப் பழகு
நாளையே அவன் உன் உற்ற நண்பனாகலாம்!

என்பது அனுபவமொழி..

அளவுக்கு மீறினால் சிலநேரங்களில் மருந்தும் நஞ்சாவதுபோல
சிரிப்பு கூட சில நேரங்களில் அழுகைக்கும் காரணமாக அமைவதுண்டு..

இதோ ஒரு அகச்சான்று..

தலைவனைப் பிரிந்து வருந்தியிருக்கிறாள் தலைவி. தலைவனின் காலம் தாழ்த்துதலை எண்ணி மன வருத்தம் கொள்கிறாள் தோழி. இப்போது தோழிக்கு முன்பு நடந்தவையெல்லாம் நினைவுக்கு வருகிறது..

தலைவியின் இந்த நிலைக்கு என்ன காரணம்?
அன்று தலைவனுடன் இவள் சிரித்து சிரித்துப் பேசியதுதானே என்று அவளுக்குத் தோன்றுகிறது..

சிரிப்பு எப்படி அழுகைக்கும் காரணமாக அமைகிறது என்று எண்ணி எண்ணி வியக்கிறாள் தோழி.

தலைமக்களின் இந்த நிலையை அந்நிலம் சார்ந்த அழகான காட்சிவழி விளக்குகிறாள் தோழி..


முழந்தாழ் இரும்பிடிக் கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறிஇறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி
முன்நாள் இனியது ஆகி பின்நாள்
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு
பகை ஆகின்று அவர் நகைவிளையாட்டே

குறுந்தொகை -394
பாடியவர் - குறிஇறையார்.

(திருமணத்துக்கு இடைப்பட்டுக் காத்திருக்கும் தலைவியை ஆற்றுவிக்கும் தோழி தலைவனின் பண்பை பழித்துக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.)

யானைக்கன்றுகள் தம் தாயைவிட்டு குறவர்கள் வாழும் குறிஞ்சி நிலத்திலேயே தங்கி சிறுவர்களுடன் விளையாடியது.
அதே கன்றுகள் பின்னாளில் அப்புதல்வர்கள் உண்டற்குரிய தினைப்புனத்தை மேய்ந்தமைபோல..

தலைவி தலைவனுடன் கொண்ட நகைவிளையாடல் அவர் உடன் உள்ளபோது இனிமையுடையதாக உயிர்வாழத்துணையாக இருந்தது.
அவரில்லாதபோது இன்பத்தை அழிப்பதாயிற்று என்று தோழி கூறினாள்.

குறியிறைப் புதல்வர் என்ற குறிப்பிட்டதால் இப்புலவர் குறியிறையார் என்றே பெயரும் பெற்றார்.
குறியிறை என்பதற்கு புதல்வரின் சிறிய தோள் என்று பொருள் உரைக்கப்படுகிறது. 

குறவர்களின் கூரை, யானை புகாதவாறு குறிய இறைப்பைக் கொண்டதாக இருப்பதால் குறுகிய இறை என்பது குறியிறை என்றும் பொருள் கொள்ளமுடிகிறது

பாடல் வழியே..
 • நல்லவர் கெட்டவர் என்பதற்கான மதிப்பீடு காலத்தின் கையில் தான் உள்ளது மனிதர்களிடம் இல்லை என்னும் நுட்பம் உணர்த்தப்படுகிறது.
 • சிரிப்பே கூட சிலநேரங்களில் அழுகைக்கும் காரணமாக அமையலாம் என்ற வாழ்வியல் தத்துவம் நுவலப்படுகிறது.
 • குறிஇறை என்ற சொல்லே இப்பாடல் பாடிய புலவருக்கு பெயராக அமைந்தது என்ற கருத்தும் புலப்படுத்தப்படுகிறது.
 • யானைக்கன்றோடு தலைவனின் செயலை ஒப்பிட்டு உரைத்தமை பாடல் படித்த முடித்தபின்னும் மனதைவிட்டு நீங்காத காட்சியாக பதிந்துவிடுகிறது.

22 comments:

 1. நல்லவர் கெட்டவர் சிரிப்பு அழுகை மாற்றங்கள் அனுபவ உண்மைகள் தான். மிக நல்ல விளக்கங்கள் பிடித்துள்ளது. பாடலும் கருத்தும் அறிய முடிந்தது. நன்றி. வாழ்த்துகள்
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 2. அழகான விளக்கம். சிரிப்பேகூட சிலசமயங்களில் கவலைகளுக்கு காரணமாகிவிடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி குயில்.

   Delete
 3. அனுபவ மொழியும் அதற்காகக் கொடுத்துள்ள அகச் சான்றும்
  அதை மிக எளிமையாக சொல்லிச் சென்ற விதமும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 3

  ReplyDelete
 4. குறிஇறையாரின் குறுந்தொகைப் பாடலோடு வாழ்வியல் தத்துவம் அருமை..வாழ்த்துகள்..


  உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-2)

  ReplyDelete
  Replies
  1. வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே

   Delete
 5. நல்ல பதிவு.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 6. குணா..எப்பவும்போல பழமொழிகளும்,வாழ்வியலோடு குறுந்தொகை இணைப்பும் அருமை !

  ReplyDelete
 7. Sir!

  Summa Nach nu irukku. Kuriiraiyar paadal arputham. Pakirvukku Nanri.

  ReplyDelete
 8. என்னவொரு நுட்பமான மனவியல் வெளிப்பாடு. அன்றைய வாழ்வியல் முறைகளும், மக்களின் இயல்புகளும் வேறாயிருந்தாலும் பாடல்களில் காட்டப்பட்டிருக்கும் உவமைகளின் ஒப்புமை இன்றும் பொருந்தத் தக்க வகையில் அமைந்திருப்பது வியப்புக்குரியது. காதலின் வேதனை புலப்படுத்தும் பாங்கு வெகு அற்புதம்.

  ஒருவர் செய்யும் உடன்பாடற்ற செயல்களை அவர்களோடு பழகிய காரணத்தால் முகத்தாட்சணியம் பார்த்து கண்டிக்கவும் முடியாமல், தண்டிக்கவும் முடியாமல் மனம் படும் அவதியை அழகாக வெளிப்படுத்தும் பாடலும் அதற்கான விளக்கமும் அருமை. அதனால்தான் நட்போ பகையோ எதுவும் அளவாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது போலும். பகிர்வுக்கு மிகவும் நன்றி முனைவரே.

  ReplyDelete
  Replies
  1. ஆழ்ந்த புரிதலுக்கு நன்றி கீதா

   Delete
 9. முதலில் உள்ள கருத்துக்கள் ப்ராக்டிக்கலாக நிகழக்கூடியது.தலைவன் தலைவி கதையை மீண்டும் ஒரு முறை படித்து புரிந்துகொள்கிறேன்.

  ReplyDelete
 10. அன்றைய வாழ்வியல் முறைகளிநின்று நாம் வெகு
  தூரத்தில் விலகி நிற்கிறோமென்று இங்கே நீங்கள் குறிப்பிடும்
  பதிவுகள் ஒவ்வொன்றிலிருந்தும் உணர்ந்து கொள்ளலாம்.

  அவன் நல்லவனோ கெட்டவனோ, பழகி தொலைத்துவிட்டான்
  அவன் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு தான்
  ஆகவேண்டும்.. என்ற நிதர்சன மனநிலை
  பாடலின் விளக்கத்தில் விளைகின்றது.

  ReplyDelete
  Replies
  1. ஆழ்ந்த புரிதலுக்கு நன்றி அன்பரே

   Delete