வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

மகிழ்ச்சி இருக்கும் இடம் - UPSC EXAM TAMIL - புறநானூறு -195



        
ஒரு மரத்தில் அணில் ஒன்று தாவி விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி கீழே நின்ற ஒநாயின் மீது விழுந்தது. ஓநாய்  அதைத் தன் வாயில் கவ்வி சாப்பிட முயற்சிக்கும்போது, தன்னை விட்டு விடுமாறு அணில் கேட்டது. அப்போது ஓநாய் ,''நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன்னை விட்டு விடுகிறேன்,''என்றது.
அணிலும்,''உன் பிடியில் நான் இருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்?''என்று கேட்கவே ஓநாயும்  பிடியைத் தளர்த்தியது.உடனே மரத்தில் தாவி ஏறிய அணில், 
''இப்போது உன் கேள்வியைக் கேள்,''என்றது. 
ஓநாய் கேட்டது,''உன்னை விட நான் பலசாலி. ஆனால் என்னைவிட மகிழ்ச்சியாக மரத்தில் எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறாயே! இது எப்படி சாத்தியம்?''
அணில் சொன்னது,''நீ எப்போதும் கொடிய செயல்களையே செய்கிறாய். அதுவே உன் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் நான்  எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. மரங்களில் தானாகப் பழுத்த பழங்களை  மட்டுமே சாப்பிடுகிறேன். அதனால் என் மனதில் எப்போதும் கவலையில்லை.'' என்றது.

     இந்தக் கதையில் அணில் ஓநாயிடம் "உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லைஉபத்திரவம் பண்ணாதேஎன்று சொல்கிறது. இதே அறிவுரையை யாராவது உங்களிடம் சொல்லியிருப்பார்கள், இல்லாவிட்டால் நீங்களாவது யாரிடமாவது கூறியிருப்பீர்கள். இந்த சிந்தனை இன்று நேற்று தோன்றியதல்ல. சங்ககாலத்திலேயே இப்படியொரு பாடல் உண்டு.

“பல்சான்றீரே! பல்சான்றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவீர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே''
புறநானூறு -195
நரிவெரூஉத்தலையார்

மீன் முள்ளைப்போல் வெள்ளை நிற நரை முடியையும் அலை அலையாய் சுருக்கங்கள் விழுந்த கன்னங்களையும் உடைய சான்றோர்களே!

அதுவும் பயனுள்ள செயல் எதுவும் செய்யாமல் மூப்பெய்தியுள்ள சான்றோர்களே! கையிலே கூர்மையான மழுவாயுதத்தைக்கொண்ட எமன் உங்களைப் பாசக் கயிற்றால் பிணித்து இழுத்துச் செல்லும் போதுதான் வருந்துவீர்கள்!

உங்களால் நல்லது செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லைகெடுதல் செய்யாமல் இருக்கும் குணத்தையாவது பாதுகாத்திடுவீர்கள். அந்தச் செயல்தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவது. அதுமட்டுமல்லஉங்களை நல்வழிப்படுத்துவதும் அதுவாகவே இருக்கும் என்று அறிவுரை கூறுகிறார்.
 னப
நாம் எல்லோரும் மகிழ்வாக இருக்கவேண்டும் என்று விரும்புவோம். அதற்கு யாருக்கும் நல்லது செய்யவேண்டும் என்பதுகூட இல்லை, தீமை செய்யாமல் இருந்தாலே போதும் என்ற உயர்ந்த வாழ்வியல் அறத்தை எடுத்துரைக்கும் இந்த சங்கப்பாடல் சங்கத்தமிழரின் செம்மையான வாழ்வுக்குத் தக்க சான்றாகும்.


எமன் இருக்கிறாரா? இல்லையா? சொர்க்கம் உண்டா? இல்லையா? என்று ஆராய்வதை விட, நாம் மகிழ்வாக வாழ்ந்தால் சொர்க்கம், துன்பத்துடன் வாழ்ந்தால் அது நரகம் என்பதைப் புரிந்துகொண்டு, எமன் என்றசிந்தனை நம்மை அச்சுறுத்து நல்வழிப்படுத்தும் முயற்சி என்பதைப் புரிந்துகொண்டு,  இயன்றவரை நன்மை செய்துவாழவேண்டும் என்ற எண்ணத்தை நம்மனதில் விதைத்துச் செல்வதே இப்புலவரின் சிறந்த நோக்கம் என்பதைப் புரிந்துகொள்வோம்.


10 கருத்துகள்:

  1. உங்களால் நல்லது செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை; கெடுதல் செய்யாமல் இருக்கும் குணத்தையாவது பாதுகாத்திடுவீர்கள். அந்தச் செயல்தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவது. அதுமட்டுமல்ல, உங்களை நல்வழிப்படுத்துவதும் அதுவாகவே இருக்கும் என்று அறிவுரை கூறுகிறார்.

    மனம் கவர்ந்த பகிர்வுக்கு மிக்க நன்றி .இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும் ......

    பதிலளிநீக்கு
  2. எனக்கு மிகவும் பிடித்த சங்க இலக்கிய பாடல்! பகிர்வுக்கு மிக்க நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. சங்கப் பாடலை பொருத்தமான குட்டிக் கதையுடன் விளக்கியது நன்று.

    பதிலளிநீக்கு
  4. எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!
    எந்த காலத்திற்கும் பொருந்திவரும் இலக்கியம் நமது சங்க இலக்கியம் என்பதனை இந்த ஆண்டின் துவக்கத்தில் வலைப்பதிவில் எழுதியதற்கு நன்றி!


    பதிலளிநீக்கு

  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  6. நான் எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. மரங்களில் தானாகப் பழுத்த பழங்களை மட்டுமே சாப்பிடுகிறேன். அதனால் என் மனதில் எப்போதும் கவலையில்லை.''

    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  7. புத்தாண்டின் பிறப்பில் நல்லதொரு பகிர்வு... தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் முனைவரே...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    சொல்லினில் தெளிவும்
    வாக்கினில் சுத்தமும்
    செயலினில் தன்மையும்
    ஆற்றலில் மென்மையும்
    கொண்டிருந்தால் மகிழ்ச்சி
    தானாக குடிகொண்டுவிடும்
    என்றுரைக்கும் அருமையான
    பாடலுடன் கதையின் விளக்கமும்
    இனிது இனிது முனைவரே...

    பதிலளிநீக்கு
  9. என் மகன் பள்ளியில் படிக்கும்போது பலமுறை என் காதில் விழுந்த பாடல்..அடுத்தவரைக் கெடுக்காமல் ,உள்ளார்ந்த அன்போடு எதிர்பார்ப்பில்லாமல் உதவி வாழ்ந்தால் நமக்கு கவலை என்பதே இருக்காது. நல்ல செய்தியை பகிர்ந்துள்ளீர்கள் நன்றி.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு