Friday, May 2, 2014

பெரிதே உலகம் ! பேணுநர் பலரே!நான்கு சுவர்களுக்குள் நம் உலகம் அடங்கிவிடுகிறது. அது வீட்டுக்கு உள்ளேயோ, வெளியோ நாம் படிக்கும், பணிபுரியும் இடமாகவோ அமைகிறது. இன்று இணையம் வந்து உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டது என பெருமிதமடைந்தாலும், சிந்தித்துப் பார்த்தால் நாம் வாழும் உலகம் மிகவும் சிறியது என்பது புரியவரும்.

நான், எனது குடும்பம், எனது அலுவலகம், எனது ஊர், எனது நாடு, எனது மொழி, என் மக்கள் என இத்தனை படிநிலைகளையும் கடந்து யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உலகமகா சிந்தனையை உணர்ந்தோர், கடைபிடிப்போர், இந்த உலகம் பெரியது என வாழ்வோர் மிகவும் குறைவு.

மூன்றுவகை மனிதர்கள் இந்த உலகில் உள்ளனர்.
·        என் தகுதிக்கு மதிப்பில்லை எனப் புலம்புவோர்!
·        கிடைத்ததுபோதும் என தன்னை தேற்றிக்கொள்வோர்!
·        இந்த உலகம் மிகவும் பெரிது, என் தகுதிக்கு மதிப்பளிப்போர் உலகில் எங்கும் உள்ளார்கள் எனத் தன் தகுதியின் மீது தன்னம்பிக்கை கொண்டோர்!
இதில் மூன்றாவது வகை மனிதர்கள் அரிதானவர்கள். அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை, தன்மானம் ஆகிய பண்புகளை ஒன்றாகப் பெற்று வாழ்பவர்கள். இப்பண்புடைய ஒரு புலவரின் தன்மான உணர்வை எடுத்தியம்பும் புறப்பாடலைக் காண்போம்.

ளவெளிமான் என்பவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். வள்ளல்  வெளிமானின் தம்பியாவான். வெளிமான் காலமான பின்னர் இளவெளிமான் அரசனானான். புலவர் பெருஞ்சித்திரனார் இளவெளிமானைக் கண்டு பரிசில் வேண்டினார். அவன் ஏதோ கடமைக்குச் சிறிது பரிசில் கொடுத்தான். அதனைப் பெறப் புலவருக்கு மனமில்லை. பெறாது திரும்ப முடிவெடுத்தபோது பாடிய தன்னம்பிக்கை தரும் பாடலைக் காண்போம்.

எழுக எம் நெஞ்சமே! நாம் செல்வோமாக! தனக்குரிய இரை கிடைக்காதபோதும் மன எழுச்சி குறையாமல் இரைதேடும் யாளியைப் போன்று பரிசிலருக்கு மன ஊக்கம் வேண்டும்.
நன்கு கனிந்துவராத பழத்திற்காகக் கவலைப்படுவார் இங்கில்லை!

நீர்ப் பருகுவது போன்ற வேட்கையுடன் புலவரை வரவேற்றிருக்க வேண்டும்! முகம் மலர்ந்து பரிசில் தருதல் வேண்டும்!
அருகில் இருக்கக் கண்டும் அறியாதவன் போலப் பரிசில் தந்தால் தகுதியில்லாதவர்களும், முயற்சியில்லாதவர்களும் மட்டுமே விரும்பி ஏற்பார்கள்
பரிசில் நல்கும் உள்ளம் அவனுக்கு இல்லை.
உலகம் பெரிது. தகுதியுடையவர்களை விரும்பி வரவேற்போரும் பலராவர்.

பாடல் இதோ..
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
பருகு அன்ன வேட்கை இல்வழி,
அருகில் கண்டும் அறியார் போல,
அகம் நக வாரா முகன் அழி பரிசில்
தாள் இலாளர் வேளார் அல்லர்?
'
வருக' என வேண்டும் வரிசையோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென
நோவாதோன்வயின் திரங்கி,
வாயா வன் கனிக்கு உலமருவோரே. (புறநானூறு 207)

தொடர்புடைய இடுகை


எத்திசைச் செலினும் சோறே! 


8 comments:

 1. புலவர்கள் அரசர்கள் பற்றி அறிந்துக்கோண்டேன் . மிக சுவராசியமாய் இருக்கிறது. பாடல் வரிகள் தேடி கொடுத்தமைக்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 2. நல்லதொரு பகிர்வு அய்யா...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 3. சிறந்த இலக்கியப் பகிர்வு - அதை
  நான் விரும்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 4. பாடும் பாடித் தொலையும் என்று வடிவேலு 23 ம் புலிகேசியில் சொல்வது போல அந்தக் காலத்திலும் புலவரை மதிக்காத அரசர்கள் இருந்திருக்கிறார்கள் போலிருகிறது.
  ஒரு சங்கப் பாடலை சிறப்பாக விளக்கியமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete