வெள்ளி, 9 மே, 2014

சிரிப்புதான் வருகிறது…

மருத்துவம், ஆன்மீகம், அரசியல் என்ற மூன்று துறைகளும் இன்று நிறையவே மாறிவிட்டன. இத்துறைகள் பணத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்கிவருகின்றன. ஒருகாலத்தில் மக்களுக்கு சேவை செய்யவிரும்பும் பொதுநலவாதிகளே இந்தத் துறைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். இன்று கொள்ளையடிக்க விரும்பும் சுயநலவாதிகளே பெரிதும் இந்தத் துறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

போலி மருத்துவர்கள்! போலி ஆன்மீகவாதிகள்! போலி அரசியல்வாதிகள்! என போலிகள் நிறைந்ததாக இன்றைய உலகம் உள்ளது. இந்தக் காலத்திலும் பொதுநல உணர்வோடு இந்தத் துறைகளில் யாரும் இருந்தால் அவர்களை வாழத்தெரியாதவர்கள், என்று இந்த உலகம் பழி தூற்றுகிறது. அவர்களைப் பந்தாடுகிறது. அதனால் இந்தத் துறைகளில் உள்ளவர்கள்  இன்றைய சூழல்களுக்கேற்ப சுயநலம் நிறைந்தவர்களாகவே உள்ளனர்.

இன்றைய சூழலில்,

ஒரு மருத்துவரோ!
ஒரு ஆன்மீகவாதியோ!
ஒரு அரசியில்வாதியோ!

நான் சேவையாற்றத்தான் இந்தத் துறையைத் தேர்தெடுத்தேன் என்று சொன்னால் சிரிப்புதான் வருகிறது.

          ங்ககாலத்தில் இந்த மூன்று துறைகளும் எப்படியிருந்தன என்பதை நற்றிணைப்பாடல் ஒன்று அழகுபட மொழிகிறது.

தலைவன் பொருள் காரணமாக பிரிய அதனால் வருந்திய தலைவியைப் பிரிவை ஆற்றியிரு எனத் தோழி வற்புறுத்தினாள். அதற்குத் தலைவி பதில் கூறுவதாக இவ்வகப்பாடல் அமைகிறது.

நல்ல நெற்றியை உடையவளே!

மாந்தர், மருந்து தந்துதவும் மரத்திலிருந்து மருந்து எடுக்கும்போது, அது பட்டுப்போகும்படி முழுதும் கொள்ளார்!
தவம் செய்யும் மாந்தர், தம் வலிமை முற்றும் கெடுமளவு உயர்ந்த தவம் புரியமாட்டார்கள்!
மன்னரும் தன் கீழ் வாழும் குடிமக்களின் வளமையெல்லாம் நீங்குமாறு அவர்களிடம் வரி வாங்கமாட்டார்கள்!

இவற்றையெல்லாம் தலைவர் அறிவார். ஆயினும் தாமே வருத்தம் கொள்ளுமாறு வெயில் நிறைந்த நீண்ட பாலை நிலவழியில், என்னை நீங்கிச் சென்றார். நாம் அவரைப் பிரியாதிருப்பின் உயிருடன் வாழ்வோம். பொருள் காரணமாகப் பிரிந்தால் இறந்துவிடுவோம் என்பதை அறிந்தும் பிரிந்தார் இதுதான் ஆடவர் இயல்பு. இதனை உலகத்தினர் யாவரும் அறிவர் என தோழியிடம் தன் ஆற்றாமையைத் தெரிவிக்கிறாள் தலைவி.

பாடல் இதோ,

மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்

உரம் சாச் செய்யார் உயர் தவம் வளம் கெடப்

பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்

நாம் தம் உண்மையின் உளமே அதனால்

தாம் செய் பொருள் அளவு அறியார் தாம் கசிந்து

என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்
இன்ன நிலைமைத்து என்ப
என்னோரும் அறிப இவ் உலகத்தானே.


நற்றிணை 226,  பாடியவர் - கணி புன்குன்றனார், 
பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது

பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு

My friend with a fine forehead!
People don’t extract too much
medicine that could kill trees;
they don’t do penances
that will ruin body strengths;
and kings don’t take away all
the wealth of people as taxes.

Even though he knew about all
this, and felt it,
he went through the long path
where the sun is hot, our lover,
who does not know the worth of
the wealth that he is set to make.

They say that this is the situation and
everyone in this world knows about it!


பாடல் வழியாக,

 • சங்ககாலத்தில் மருத்துவம் பெரிதும் இயற்கை சார்ந்ததாக இருந்தது. சங்ககால மக்கள் மருந்து தந்துதவும் மரத்திலிருந்து மருந்து எடுக்கும்போது, அது பட்டுப்போகும்படி முழுதும் கொள்ளமாட்டார்கள் ஏனென்றால் மருத்துவ குணமுடைய மரங்கள் நாளைய தலைமுறைக்கும் பயன்படும் என்ற எண்ணமும், இயற்கை குறித்த விழிப்புணர்வும் அவர்களிடம் இருந்தது.
 • தவம் செய்யும் மாந்தர், தம் வலிமை முற்றும் கெடுமளவு உயர்ந்த தவம் புரியமாட்டார்கள்! ஏனென்றால் தவத்தின் பலனைப் பெற உடல் தேவை என்பதை உணர்ந்தவர்களாக அவர்கள் இருந்தனர். உண்மையான ஆன்மீகத் தேடலுடையவர்களாக ஆன்மீகவாதிகள் இருந்தனர்.
 • மன்னரும் தன் கீழ் வாழும் குடிமக்களின் வளமையெல்லாம் நீங்குமாறு அவர்களிடம் வரி வாங்கமாட்டார்கள்! ஏனென்றால் குடிமக்கள் இல்லையென்றால் நமக்கு அரசபதவி இல்லை என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.
 • பிரிவு பெண்களால் தாங்கமுடியாதது என்று தெரிந்தும், வாழ்க்கைக்குத் தேவை பொருள் என்பதை உணர்ந்த ஆடவர் தம் மனைவியைப் பிரிந்துசெல்லும் மனவலிமை உடையவர்களாக இருந்தனர். என்றும், தலைவியின் வலிநிறைந்த மனநிலையை இப்பாடல் நுட்பமாக மொழிகிறது.

 • இந்த நற்றிணைப் பாடல்  அகவாழ்க்கையை எடுத்தியம்பும் பாடலாகவே இருந்தாலும் உலகியல் குறித்த மருத்துவம், ஆன்மீகம், அரசியில் குறித்த இந்த மூன்று சிந்தனைகளும் இன்றும் ஒப்புநோக்கத்தக்கவையாக அமைகின்றன.


தொடர்புடைய இடுகைகள் 

 இரு பேராண்மைகள்.
இரு பேராண்மைகள்                            
 காடும் நாடாகும்
காடும் நாடாகும்.                                           
 மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்.
மருந்தாய்ந்து கொடுத்த அறவோன். 

5 கருத்துகள்:

 1. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 2. தங்கள் பயன்தரும் இலக்கியப் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு