வெள்ளி, 16 மே, 2014

வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன்!


இன்றைய சமூகத்தில் பொய்சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் வாழத்தகுதியற்றவர்கள் என்று மதிப்பிடப்படுகிறார்கள்.  
உண்மை மட்டுமே பேசுபவர்களை வேற்றுகிரகவாசிகளைப் பார்ப்பதுபோலவே நாம் பார்க்கிறோம்.

வாழத் தகுதியுள்ளன மட்டுமே வாழும்! அல்லன செத்துமடியும்!  என்ற கோட்பாட்டின்படி,
இந்த உலகில் வாழத்தேவையான தகுதி, நடித்தல், பொய்சொல்லுதல். நான் வாழவும், என்னை நம்பியிருப்பவர்கள் வாழ்வதற்காகவும் தான், நான் பொய்சொல்கிறேன் என்று நாம் சொல்லும் பொய்களுக்கு நாம் காரணம் சொல்லிக்கொள்கிறோம்.


நான் வாழ்வதற்காகவோ, என்னை நம்பிவந்தவர்கள் வாழ்வதற்காகவோ நான் பொய்சொல்லவில்லை! உண்மையே சொல்கிறேன்! என உயர்ந்த கொள்கையை உரைக்கும் சங்கப்பாடலைக் காண்போம்.

நாஞ்சில் வள்ளவன் குறுநிலமன்னனாகவும், வள்ளலாகவும் இருந்தவர்.  மருதனிள நாகனார், நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெறுவதற்காகச் சென்றபோது பாடிய பாடல் இது

சுவல் அழுந்தப் பல காய
சில் ஓதிப் பல் இளை ஞருமே
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியருமே

வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன் மெய் கூறுவல்

ஓடாப் பூட்கை உரவோர் மருக
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந
மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக்
கனி பதம் பார்க்கும் காலையன்றே
ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள்
அருஞ் சமம் வருகுவதாயின்
வருந்தலும் உண்டு என் பைதலம் கடும்பே.

புறநானூறு 139, பாடியவர்: மருதன் இளநாகனார், பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன், திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை


வேந்தே, என் பின்னே வரும்
இளைய மகளிரும் விறலியரும்

வாழ்தல் வேண்டியான் பொய்
கூறவில்லை; மெய்யே கூறுகின்றேன்;

எனது இப்போதைய நிலைமை
நீ மனம் கனிந்து நல்கும் காலத்தை நோக்கியிருத்தற்கு ஏற்றதன்று, உனக்குரிய முடிவேந்தனாகிய சேரனோ, உனக்கு வேண்டியவற்றை
வேண்டியவாறு வழங்குபவன்.
அவனுக்காக   நீ உயிரைக் கொடுபதற்கும்  அஞ்சமாட்டாய்!
ஒருகால் போர் ஏற்பட்டாலும்,  நின்  கொடை கிடைக்கும்வரை என் சுற்றம் பசித்துன்பத்தைத் தாங்காது. ஆதலால் யாம்
வேண்டும் பரிசிலை காலம் தாழத்தாமல் தருவாயாகஎனப் பாடியுள்ளார்.

பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு

To make a living, I have come here

with my youngsters with little hair

who have scars on their backs caused

by lifting, and viralis as thin as vines,


whose feet hurt climbing a lot. I do not

lie. I am telling the truth.
O heir to ancestors who never faulted

in their commitments!

Lord of Nānjil country with tall peaks!

Please do not wait thinking that this is

not the right time. Your Chēran king gives

to you, and you are not afraid of dying
for him. There might be a huge battle
splitting the land into two, and you might
leave. If you do, my family in despair
will be very sad!


சிந்தனைக்காக..


ஆங்கில சொற்றொடர்கள் அச்சிடப்பட்ட ஆடைகளை விரும்பி அணியும் இன்றைய தலைமுறையினர் நம் தமிழ் இலக்கியங்களில் உள்ள இவை (சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்) போன்ற பொன்மொழிகளையும் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.

ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இதையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்,

திரைப்பட நடிகர்கள் இதுபோல தமிழ்ப்பொன்மொழிகள் தாங்கிய ஆடைகளை அணிந்தால் இளைய தலைமுறையினரிடையே இன்னும் வேகமாக நம் மரபுகளும், பெருமைகளும் சென்று நிலைக்கும்
.

12 கருத்துகள்:

 1. வணக்கம் நண்பரே
  அழகான வரிகளை எடுத்துக் காட்டியுள்ளீர்கள் .ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நடிகர்களுக்கும் நீங்கள் வைத்த வேண்டுகோள் ஆக்கப்பூர்வமாக நடக்க வேண்டியது. தங்கள் சிந்தனைக்கு வணக்கங்கள் சிந்தனை செயல் வடிவம் பெற வேண்டுமென்பதே எனது ஆசையும். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. நேர்மை ஒருவனைத் தனியனாக்கிவிடும் நிலையில் இதுபோன்ற உடைகளை அணிந்து என்ன பயன் என்று கூறி யார் அணிய முன்வருவார்கள்.

  கோபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி நன்றாகத் தெரிந்தும் போலிகளைக் கண்டு ஏமாற்றமடைவதே நம் வழக்கமாகிவிட்டது நண்பரே.

   தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

   நீக்கு
 3. ///வாழ்தல் வேண்டிப்
  பொய் கூறேன் மெய் கூறுவல்///
  தமிழ் மொழியின் பெருமையினைக் கூற இந்த ஒரு வரி போதும் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

   நீக்கு
 4. தங்கத் தமிழில் தணியாத ஆர்வம் சங்கத் தமிழ் தரும் முனைவருக்கு என்றும் என் வாழ்த்து! நாளும் தருக! நலம் பல பெறுக!

  பதிலளிநீக்கு