Sunday, July 6, 2014

பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள்

பிறமொழி கலவாமல் தனித்தமிழில் பேசமுடியும் என எனக்கு உணர்த்தியவர். பிறமொழிப் பெயர்களையும் நாம் அழகிய தமிழில் மாற்றிக்கொள்ளலாம் என்ற சிந்தனையை எனக்கு ஏற்படுத்தியவர், தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் ஆவார். அவரது பிறந்தநாளான இன்று அவரது தமிழ்ப்பணியை நினைவுகொள்வதாக இவ்விடுகை அமைகிறது.

பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும்,தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை அருகே விளாச்சேரி எனும் ஊரில் கோவிந்த சிவன் --லட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக இவர் பிறந்தார்.வடமொழியை தந்தையாரிடமும் ,தமிழை மதுரை சபாபதி முதலியாரிடமும் கற்றார் . இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும்,இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார்.கலாவதி (1898),ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி,ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார் . இராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார் .தனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சபாபதி முதலியாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் . அவர் 1898 ல் மறைந்தபோது
 மாமதுரைப் பெம்மான்மேல் மாலையெனப் பேர்புனைந்து 
 காமர் சிலேடை வெண்பாக் கட்டுரைத்த பாவலனே 
 பாமணார் கோவே நீ பாரினைவிட் டேகியது
 தாமதுரை சாமீ தமியேன்செய் தீவினையோ .   என்று பாடி வருந்தினார்
இது தவிர வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்:
என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான்.
ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே.

இவரது நூல்கள்

தமிழக அரசு இவரது மரபுரிமையாளர் 19 பேருக்கு ரூபாய் 15 லட்சம் பரிவுத் தொகையாக அளித்து இவரது பதின்மூன்று நூல்களும் 2006டிசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டன.
பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:
·         ரூபவதி
·         கலாவதி
·         மான விஜயம்
·         தனிப்பாசுரத் தொகை
·         பாவலர் விருந்து
·         மதிவாணன்
·         நாடகவியல்
·         தமிழ் விசயங்கள்
·         தமிழ் மொழியின் வரலாறு.
·         சித்திரக்கவி விளக்கம்
பதிப்பித்த நூல்கள் :
1.சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
2. மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
3.புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
4.உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
5.தனிப்பாசுரத்தொகை (1901)

தரவுகளுக்கு நன்றி - தமிழ் விக்கிப்பீடியா.

17 comments:

 1. தனித்தமிழ் இயக்கத்தின் முதன்மைப் பங்காளரான தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பற்றி பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன். தமிழ்ச்சான்றோர் பற்றி அறியாதோரும் அறியச் செய்யும் தங்களது பெருமுயற்சிக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி அம்மா

   Delete
 2. எங்கள் தமிழாசிரியரின் வீடு இருக்குமிடம் புலவர் நகர். வீதியின் பெயர் கலைஞர் வீதி! ஒரு முறை இதைப்பற்றி கேட்டபோது இது கலைஞர் கருணாநிதி இல்லை, பரிதிமாற் கலைஞர் என்று விளக்கினார். அப்போதிலிருந்துதான் இவரைப்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. எல்லாம் காலத்தின் கோலம்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.

   Delete
 3. மிக அருமையான தகவல்களை எளிமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். மிகச்சிறப்பான பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா

   Delete
 4. "பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும்,தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்." என அறிஞரைப் பற்றி நாம் படிக்க முடிகிறது.
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா

   Delete
 5. "பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும்,தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்." என அறிஞரைப் பற்றி நாம் படிக்க முடிகிறது.
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 6. பரிதிமாற் கலைஞர் குறித்த பகிர்வுக்கு நன்றி முனைவரே...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 7. அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் பெருமை மிகு
  பரிதிமாற் கலைஞரைப் பற்றி விரிவாக சிறப்பான முறையில்
  பதிவிட்டுள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி குணசீலன்.
  தங்களது தமிழ்ப்பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி அம்மா.

   Delete
 8. அருமையான தகவல்கள் நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 9. தூய தமிழ் போற்றிய மதிப்பிற்குரிய, பெருமை கொள்ளத்தக்க பரிதிமாற்கலைஞர் பற்றிய பல தகவல்கள் அறிந்து கொண்டோம்! மிக்க நன்றி! குறித்தும் கொண்டோம்! நல்ல ஒரு இடுகை!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete