புதன், 16 ஜூலை, 2014

நான் மனிதன்கண்களால் காண வேண்டியது?
செவிகளால் கேட்கவேண்டியது?
வாயால் பேச வேண்டியது?

இந்த மூன்றும் அறியாமல்தான் நாம் வாழ்ந்துவருகிறோம். கவிஞர் மீரா அவர்களின் “ நான் மனிதன் ” என்ற கவிதை இந்த உண்மையை அழகுபட மொழிகிறது. இந்தக் கவிதையைப் படித்தவுடன் நானும் கண், செவி, வாய் என்னும் புலன்களின் இன்பம் பெற ஆவலாக உள்ளேன். அதற்குத் தக்க வாய்ப்பாக ஈரோடு புத்தகத் திருவிழா 2014 அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ளது.

நல்ல புத்தகங்களைக் கண்களால் பார்த்து
நல்ல சொற்பொழிவுகளைச் செவிகளால் கேட்டு
நல்ல அறிஞர்களுடன் நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து

புலன்களின் பயன்களை முழுமையாக அடைய ஆவலாக உள்ளேன்.


நான் மனிதன்!

வான்திரியும் தண்ணிலவைப் பார்த்த துண்டா?
வசந்தத்தைக் கண்டதுண்டா? துள்ளி ஓடும்
மான்கூட்டம் மயில்ஆட்டம் மலரின் தோட்டம்
மங்கைமுகம் இவையனைத்தும் கண்ட துண்டா?
தேன்கவிதைத் தமிழ்மொழியின் எழுத்தைக் கண்ணால்
தின்றதுண்டா? சுவைத்ததுண்டா? இல்லை! அந்தோ!
நான்குருடன் நான் குருடன்! உலகை நோக்கும்
நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை?

கான்ஓடும் ஆறுகளின் சத்தம் என்றன்
காதுகளைத் தொட்டதுண்டா? குயிலின் பாட்டைத்
தான்கொஞ்சம் கேட்டதுண்டா? குழலும் யாழும்
தரும்மதுரத் தனிச்சுவையில் பித்துக் கொண்டே
நான்மயங்கிக் கிடந்ததுண்டா? அறிஞர் பேச்சில்
நனைந்ததுண்டா என்நெஞ்சம்? இல்லை! அந்தோ
நான்செவிடன்! நான்செவிடன்! குரலைக் கேட்கும்
நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை?
ஊண்வேண்டும் நீர்வேண்டும் என்றே வாயால்
உரைத்ததுண்டா ஓயாமல்? துன்பத் தூண்டில்
மீன்போலத் துடிக்கின்ற கொடுமைக் காக
மிகவருந்தி ஒப்பாரி வைத்த துண்டா?
மேன்மையுள்ள மனக்கருத்தை யாருக் கேனும்
மெதுவாகச் சொன்னதுண்டா? இல்லை! அந்தோ
நான் ஊமை! நான் ஊமை! வார்த்தை யாடும்
நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை?

நான் உலகைப் பார்த்ததில்லை! ஓசை யாவும்
நான்கேட்ட தேயில்லை! இனிதாய்ப் பேசத்
தான்என்றும் முடியவில்லை! ஆமாம்! உண்மை!
தணல்சூழ்ந்த குடிசைக்குள் கிடப்ப தேபோல்
ஏன் இன்னும் இருக்கின்றேன் என்றே நாளும்
எண்ணுகிறேன்; விம்முகிறேன்; என்ன செய்வேன்?
நான்மனிதன்! நான்மனிதன்! அதனால் சாக
நடுங்குகிறேன்! நடத்துகிறேன் ஆசை வாழ்க்கை!

                                          -கவிஞர் மீரா

இந்தக் கவிதை நான் இதுவரை சராசரி மனிதனாகத்தான் இருந்திருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது. உங்களுக்கும் உணர்த்தியிருக்கும் என நம்புகிறேன்.

17 கருத்துகள்:

 1. ஆம் ஐயா நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்கள்! கவிஞர் மீராவின் மிக அருமையான கவிதைப் பகிர்வு! மிக்க நன்றி ! நல்ல வாசிப்புகளைப் பகிர்வதற்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

   நீக்கு
 2. அருமையான நிகழ்வு, அழகான அழைப்பு, பதிவுக்கு நன்றி.
  தாங்கள் வெளியிட்டிருக்கும் இந்தக் கவிதை,
  அழகான மரபின் அரிதான எண்சீர் விருத்தம் அலலவா? அதனை,
  வான்திரியும் தண்ணிலவைப் பார்த்த துண்டா?
  ..........வசந்தத்தைக் கண்டதுண்டா? துள்ளி ஓடும்
  மான்கூட்டம் மயில்ஆட்டம் மலரின் தோட்டம்
  .........மங்கைமுகம் இவையனைத்தும் கண்ட துண்டா?
  தேன்கவிதைத் தமிழ்மொழியின் எழுத்தைக் கண்ணால்
  .........தின்றதுண்டா? சுவைத்ததுண்டா? இல்லை! அந்தோ!
  நான்குருடன் நான் குருடன்! உலகை நோக்கும்
  .........நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை? என்னும் வடிவில் வெளியிட்டால்தான் சிறப்பாக இருக்கும் இல்லையேல் புதுக்கவிதை போலும் குழப்பம் ஏற்படும் அல்லவா?
  அல்லது வடிவததை மாற்றி இப்படி வெளியிடக் காரணம் ஏதும் உண்டா நண்பரே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலைக் கல்லூரியில் பகுதி 1 தமிழ் பயிலும் மாணவர்களுக்காக இக்கால இலக்கியங்கள் என்ற பாடத்துக்காக புதுக்கவிதைகள் என்ற பிரிவில் இந்தக் கவிதையை வடிவமைத்திருக்கிறார்கள் நண்பரே அதனால் இக்கவிதையை இப்படி வெளியிட்டிருக்கிறார்கள்.

   தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா

  கருத்து நிறைந்த கவிகண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

   நீக்கு
 6. கவிஞர் மீராவின் கவி வரிகள் அருமை முனைவரே...
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

   நீக்கு
 7. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
  சிறந்த பதிவு

  பதிலளிநீக்கு
 8. மீரா என் நண்பர். இந்தக் கவிதை, மறைந்த அவரை நினைவூட்டி என்னை மனம் கலங்கச் செய்தது.

  கவிதையை வெளியிட்டதோடு புத்தக விழா குறித்த அறிவிப்பைச் செய்ததற்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. கவிஞர்கள் மறைவதில்லை அவர்கள் கவிதைகளில் வாழ்கிறார்கள் என்று சொல்வது உண்மைதானே நண்பரே. தங்கள் வாசிப்புக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 10. எண் சீர் விருத்தம் மிக அருமை.
  இந்த மரபு கவிதை தலைப்பின் கீழ் வெளியிட்டிருப்பது வினோதம்தான். மீரா அவர்களின் புதுக் கவிதைகள் ஏராளமாக உள்ளனவே

  பதிலளிநீக்கு
 11. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

  பதிலளிநீக்கு