வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

தீம்புளிப்பாகர்




கணவன் – என்ன பாயசம் கிண்ட சொன்னா களி கிண்டி வைச்சிருக்க.
மனைவி – நான் என்னங்க செய்வேன்..!
உங்க பையன் தான் அணில் சேமியா வாங்கி வரச் சொன்னா வேற ஏதோ சேமியா வாங்கி வந்துட்டான் அதாங்க இப்படி ஆயிருச்சு..

என்ற உரையாடலை தமிழக வானொலிகளில் யாவரும் கேட்டிருப்பீர்கள்..

மனைவி – நீதிபதி ஐயா இவருக்கிட்ட இருந்து எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்திருக்கய்யா...

நீதிபதி – ஏம்மா...?

மனைவி – இவரு நேற்று என்னை விசம் வைச்சுக் கொல்லப் பார்த்தாருய்யா....

நீதிபதி – ஏம்பா...? உன் மனைவி சொல்றது உண்மையா..?

கணவன் – நீங்களே சொல்லுங்கையா..?
இவ மட்டும் என்ன ரசம் வைச்சுக் கொல்லப் பார்த்தா..
அது மட்டும் சரியா..?

இது நகைச்சுவை மட்டுமல்ல பல வீடுகளில் இன்று இது போன்ற காட்சிகள் நடைபெற்று வருகின்றது என்பது உண்மைதான்..


ஒரு நோயாளியை மருந்து பாதி குணப்படுத்துகிறது என்றால்
அந்த மருந்து தன்னைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கைதான் மீதி நோயைக் குணப்படுத்துகிறது.
அது போல உணவு சுமாராக இருந்தாலும் ,

அதை அன்புடன் பரிமாறும் போது அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.“

உறவுகளுக்குள் அன்பு குறைந்து போனதால் உணவின் சுவையும் குறைந்து போனது. அன்பு
குறைந்து போனதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம் ஆயினும் பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட எந்திரத்தனமான வாழ்க்கையும் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது.
எந்திரம் போல நாம் வாழ்வதால் பாராட்டத் தவறிவிடுகிறோம்.

பாயசத்தைக் களி போலக் கிண்டிய மனைவியிடம்...
கணவன் – பரவாயில்லையே இது கூட நன்றாகத் தான் உள்ளது. புதுவிதமான சுவையுடன் உள்ளது என்று சொன்னால் மனைவி அடுத்தமுறை பாயசம் செய்யும் போது நன்றாகச் செய்ய முயற்சியாவது செய்வாள்..

பாராட்டு ஒரு செயலை மேன்மைப்படுத்துகிறது இது உளவியல் ஒப்பிய உண்மை.


சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி.

(கடி நகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.)

தலைவி இல்லறம் நடத்தும் சிறப்பினை, நேரில் கண்டறிந்த செவிலி நற்றாய்க்கு உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

தலைவி தலைவனுக்காக திறமையாக உணவு சமைக்கிறாள். அதனை உண்ட தலைவன் தலைவியை மனம் நிறையப் பாராட்டுகிறான். தலைவன் தன்னைப் பாராட்டுகிறான் என்பதால் தலைவி செருக்குக் கொள்ளவில்லை. மாறாக அவன் பாராட்டை மனதிற்குள் எண்ணி மகிழ்கிறாள். இக்காட்சியைக் கண்ட செவிலி, உவந்து நற்றாயிடம் தெரிவிக்கிறாள். பாடல் இதோ...

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

(கூடலூர் கிழார்,167. குறுந்தொகை.)


பாடலின் பொருள்,

நன்றாகக் காய்ச்சிய பாலை, உறை ஊற்றிப் பெற்ற கட்டித் தயிரை, காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரல்களால் பிசைகிறாள், அவ்விரல்களால் தான் உடுத்தியிருந்த தூய ஆடையில் துடைத்துக் கொண்டாள். அதனால் அழுக்கான அவ்வுடையைத் துடைக்காமல் உடுத்தியிருந்தாள்.

தாளிக்கத் தெரியாமல் தாளிக்கிறாள் அதனால் குய்யென்னும் புகை அவள் கண்களில் படிகிறது.
இவ்வாறு அரிது முயன்று புளிப்புச் சுவையையுடைய குழம்பினைத் தானே சமைத்தாள்.

தான் செய்த தீம்புளிப்பாகர் (பாகற்காய் குழம்பு) என்னும் குழம்பைத் தன் கணவனுக்கு இட்டு அவன் உண்பதைப் பார்த்து மகிழ்ந்தாள்.

உணவின் சுவையோடு அவளின் முயற்சியையும் நன்கு உணர்ந்த தலைவன் மகிழ்ந்து “இனிது“ என்று பாராட்டுகிறான்.
தலைவன் பாராட்டிவிட்டானே என்று தலைவி செருக்குக் கொள்ளவில்லை. அகத்தில் மனமகிழ்வு கொண்டாள் என்பதை அவளின் ஒளிபொருந்திய நெற்றியே வெளிப்படுத்தியது. அதுவும் உளவியலை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே தலைவியின் மனவுணர்வை அறிந்து கொள்ளும் வகையில் இருந்தது.

தலைவி வீட்டில் இருக்கும் போது எந்த வேலையும் செய்யாது செல்லமாக வளர்ந்தவள். திருமணத்துக்குப் பின்பு தன் கணவனுக்காக அரிது முயன்று உணவு சமைப்பதும், அதனைத் தலைவன் உண்டு இனிது என்று மகிழ்ந்து பாராட்டுவதும் கண்ட செவிலி, பெருமகிழ்ச்சி கொண்டாள். அதனை நற்றாயிடம் தெரிவித்தாள். இதுவே பாடலின் பொருள்.

இன்றைய சூழலில் அவசர வாழ்க்கையில், அவசர உணவு முறைக்கு மாறிவிட்ட நம்மில் சிலருக்கு,
சமைத்தல் என்பதும் – அதுவும்
மனைவி சமைத்தல் என்பதும் – அதுவும்
சுவையாக சமைத்தல் என்பதும்
வியப்பான ஒன்றாகவே இருக்கும்.
மாறாக சுவை குறைவான உணவும் அன்புடன் பரிமாறப்படும் போது சுவை கூடும் என்பதும், பாராட்டும் போது உணவின் தரம் மேம்படும் என்பதும் அவர்கள் உணர்ந்தால் ,
உணவு விசமாகாது!!
விசம் உணவாகும்.!!!

12 கருத்துகள்:

  1. //பாராட்டு ஒரு செயலை மேன்மைப்படுத்துகிறது இது உளவியல் ஒப்பிய உண்மை.//

    உண்மை. சங்கப் பாடலை காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகையால் எனது வலைப்பதிவு மேன்மையடைகிறது நண்பரே...
    கருத்துரைக்கு நன்றி!!!

    பதிலளிநீக்கு
  3. தலைவி வீட்டில் இருக்கும் போது எந்த வேலையும் செய்யாது செல்லமாக வளர்ந்தவள். திருமணத்துக்குப் பின்பு தன் கணவனுக்காக அரிது முயன்று உணவு சமைப்பதும், அதனைத் தலைவன் உண்டு இனிது என்று மகிழ்ந்து பாராட்டுவதும் கண்ட செவிலி, பெருமகிழ்ச்சி கொண்டாள். அதனை நற்றாயிடம் தெரிவித்தாள்////

    பள்ளிநாளில் படித்தது. உங்களால் சுவை கூட்டப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  4. ஒரு நோயாளியை மருந்து பாதி குணப்படுத்துகிறது என்றால்
    அந்த மருந்து தன்னைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கைதான் மீதி நோயைக் குணப்படுத்துகிறது]]

    நல்ல உவமை

    தாங்கள் சொல்லியிருக்கும் விடயம் மிகச்சரி.

    பதிலளிநீக்கு
  5. சமையலையும் விட்டு வைக்கலையா..அக்கால பாடல்கள்...அங்கும் நயம்பட வெளிபடுகிறது காதல்...பாகற்காய் குழம்பு என்றாலும் பதிவு கசக்கவில்லை இனிக்கவே செய்கிறது எப்பவும் போல்.....
    நானும் எப்பவும் போல் தாமதம்....

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்்!

    பதிலளிநீக்கு
  7. நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துதலுக்கு நன்றி ஊர்சுற்றி !

    பதிலளிநீக்கு