வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்.




ங்க காலத்தமிழர் கடல் வணிகத்தில் புகழ்பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்.சங்க இலக்கியங்கள் இதற்கு முதல் சான்றாதரங்களாகின்றன. தாலமி, பிளினி போன்ற வெளிநாட்டு யாத்ரிகர்களின் குறிப்புகளும் இதனை மெய்ப்பிக்கின்றன.

மலேசியாவில் கிடைக்கும் தமிழ்க்கல்வெட்டு,
தாய்லாந்தில் கிடைக்கும் சங்ககால நாணயம்,
கம்போடியா கல்வெட்டில் கிடைக்கும் தமிழ்மன்னனின் பெயர்,
சங்க இலக்கியத்தில் கிடைக்கும் யவனர் பற்றிய குறிப்பு ஆகியனவும்

சங்ககாலத்தமிழர் கடல்வாணிகத்தில் புகழ்பெற்றிருந்தமைக்குத் தக்க சான்றுகளாகவுள்ளன..

பெரிய கப்பல் என்றதும் பலருக்கு டைட்டானிக் கப்பல் தான் நினைவுக்கு வரும். இன்று பெரிய பெரிய கப்பல்களை அதிநவீன வசதிகளுடன் பயன்படுத்தி வருகிறோம்.

சங்ககாலத்தமிழர் பயன்படுத்திய கப்பல்கள் பற்றிய குறிப்பை சங்கப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்“ என்ற குறிப்பு சங்கப்பாடல் வழி கிடைக்கிறது.

உலகமே கூடிக் கிளர்ந்து சென்றது போன்ற பெரிய கப்பல் என்ற இந்தக்குறிப்பு..

சங்க காலமக்களின் கப்பல் கட்டும் அறிவு, கடல்வணிகத்தில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் ஆகியவற்றை உணர்த்துவதாகவுள்ளது.

உலகையே ஒரு கப்பலில் அழைத்துச் செல்ல இயலும் என்ற சிந்தனை அவர்களுக்கு இருந்தமை இதனால் புலனாகிறது.

பாடல் இதோ..

உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி,
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட,
5 கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான்
மாட ஔ்எரி மருங்கு அறிந்து ஒய்ய,
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே, அழி படர் அகல,
வருவர்மன்னால் தோழி! தண் பணைப்
10 பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்,
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெரு வளம் மலர அல்லி தீண்டி,
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க,
15 அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
கடி மனை மாடத்துக் கங்குல் வீச,
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய,
நிரை வளை ஊருந் தோள்' என,
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.


அகநானூறு -255. பாலை
மதுரை மருதன் இளநாகனார்


(பிரிவிடை வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்லியது.)

பொருள் ஈட்டும் நோக்கில் தலைவன் தலைவியைப் பிரிந்து கடல் கடந்து சென்றான். சென்றவன் தான் வருவதாகக் குறித்துச் சென்ற பருவம் வந்தும் தான் வரவில்லை. தலைவி அவன் பிரிவைத் தாங்க இயலாதவளாக, எனது நிலையைத் தலைவனிடம் சென்று கூறுவோரை நான் பெறவில்லையே என வருந்தி தோழியிடம் கூறினாள்..

பாடலின் பொருள்…

உலகமே கிளர்ந்து எழுந்தது போன்ற அச்சத்தை ஏற்படுத்தும் நாவாயானது, வேகமாக வீசும் இயல்புடைய காற்றானது அசைத்துச் செலுத்த, இரவு பகலாக ஓரிடத்தும் தங்காமல் புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய பெரிய கடல்நீர்ப்பரப்பைக் கிழித்துச் சென்றது.

அந்த நாவாயை ஓட்டிச் சென்ற தலைவர், உயர்ந்த இடத்தில் எறியும் கலங்கரை விளக்குகளால் செல்லும் இடமறிந்து பொருளீட்டும் எண்ணத்தால் என்னை நீங்கிச் சென்றார்.

அறநினைவின்றி நம்மை வருத்தும் அன்பில்லாத வாடைக் காற்றோ,
நீர் வளமிக்க குளிர்ச்சி பொருந்திய மருதநிலத்தில் உள்ள நம் ஊரிடத்தில் கருவிளை மலரோடு மாறுகொண்டு எழுந்த பகன்றையின் வெண்ணிற மலர்களின் இதழ்களை அளைத்துச் சென்றது.

பலாக்காய் போன்ற புறப்பகுதியையுடைய முதிர்ந்த பழத்தைக் கொண்ட பாகற்கொடிகள், முற்றிய இலைகளையுடைய கூதாளியோடு கிடந்து அசையுமாறு செய்தது.

காவல் நிறைந்த வீட்டின் மாடத்தும் இரவெல்லாம் புகுந்து வீசியது.
திருத்தமாக அணியப்பெற்ற எனது அணிகலன்களும் நழுவி வீழ்ந்தன.
தோளும், வளையும் நெகிழ்ந்தன.

எனது இந்த நிலையைத் தலைவரிடம் தூதாகச் சென்று சொல்வோர் இருந்தால் தலைவர் விரைவில் வருவார்.

அப்படி தூது செல்வோர் யாரையும் நான் பெறவில்லையே..!
என்ன செய்வது?

என்று தலைவி தோழியிடம் புலம்புகிறாள்.


இப்பாடலின் நோக்கம் தலைவியின் அகவாழ்வியலை உணர்த்துவதே என்றாலும்..
அக்கால மக்கள் பயன்படுத்திய கப்பல் பற்றிய குறிப்பையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

உலகு கிளர்நதன்ன உருகெழு வங்கம் இருந்ததா?
என்று சிந்திப்பதை விட பெரிய நாவாய் வைத்திருந்தனர் என்பதையும்,
அந்த நாவாய் உலகம் கிளர்ந்தது போல பெரியதாக இருந்தது என்பதையும் இப்பாடல் வழி அறிமுடிகிறது.


இவர்கள் இவ்வளவு பெரிய கப்பல் செய்ய எங்கு சென்று படித்தார்கள்?

எல்லாம் அனுபவம் தான்..!

10 கருத்துகள்:

  1. //இவர்கள் இவ்வளவு பெரிய கப்பல் செய்ய எங்கு சென்று படித்தார்கள்?

    எல்லாம் அனுபவம் தான்..!//

    பட்டறிவுக்கு ஒப்பில்லை ஐயா.

    நல்ல கட்டுரை.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் இந்த ஆக்கம் www.tamiljournal.comஇணையத்தில் சிறப்புக்கட்டுரை பகுதியில் மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    செய்திப் பிரிவு சார்பில்
    தோழமையுடன்
    மொழிவேந்தன்

    பதிலளிநீக்கு
  3. சிறந்த தகவல்

    பதிலளிநீக்கு
  4. இது போலத்தான் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர்களும் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தனர். நல்ல விளக்கங்கள். நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  5. அ. நம்பி said...
    //இவர்கள் இவ்வளவு பெரிய கப்பல் செய்ய எங்கு சென்று படித்தார்கள்?

    எல்லாம் அனுபவம் தான்..!//

    பட்டறிவுக்கு ஒப்பில்லை ஐயா.

    நல்ல கட்டுரை.


    ஆம் உண்மைதான் நண்பரே..

    பதிலளிநீக்கு
  6. Anonymous said...
    தங்களின் இந்த ஆக்கம் www.tamiljournal.comஇணையத்தில் சிறப்புக்கட்டுரை பகுதியில் மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    செய்திப் பிரிவு சார்பில்
    தோழமையுடன்
    மொழிவேந்தன்



    நன்றி நண்பரே ...
    கண்டேன் மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  7. புலவன் புலிகேசி said...
    இது போலத்தான் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர்களும் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தனர். நல்ல விளக்கங்கள். நன்றி நண்பரே


    கருத்துரைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  8. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் முனைவரே

    பதிலளிநீக்கு
  9. தங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே..

    பதிலளிநீக்கு