வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

உங்கள் நண்பர் எலியா? புலியா? - UPSC EXAM TAMIL - புறநானூறு -190உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்கள். நண்பர்கள் நம் கண்ணாடி போல, நம் நிழல் போல…
நம் உணர்வுகளுக்கும், கொள்கைகளுக்கும், ஆசைகளுக்கும் இயைபுடைய நண்பர்களைத்தான் நாம் தேர்ந்தெடுப்போம். இதோ நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைச் சோழன் நல்லுருத்திரனார் … 

“எலி போன்ற நண்பர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடாது”

 “புலி போன்ற நண்பர்களையே தேர்ந்தெடுக்கவேண்டும்

” என்று உரைக்கிறார். இயல்பான வழக்கில் எலி, புலி என்ற உவமையை பயத்துக்கும், வீரத்துக்கும் நாம் கூறுவதுண்டு. இங்கு.. 

விளைந்து முற்றிய பின் அறுவடைக்கு முன் உள்ள சிறிய வயலில் இருந்து கதிராகிய உணவைக் கொண்டுசென்று எலி தன் வலைக்குள் மிகுதியாகச் சேர்த்து வைக்கும். அவ்வெலியைப் போல சிறுமுயற்சியையும், சுயநலமும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதைவிட.. வீரம் செறிந்த புலி முதல்நாள் வேட்டையாடிய ஆண்பன்றி இடப்பக்கம் விழுந்தால் அதனை உண்ணாது, அடுத்தநாள் காத்திருந்து பெருமலைப்பக்கத்தில் வீரம் நிறைந்த ஆண்யானையை வலப்பக்கமாக வீழ்த்தி உண்ணும். அத்தகைய புலிபோன்ற பெருமுயற்சியும், கொள்கையும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதே சிறந்தது என்கிறார். 


பாடல் இதோ.. 

விளைபதச் சீறிடம் நோக்கி , வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலி முயன்றனையர் ஆகி உள்ளத் தம்
வளம் வலியுறுக்கும் உளம் இலாளரொடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணாதாகி வழி நாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டு எழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ!

புறநானூறு -190 
சோழன் நல்லுருத்திரன். திணை – பொதுவியல் துறை – பொருண்மொழிக்காஞ்சி. 

தமிழ்ச்சொல் அறிவோம் 

1. வல்சி – உணவு, நெல், சோறு, அரிசி. 
2. கேண்மை – நட்பு, உறவு. 
3. உரன் – வலிமை.
4. கேழல் – பன்றி. 
5. களிறு – ஆண்யானை, பிடி- பெண்யானை. 

பாடலின் வழி அறியலாகும் கருத்துக்கள்.

1. எலிபோன்ற சுயநலமும், சிறுமுயற்சியும் கொண்டவர்களின் நட்பைப் பெறுவதைவிட, புலி போன்ற பெருமுயற்சியும், உயர்ந்த கொள்கையும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதே சிறந்தது என்ற உயரிய கருத்து எடுத்துரைக்கப்படுகிறது. 

2. புலியானது தன் வேட்டையில் வலப்பக்கம் வீழும் விலங்குகளையே உண்ணும் இடப்பக்கம் வீழ்ந்தால் உண்ணாது என்ற புலியின் வழக்கமாகச் சங்ககால மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இப்பாடல் வழி அறியமுடிகிறது. 

3. மெலியோரின் (எலி) நட்பைவிட, வலியோரின் (புலி) நட்பே சிறந்தது என்ற செம்மாந்த கருத்து உரைக்கப்படுவதால் இப்பாடல் பொருண்மொழிக் காஞ்சியானது.

6 கருத்துகள்:

 1. பாடலின் வழி கூறிய கருத்துக்கள், அருமை. சிறந்த பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. நல்ல கட்டுரை.
  நீடூர் அலி நல்ல நண்பனாக இருப்பான்,

  பதிலளிநீக்கு
 3. நான் கூட புலி மாதிரி தான்! இடது பக்கம் ஹோட்டல் இருந்தா போக மாட்டேன்..வலது பக்க ஹோட்டலுக்குத் தான் போவேன்! ஏனென்றால் அங்கே தான் ஹோம்லி மீல்ஸ் கிடைக்கும்!

  பதிலளிநீக்கு
 4. அருமையான கருத்துச்செறிவு மிக்க பாடல்!
  பழந்தமிழ் இலக்கியப்பாடல்களை இங்கு படிக்க நேரிடும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!

  பதிலளிநீக்கு
 5. கருத்துரையளி்த்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு