வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 27 ஜூலை, 2013

கவிமணி பிறந்தநாள்

       
   கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (27-07 1876) பிறந்தநாள் இன்று. இவர் தமிழுலகம் நன்கறிந்த கவிஞராவார். (காலம் 1876-1954) இவர், பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என பலவகைப்பட்ட பாக்களை எழுதிப் புகழ்பெற்றார்.              
           சிவதாணுப்பிள்ளை-ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எப்.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார். எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.
              24 டிசம்பர் 1940 ல் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார். 1943 ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 ல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது. இவரது புதினமான மலைக்கள்ளன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் திரைப்படமாக வந்துள்ளது.
இவர் கவிதைகளுள் புகழ்பெற்ற சில வரிகள்

உள்ளத்துள்ளது கவிதை - இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை
எனக் கவிதைக்கு இலக்கணம் கூறுகிறார்.
மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா 
எனப் பெண்மையைச் சிறப்பித்துப் பேசுகிறார்.
ஓடும் உதிரத்தில் - வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் - சாதி
தெரிவதுண்டோ அப்பா 
புத்தர் கூறுவதாக உரைக்கிறார்.

கவிமணியின் நூல்கள்

ஆசிய ஜோதி , (1941)

 • மலரும் மாலையும், (1938)
 • மருமக்கள்வழி மான்மியம், (1942)
 • கதர் பிறந்த கதை, (1947)
 • உமார் கய்யாம் பாடல்கள், (1945)
 • தேவியின் கீர்த்தனங்கள்
 • குழந்தைச்செல்வம்
 • கவிமணியின் உரைமணிகள்

6 கருத்துகள்:

 1. என்றும் மறக்காத சிறப்பான வரிகள்... நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. மகத்தான மனிதரை நியாகப்படுத்நீர்கள்... நன்றி

  பதிலளிநீக்கு
 3. கவிமணி குறித்த பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு