வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 29 ஜூலை, 2013

தமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.

முன்னுரை

கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாகும். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் தனிச்சிறப்பாகும். படிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ள உரைநடை பெரிதும் உதவுகிறது. தமிழ் உரைநடையின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

இளங்கோவின் உரைநடை
சிலப்பதிகாரம் என்ற முத்தமிழ்க்காப்பியம் “உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள்“ என்ற பெயர் பெறுகிறது. இதுவே பிற்கால உரைநடைக்கு முன்மாதிரியாக அமைந்தது.

நக்கீரர் உரைநடை
       உரைநூல் வரிசையில் முதலில் தோன்றியதாகக் கருதப்படுவது நக்கீரர் எழுதிய இறையனார் களவியல் உரையே ஆகும்.

தொல்காப்பிய உரைநடை
       தொல்காப்பியம் என்ற தமிழிலக்கண நூலுக்கு பல்வேறு உரைகள் வந்துள்ளன. அவற்றுள் தொல்காப்பியம் முழுவதுக்குமான உரை இளம்பூரனரின் உரையாகும். மேலும் தெய்வச்சிலையார், கல்லாடர், சேனாவரையர், நச்சினார்க்கினியர்  பேராசிரியர் போன்றோரும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியுள்ளனர்.

நன்னூல் உரைநடை
       நன்னூல் என்ற இலக்கண நூலுக்கு ஆறுமுகநாவலரின் காண்டிகை உரை புகழ்பெற்றதாகும்.

இலக்கிய உரைநடைகள்
       பத்துப்பாட்டுக்கும், சீவகசிந்தாமணிக்கும் நச்சினார்க்கினியர் உரைஎழுதியுள்ளார். சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லாரின் உரை செல்வாக்குப் பெற்றதாகும். திருக்குறளுக்கு பரிமேலழகரின் உரை புகழ்பெற்றதாகும். திருக்குறளுக்கு நிறையபேர் உரையெழுதியிருந்தாலும் மு.வரதராசனார் அவர்களின் எளிய உரையே மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
மணிப்பிரவாள நடை
தமிழும், வடமொழியும் கலந்து எழுதப்படும் மொழிநடையே மணிபிரவாள நடை என்று அழைக்கப்பட்டது. சமணர்களும், வைணவர்களும் இந்த உரைநடையைப்  பெரிதும் வளர்த்தனர். நாலாயிர திவ்ய பிரபந்த உரைகாரர்களுள் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை ஆகியோர் உரைகள் குறிப்பிடத்தக்கன.
ஐரோப்பியர் உரைநடை
       தமிழ் இலக்கியங்கள் பெரிதும் கவிதைகளாகவே இருப்பதால் அவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும்விதமாக இவர்கள் எளிய உரைநடையைக் கையாண்டனர். அவர்களுள் இராபர்ட் டி நொபிலி என்னும் தத்துவ போதகர் பத்துக்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை இயற்றினார் இதனால் இவரை உரைநடையின் தந்தை என அழைப்பர். இவரைத் தொடர்ந்து வீரமாமுனிவர் பரமார்த்தகுரு கதை உள்ளிட்ட பல உரைநூல்களைத் தந்தார். பிறகு ஜி.யு.போப் அவர்களும் நல்ல உரைநடை நூல்களைத் தந்தார்.
இருபதாம் நூற்றாண்டு உரைநடை
       ஐரோப்பியரைத் தொடர்ந்து தமிழ்ப்புலவர்கள் பலரும் தமிழ் உரைநடையை வளர்த்தனர். ஆறுமுக நாவலர், சிவஞானமுனிவர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், சோம.இளவரசு, தெ.பொ.மீ, உ.வே.சா, திரு.வி.க, வையாபுரிப்பிள்ளை, மு.வ, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இராமலிங்க வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநூல்களும், திரு.வி.க அவர்களின் மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற உரையும் புகழ்பெற்ற உரைகளாகும்.
முடிவுரை
       தமிழில் உரைநடை வளர்ச்சியின் காரணமாக அறிவியல், இலக்கியம், ஆன்மீகம், பொது அறிவு, வணிகம் எனப் பலதுறைகளிலும் பல அரிய நூல்கள் கிடைத்தன. தற்காலத் தமிழ் உரைநடையை அ.ச.ஞானசம்பந்தன், பொற்கோ, தமிழண்ணல் ஆகியோர் வளர்த்துவருகின்றனர். 


7 கருத்துகள்:

 1. அறிய வேண்டிய உரைநடைகள்... விளக்கங்களுக்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 2. மாணவர்கள் மதிப்பெண் வெறும் வகையில் பகிர்ந்து வருவது சிறப்பு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான பகிர்வு இதற்க்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
  உரித்தாட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  தமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய விரிவாக்கம் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...
  பகிர்வுக்கு நன்றி முனைவரே...

  பதிலளிநீக்கு

 6. உரைநடையின் விளக்கம் அருமை.

  பதிலளிநீக்கு


 7. நல்ல உரை நாட்டுக்கு வேண்டிய உரை
  உரைநடை வாழ்க உணரச்சியை பெருக்க

  பதிலளிநீக்கு