வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

தமிழில் ஹைகூ கவிதைகள்

( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) 
முன்னுரை
       தமிழில் புதுக்கவிதைக்குக் கிடைத்த செல்வாக்கு ஹைகூ கவிதைக்கும் கிடைத்தது. ஹைகூ என்பது சப்பானியக் குறும்பா வடிவமாகும். மூன்றடி வசீகரம், சின்னச்சின்ன மின்தாக்குதல்கள், சொற்செட்டு ஆகியன இதன் தனிச்சிறப்புகளாகும்.
ஹைகூவின் தோற்றம்
       பாரத, பௌத்த சிந்தனையில் அரும்பி சீனப் பண்பாட்டில் போதாகி, சப்பானிய அழகுப் பார்வையில் மலர்ந்து மனம் வீசுவது ஹைகூ என்பர் நெல்லை சு.முத்து. “உலகக் கவிதை வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது ஹைகூதான்“ என்பார் அப்துல் ரகுமான். புதிர்போட்டு விடையளிக்கும் ஒருவகை இலக்கிய விடுகதை சப்பான் மொழியில் “ரெங்கா“ எனப்பெயர்பெறும். சப்பானிய அரண்மனைவாசிகளின் சொல்லரங்க விளையாட்டிலிருந்து தோன்றியதே ஹைகூ என்ற கருத்தும் உண்டு.

கண நேரம் ஒளிர்கிறாய்
மறுகணமே இருள்கிறாய்
சக மின்மினியே (சினோ-ஜோ)

என விடுகதைபோலவும், வினாவிடைபோலவும் ஹைகூ கவிதைகள் அமையும்.
ஹைகூவின் தனிச்சிறப்பு
       புதுக்கவிதைகளுடன் ஒப்பிடும்போது இன்னும் சுறுக்கமாக, நறுக்கென்று இருப்பது ஹைகூவின் தனிச்சிறப்பாகும். “முதலடியானது சாட்டையைக் கையிலெடுக்கும் அமைதியுடனும், இரண்டாவது அடியானது அதை ஓங்கும் நிதானத்துடனும், மூன்றாவது அடி சுழற்றி வீசிய கனத்துடனும் தெறிப்பாக அமையவேண்டும்“ என்பார் நெல்லை.சு.முத்து. உணர்ச்சிக் குறியீடுகளை ஹைகூ கவிஞர்கள் சொற்களால் வெளிப்படுத்தாமல் நிறுத்தற்குறியீடுகளால் வெளியிடுவர் இதற்கு “கிரெஜி“ என்று பெயர்

·         அத்தனையும் தின்றுவிட்டேன்
       ஆ… வயிற்றுவலி
              திருடிய ஆப்பிள்கள்   (ஷிகி)

·         எனக்கு வயசாகக் கூடாது
                                 சே… கேட்டீர்களா,அதோ
                                புதுவருட மணியோசை  (ஜோகுன்)                     
தமிழகத்தில் ஹைகூ
        ஹைகூ கவிதைகள் உலகளவில் செல்வாக்குப் பெறத்தொடங்கியதும் தமிழகத்திலும் அறிமுகமானது. ஹைகூவை மின்பா, துளிப்பா, மின்மினிக் கவிதைகள், சிந்தர், நறுக் கவிதைகள், வாமனக் கவிதைகள்  எனப் பல பெயரிட்டு அழைத்தனர். பாரதியார் எழுதிய “சப்பானியக் கவிதை“ என்ற கட்டுரை ஹைகூவின் முதலாவது தமிழ் அறிமுகமாகும். சப்பானியக் ஹைகூ போன்றதே நம் திருக்குறள் என்பார் பாரதியார். பாரதிக்குப் பிறகு பல ஆண்டுகள் தமிழில் ஹைகூ பற்றி யாரும் சிந்திக்கவில்லை. 1966ல் கணையாழி இதழில் சுஜாதாவின் சில மொழிபெயர்ப்பு ஹைகூகவிதைகள் வெளிவந்தன. பாரதிதாசனின் குயில் ஏட்டிலும் ஹைகூ கவிதைகள் வெளிவந்தன. 1987ல் டாக்டர் லீலாவதியின் “ஜப்பானிய ஹைகூ“ ன்ற முதல்
மொழிபெயர்ப்புத் தொகுதி வெளிவந்தது.
ஹைகூ எழுதிய தமிழ்கவிஞர்
1.        அப்துல் ரகுமானின் பால்வீதி என்ற கவிதைத் தொப்பில் ஐந்து சிந்தர்பாக்கள் (ஹைகூ) இடம்பெற்றன.
2.        அமுதபாரதியின் புள்ளிப்பூக்கள்.
3.        அறிவுமதியின் “புல்லின் நுனியில் பனித்துளி“
4.        கோ.வசந்தகுமாரின் “சொந்த தேசத்து அகதிகள்“
5.        தமிழன்பனின் சூரியபிறைகள்

மேற்கண்ட கவிஞர்களின்  ஹைகூ கவிதைகள் புகழ்பெற்றவையாகும்.

சான்று..

எப்போதும் மத்தாப்பு                  கல்லால்பட்ட வலியைச் சொல்லவே
கொளுத்தி விளையாடுகிறது             கரைவரை செல்கின்றன
மலையருவி – கழனியூரன்            நீரின் வளையங்கள் -அமுதபாரதி
முடிவுரை
ஹைகூக் கவிதைகளை இன்று பல இதழ்களும் வெளியிடுகின்றன. ஹைகூ கவிதைகளைத் தமிழர்கள் எழுதுவதிலோ, புரிந்துகொள்வதிலே எந்தச் சிக்கலும் இல்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஹைகூ கவிதைகளுக்கென்று தனித்துவமான இடம் உண்டு. என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மாதிரி வினா

இரண்டு மதிப்பெண் வினா
1.      ஹைகூவின் வேறு பெயர்கள் யாவை?
2.      ரெங்கா என்பது யாது?

ஐந்து மதிப்பெண் வினா
3.      நெல்லை.சு.முத்து அவர்கள் ஹைகூகவிதையைப் பற்றிக் கூறும் கருத்து யாது?,
4.      தமிழில் வெளிவந்த ஹைகூ கவிதைகள் தொகுப்புகள் சிலவற்றைக் கூறுக.

பத்து மதிப்பெண் வினா
5.      தமிழில் ஹைகூ கவிதையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி விளக்கி எழுதுக.

6.       ஹைகூ கவிதைமரபை வளர்த்த தமிழ்க்கவிஞர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.                           

8 கருத்துகள்:

  1. http://2.bp.blogspot.com/-5hT6sxAlAL8/UTADeg9RU0I/AAAAAAAAAow/00dcohwcqos/s000/30.gif

    பதிலளிநீக்கு
  2. ஹைகூ கவிதை பற்றி அழகாக கூறிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல விளக்கம் .அருமையான கவிதைகளை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  4. ஹைகூ குறித்த அழகான ஹைகூ...

    பதிலளிநீக்கு