வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 14 ஆகஸ்ட், 2013

இவள் தமிழ்ப்பெண்!




நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்
மனைவி வந்தபிறகு நிம்மதியைத் தேடுவதுமே ஆண்களின் வாடிக்கை!
என்று இன்றைய திருமண வாழ்க்கையை நகைச்சுவையாகச் சொல்வதுண்டு.

கணவனும், மனைவியும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல! இருவரும் இன்னொரு பக்கத்தைப் பார்ப்பதே இல்லை! என்ற கருத்தும் உண்டு.

இருவேறு வாழ்க்கைச் சூழல்களிலிருந்த இருவர், பல எதிர்பார்ப்புகளோடு, ஒன்றாக வாழ்வில் இணையும்போது,
அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறலாம், நிறைவேறாமல் போகலாம். அந்தச் சூழலில் இருவரும் தாம் பிறந்த குடும்பத்தின் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் குடும்பம் போர்க்களமாகத்தான் இருக்கும்.

இருவரும் ஒருவருக்கொருவர் இயன்றவரை விட்டுக்கொடுத்து வாழக்கற்றுக்கொண்டால் அதுதான் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக இருக்கும். இதையே தமிழர்மரபுகளாக நம்முன்னோர் நமக்கு எடுத்துரைத்துள்ளனர்.

பல குடும்பங்களில் சண்டை தோன்றுமிடம் பணமாகத்தான் இருக்கிறது.
இருப்பவர்கள் பறப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்!
பறப்பவர்கள் இன்னும் மேலே பறப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்!
ஆசை நிறைவேறாதபோது கோபம் வருகிறது. கோபம் விவாகரத்துவரை சென்றுவிடுகிறது. ஒவ்வொருவரும் அவரவர் ஆசை நிறைவேறினால் போதும் என்றுதான் நினைக்கிறோம்.

மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருக்கும் செல்வத்தில் இல்லை. நம்மிடம் இருப்பதைக் கொண்டு நிறைவுகொள்ளும் மனநிலையில்தான் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழவேண்டும். பெற்றோராக இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு அவர்களை எதிர்பார்ப்பது இழுக்கு! அதனால்  வரவுக்குள் செலவு  செய்து தன்மானத்தோடு வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்ற கருத்தை எடுத்தியம்பும் சங்கப்பாடலைக் காண்போம்.

சங்ககாலத் தலைவி ஒருத்தி, 
தான் புகுந்த வீடு வறுமையடைந்த பொழுதும், பிறந்த வீடு உதவியை நாடாமல், அறிவும், ஒழுக்கமும் உடையவளாகத் திகழ்வதை இந்த நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது.

பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்
கொண்ட கொழு நன் குடி வறன் உற்றென
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே.
நற்றிணை 110, போதனார்,
பாலை திணை செவிலித்தாய் சொன்னது 


Her slightly grey-haired, wise foster mothers
used to carry glowing gold bowls
with sweet milk mixed with honey and follow her.
They ran behind her to the pavilion,
with their soft-headed small sticks
and forced her to eat.
My playful daughter’s golden anklets
filled with pearls from clear waters,
jingled as she jumped and ran away,
refusing the food they brought.
Her husband’s family has grown poor now.
She doesn’t think about the rich rice her father used to give,
softer than the delicate sand under running water.
She eats what she can,
that little girl with such great strength.   
                                                                                      Translated by Vaidehi

தேன் கலந்தது போன்ற நல்ல சுவை உடைய இனிய பால் உணவை பொன்னால் செய் பாத்திரத்தில் இட்டு, அதனை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, மற்றொரு கையில் நுனியில் பூக்களால் சுற்றப்பட்ட சிறிய கோலை ஏந்திக் கொண்டு நீ உண்பாயாக! நீ உண்பாயாக! என்று அப்பூச் செண்டை எறிந்தனர். அவ்வாறு எறிந்தவுடன் பயந்து, முத்துப் பரல்களை உடைய பொற்சிலம்பு ஒலிக்குமாறு பாய்ந்து ஓடினாள். நரை முடியினை உடைய வயதான செவிலித்தாயர் பிடிக்க முடியாதபடி நடை தளர்ந்தனர். அவர்கள் பால் சோற்றை உண்ணுமாறு கேட்க, உண்னமாட்டேன் என்று மறுத்து விளையாட்டினைக் காட்டும் என் மகள், நல்லறிவும் ஒழுக்கமும் எப்படி அறிந்தனளோ? அறியேன்!
தன் கைப்பற்றிய கணவனின் குடும்பம் வறுமை அடைந்ததாக உதவிய தந்தையின் செல்வ மிக்க உணவை எண்ணாமல் மறுத்து விட்டாள். ஓடுகின்ற நீரிலே கிடக்கும் நுண்ணிய மணல்போல் , ஒரு பொழுது விட்டு ஒரு பொழுது உண்ணும் சிறந்த வலிமை உடையள் ஆனாள். இதென்ன வியப்பு!

இவள் அல்லவா தமிழ்ப்பெண்!
இன்றைய சூழலில் நிறைய விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பண்பாட்டு மாற்றங்களால் தமிழர் மரபுகள் கேள்விக்குறியாகி நிற்கின்றன. 

இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள இதுபோன்ற வாழ்வியல் குறிப்புகள் நம் வாழ்க்கைமுறையை சீர்தூக்கிப்பார்க்கத் துணைநிற்கின்றன.





16 கருத்துகள்:

  1. இதுவரை அறியாத அருமையான பாடல்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல சங்கப் பாடலை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. // நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்
    மனைவி வந்தபிறகு நிம்மதியைத் தேடுவதுமே ஆண்களின் வாடிக்கை!///

    :))))

    பதிலளிநீக்கு
  4. அருமையான சங்கப்பாடலைத் தந்து விளக்கியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. பாடலும் அதற்கான விளக்கமும் அருமை முனைவரே....

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    தாய்,தந்தை,ஆசிரியர்,நண்பன் இதில் என்னவென்று சொல்வது
    எல்லாமும் நின்றாய்-நீ
    என்னுள்ளே..........
    மனிதன் எப்படி வாழ வேண்டுமென்று எத்துணை இலக்கியம் சொன்னாலும் .அதனை ,புரிந்து கொள்வதில் சில இடர் உண்டு . அவற்றை இடர் நீக்கி எளிமைப் படுத்தி சால்லும் திறம் தங்களைச்சாறும். சமகால வாழ்வியலோடு இணைத்து கூறும் தங்களுக்கு இத்தமிழ் சமூகம் சரியான இடம தரும்.... கூடிய விரைவில்.
    என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்......... நினைவுகளுடன்
    தமிழ்மதன்மணி

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அன்பரே.

      நீக்கு
    2. நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றைய நாட்களில் எல்லோருக்கும்

      புரியவில்லை கூறுவோர் உண்டு.

      அந்த கூற்று உண்மையும் கூட

      உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை சொன்னார்
      பேரா.சோ.சத்தியசீலன்

      நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் கண்டால் ஒரு இருநூறு
      பழந்தமிழ் வார்த்தைகள் மட்டுமே இன்றைய காலத்திற்கு அன்னியமாக இருக்கும்

      அதற்கு மட்டும் ஒரு பொருள் அகராதி உருவாக்கினால் போதும்

      நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள்

      இன்றைய மக்களிடம் கொண்டு சேர்த்து விடலாம்

      அந்த வகையில் உங்கள் பணி பாராட்டதக்கது.வாழ்த்துகள்

      நீக்கு
    3. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சரவணன் சிவசுப்பிரமணியன்.

      நீக்கு